Search This Blog

Friday, April 3, 2020

'காதல்' - தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்


தி.ஜானகிராமனின் 'குளிர்' சிறுகதை எந்த இதழில் பிரசுரமானது தெரியுமா? 'காதல்' பத்திரிகையில்! யெஸ், பத்திரிகையின் பெயரே 'காதல்'தான். மட்டுமல்ல கு.அழகிரிசாமி, ஆர்.சூடாமணி, மு.வரதராசனார், டாக்டர் மா.ராசமாணிக்கனார், வல்லிக்கண்ணன், அகிலன், மாயாவி... என பல பிரபலங்கள் இந்த மாத இதழில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்கள்.
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இப்படியொரு பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்த இந்த 2020லும் யோசிக்கிறோம். அப்படியிருக்க 1947ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தப் பத்திரிகை பிறந்திருக்கிறது - அதுவும் தமிழில் - என்றால் எப்படி வியக்காமல் இருக்க முடியும்?
முதல் இதழில் 'காதல்' பத்திரிகையின் அவசியம் குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை பாருங்கள்:
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. இதுவரை சுதந்திரம் ஒன்றுதான் நமது ஒரே இலட்சியமாக இருந்து வந்தது. இனி, நம்முடைய லட்சியங்கள் பல.
முதலில் சென்ற நூற்றைம்பது வருஷங்களாக அல்ல, சென்ற ஆயிரம் வருஷங்களாக நம் சமூகத்தில் குவிந்து வந்த குப்பைகளை வாரிக் கொட்ட வேண்டும். மக்கள் வாழ்க்கைத் துயர்களிலிருந்து விடுபட்ட வாழ்க்கை வாழ வகை செய்ய வேண்டும். இப்பெரு நோக்கத்தோடு பல துறைகளில் பல பத்திரிகைகள் உண்டு.
அரசியல் சூதாட்டத்தைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், குடும்ப அரசியலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
பொருளாதாரச் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை உண்டு. ஆனால், கணவன் மனைவியரிடையே எழும் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டும் பாதி வயிறு நிறையாத தொழிலாளிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், வாழத் தெரியாமல் தவிக்கும் இளம் தம்பதிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
நாட்டின் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், ஆண், பெண் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் இல்லை.
பாலர்களுக்கென்றும், பக்தர்களுக்கென்றும், ஜோசியத்திற்கென்றும், சினிமாவுக்கென்றும் பத்திரிகை உண்டு. போட்டிப் புதிர்களை விடுவிப்பதற்கென்றும் பத்திரிகை உண்டு. ஆனால், காதலர்களிடையே ஏற்படும் புதிர்களை விடுவிக்க பத்திரிகை இல்லை. ஆண், பெண் தூய்மையாக, மனமொத்து வாழ, வழிகாட்ட காதலர்களுக்கென்று ஒரு தனி பத்திரிகை தமிழ்நாட்டில் இதுவரை தோன்றவில்லை. அந்தக் குறையை பூர்த்தி செய்யும் ஆவலுடன் முன் வந்திருக்கிறோம்...//
இந்த குறிப்புத்தான் முதல் இதழில் இடம்பெற்றிருக்கிறது. சொன்னபடியேதான் இதழையும் ஆசிரியர் நடத்தியிருக்கிறார்.
'காதல்' இதழ் முழுக்கவே காதல் பற்றித்தான் நிரம்பி வழிகிறது. பக்கத்துக்குப் பக்கம் காதல் ரசம் சொட்டுகிறது. திகட்டத் திகட்ட இருந்தாலும் திகட்டும்படி இல்லை.
'காதல் கதை எழுதுவது எப்படி', 'காதலும் கல்யாணமும்' போன்ற தொடர்களுடன், உலகிலுள்ள பல நாட்டு அறிஞர்களும் காதல் பற்றி உயர்வாக எழுதியிருப்பவை எல்லாம் பொன்மொழியாக தொகுக்கப்பட்டு 'முத்துக் குவியல்' என்ற பெயரில் மாதம்தோறும் வெளியாகியிருக்கிறது. சிறுகதைகளும், கவிதைகளும் கூட காதலை மையமாகக் கொண்டதுதான். உள்ளூர் ஆட்களின் கதைகள் தவிர 'வெளிநாட்டு காதல் கதைகள்' என்ற தலைப்பின் கீழ் மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் வெளியிட்டிருக்கிறார்.
'சாட் ரூம்', 'அனு அக்கா ஆன்ட்டி' ஸ்டைலில் - அதாவது இதற்கெல்லாம் முன்னோடியாக - 'குடும்பத்தில் நடப்பவை' என்னும் தலைப்பின் கீழ் கணவனும் மனைவியும் உரையாடுவது போல் ஒரு பகுதி இறுதி இதழ் வரை வந்துள்ளது. அந்தரங்கமான விஷயங்கள் அனைத்தும் இதில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
இன்று பெரும்பாலான பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் 'அந்தரங்க கேள்வி - பதில்' பகுதியை முதன்முதலில் தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொடுத்தது 'காதல்'தான்.
இது போக உறவுச்சிக்கல் குறித்து உளவியல் - உடற்கூறு மருத்துவர்களின் கட்டுரைகள் மாதந்தோறும் பக்கங்களை அலங்கரித்திருக்கின்றன.
முக்கியமான விஷயம் 'காதல்' முதல் இதழ் முதல் இறுதி இதழ் வரை அதன் அட்டைப் படத்தில் இடம்பெற்றவர்கள் காதலர்கள்தான். வேறு யாரையும் அந்த இதழ் பிரசுரித்ததில்லை. விதிவிலக்கு 1948 அக்டோபர் இதழ். அந்த ஆண்டு காந்தியடிகள் கொலை செய்யப்பட்டதாலோ என்னவோ, இந்த இதழின் அட்டைப் படத்தை மட்டும் காந்தியடிகளும் கஸ்தூரிபாயும் அலங்கரிக்கிறார்கள். என்றாலும் இந்த இதழின் உள்ளே காந்திக்கும் கஸ்தூரிபாய்க்கும் இருந்த காதல்தான் தனிக் கட்டுரையாக வெளியாகியிருக்கிறது.
இப்படி துணிச்சலுடன் இந்த 'காதல்' பத்திரிகையை நடத்தியவர் அரு.ராமநாதன். வெளியீட்டாளரும், ஆசிரியரும் இவர்தான்.
1980களின் இறுதியில் 'வயல்' மோகன் என்கிற சி.மோகன்தான் Mohan Chellaswamy முதன் முதலில் அரு.ராமநாதன் என்னும் பெயரை எனக்கு அறிமுகப்படுத்தினார். 'பிரேமா பிரசுரம்' சார்பில் வெளியான 'சிந்தனையாளர் வரிசை' நூல்களை அவசியம் நான் படிக்க வேண்டும் என்று சொன்னதுடன் அந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் தனது பரிசாக அவற்றை வாங்கியும் கொடுத்தார்.
''அரு.ராமநாதன் முக்கியமான ஒரு நபர். ஆனால், தமிழ்ச் சூழல் அவரை மறந்துவிட்டது. சொல்லப்போனால் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டிருக்கிறார்...'' என்று அடிக்கடி சி.மோகன் நேர் பேச்சில் குறிப்பிடுவார். 1990களில் 'புதிய பார்வை' இதழில் அவர் 'நடைவழிக் குறிப்புகள்' தொடரை எழுதிய போது ஓர் அத்தியாயத்தையே அரு.ராமநாதனுக்காக ஒதுக்கியிருக்கிறார்.
''இவரைப் போன்ற ஓர் ஆளுமையாளரை காலம் மறக்க முற்படும்பொழுது, நாம் நினைவு கூர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது. அது நம் பயணத்தின் தொடர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கான அவசியமாகவும் இருக்கிறது...'' என சி.மோகன் அந்தக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருப்பது சத்தியமான வார்த்தைகள்.
இதன் பிறகு அரு.ராமநாதன் எழுதிய 'வீரபாண்டியன் மனைவி' நாவலை தேடிப் பிடித்து வாசித்தேன். மூன்று பாகங்கள் அடங்கிய இந்த நாவல் ஏறக்குறைய 1700 பக்கங்கள் கொண்டது. 1953ம் ஆண்டு ஜனவரி மாத 'காதல்' இதழில் தொடங்கிய இந்தத் தொடர் 1959ம் ஆண்டு மார்ச் இதழில் முடிவடைந்திருக்கிறது.
ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளியான இந்த சரித்திர நாவல், தமிழ் வரலாற்று நாவல்களிலேயே முதன்மையானது. சிறப்பானது.
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' மாபெரும் வெற்றியடைந்த போது, 'அது அல்ல சரித்திர நாவல். அலெக்சான்டர் டூமாஸின் நாவல்களை காப்பி அடித்து கல்கி எழுதியிருக்கிறார். உண்மையில் வரலாற்று நாவல் என்றால் இப்படியிருக்க வேண்டும்...' என நண்பர்களிடம் சூளுரைத்துவிட்டு அரு.ராமநாதன் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்ததாக சொல்வார்கள்.
இந்த நாவலில் பல புதுமைகளை இவர் செய்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் கம்ப ராமாயணப் பாடலை கொண்டிருக்கும். நாவலின் நிலைக்களன் மதுரை என்பதால் ஒவ்வொரு அத்தியாயமும் 'ம' என்ற எழுத்துடனேயே தொடங்கும். கம்ப ராமாயணம் பால காண்டத்தில் தொடங்கி யுத்த காண்டத்தில் முடிகிறது என்றால் 'வீரபாண்டியன் மனைவி'யின் முதல் பாகம் யுத்த காண்டம்; இரண்டாவது பாகம் சுந்தர காண்டம்; மூன்றாவது பாகம் பால காண்டம்... என தலைகீழாக இருக்கும்.
இந்த 'வீரபாண்டியன் மனைவி'யின் தலைசிறந்த கதாபாத்திரம் என ஜனநாதனை சொல்லலாம். இந்த கதாபாத்திரத்துக்கு சமமாக படைக்கப்பட்ட பிற கேரக்டர்களை தமிழ்ப் புனைக்கதை உலகில் தேடினால் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் கிடைக்கும். அந்தளவுக்கு பவர்ஃபுல்லான ஸ்கெட்ச். ஜனநாயகம், அரசாட்சி தொடர்பாக ஜனநாதன் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் பட்டாசு. இன்றும் பொருந்தக் கூடிய நக்கல், நையாண்டி. குறிப்பாக மந்திராலோசனை அரங்கில் ஆசனங்கள் ஏன் படி வாரியாக போடப்பட்டிருக்கின்றன என்பதற்கு அந்தப் பாத்திரம் அளிக்கும் விளக்கம் இருக்கிறதே... தெள்சன்ட் வாலா.
''நான் முட்டாள்களை ஏமாற்ற முட்டாள்களுக்கு வழிகாட்டுவேனே தவிர நானே முட்டாள்களோடு ஒரு முட்டாளாக கலந்து கொள்வதில்லை!''
இன்னொரு இடம் -
''ஏகாதிபத்தியம் என்பது அடிமைப் பிரஜைகளைத்தான் உற்பத்தி செய்து என்றாவது ஒரு நாள் அன்னிய ஆதிக்கத்தின் வருகைக்கு அழிவுப்பாதை போடும். அதுதான் பல்லாண்டுகளாக பாரத தேசத்தின் சரித்திரமாக இருந்து வந்திருக்கிறது. கிராம சுயாட்சியின் மூலம் ஜனங்களின் உரிமைகளும் தனி மனிதனின் சுதந்திரமும், நல்வாழ்வும் பெருக வேண்டுமானால் ஏகாதிபத்ய முறை அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்...''
சுவாரஸ்யமான தகவல் - 'வீரபாண்டியன் மனைவி'; சாண்டில்யனின் 'கன்னி மாடம்'; விஷ்வக்சேனனின் 'பாண்டியன் மகள்' ஆகிய நாவல்கள் அனைத்தும் ஒரே வரலாற்றுக் காலகட்டத்தை சேர்ந்தவைதான். ஆனால், மூன்று நாவல்களின் டிரீட்மெண்ட்டும் வேறு வேறாக இருக்கும். சரித்திர நாவல் பிரியர்கள் ஒரே நேரத்தில் இந்த மூன்று புதினங்களையும் வாசித்துப் பார்க்கலாம்.
எனக்கு அறிமுகமாகும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த நாவலை படிக்கும்படி பரிந்துரைப்பேன். குறிப்பாக வெகுஜன பத்திரிகைகளில் புதிதாக எழுத வருகிறவர்கள் அவசியம் ஒருமுறையாவது 'வீரபாண்டியன் மனைவி'யை வாசிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
கூடவே இ.பாலகிருஷ்ண நாயுடு எழுதிய 'டணாய்க்கன் கோட்டை' நாவலையும் வாசிப்பது நல்லது. கோவையில் இருந்து வெளியான நாளிதழில் தொடராக வந்த சரித்திரப் புதினம் இது. நீண்ட வருடங்களாக விற்பனைக்கு கிடைக்காத இந்த நாவலை சமீபத்தில்தான் 'அம்ருதா பதிப்பகம்' தேடிப் பிடித்து அச்சிட்டிருக்கிறது. ஃபிக்‌ஷனுக்கும், நான் ஃபிக்‌ஷனுக்கும் இடைப்பட்ட அந்த எழுத்து நடையும், திப்பு சுல்தான் குறித்த சரித்திர விவரங்களும் சிலிர்க்க வைக்கும்.
ஆனால், முகநூலிலும் இணையதளத்திலும் எழுதி வரும் நண்பர்கள் 'டணாய்க்கன் கோட்ட்டை'யை படிக்காமல் இருப்பதே உத்தமம். ஏனெனில் அந்தக் கால புறச்சூழல் பிறப்பித்த நடையில் எழுதப்பட்ட அந்தப் புதினம் இணைய நண்பர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும்.
இந்தப் பிரச்னை 'வீரபாண்டியன் மனைவி'யில் கிடையாது. அட்டகாசமான வெகுஜன நாவல். ஆனால், எந்த விமர்சகரும் இதுவரை இந்த நாவல் பற்றி பேசியதும் இல்லை. எழுதியதுமில்லை.
நாவலுக்கு மட்டுமல்ல 'காதல்' இதழுக்கும் இதுதான் கதி.
இத்தனைக்கும் 1947 நவம்பர் மாதம் இந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது அரு.ராமநாதனுக்கு வயது 23. அதன் பிறகு, தான் காலமாகும் வரை - அதாவது 18.10.1974 வரை தொடர்ந்து காதலுடன் 'காதலை' நடத்தியிருக்கிறார். இதனை அடுத்து இவரது சந்ததியினர் இப்பத்திரிகையை விடாமல் கொண்டு வந்திருக்கிறார்கள். கடைசி இதழ் 1980ல் வெளிவந்திருக்கிறது.
ஏறக்குறைய 33 ஆண்டுகள் வெற்றிகரமாக, அதுவும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையான 'காதல்' இதழ் எவரது நினைவின் அடுக்கிலும் இப்போது இல்லை என்பது மிகப்பெரிய சோகம்.
அவ்வளவு ஏன்... இந்த இதழ் வெளிவந்துக் கொண்டிருந்த நாளிலேயே தமிழகம் 'காதல்' பற்றி பேச மறுத்திருக்கிறது. இதற்கு உதாரணம் 'கல்கி' இதழ்.
1963ம் ஆண்டு ஆகஸ்டில் 'குண்டு மல்லிகை' என்ற சமூக நாவலை 'கல்கி' வார இதழில் அரு.ராமநாதன் தொடராக எழுதியிருக்கிறார்.
இதற்கான அறிவிப்பில் ''தமிழ் மக்களின் இதயங்களில் நிலையான இடம் பெற்றுவிட்ட 'இராஜராஜ சோழன்' நாடகத்தை அளித்த திரு. அரு.ராமநாதன் எழுதிய சமூகத் தொடர் 'கல்கி' இதழில் விரைவில் ஆரம்பமாகிறது...'' என்றுத்தான் குறிப்பிட்டது.
அப்போது 'காதல்' இதழ் 16வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தது. ஆனாலும் 'காதல்' ஆசிரியர் என்று சொல்ல 'கல்கி' தயங்கியது.
இந்த நிலை என் அப்பாவுக்கும் இருந்தது. நிச்சயம் என் அப்பா, தன் இளமைக் காலத்தில் 'காதல்' பத்திரிகையை படித்திருப்பார். ஆனாலும் என்னிடம் அது குறித்து பேசியதேயில்லை. பதிலாக வெவ்வேறு இதழ்கள், தொடர்கதைகள் குறித்து பல இரவுகள் விடிய விடிய என் தலையை கோதியபடி பேசியிருக்கிறார். வியர்வை மணம் வீசும் அவர் தொப்பையில் தலைசாய்த்தபடி அவற்றை எல்லாம் கேட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. 'குண்டு மல்லிகை' நாவல் கூட அப்பா பைண்டு செய்து வைத்திருந்த அடுக்கில் இருந்து எடுத்துத்தான் படித்தேன். அப்போது 'காதல்' குறித்து நான் கேள்விப்படாத நேரம்.
'வயல்' மோகனை சந்தித்த பிறகுதான் 'காதல்' குறித்து அறிந்தேன். அப்பாவிடம் கேட்டபோது புன்னகையே பதிலாக கிடைத்தது.
ஏறக்குறைய இதே குணத்துடன்தான் 1947 - 1980 காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். வெகுஜன வாசகர்களாக இருந்த அவர்கள் அனைவரும் 'காதல்' பத்திரிகையையும் அறிந்திருக்கிறார்கள், தொடர்ச்சியாக படித்திருக்கிறார்கள்.
ஆனால் -
அதை வெளியில் சொல்ல கூச்சப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் முறைகேடான உறவுகள் சார்ந்த காதலை 'காதல்' பத்திரிகை பிரசுரித்ததேயில்லை. கணவன் - மனைவி; காதலன் - காதலி ஆகியோருக்கு இடையில் இருக்க வேண்டிய இணக்கத்தைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறது.
என்றாலும் இதழ் குறித்து விவாதிக்கும் துணிச்சல் ஒருவரிடமும் இல்லை. 1960களின் பிற்பகுதிக்கு பிறகு 'காதல்' இதழில் கவர்ச்சிகரமான படங்கள் இடம்பெற ஆரம்பித்திருக்கின்றன. அதற்காக 'சரோஜாதேவி', 'பருவகாலம்', 'விருந்து' அளவுக்கெல்லாம் இறங்கவில்லை.
அப்படியிருக்க ஏன் தமிழ்ச் சமூகம் 'காதல்' என்ற பெயரில் ஓரு வெகுஜன இதழ் 33 ஆண்டுகள் வெளிவந்தது என்பதையே பதிவு செய்ய மறுக்கிறது என்று புரியவில்லை. அத்துடன் பழைய புத்தகக் கடையிலோ, கரையான் அரிப்பதற்காகவே உயிர் வாழும் வாடகை நூலகத்திலோ கூட ஏன் ஒரு 'காதல்' பிரதி ஒன்று கூட காணக்கிடைக்கவில்லை என்பதற்கும் பதில் கிடைக்கவில்லை.
சமீபத்தில் ரோஜா முத்தையா நூலகத்தில் 'காதல்' இதழ்களை பார்க்க நேர்ந்தது. ஆச்சர்யம் கலந்த வியப்புத்தான் ஏற்பட்டது. இதோ இந்த நிமிடம் வரை அந்த உணர்வு நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
என்ன மாதிரியான உள்ளடக்கத்தை எல்லாம் சர்வசாதாரணமாக அரு.ராமநாதன் கொடுத்திருக்கிறார்... அவற்றை எல்லாம் அந்தக் கால 'குமுதமும்', 'ஆனந்த விகடனும்' எப்படியெல்லாம் உருமாற்றி பயன்படுத்திக் கொண்டன என்பதை நினைக்கும்போது -
ஒன்றுத்தான் தோன்றியது.
இந்த ஜானர் ஏன் இப்போது இல்லாமல் போய்விட்டது? திருமணமாகாத 23 வயது இளைஞனுக்கு இப்படியொரு பத்திரிகையை திருச்சியிலிருந்து தொடங்க வேண்டும் என்று எப்படி தோன்றியது?
விடை தெரியா கேள்விகள். 1950 வாக்கில் சென்னை வந்த அரு.ராமநாதன் 'கலைமணி' என்னும் சினிமா மாத இதழை 1949 ஏப்ரல் முதல் நடத்தியிருக்கிறார். சில ஆண்டுகள் மட்டுமே வெளியான இந்த இதழில் உதவி ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கியவர்தான் பிற்காலத்தில் 'வாண்டு மாமா' என்று புகழப்பட்ட கிருஷ்ண மூர்த்தி.
அதே போல் 1954ம் ஆண்டு சிரஞ்சீவியை ஆசிரியராக கொண்டு 'மர்மக் கதை' என்னும் மாத நாவலையும் (பாக்கெட் நாவல், க்ரைம் நாவலுக்கு எல்லாம் முன்னோடி) வெளியிட்டிருக்கிறார்.
'கலைமணி'யும் சரி, 'மர்மக் கதை'யும் சரி அதிக ஆண்டுகள் தாக்குப் பிடிக்கவில்லை. 'காதல்' மட்டும்தான் இறுதி வரை கம்பீரமாக வந்திருக்கிறது.
என்றாலும் 'காதலை'ப் பற்றி பேசத்தான் ஆளில்லை. அன்றும் இன்றும் நிஜ வாழ்வில் அதுதானே நிலமை?
பின் குறிப்பு:
1. 'தங்கப் பதுமை', 'பூலோக ரம்பை', 'ஆரவல்லி' போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் அரு.ராமநாதன்தான்.
2. டி.கே.எஸ். நாடகக் குழு நடத்திய போட்டிக்காக இவர் எழுதியதுதான் 'இராஜராஜ சோழன்' நாடகம்.
3. இதுவரை 350க்கும் மேற்பட்ட நூல்களை 'பிரேமா பிரசுரம்' வெளியிட்டிருக்கிறது.
4. 'அசோகன் காதலி' இவர் எழுதிய முதல் சரித்திர நாவல். குறுநாவல் என்றும் சொல்லலாம்.
5. தன் இறுதிக் காலத்தில் இவர் எழுதிய 'வெற்றிவேல் வீரத்தேவன்' சரித்திர நாவலை வாசிக்காமல் இருப்பதே இவருக்கு நான் செய்யும் மரியாதை. 'வீரபாண்டியன் மனைவி'யை எழுதியவரா இந்த நாவலையும் படைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும்.
6. தன் கனவுப் படைப்பாக 'ரசியா பேகம்' சரித்திர நாவலை நினைத்திருந்தார். அதற்காக குறிப்புகளையும் சேகரித்திருந்தார். ஆனால், எழுத ஆரம்பிப்பதற்குள் தன் 50வது வயதில் காலமாகிவிட்டார்.
கே. என். சிவராமன்

No comments:

Post a Comment