Search This Blog

Friday, April 3, 2020

பேராசிரியர் கைலாசபதி

பேராசிரியர் கைலாசபதி மாதம்


செ.பொ.கோபிநாத் அவர்களின் இணயப் பக்கத்திலிருந்து
பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. 
தனக்கேற்றதுறை எது எனக் கண்டு கொள்வதில் தான் ஒவ்வொரு கலைஞனதும் வெற்றியும் நிலைபேற்றுத் தன்மையும் தங்கியுள்ளது. அந்த வகையில் கைலாசபதி தனக்குள் பல் திறமை கொண்ட மிகச் சிறந்த படைப்பாளியாக இருபதாம்; நூற்றாண்டுகளில் திகழ்ந்த போதிலும் தனக்கேற்றதுறை திறனாய்வே எனத் தெரிந்து திறனாய்வு என்றாலே கைலாசபதி என்று தமிழுலகில் அழியாப் புகழடைந்தார். சிறந்த பேச்சாளர், ஒலிபரப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், போதனாசிரியர், நாடக நடிகர், நவீன இலக்கியகர்த்தா (நாவல், சிறுகதை. கவிதை, நாடகம் எழுத்தாளர்), திறனாய்வாளர், ஒப்பியலறிஞர் போன்ற பல்திறன் கொண்ட இலக்கியவாதி கைலாசபதி. 

தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை, முன்வைத்தவர். ஒப்பியல் நோக்கையும், சமூகவியற் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர். ‘கலை கலைக்காக’ என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர். இலக்கியத்திற்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர். சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்.
 தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்றுநெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர். கலை இலக்கியச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லத் தீவிர முயற்சியில் ஈடுபட்டவர். ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகச் செயல்பட்டவர். சிறந்த கல்வியாளராக விளங்கியவர். கல்விக் கோயிலான யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர். இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். இத்தனை பெருமைக்கும் உரியவர். ‘ஈழம் தந்த கொடை’! கலாநிதி க.கைலாசபதி.
பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன்.
"இது காலவரை தெரியவந்துள்ள வீரயுகங்களுள் காலத்தால் முந்தியது கிறித்துவிற்கு முன் மூவாயிரம் ஆண்டளவிலே மெஸொப்பொத் தோமியாவில் நிகழ்ந்த சுமேரிய வீரயுகமாகும். அதற்கடுத்தப்படியாகக் கிரேகத்தில் நிகழ்ந்த வீரயுகத்தைக் கொள்ளலாம். வட இந்தியாவில் இதிகாசங்கள் குறிக்கும் வீரயுகத்தையும் தவிர்த்தால், காலவரிசையில் அடுத்தப்படியாக அமைவது பழந்தமிழரது வீரயுகம் ஆகும். இது கிறித்துவிற்கு எழுநூறு ஆண்டுகள் முன்தொடங்கியிருக்கலாம். ஆயினும் பெரும்பாலும் கி.மு ஆறாம் நூற்றாண்டளவில் இது நிகழ்ந்தது எனக்கருதுவது பொருத்தமாகும். உலகின் பிறபகுதிகளிற் காணப்படும் வீரயுகங்களும் அவற்றைச்சேர்ந்த பாடல்களும் கிறித்துவிற்குப் பின் பல நூற்றாண்டுகள் கழிந்தே தோன்றின.அந்த வகையில், கால ஒழுங்கின்படி, தமிழரது வீரயுகம் புராதன சுமேரியர், கிரேக்கர் முதலியோரின் வீரயுகங்களுடன் ஓருசேர வைத்து நோக்கும் பெருமையுடையது எனலாம். (1968- 70,71)"
க. கைலாசபதி
(பேராசிரியர் வீ. அரசு மேற்கோளாக குறித்தவை)
ப.23. சங்க இலக்கியம் பன்முக வாசிப்பு
பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்த அவர், இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை வந்தார்.
கைலாசபதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் தமது உயர்கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் தமிழைச் சிறப்பு பாடமாக கற்று B.A (Hons) முதல் தர மாணவனாகச் சித்தியெய்தினார் (1957).
பல்கைலக்கழகக் கல்வியின் பின்னர் இலங்கையின் அரச பத்திரிகையான தினகரனில் உதவி ஆசிரியராக1957 முதல் 1961 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார் (1961-62).1963-1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார்.1964 இல் சூடான் நாட்டில் வாழ்ந்த சர்வமங்களம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
1974 இல் யாழ்ப்பாண வளாகத்தில் தலைவராக இருந்த கைலாசபதி அவர்கள் அதன் துணைவேந்தராக 1974 முதல் 1977 வரை பணிபுரிந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில்(1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகவும்(1978-82) பணிபுரிந்தார்.
பல்கலைக்கழகப் பணிகளில் மாத்திரமின்றி இலங்கை அரசின் கல்வி சார்ந்த குழுக்களிலும் இடம் பெற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார். யுனெஸ்கோவிற்கான தேசிய ஆணைக்குழுவிலும்(1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழுவிலும் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழுக்களிலும் பணிபுரிந்துள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நாட்டியக்குழு, இலக்கியக்குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர். பேராசிரியர் கணபதிப்பிள்ளை தயாரித்த நாடகங்களிலும் கைலாசபதி நடித்துள்ளார். க.கைலாசபதி அவர்கள் இலக்கியத்துறையின் அனைத்துப் பாடுபொருளைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.
கைலாசபதி அவர்கள் ஜனமகன், உதயன், அம்பலத்தான்,அம்பலத்தாடி, அபேதன் உள்ளிட்ட புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்..
மாணவராக இருந்த காலத்திலேயே இவர் மார்க்சிய லெனினிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கினார். சீன அரசின் அழைப்பில் இவர் 1979 இல் சீனா சென்றுவந்தார்.தம் சீனப் பயணப் பட்டறிவுகளைத் தம் மனைவியுடன் இணைந்து எழுதிய "மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும்" என்ற நூல்வழி வெளிப்படுத்தியுள்ளார்.

பேராசிரியர் கைலாசபதியின் ஆசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்கள் மிகச்சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்.செஞ்சீனத்துத் தந்தை மாவோ அவர்களின் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.மார்க்சிய,இலெனிய அறிஞர்களுடன் இணைந்து சீன ஆய்வுக்குழு அமைத்து, சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்.அவரிடம் பயின்றதால் க.கைலாசபதி அவர்கள் இக்கொள்கைத் தாக்கங்களைப் பெற்றார் என இராம.சுந்தரம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். 
கைலாசபதியின் நூல்கள் 60, 70 களில் இளந் தலைமுறையினர் மட்டத்தில் அதிக தாக்கம் செலுத்தின. தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966) தமிழ் நாவல் இலக்கியம் (1968), ஒப்பியல் இலக்கியம் (1969) ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. இன்று மேற்குறித்த நூல்களுக்கான மீள் பதிப்புகள் 1999 இல் வெளி வந்துள்ளன. இந் நூல்கள் மீளவும் மின் பதிப்புப் பெறுவதனால் தமிழியல் ஆய்வில் ஈடுபாடு கொண்டோருக்கு இது மகிழ்ச்சிக்குரிய விடயமே. இந் நூற்றாண்டின் முடிவுறும் தருவாயில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இந்த நூற்றாண்டின் தமிழியல் ஆய்வு வரலாறு, வளர்ச்சி பற்றி உரத்துச் சிந்திக்கும் பொழுது கைலாசபதியைத் தவிர்த்துச் சிந்திக்க முடியாது. மேற்குறித்த நூல்களின் வருகை எமக்குப் புதிய பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பக் கூடும். பல்வேறு உரையாடல்களை எம்மிடையே ஏற்படுத்தும். இதுகாறுமான எமது வரலாற்றுக்குள் கொண்டு வரப்படாத புறக்கணிக்கப்பட்ட பகுதிகளும் உண்டு என்பதை இன்றைய எமது வாசிப்பு ஆய்வு எமக்கு உணர்த்தியுள்ளன. ஆக இதுவரையிலான ஆய்வுப் போக்குகள் குறித்த அக்கறை, தேடல் அவசியம். இவற்றுள் கைலாசபதியின் நூல்கள் மீளப் பதிப்பித்தல் எனும் செயற்பாடு ஆய்வியல் செயற்பாட்டின் ஓர் இணையாகவே பார்க்கப் பட வேண்டும். புரிந்து கொள்ளப் பட வேண்டும். 'தமிழியல் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி' எனும் நூலைக் கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதி 1999 ல் வெளியிட்டுள்ளார். இது தமிழியல் ஆய்வு வரலாற்று வளர்ச்சியில் கைலாசபதியின் விகிபாகம் பற்றிய சிரத்தையை ஆய்வு நிலை நோக்கில் வெளிப்படுத்தும் முயற்சியாக இந் நூல் அமைந்துள்ளது. ஆக, கைலாசபதியின் மூன்று நூல்களின் மீள் பதிப்பு, கைலாசபதி பற்றிய சுப்பிரமணியத்தின் நூல் ஆகியவற்றின் வருகை கலாநிதி கைலாசபதி பற்றிய பார்வைக்கும் தெளிவுக்கும் உதவுபவையாக உள்ளன. தமிழியலாளர்கள் −வற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழியல் ஆய்வு மேலும் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் நூல்கள்

01,பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966
02.தமிழ் நாவல் இலக்கியம்,1968
03.Tamil Heroic Poetry-Oxford,1968
04.ஒப்பியல் இலக்கியம்,1969
05.அடியும் முடியும்,1970
06.ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி,1971
07.இலக்கியமும் திறனாய்வும்,1976
08.கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976
09.சமூகவியலும் இலக்கியமும்,1979
10.மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979
11.The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum
12.நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980
13.திறனாய்வுப் பிரச்சினைகள்,1980
14.பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980
15.இலக்கியச் சிந்தனைகள்,1983
16.பாரதி ஆய்வுகள்,1984
17.The Relation of Tamil and Western Literatures
18.ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986
19.On Art and Literature,1986
20.இரு மகாகவிகள்,1987
21.On Bharathi-1987
22.சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)
23.Tamil (mimeo)(co-author A.Shanmugadas)
தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும் சமூக ஆய்வுகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்த க.கைலாசபதி அவர்கள் இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டு 06.12.1982 இல் இயற்கை எய்தினார். முப்பதாண்டுக் காலம் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபட்டிருந்த க.கைலாசபதி அவர்கள் தரமான ஆய்வுகள் வெளிவரவும்,முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ஆய்வுத்துறையில் மதிக்கப்படவும் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார்.
கைலாசபதி பற்றிய சிவசேகரத்தின் மதிப்பீடுகள்!
கைலாசபதி தவறுகட்கு அப்பாற்பட்ட அதிமானுடரல்லர். அவர் அத்தகைய அதிமானுடராகத் தன்னைக் கருதியவரும் அல்லர். அவருடன் கடுமையான கருத்து முரண்பாடுடையோர் பலர், அவர் வாழ்ந்த காலத்திலேயே தமது கருத்து வேறுபாடுகளைக் கூறியுள்ளனர். சிலர் அவர் இறந்த பின்னரே தமது மாறுபட்ட நிலைப்பாடுகளை கூற முன் வந்தனர். இதற்கான காரணங்களை நான் இங்கு ஆராய விரும்பவில்லை. கைலாசபதியின் சமுதாயப் பங்களிப்பு பல்துறை சார்ந்தது. அவர் தன்னை ஓரு அரசியல்வாதியாகவோ, பகிரங்கமாக எந்தவொரு அரசியற் கட்சியின் உறுப்பினராகவுமோ காட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் அவரது பல்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும், அவரது அரசியல் நிலைப்பாட்டின் முத்திரை தெளிவாகவே பதிந்திருந்தது. சர்வதேச விவகாரங்களிலும், உள்நாட்டு அரசியலிலும்; அவர் ஓடுக்கப்பட்ட மக்களினதும் அவர்களது போராட்டங்களினதும் தரப்பிலேயே நின்றார்.
சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் பின் ஏற்பட்ட விவாதத்திலும் இவரது நிலைப்பாடு தெளிவாக மார்க்சிய லெனினியவாதிகளின் பக்கத்திலேயே இருந்தது. கைலாசபதி பற்றிய கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் வலதுசாரி அரசியற் சார்புடையோரிடமிருந்தே வந்தன. சில சமயங்களில் தம்மை மார்க்சிசவாதிகளென்று கூறிக்கொள்வோரும் கைலாசபதியுடன் முரண்பட்டதுண்டு. மார்க்சியம் என்பது விவாதங்கட்கும் அபிப்பிராய வேறுபாடுகட்கும் அப்பாற்பட்ட திட்டவட்டமான நிலைப்பாடுகளின் கோவை அல்ல. எனவே ஒரு நிலைமையை ஒருவர் அறிந்துள்ள தன்மைக்கேற்ப அது பற்றிய மதிப்பீடுகளும் அவர் முன்வைக்கும் தீர்வுகளும் வேறுபடலாம். கைலாசபதியுடன் முரண்பட்ட பல வலதுசாரிகள், அவரது அடிப்படையான நிலைப்பாட்டுடன் முரண்பட்டனர். கைலாசபதியின் சமுகச் சார்புடைய இலக்கிய விமர்சனப் பார்வையை நேரடியாக எதிர்த்து முறியடிக்க முடியாத காரணத்தாற் தனிப்பட்ட அவதூறுகளில் இறங்கினோரும் உள்ளனர்.
கைலாசபதியின் பங்களிப்புக்களில் ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர் அளித்த ஊக்கமும், கல்வித் துறையில் அவர் ஆற்றிய பணியும் பற்றி அதிகம் கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை. அவர் ஒரு அரசியல்வாதியாக அறியப்படாததால் அவரது அரசியல் நிலைப்பாடு பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. கைலாசபதி என்கின்ற திறனாய்வாளர் தான் அதிகளவிற் சர்ச்சைக்குரிய மனிதரானார். இலக்கியம் பற்றி அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் பல்வேறு சூழ்நிலைகள் தொடர்பாகவும், பல்வேறு கோணங்களினின்றும் வழங்கப்பட்டவை. அவற்றைத் தனித் தனியாக எடுத்துப் பார்த்து அவற்றின் குறைபாடுகளை அவரது பார்வையினது குறைபாடன்றோ, அதை விட ஒருபடி அப்பாற் சென்று மார்க்சிய அணுகு முறையின் குறைபாடன்றோ வாதிப்பது “குருடனுக்கு பால் காட்டிய” கதையின் பாங்கிலேயே அமையும்.
இவ்வாறு கைலாசபதியின் திறனாய்வு பற்றி குறை கூறுவோர் ஒருவருக்கு ஒருவர் முரணான முறையிலேயே அவருக்கெதிரான வாதங்களை முன் வைக்கவும் நேருகின்றது. ஆறுமுகநாவலரின் பங்களிப்பை அவர் மதிப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதைக் கண்டிப்பவர்கள், இலக்கியத்தின் வர்க்கத்தன்மை பற்றிய அவரது நிலைப்பாட்டை மறுப்பவர்களுடன் வேறுபடுகின்றனர். சில சமயம் இரண்டு விதமான தாக்குதல்களும் ஒரே தளத்திலிருந்து வந்துள்ளன. இதற்கான காரணங்களுட் கைலாசபதி பற்றிய விமர்சனங்கள், கைலாசபதி பற்றியும் மார்க்சிய அணுகு முறைகள் பற்றியும் விமர்சகர்கள் கொண்டிருக்கும் விறைப்பான பார்வையும் அடங்கும்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பார்வையும் வர்க்க அடிப்படையுங் கொண்ட ஆக்க இலக்கியப் படைப்பை உருவாக்குபவர், ஒரு போதனாசிரியரின் பாங்கில் இன்ன வகையில் இப்படி எழுதினாற் தான் தனது நிலைப்பாட்டை வலியுறுத்த முடியும் என்று திட்டமிட்டு எழுதுகிறார் என்பது; மார்க்சியத் திறனாய்விற்குரிய கருத்தல்ல.
ஒரு படைப்பாளியின் ஆக்கங்கள் அவரது அனுபவத்திற்கும்–அறிவிற்கும் ஏற்றவாறே அமைகின்றன. ஒருவரது அறிவும் அனுபவமும் அவரது சமுதாய சூழலிற் தங்கியுள்ளன. வர்க்க சமுதாயத்திற் தனி மனித சிந்தனை ஒருவரது வர்க்கப் பின்னணிக்கும், சமுதாயப் பார்வைக்கும் ஏற்றவாறு அவரது அனுபவங்களும் விருத்தியடைகின்றது. எனவே சரி–பிழை–நீதி–அநீதி–நெறி–நெறியல்லாதது போன்ற மதிப்பீடுகளும், மனிதாபிமானம, அழகியல் என்பன தொடர்பான கொள்கைகளும், ஒரு புறம் மனித இனம் என்ற அடிப்படையில் சில பொதுவான தன்மைகளைக் காட்டினாலும், மனித இருப்பின் வேறுபாடுகளையும் கொண்டிருப்பன. இலக்கியமோ பிற கலை வடிவங்களோ, அழகியலோ மனிதரது இருப்புக்கு அப்பாற்பட்டலையல்ல. மனித இருப்பிற்கும் அதனைத் தீர்மானிக்கும் சமுதாய இயல்பிற்கும் இயக்கத்திற்கும் அடிப்படையான முரண்பாடுகளை கலைகளிலும் இலக்கியங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனித உறவுகளை நிர்ணயிக்கும் சமுதாய முரண்பாடுகள் இலக்கியத்திற் தெரிவது மட்டுமன்றி, அம் முரண்பாடுகளின் தீர்வுக்கான போராட்டமும் இலக்கியத்தினூடு நடைபெறுகின்றது. மனிதனது சமுதாய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் சமுதாயத்தின் வர்க்கத் தன்மையாலும், வாக்கப் போராட்டத்தாலும் நிர்ணயிக்கப்படுமாயின், இலக்கியமும் பிற கலை வடிவங்களும் அதற்கு விலக்காக அமைய முடியாது. இந்த வாதத்தை ஒருவர் வரட்டுத்தனமாக ஆதரிக்க முடியும். வரட்டுத்தனமாகவே இன்னொருவர் அதை எதிர்க்கவும் முடியும்.
கைலாசபதி கலை இலக்கியங்களில் அழகியலை வலியுறுத்தியவர். அதே வேளை அழகியல் ஆக்கங்களின் உள்ளடக்கத்தினின்று வேறுபடுத்தப்பட்டு, உள்ளடக்கத்திலும் மேலான ஒன்றாகக் காட்டப்படுவதை வன்மையாக எதிர்த்தவர். அழகியற் கோட்பாடுகளை மிகையாக வலியுறுத்தி “கலை கலைக்காகவே” என்ற கோஷத்திற்கு புத்துயிர் ஊட்டியவர்கள், இக் காரணத்துக்காகவே கைலாசபதியை கடுமையாகத் தாக்கினர். மார்க்சியக் கலை இலக்கிய நோக்கைத், தமிழன் பழைய இலக்கியங்கட்கும் பிரயோகித்து, தமிழர் வரலாறு பற்றிய தெளிவான பிரமைகளைக் களையவும், அவற்றினூடு தமிழர் வரலாறு பற்றிய தெளிவான ஓரு பார்வையையும் பெறவுங் கைலாசபதி பெரும் பங்களித்தார். கைலாசாதி பற்றி செய்யப்படும் மதிப்பீடுகள் கைலாசபதியின் ஒட்டுமொத்தமான பங்களிப்பை முதன்மைப்படுத்துவது நியாயமானது. கைலாசபதியின் விமர்சனங்களில் உள்ள குறைபாடுகள் அவை செய்யப்பட்ட சூழலின் அடிப்படையிற் கருதப்படுவது அவசியம்.
மு. தளையசிங்கம் பற்றிய விமர்சனத்தில், கைலாசபதியின் வாதங்கள் சில அவரது முக்கியமான கருத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன். அக் குறைபாடுகள் தளையசிங்கம் பற்றிய அவரது மதிப்பீட்டைப் பொய்ப்பிக்கவில்லை. கனமான வாதங்கட்கு அருகருகாகக் கனங் குறைந்த வாதங்களை வைத்தமை கைலாசபதியின் விமர்சனத்தை அவரது அரசியல் எதிரிகள் தாக்குவதற்கு வசதி ஏற்படுத்திற்று. அதே வேளை கைலாசபதிமீது அவர்கள் தொடுத்த தாக்குதல்களின் கீழ்த்தரமான தன்மை அவர்களது தரப்பில் எவ்வளவு நியாயம் இருந்தது என்பதன் அளவுகோலாகவே எனக்குத் தெரிந்தது. சிந்தனைக்கும், தளையசிங்கத்தின் மார்க்கிய விரோதத்தின் வறுமையைக் கைலாசபதி கணிசமான சகிப்புத் தன்மையுடனேயே விமர்சித்திருந்தார்.
கைலாசபதியின் முக்கியமான ஒரு தவறு, மஹாகவி பற்றிய அவரது மதிப்பீடு தொடர்பானது. மஹாகவியின் சமுக அரசியற் பார்வையின் போதாமையை 1960-களின் அரசியல் சூழல் மிகைப்படுத்தியதன் விளைவாகவே, கைலாசாதி மஹாகவியின் முக்கியத்துவத்தைத் தவற விட்டு விட்டார் என நினைக்கின்றேன். இத் தவறு பற்றிக் கைலாசபதியை இன்று விமர்சிப்போர் சிலர், கைலாசாதி இருந்த காலத்தில் அதைத் திருத்து விக்க வாய்ப்பிருந்தும் ஏன் முனையவில்லையோ தெரியாது.
ஈழத்து இலக்கிய விமர்சன நடைமுறையின் இடர்பாடுகள் சகல விமர்சனங்களையும் வெவ்வேறு அளவுகளிற் பாதித்துள்ளது. கைலாசபதியின் தவறுகள் அலட்சியம் செய்ய வேண்டியவையல்ல. அவை நேர்ந்த சூழலின் அடிப்படையில் மதிப்பிட வேண்டியன. நமது இலக்கியத் துறையின் விஞ்ஞான ரீதியான பார்வையும், சமுதாயச் சார்பும், சமுதாய மாற்றத்திற்கான முனைப்பும், கைலாசபதியிடமிருந்து பெற்றவற்றைக் கருத்திற் கொண்டாற் கைலாசபதியின் குறைபாடுகள் மிக அற்பமானவையே.
இந்த இடத்தில் சாள்ஸ் டார்வின் முன்வைத்த பரிணாமக் கோட்பாடு அவர் முன் வைத்த அதே வடிவில் இன்று ஏற்கப்படுவதில்லை என்பது நினைவூட்டத்தக்கது. குறிப்பான பல அம்சங்களில் டார்வின் விளக்கங்களிற் குறைபாடுகளும் தவறுகளும் காணப்படுகின்றன. ஆயினும் அவர் எடுத்துக் காட்டிய பரிணாமவாத அடிப்படை (உயிரினங்கள் எளிய ஜிவராசிகளின்று தோன்றிச் சூழலுக்கமைய மாற்றமடைந்து உயரிய வடிவங்காக விருத்தி பெற்றன என்ற கருத்து) அதாவது, டார்வினது வாதத்தின் முழுமை இன்னமும் மறுக்கவியலாததாகவே உள்ளது. டார்வின் சொன்னவை பல தவறானவை. எனவே பரிணாமக் கொள்கையும் செல்லுபடியாகாது என்ற வாதம் சிலரால் இன்னதும் முன் வைக்கப்படுகிறது. இவர்களது வாதம், கைலாசபதியின் விமர்சனத் தவறுகளை ஆதாரமாக்கி அவரது இயங்கியல் பொருள் முதல்வாத அடிப்படையிலான இலக்கியக் கொள்கையை நிராகரிப்பவர்களது வாதத்தினின்று, மூடத்தனத்தின் அளவில் வேறுபட்டதல்ல.

No comments:

Post a Comment