Search This Blog

Sunday, January 5, 2020

மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைகள் 11 புத்தகங்கள்

மனுஷ்ய புத்திரன் (பிறப்பு:மார்ச் 151968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், தமிழின் மிக முக்கிய கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார்.




“மனுஷ்யபுத்திரன் கவிதைகள் இயல்பாக அமைவதற்குக் காரணம் அவரது உரையாடல் தன்மைதான் என்று எனக்குப் படுகிறது. அந்த முன்னிலை அவருக்கு தன்னைத் தொகுத்துக் கொள்ளவும் தெளிவாக அடுக்கி முன்வைக்கவும் உதவும் மையமாக உள்ளது. அவர் கவிதைகளின் தனித்தன்மையும் சிறப்பும் இதுவாகும்.”


 ஜெயமோகன்
அளித்தலும் ஏற்றலும்
.......
'இந்த நேரத்தில் உங்களுக்கு
ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்' என்றான் தயங்கித் தயங்கி
நான் இருமலைக் கட்டுப்படுத்திக்கொண்டு

மெல்ல எழுந்து உட்கார்ந்தேன்

அவனது கண்கள் அன்பினால்

தளும்பிக்கொண்டிருந்தன.

இனம் புரியாத குற்ற உணர்வினால்

தவித்துக்கொண்டிருந்தான்



எனக்கு மிகப்பெரிய உதவிகள்

தேவையாக இருந்தன

எனக்கு எதுவுமே

தேவையில்லாமலும் இருந்தன

அவனோ மிக எளிய மனிதன்

அவனுக்கே உதவிகள் தேவைப்படலாம்

ஆனால் அவன் பிடிவாதமாக கேட்டுக்கொண்டே இருந்தான்
" சொல்லுங்கள் உங்களுக்கு ஏதாவது செய்ய
என்னை அனுமதியுங்கள்" என்றான்

மறுக்க விரும்பினேன்
ஏதோ ஒன்றை செய்வதைக் காட்டிலும்
உடனிருப்பதற்கு சிறந்த வழிகள் இருக்கின்றன
என்பதைச் சொல்ல விரும்பினேன்
என் மறுப்பின் வழியே
அவனது இயலாமை எதையும் காயப்படுத்திவிடலாகாது என அஞ்சினேன்
நான் அந்தியின் மஞ்சள் ஒளியையையே
மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்

நீண்ட யோசனைக்குப் பிறகு
இந்த உலகிலேயே மிகச்சிறிய ஒன்றை
அவனிடம் கேட்டேன்
அது எனக்கு தேவையாக இருந்த ஒன்றுகூட அல்ல
ஆனால் அது அவனை நம்பவைக்க போதுமானதாக இருந்தது
அது ஒரு பறவையிடம்
ஒரு சிறிய இலையைக் கொண்டுவரும்படி
கேட்பதுபோன்றது

அவன் என்னைப் பார்த்துக்கொண்டதற்கான
நிம்மதியை அடைந்தான்
எப்போது வேண்டுமானாலும்
எது வேண்டுமானாலும் கேளுங்கள் என்றான்
பரவசத்துடன்

அளித்தலுக்கும்
ஏற்றலுக்கும் நடுவே
நடுங்குகின்றன
அன்பின் ஆயிரம் சுடர்கள்

காலை 6.05
5.1.2020
மனுஷ்ய புத்திரன்
நம் காலத்தைப் பிளந்து அதனுடைய குருதியைப் பருகத்தந்து கொண்டேயிருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.

நம்முடைய இந்தக் காலம் சாதாரணமானதல்ல. மிகக் கொடூரமானது. வலி நிரம்பியது. தந்திரங்களாலும் கீழ்மைகளாலும் உருக்குலைக்கப்பட்டது. கண்ணியமற்றது. பொய்மைகளில் திளைத்தது. இப்படியே இந்தக் காலத்தைச் சிதைத்து வைத்திருக்கின்றன நம்மைச்சுற்றியும் நம்முள் ஊடுருவியுமுள்ள ஒவ்வொரு தரப்பும். ஆனாலும் இதை ஒப்புக்கொள்ள மறுத்து மினுக்கம் காட்டுவதற்கே அவை தொடர்ந்தும் முயற்கின்றன. இதற்காகவே நீதி பற்றிய போதனைகளிலும் நியாயங்களைப் பற்றிய கற்பிதங்களிலும் தொடர்ந்தும் இவை ஈடுபடுகின்றன.

இந்தக் காலத்தின் மேன்மையான தருணங்கள் என்பது கணப்பொழுது மின்னலைப்போன்றவை. அல்லது வானவில்லைப்போல சில மணித்துளிகளோடு கரைந்து போகின்றவையாகி விட்டன. இது அறிவின் யுகம், நீதியின் காலம், உரிமைகள் பகிரப்படும் உலகம் என்றெல்லாம் நம்ப வைக்கப்படுகிறோம். ஆனால், இவற்றுக்கு நேர் கீழாகவே நடைமுறைகள் உள்ளன. இதைப் புரிந்து கொண்டாலும் எளிதில் இவற்றை நம்மால் முறியடித்து விட முடிவதில்லை. ஆனாலும் எதிர்ப்புக்குரல்கள் அங்கங்கே எழுந்து கொண்டேயிருக்கின்றன. இது ஒன்றே நமக்கான ஆறுதலும் திருப்தியும்.

எனினும் இதையும் கடந்து அதிகாரத்தின் குரூரம் மிக நுண்ணிய முறையில் பிரயோகிக்கப்படுகிறது. அந்தளவுக்கு நமது சூழலிலுள்ள இன்னொரு தரப்பின் அறிவு அதிகாரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாம் நம்பிக் கொண்டிருக்கும் அறமும் பண்பாடும் சட்டங்களும் ஆட்சியும் மரபும் சமூகமும் எப்படிச் செயற்படுகின்றன? என்ற எண்ணற்ற புதிர் மூட்டங்களில் இதையெல்லாம் ஒரு கலைமனம் எப்படி அணுகுகிறது? இதில் ஒரு கவிமனதின் கொந்தளிப்பு எப்படியானது? என்பதை மிகச் சிறப்பாகக் காட்டுகின்றன மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். அவரளவுக்கு நம் காலத்தைக் கவிதைகளில் திறந்து காட்டியவர் வேறு யாருமில்லை. இந்தப் பத்தாண்டுகளில் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றும் இதற்கு நல்ல சாட்சி.

தத்தளிப்பாக, எதிர்ப்புக்குரலாக, காலச்சாட்சியமாக, விமர்சனமாக, வரலாற்றுப் பதிவாக எனப் பல நிலைகளில் இந்தக் கவிதைகளைத் தந்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன். ஆனால் எந்தக் கவிதையிலும் இயலாமையின் நிழலை அவர் படியவிட்டதில்லை. கழிவிரக்கத்தின் சாயல் தென்பட்டதில்லை. இது அவருடைய இயக்கத்தின் இயல்பென்றே தோன்றுகிறது. அந்த வகையில் மனுஷ்ய புத்திரன் இந்தக் காலமுகத்தையுடையராகி இருக்கிறார்.

இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சிறிய நிகழ்வும் கூட மனுஷ்ய புத்திரனைத் தீண்டுகின்றன. அதை அவர் உணரும் விதம் மிக ஆச்சரியமூட்டுவது. இதனால்தான் அவரால் எதையும் கவிதையாக எழுதி விட முடிகிறது. இந்தக் காலத்தில் நிகழ்த்தப்படும் அபத்த நாடகங்கள் தருகின்ற அதிர்ச்சியை விடப் பயங்கரமானது அவற்றின் திரைகளை விலக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைச் செயல். இவ்வளவு அநீதிகளின் மத்தியில், இவ்வளவு அபாயங்களின் நடுவில்தான் நாம் உள்ளோம் என்ற உண்மையை உணர்த்துவதன் மூலம் இந்த அதிர்ச்சியை உருவாக்குகிறார் மனுஷ்ய புத்தரன். உறைந்து போயிருக்கும் நம் அசண்டையீனத்தின் மீதும் இயலாமை உருவாக்கியிருக்கும் மௌனத்தின் மீதும் இந்த அதிர்ச்சி சலனங்களை உருவாக்க முனைகிறது. தினமும் பொதுவெளியில் சக மனிதர்களுக்காகவும் பாதுகாப்பானதொரு எதிர்காலத்துக்காகவும் எழுத்தாளனாகத் தொடுக்கின்ற அறத்துக்கான வழக்குகளாக இந்தக் கவிதைகளைக் கொள்ள முடியும்.

சமானியர்கள் தொடக்கம் சமூகத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் மனுஷ்ய புத்திரன் ஊட்டுகின்ற ஒளி பெரியது. விழிப்புணர்ச்சியும் அகத்தூண்டலும் மிக வலியன. குறிப்பாகப் பெண்களின் பிரச்சினைகளை உணர்ந்து பேசிக் கௌரப்படுத்தியவை மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். நகரத்துக்கு வரும் பெண்கள் சிறுநீர் கழிப்பதற்கான இடங்களில் அவஸ்தைப்படுவதிலிருந்து... நம் சமூகச் சூழலில் பெண்கள் படுகின்ற சிரமங்கள், அசௌகரியங்கள், சங்கடங்கள், அவர்களின் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள், கொடுமைகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் நுணுக்கமான முறையில் கவிதைகளில் அவதானிப்புச் செய்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.
அவர்களுடைய ஒவ்வொரு உத்தரிப்புகளையும் மன அவசங்களையும் பற்றிச் சிந்தித்திருக்கிறார். அந்தளவுக்கு பெண்களை, அவர்களின் வாழ்நிலையைப்பற்றி விதவிதமாக பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கிறார். இந்த வகையில் நவீன தமிழ்க்கவிஞரில் முக்கியமானவராகவும் உள்ளார் மனுஷ்ய புத்திரன். .

இவ்வாறு 1000 கவிதைகளோடு 11 புத்தகங்கள் வருவதென்பது பெரிய விசயமே. வாழ்த்துகள். 
Karunakaran Sivarasa






எனக்கு நானே அளித்துகொண்ட மலர்
.............................
நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். இன்று ஏனோ மனம் சற்றே உணர்ச்சிவசப்படுகிறது. ஒரு வேளை நான் இல்லாமலேயே கூட இந்தக் கூட்டம் நடந்திருக்கலாம். வாழ்வின் பெரும் கருணை இன்னும் எங்கோ மிஞ்சியிருக்கிறது. வாழ்வதற்காக எப்போதும் போராடி வந்திருப்பவர்கள் களத்தைவிட்டு அவ்வளவு எளிதில் அகன்றுவிடமாட்டார்கள். எந்த சரிவிலும் பற்றிக்கொள்ள ஒரு பிடி மண் கிடைக்கும்.

இந்த நாட்களில் எவ்வளவு அன்பு கிடைத்ததோ அதை சற்றே சமன் செய்ய வெறுப்பும் வன்மங்களும் கிடைத்தன. அந்த வெறுப்பிற்குப் பின்னே எந்த இலக்கிய சமூக மதிப்பீடுகளும் இல்லை. பொறாமையிலிருந்தும் ஆற்றாமையிலிருந்தும் பெருகும் கசப்பு அது. நான் செய்யும் வேலைகளும், எனக்குக் கிடைத்த சிறிய அடையாளங்களும் என்னை நானே அழித்துக்கொண்டு எனக்கென்று எந்த தனிப்பட்ட வாழ்க்கையும் இல்லாமல் உருவாக்கிகொண்டவை..



கடந்த ஓராண்டில் 1150 கவிதைகளை 1700 பக்கங்களில் எழுதிய பிறகும் இதோ இன்று அதிகாலைநான்கு மணியிலிருந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். இந்தப் பைத்திய நிலைக்காக கொடுத்தவிலைகள் கொஞ்சமல்ல. சொந்த வாழ்க்கையிலும் சமூக இலக்கிய வாழ்க்கையிலும் எவ்வளவு அவமானங்கள், இழப்புகள். ஆனால் நான் சாகும்வரை இதைத்தான் செய்வேன். இன்னும் கொஞ்சம் இதற்காக் என்னை எரித்துக்கொள்வேன். ஒவ்வொரு கவிதையையும் யாரோ ஒரு வாசகனோ வாசகியோ ’இது என் இதயத்தின் ரகசியம்’ என கண்ணீர் மல்க சொல்லும்போது நான் செய்யும் வேலைக்கான அர்த்தம் கிடைக்கிறது.

பொதுவாக என் புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. அன்றைக்கு என ஏதாவது ஒரு துயரம் என்னைத் துரத்தும். மனம் வாடிப்போவேன். ஆனால் இன்று நான் பிடிவாதமாக உற்சாகமாக் இருக்க விரும்புகிறேன். நான் ஒரு பெரிய வேலை செய்தேன் என்ற நிறைவின் நிமித்தமாக. எனக்கு நானே ஒரு சிறிய மலரை அளித்துக்கொள்கிறேன்.
என்மீது யாருகேனும் ஏதேனும் வருத்தங்கள் இருக்கலாம். சொற்களின் பைத்திய நிலையில் வாழ்பவன் என்பதால் மன்னிக்கலாம்தானே . எழுதுகிறவனுக்கு கிடைப்பது ஒன்றுமில்லை. இந்தப் பெருந்தனிமை உணர்ச்சியைத் தவிர
என் நேசத்திற்குரியவர்கள் இந்த நாளில் என்னோடு இருப்பது நான் இன்னும் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை எனக்குத் தருகிறது

மனுஷ்ய புத்திரன்
5.1.2020

No comments:

Post a Comment