Search This Blog

Tuesday, February 4, 2020

தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்”(அகதிகளின் அடையாளம், உரிமைகளைக் குறித்துக் கேள்வி எழுப்பும்)

அகதிகளின் அடையாளம், உரிமைகளைக் குறித்துக் கேள்வி எழுப்பும் தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்”
---------------------------------------------------------------------------------
தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்” (நாவல்) நூலினை தமிழகத்திலுள்ள சிந்தன் புக்ஸ் இரண்டாவது பதிப்பாகப் பதித்து வெளியிட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் சிராஜ். மாதவ் வெளியிட்டிருக்கிறார்.
சென்னை புத்தகக் காட்சியின்போது இந்த நாவலின் அறிமுக நிகழ்வு எழுத்தாளர் முற்றத்தில் நடந்தது. நிகழ்வுக்கு திரைப்படம் மற்றும் ஆவணப்படம் சார்ந்து இயங்கும் நெறியாளர் சோமிதரன் தலைமை ஏற்றார். தாமரைச்செல்வியை எழுத்துகளின் வழியாகவும் வாழ்க்கையின் வழியாகவும் அறிந்திருந்த சோமிதரன், விரிவானதொரு அறிமுகத்தைச் செய்தார். தாமரைச்செல்வியின் வாழ்க்கைச் சூழல், போர் நிகழ்ந்த காலத்தில் அவர் சந்தித்த அனுபவங்களை வரலாற்றுப் பதிவு போன்றதொரு தொனியில் இலக்கியமாக்கிய அவருடைய எழுத்துகள், அந்த எழுத்துகள் மகேந்திரன் போன்ற இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தமை, அவற்றில் சில குறும்படங்களாக உருவாக்கப்பட்டமை என சோமிதரனின் அறிமுகம் இருந்தது. தமிழகச் சூழலுக்கு இந்த விசயங்கள் முக்கியமானவை. பலருக்கும் இது ஒரு வாசலைத் திறக்கக் கூடியது.
இதைத் தொடர்ந்து கருணாகரன் தாமரைச்செல்வியின் புனைவுலகம் பற்றிச் சிறியதொரு உரையை நிகழ்த்தினார். சாமானிய மக்களின் வாழ்க்கையும் அவர்கள் கொள்ள விரும்பும் எதிர்காலமுமே தாமரைச்செல்வியின் முதற்கரிசனை. இதனால்தான் அவர் எப்போதும் சனங்களின் கதைசொல்லியாக இருக்கிறார். மிக எளிய மனிதர்களின் வாழ்க்கையை அதே எளிய முறையிலான கதைசொல்லலின் மூலமாக வரலாற்றில் பதிய வைக்கிறார். காலத்தையும் சூழலையும் உருவழியாமல் கட்டமைப்பது தாமரைச்செல்வியின் புனைவு. புனைவின் வழியாக தன்னுலகை அழியாமல் நிர்மாணித்து விடுகிறார். அவருடைய தன்னுலகென்பது எளிய சனங்களின் வாழ்க்கையின் நிழற்படமே. ஆனால், இந்த நிகழ்படம் உயிரோடிப்பது என்று குறிப்பிட்டார் கருணாகரன்.
நிகழ்வின் முக்கியமான அம்சம் கவின்மலர், எழுத்தாளர் விஜிதரன் ஆகியோரின் உரைகள். உயிர்வாசம் நாவல் அகதிகளைக் குறித்த மிக முக்கியமான ஆவணமாகவும் இலக்கியப்பிரதியாகவும் உள்ளது என்றார் விஜிதரன். இந்தியாவில் ஒரு அகதியாக இருக்கும் தன்னுடைய அனுபவங்களை வைத்து, உலகளாவிய ரீதியில் அகதிகள், அகதிகள் மீதான அரசுகளின் நடத்தைகள், அகதிகளுக்கான ஐ.நாவின் வரையறைகள் போன்றவற்றைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசினார் விஜிதரன். (இந்த உரையை மையமாக வைத்து விரிவானதொரு விமர்சனத்தை விஜிதரன் எழுதியுள்ளார்). முக்கியமாக இந்திய அரசும் தமிழகச் சூழலும் இந்த நாவலைப் படித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அகதிகள் விடயத்தில் சர்வதேச நியமங்களை விட்டு எந்தளவுக்கு தாம் தாழ்ந்து போயிருப்பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த நாவல் தமிழகச் சூழலில் பரவலாக வாசிக்கப்படுமாக இருந்தால் அது ஈழ அகதிகளைப்பற்றிய வேறு விதமான – உண்மைகளை பலருக்கும் உண்டாக்கும். அந்த வகையில் இந்த நாவலுக்குப் பெரியதொரு முக்கியத்துவம் உண்டென்றார். கூடவே நாவலில் கவனித்திருக்க வேண்டிய சில பகுதிகளைப்பற்றியும் குறிப்பிட்டார் விஜிதரன்.
கவின்மலருடைய உரை இன்னொரு கோணத்திலிருந்தது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக அவலங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. போர் முடிந்தாலும் அவர்களுடைய அவலக்கதைகளும் துயரமும் எளிதில் முடிந்து விடுவதில்லை. அவற்றிலிருந்து அவர்கள் நீங்க முயன்றாலும் அது தொடரும் துயரக் கதைகளாக வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது என்பதைச் சாரமாகக் கொண்டு கவின்மலர் தன்னுடைய உரையை நிகழ்த்தினார். இரண்டு உரைகளும் மிகுந்த கவனத்திற்குரியவை. உயிர்வாசம் நாவலைக் குறித்த, அதனுடைய முக்கியத்துவத்தைக் குறித்த உரைகளாக இருந்தன.
ஈழத்தமிழர்களை வெளிச்சூழலில் பிற சமூகத்தினர் – குறிப்பாக மத்தியகிழக்கு மற்றும் அரபுச் சூழலில் உள்ளோர் கூட இரண்டாம் தரப்பிரசைகளாகக் கணிப்பதற்கான காரணங்கள், அவர்கள் இந்த நாடுகளில் கொண்டிருந்த தொழில் மற்றும் வாழ்க்கைத் தன்மையாகும் என்ற வாதத்தை முன்வைத்து கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் விஜிதரனின் கூற்றுக்குப் பதிலளித்தார்.
பிரதியை திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி வழங்கி வைத்தார். கவின்மலர், பெற்றுக் கொண்டார். ஈழ எழுத்தாளர்கள் தமிழ்நதி, அகரமுதல்வன், ப.தெய்வீகன், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், வாசு முருகவேல், செல்வம் அருளானந்தம் (காலம்) நாட்டியக் கலைஞர் அபிராமி, ஊடகத்துறையைச் சேர்ந்த ரேணுகா துரைசிங்கம், கமலாகரன், திரைப்பட நடிகர் வின்சன்ட் உள்ளிட்ட பலரோடு தமிழகத்தின் எழுத்தாளர்கள், வாசகர்கள், திரைத்துறையைச் சேர்ந்தோரும் எனப் பலர் கலந்து கொண்டனர்.
உயிர்வாசம்
(நாவல்) சிந்தன் புக்ஸ் - இந்திய விலை 400/=

இலங்கையில்
சுப்ரம் பதிப்பகம் - இலங்கை விலை 900/=
Karunakaran Sivarasa
6 mins 
 

No comments:

Post a Comment