Search This Blog

Monday, February 10, 2020

முல்லை யேசுதாசன் (சாமி) எழுத்தாளரும் திரைப்பட நடிகரும்

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மறைந்து விட்டார். அதிர்ச்சியளிக்கும் சேதியிது. எந்த நிலையிலும் சோராத மனிதர். பொருளாதார நெருக்கடி, இராணுவ நெருக்கடி, குடும்பச் சூழலின் நெருக்கடி என தொடர் நெருக்கடிகளால் எப்போதும் சுற்றி வளைக்கப்பட்ட வாழ்க்கை முல்லை யேசுதாசனுடையது. ஆனாலும் அவர் எதற்கும் துவண்டு போனதில்லை. எந்தச் சுமையையும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. எப்போதும் கலகலப்பையே எல்லாவற்றுக்குமான ஆயுதமாக வைத்திருந்தார் யேசு. இதனால் எல்லோரையும் சமனிலையில் நோக்கிப் பழகிய பிறவியாக இருந்தார். வஞ்சகம், சூது அறியாத மனிசர் என்று சொல்வார்களல்லவா.. அது அப்படியே சாமிக்குப் பொருந்தும். ஊர்ச்சனங்கள் தொடக்கம் போராளிகள் வரையில் “சாமி“ என்றும் “சாமி அண்ணை” என்றுட“ அன்பாக அழைத்துக் கொண்டாடியவரை இனி நாம் காணவே முடியாது.

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வந்த யேசுதாசன் 1980 களில் ஈரோஸ் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். அந்த நாட்களிலேயே வாசிப்பில் சாமிக்கு மிகுந்த ஆர்வம். பின்னர் சில ஆண்டுகாலம் யேசுதாசன் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கே வாழந்தார். ஆனாலும் அந்த வாழ்க்கை அவருக்குத் தோதுப்படவில்லை. அங்கிருந்து திரும்பி முல்லைத்தீவுக்கே வந்தார். ஆனால், முல்லைத்தீவு அவரை வரவேற்கும் நிலையில் இருக்கவில்லை. அது இராணுவத்திடம் பறிபோயிருந்தது. அல்லது இராணுவப் பிடியிலிருந்தது. இதனால் யேசுதாசனின் குடும்பம் இடம்பெயர்ந்து வேறு இடத்திலிருந்தது.
இந்தக் காலப்பகுதியில் அவர் சுயதொழிலில் ஈடுபட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் திரைப்பட முயற்சிகளில் ஆர்வத்தோடு இயங்கத் தொடங்கினார். அநேகமாக இது 1990 க்குப் பிறகு. அப்பொழுது மட்டக்களப்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வந்திருந்த கணேஸ் மாமா என்ற திரைக்கலைஞருடன் ஏற்பட்ட உறவின் விளைவாக கணேஸ் மாமாவின் தம்பியார் பொ. தாசனுடன் யேசுதாசனுக்கு அறிமுகம் உண்டானது. இதன் பயனாக பொ.தாசனின் படங்களில் வேலை செய்யத் தொடங்கினார் யேசுதாசன்.
விளைவாக விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழகத்துடனும் திரைத்துறையோடும் நிதர்சனத்துடனும் யேசுதாசனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. பிறகு நிதர்சனத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் ஒருவராகினார். அப்பொழுது ஏனைய இயக்குநர்களான ஞானரதன், ந. கேசவராஜன் போன்றோருடனும் பின்பு இளைய இயக்குநர்கள், போராளிக் கலைஞர்கள் போன்றோரோடும் யேசுதாசன் இணைந்து செயற்பட்டார்.
இந்தக் காலகட்டத்தில் ஏராளமான குறும்படங்கள், முழு நீளப்படங்கள் போன்றவற்றில் முல்லை யேசுதாசன் நடித்தும் பிற பங்களிப்புகளைச் செய்தும் வந்தார். 10 க்கு மேற்பட்ட குறும்படங்களைத் தனியாகவே இயக்கினார் யேசு. உதிரிப்பூக்கள் மகேந்திரன். ஜான் போன்ற இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். முக்கியமாக ஆணிவேர், 1996 போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவர்களுடைய நெறிப்படுத்தலில் நடித்தவர் யேசு. திரைக்கதை உருவாக்கத்திலும் சேர்ந்தியங்கினார்.
யேசுதாசன் எழுத்தாளரும் கூட. ஏராளம் கதைகளை எழுதியிருக்கிறார். யேசுதாசனின் சிறுகதைகள் நீலமாகி வரும் கடல் என்ற தலைப்பில் ஒரு தொகுதியாக வெளியாகியுள்ளன. யேசுதாசனுக்குப் பெரும் உதவியாகவும் தூண்டலாகவும் இருந்தவர் சேரலாதன். நிதர்சனம், திரைப்பட உருவாக்கப்பிரிவுப் பொறுப்பாளராக சேரலாதன் இருந்த காலத்திலும் சரி, கலை பண்பாட்டுக்கழகத்தின் துணைப்பொறுப்பாளராக இருந்த போதும் சரி யேசுதாசனுக்கும் சேரலாதனுக்குமிடையில் ஆழமான அன்பும் நெருக்கமுமிருந்தது. இதன் விளைவாக யேசுதாசன் பல படங்களில் பங்களிக்க வாய்த்தது. யேசுதாசனின் சிறுகதைகளை நூலாக்குவதற்கான முயற்சியையும் சேரலாதனே எடுத்திருந்தார். நான் அதை வெளியிட்டிருந்தேன். இது விடியல் பதிப்பகத்தின் மூலமாக தமிழகத்தில் இரண்டாவது பதிப்பைக் கண்டுள்ளது. அதையும் தமிழகத்திலிருந்து கொண்டு வந்து யேசுதாசனின் கைகளில் கொடுத்திருந்தேன். பின்னாளில் எழுதிய கதைகளைச் சேர்த்து ஒரு தொகுதியாக்கலாம் என்று பேசியிருந்தோம். பேசிய காலத்தில் அதைச் செய்திருக்கலாம். யார் கண்டது, இப்படி இவ்வளவு விரைவாக யேசுதாசன் நம்மிடமிருந்து விடைபெறுவார். தனனுடைய இயக்கத்தை நிறுத்திக் கொள்வார் என்று.
சுனிமிப் பேரலை, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம், போர்க்கள வாழ்க்கை, அபாயமான படப்பிடிப்புச் சூழல் என மிகமிகச் சவாலான இடங்களிலும் காலங்களிலும் வாழ்ந்து வென்ற யேசுதாசன் மிகச் சாதாரண மாரடைப்பிற்குத் தோற்று விட்டார். யாருமே இப்படியொரு சாவு வந்து சாமியை அழைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தளவுக்கு மிகமிகத் துடிப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் யேசு. இறப்பதற்கு முதல் நாள் கூட பதுளைக்குப் போய் தொலைக்காட்சித் தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்பைச் செய்து விடடே வந்திருந்தார். பஞ்சி அலுப்பு, நோய் நொடி என்று சோர்ந்ததில்லை இந்த யேசுபிரான்.
படகு திருத்துநர் (கடற் கலங்களைச் செம்மை பார்க்கும்) தொழிலைச் செய்து வந்தாலும் சாமியின் அடையாளம் எப்போதும் ஒரு கலைஞர் என்பதுவாகவே இருந்தது. அதுவே அவரை மிகப் பெரிய பரப்பில் அறிமுகப்படுத்தியது. அதுவே எல்லோராலும் சாமியை நினைவு கூர வைக்கிறது.
இறுதி யுத்தத்தின்போது அவருக்கு வலது கரமாக இருந்த அவருடைய புதல்வன் ஜூயினை இழந்த போதும் தளராமல் தாக்குப் பிடித்துக் கொண்டு இயங்கிய சாமி இப்போது நிரந்தர ஓய்வில் வீழ்ந்து விட்டார் என்பது எவ்வளவு கொடுமையானது.
எனக்கு சாமியின் அடையாளங்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்ததொரு கடலோடியாக அவர் இருந்ததும் எழுதியதுமே முதன்மையாகத் தெரிகிறது. சாமியின் அடையாளப் பரப்பு பெரியது. ஒன்றென்று வரையறுக்க முடியாதது. ப்ரியம் முதலாவது. நெருக்கம் இரண்டாவது. விசுவாசம் மூன்றாவது. சோர்வினமை நான்காவது. எளிமை ஐந்தாவது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இதனால்தான் சாமி எல்லோராலும் நேசிக்கப்பட்டார். கொண்டாடப்படுகிறார்.
யுத்தத்திற்குப் பிறகு சில காலம் மறுபடியும் படகு திருத்தும் வேலைகளைச் செய்து வந்த யேசுவை காலம் புதிய திசையில் நகர்த்தியது. யாழ்ப்பாணத்தில் இயங்கிய தொலைக்காட்சிகள் சாமியை வரவேற்றன. இதனால் தொலைக்காட்சிகளில் வேலை செய்யத் தொடங்கினார். இறுதியில் Capital தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

யேசுதாசனை அறிந்தவர்கள் ஏராம்பேர். அத்தனை பேருக்கும் இது பேரிழப்பு. பெருந்துயர்.
யேசுதாசனுக்கு அஞ்சலிகள்.

Karunakaran Sivarasa

No comments:

Post a Comment