Search This Blog

Sunday, April 5, 2020

கொரோனா இறுக்கமான சட்டம் நம்முடைய பொறுப்பு இயல்பு நிலை

கொரோனா வைரஸ் தொற்று வரவரக் கூடிக் கொண்டே போகிறது. மரணிப்போரின் தொகையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் இதனால் உச்சப்பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. (03.04.2020) மட்டும் அமெரிக்காவில் ஒரே நாளில் 1120 பலியாகியுள்ளனர். கொரேனாவினால் இதுவரை உயிரிழந்தோர் 60 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேரை இழக்கக் கூடிய நிலைமை காணப்படுகிறது என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் செட்ராஸ். நோய்த்தொற்றுக்குள்ளானோர் 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இரண்டு மாதத்திற்குள் 200 நாடுகளில் இது பரவியிருக்கிறது. இப்பொழுது ஒவ்வொரு நாளும் தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மரணத்தின் தொகையும் கூடத்தான்.
தொற்றுக்குள்ளாகியோருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டாலும் அபாய நிலை நீங்கவில்லை. முக்கியமாக கொரோனாவுக்கு இன்னும் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே ஆகப் பெரிய சவால். இந்த நிலையில் இதைப் பரவ விடாமல் தடுப்பது, பாதிப்பைக் குறைப்பது என்பவற்றுக்கான வழிமுறையே இன்றுள்ள ஒரே தெரிவு. இதற்குத் தனிமைப்படுதலும் தனிமைப்படுத்தலுமே ஓரளவுக்குப் பாதுகாப்பை வழங்கக் கூடியது. எல்லா வகையிலும் நிலைமையைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கும் இது ஒன்றே வழி.
இதனால்தான் உலகெங்கும் ஊரடங்கைப் பிறப்பித்துள்ளன எல்லா நாடுகளும். உண்மையில் இது ஊரடங்கல்ல. ‘வீடடங்கு’ ஆகும். அதாவது வீட்டுக்குள் அடங்கியிருத்தலாகும். அவசிய நிலைமைகளைத் தவிர வேறு எந்தக் காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே நடமாடாதிருப்பது அசியமானதாகும்.
சொல்வதைப் போல இது எளிதான ஒன்றல்ல. மிக மிகச் சிரமமான விசயம். தொடர்ந்து வீட்டிற்குள் அடைபட்டுக்கொண்டிருக்க முடியாது. உளவியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, உணவுக்கே கதியில்லை என்பது தொடங்கி ஏராளம் காரணங்கள், தேவைகள் வரையில் இது பிரச்சினைக்குரிய ஒன்றே. வெளியே செல்வதற்கான தேவைகளும் காரணங்களும் ஏராளமிருக்கும்போது வீட்டுக்குள் முடங்கியிருக்க முடியாது என்பதை யாரால்தான் புரிந்து கொள்ள முடியாது.
ஆனாலும் இது ஒரு தவிர்க்க முடியாத அனர்த்த நிலை. எந்த அனர்த்த நிலையிலும் முதலில் பாதிக்கப்படுவது இயல்பு நிலை. இயல்பு நிலை பாதிக்கப்பட்டால் அதனால் கூடுலான நெருக்கடியைச் சந்திப்போர் அடிமட்ட வாழ்க்கைத் தரத்தில் உள்ளோரே. இங்கும் அதுதான் நிலைம.
அதிலும் இந்த அனர்த்தம் சாதாரணமான ஒன்றல்ல. மிகப் பயங்கரமானது. உலகளாவியது. இதற்குக் காரணமான நோய் நம் கண்ணுக்குப் புலப்படாதது. விளைவுகளையே நாம் காண முடியும். ஆகவே ஏனைய பிற இடர்கால (சுனாமி, புயல், சூறாவளி, வெள்ளம், வரட்சி, மண்சரிவு, பூகம்பம், தீவிபத்து போன்றவற்றைப்போல) நெருக்கடிகளைப்போல புலப்படு அனர்த்தம் இதுவல்ல. உணரும் நெருக்கடியே இது.
இந்த நிலையில் இதற்கு மருத்துவ ஆலோசனை ஒன்றை மிகவும் பொறுப்போடு கடைப்பிடிப்பதே ஒரே பாதுகாப்பான வழிமுறையாகும். மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அவசரகால நெருக்கடி நிலையை – பாதுகாப்பு அறிவிப்புகளை உலகளாவிய ரீதியில் அரசுகள் மேற்கொண்டிருக்கின்றன. எனவே சரி, பிழைகளுக்கு அப்பால் அரசாங்கத்தின் அறிவுறுத்தலை ஏற்று நடப்பதே பொருத்தமானது. ஏனைய அரசாங்கங்கள் கூட உலக மருத்துவ நிலைமைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திலுள்ளன. இதை விடுத்து அரச எதிர்ப்பு மனோ நிலையில் (Anti Government Mentality) இதனையும் அணுக முடியாது. அது கூடவே கூடாதது. (வேறு விடயங்களுக்கு வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தை நாம் விமர்சிப்பதும் எதிர்ப்பதும் வேறு. இது வேறு). அப்படி அணுக முற்பட்டால் அதனுடைய விளைவுகளை நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான தனித்திருத்தல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை பலரும் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.
ஊரடங்கு உத்தரவைச் சுழித்துக் கொண்டு திரிவதைச் சிலர் பெருமை அடிக்கிறார்கள். படையினர் இல்லை என்பதால் அது தமக்கு வசதி என்று சிலர் கருதுகிறார்கள். உட்பாதைகளால் வழமையைப்போலப் பலரும் திரிகிறார்கள். இது ஏதோ போராட்ட காலப் பிரச்சினை எண்டமாதிரி ஒரு எண்ணம் பலருக்கும் இருக்குப் போல. அது வேறு. இது வேற சங்கதி எண்ட விளக்கம் பலருக்குமில்லை.
அதானால் ஆளாளுக்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள். சிலர் வறுமை நிலையிலிருக்கும் குடும்பங்களுக்கான உணவுப் பொருட்களை வழங்கும் உதவித் தொண்டுக்காக. சிலர் வயலுக்கு அல்லது தோட்டத்துக்கு. சிலர் மீன்பிடிக்காக. சிலர் மீன் மற்றும் மரக்கறி விநியோகத்துக்காக. சிலர் பாண் போன்ற உணவு வழங்கல்களுக்காக. சிலர் மருந்தகங்களைத் திறப்பதற்காக. சிலர் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக. சிலர் கள்ளிறக்குவதற்காக. இதைவிட அரச திணைக்களங்களில் சிலவும் இப்படி அவசர உதவிகளுக்காக தமது உத்தியோகத்தர்களை அழைத்துச் சேவையில் ஈடுபடுத்துகின்றன. உதாரணமாக சமுர்த்தி உதவிப் பணத்தை வழங்குவதற்கு. கூட்டுறவுக்கடைகளைத் திறப்பற்கு. புள்ளி விவரங்களைத்திரட்டுவதற்கு. சில அவசியப் பணிகளை மேற்கொள்வதற்கு....
இப்படிப் பல காரணங்கள். ஆனால், இதில் நாம் ஒன்றைக் கவனிக்க வேணும். பட்டினியால் நடக்கும் மரணங்களை விடவும் கொரோனாத் தொற்றின் பாதிப்பும் அது உண்டாக்கும் மரணமும் கட்டுப்படுத்த முடியாதளவுக்கானதாயிருக்கும்.
மட்டுமல்ல, தப்பித் தவறி, கொரோனா தொற்று நமது பிரதேசத்தில் வந்து விட்டதென்றால், அதில் உயிரிழப்புகள் நிகழுமாயின் பின்னர் இந்தப் பிரதேசங்கள் முற்றாகவே மூடுண்ட நிலைக்கே செல்லும். பாதிப்பும் உச்சமடைந்து விடும். இதற்கு நாலுபேர் செத்து, நானூறுபேர் ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிய பிறகுதான் நமக்கு கண் திறக்கும். ஞானம் பிறக்கும் என்றால் என்னதான் செய்ய முடியும்?
படித்த சமூகம் என்று நாம் எம்மையே சொல்லிக் கொள்வதொன்றும் முக்கியமானதல்ல. அதில் எந்தப் பயனுமிருப்பதில்லை. அறிவாளர்களாக எப்படிச் செயற்படுகிறோம் என்பதுவே முக்கியமானது. அதுவே பயனுடையது. எனவே கொரோனோ பாதிப்பைத் தவிர்ப்பதற்கான ஒரே வழியான தனித்திருத்தல், வீடங்கியிருத்தல், உச்சப் பொறுப்போடு நடத்தல், தனிமைப்படல் என்பதைக் கடைப்பிடிப்பதே வழியாகும்.
எனவேதான் மேற்சொன்னவாறான செயற்பாடுகள் அவசியமானவை என்றாலும் இதற்கு ஒரு மாற்றுப் பொறிமுறை அவசியமாக உருவாக்கப்பட்டு, அந்தப் பொறிமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிறேன். அப்படிச் செய்யும்போது இதில் ஆட்தொகையைக் குறைக்க முடியும். நடமாட்டத்தை மேலும் மட்டுப்படுத்தலாம். இதை ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறைக்கூடாகவே செய்ய முடியும்.
குறிப்பாக உதவிப் பொருட்களை (உணவுப் பொருட்களை) வழங்குவோர் அதை முறைப்படுத்தப்பட்ட பொறிமுறை ஒன்றுக்கூடாக வழங்குவது நல்லது. இதை ஒழுங்கமைக்க வேண்டிய கடப்பாடு மாவட்ட செயலங்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்குண்டு. அவர்களின் வழிப்படுத்தலின் வழியாக இதைச் செய்வதே பொருத்தமானது. அல்லது அவர்களும் சமூகச்செயற்பாட்டியக்கத்தினரும் (மட்டுப்படுத்தப்பட்ட அளவில்) ஒருங்கிணைந்து இதைச் செய்ய வேணும்.
கூடவே சரியான அறிவுறுத்தல்களை சுகாதாரத் துறையினர் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ந்தும் நிலைமைகளைக் குறித்த – பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறித்த எண்ணங்களை சனங்களிடம் உருவாக்க வேண்டும்.
உணவைக் கொடுப்பது பசியைப் போக்குதவற்கும் உயிர் வாழ்வதற்கும் என்றால், அந்த உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அக்கறையும் அவசியமானதல்லவா. எனவேதான் பெரும் பாதிப்பைத் தரக்கூடிய நோய்த்தொற்று வந்தால் அது செய்யப்படும் பிற மனிதாபிமான உதவிகளை விடப் பாரதூரமாகி விடும்.
அதேவேளை இதெல்லாம் அவசியமானவை என்பதை மறுக்கவில்லை. நியாயமான காரணங்களின் அடிப்படையிலானவையே என்பதை நாம் புரிந்து கொள்கிறாம். இதற்கான பொறிமுறையை உருவாக்கிக் கொண்டு செய்யவேணும் என்பதே நமது வாதமாகும். ஏனெனில் இதை ஒரு சாட்டாகவே வைத்துக்கொண்டு ஆளாளுக்கு வெளியே திரிகிறார்கள். தினமும் இப்படித் திரிவோர் பொலிஸினால் கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்படுவோர் நூறில் ஒரு பங்கும் வராது. ஏனையோர் பிடிபடாமல் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் தாம் செய்து கொண்டிருப்பது மிகத் தவறான செயல் என்பதை அறியவில்லை. அல்லது அதைப்பற்றி அவர்களுக்குப் பொருட்டுமல்ல. அரசாங்கம் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. அல்லது அரசாங்கத்துக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்று எண்ணிக் கொண்டு பொறுப்பற்று நடக்கிறார்கள். உண்மையில் இதனால் இவர்களுக்கும் இவர்களால் சனங்களுக்குமே பாதிப்பு. நெருக்கடி. துயரம். ஏனெனில் இது நாங்கள் அரசாங்கத்துக்குச் சவால் விடுகிற விசயமில்லை. எங்களையே பாதிக்கக் கூடியது.
ஆகவே இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தினுடைய – படையினருடைய பொறுப்பு மட்டுமல்ல, நம்முடைய பொறுப்புமாகும்.
கொரோனா வைரஸ் தாக்கம் முதல்முதலில் பாதிப்பை உண்டாக்கிய சீனாவில் உச்சக்கட்ட விதிமுறைகளின் வழியாகவே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கே பின்பற்றப்பட்ட வழிமுறைகளையே இன்று உலகம் பின்பற்றுவதற்குப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. அங்கே இறுக்கமான முறையில் சட்டம் பின்பற்றப்பட்டுள்ளது. சனங்கள் அதற்குக் கட்டுப்பட்டு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இதனால்தான் அங்கே மிக விரைவில் இயல்பு நிலை திரும்பக் கூடியதாக இருந்தது.
Karunakaran Sivarasa

No comments:

Post a Comment