Search This Blog

Monday, July 22, 2019

SLAS பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்....

Thevanesan Vannamani

SLAS பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்.... எனும் தலைப்பில் சகோதரி Emalini Philip இன் பயனுள்ள பதிவினை நன்றியுடன் இங்கு பகிர்கின்றேன்.
நன்றி சகோதரி Emalini Philip (SLAS).
SLAS பரீட்சைக்கு சுயமாக கற்பதற்கான சில உத்திகள்....
கடந்த வாரம் இப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
முகப்புத்தகத்தைத் திறந்தால் முழுக்க இப்பரீட்சைக்கான விசேட வகுப்புகளுக்கான விளம்பரங்கள்....
இதில் ஒரு சிலர் தங்கள் விளம்பரங்களில் என் பெயரையும் இணைத்து, நான் அவர்கள் வகுப்பில் கற்றுத் தான் நிருவாக சேவைக்குத் தெரிவாகியதாக புரளி கிளப்புகிறார்கள்.
பலர் இது தொடர்பாக என்னிடம் தொலைபேசியில் விசாரித்து விட்டார்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால் நான் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றினேன். சிங்கள வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நானே அமைத்துக் கொண்ட பாடதிட்டத்திற்கேற்ப சுயமாக கற்றே பரீட்சையில் தேறினேன். ஆக அந்த என் யுக்திகளையும், பயன் படுத்திய வளங்களையும் இங்கு பகிரப் போகிறேன்.
விடுமுறை நாட்களை முற்று முழுதாக விசேட வகுப்புக்களுக்கு ஒதுக்க நேரம் இல்லாத, ஆயிரக்கணக்கில் தண்ணீராக காசைச் செலவழிக்க வழி இல்லாத, சவால்களை எதிர் கொள்ள விரும்பும் என்னைப் போன்றவர்கள் வாசித்துப் பயன் பெறலாம்.
பயன்படுத்திய மூல வளங்கள்
தாபன விதிக்கோவை 1,11
நிதி ஒழுங்குகள்
ஆணைக்குழுவின் விதிகள் (ps procedure)
செயல்முறைத் தொழில்நுட்பத் திறன்கள் - தரம் 7 முதல்(pts)
வரலாறு- தரம் 6 முதல்
3 மாதங்களுக்குள்ளான பத்திரிகைகள்
நுண்ணறிவு தொடர்பான பழைய இத்துப் போன புத்தகங்கள்
கிரகித்தற் கட்டுரைகள்

பொதுவாக நம்மில் பலர் விடும் தவறு மூல ஏடுகளை ஆதாரமாகக் கொண்டு யாரோ எழுதும் புத்தகங்களையும் வினாவிடைகளையும் அடிப்படையாகக் கொண்டு பரீட்சைகளுக்குத் தயாராகுவதாகும். ஆனால் நான் என்றுமே யாரும் எழுதிய புத்தகங்கள் , வினா விடைகள், மீட்டல் பயிற்சிகள் என்பவற்றைப் பயன்படுத்தவில்லை.
மாறாக மூல ஏடுகளையே (AR,FR,PS pro) வாசித்தேன்.

எதையும் பாடமாக்கவில்லை. நுணுக்கமாக வாசிக்க மட்டுமே செய்தேன். அதுவும் ஒரு தடவையல்ல. கதை போல சொல்லும் அளவுக்கு வாசித்தேன்.
ஏனென்றால் எதையும் பாடமாக்க வேண்டிய அவசியம் இல்லை. கேள்விகள் கட்டமைப்பான விடைகளையே எதிர்பார்த்துக் கேட்கப்படும். தரப்பட்ட இடைவெளிகளிலேயே பதில் எழுதப்பட வேண்டும். ஆக பந்தி பந்தியாக எழுத வேண்டியதில்லை. விடய அறிவே சோதிக்கப்படும்.ஆக நுணுக்கமாக விளங்கி வாசித்தலே போதுமானது.
அடுத்து நுண்ணறிவு தொடர்பாக நான் பயன்படுத்தியது நூலகத்தில் இருந்த பழைய புத்தகங்கள். ஏனென்றால் அவற்றில் தான் ஒவ்வொரு விதமாக பயிற்சிகளையும் அணுகும் முறை பற்றிய விளக்கம் உள்ளது. புதிய புத்தகங்களில் வினா விடை மட்டுமே உள்ளன. செய்முறை விளக்கங்கள், தெளிவாக்கங்கள் இல்லை. ஒவ்வொரு வகைக்கும் குறைந்தது 50 பயிற்சிகள் செய்யுங்கள். (இலக்கம், படம்) மீண்டும் மீண்டும் அதையே திருப்பிச் செய்யுங்கள். வேறு வேறு பயிற்சிகள் மாற்ற வேண்டாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை அறியாமலேயே மனதில் நுட்பம் பதிந்து விடும். கண்களும் அதற்குப் பழகி விடும். அத்தோடு வேகமும் கூடும்.
அடுத்து கிரகித்தற் பயிற்சிக்காக நிறைய வாசியுங்கள். எளிமையான கட்டுரைகள் தொடங்கி சிக்கலான நீண்ட வாக்கியங்கள் கொண்ட கட்டுரைகள் வரை வேகமாக வாசியுங்கள். வாசிக்கும் போதே ஒவ்வொரு பந்தியின் கரு என்னவென்று அருகில் சிவப்பு மையில் எழுதுங்கள். ஒரே கட்டுரையை பல தடவைகள் வாசித்து நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிக்க முயலுங்கள். கட்டுரைகளை வாசிக்கத் தொடங்க முன்னர் கொடுக்கப்பட்ட கேள்விகளை இரண்டு முறை நன்றாக வாசியுங்கள்.
சாரம்சம் எழுதும் போது தரப்பட்ட பந்தியில் உள்ள வர்ணனைகள், உதாரணங்கள்,புள்ளி விபரங்கள் என்பவற்றைத் தவிர்த்து உங்கள் சொந்த நடையில் எழுதுங்கள். தரப்பட்ட பந்தியையே திருப்பி எழுத வேண்டாம்.
அடுத்து பொது அறிவு...
இந்த வினாத் தாள் மட்டும் தான் நாம் இஷ்டப்பட்ட படி வரையறை இல்லாமல் தரப்பட்ட தலைப்புக்களில் தாராளமாக எழுதக் கூடியது. இது இலங்கை மற்றும் உலக விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக அரசியல், சமய விடயங்கள் கேட்கப்பட மாட்டா. ஆனால் சமூக, சூழல், பொருளாதார விடயங்கள் ஆராயப்படும்.
இதற்காக நான் பயன்படுத்தியது பழைய பத்திரிகைகள் பாடசாலைப் பாடப்புத்தகங்கள். வாசித்தல் மட்டும் போதுமானது.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது புத்துணர்வான மனநிலையில் கற்றல் ஆகும்.
உழைத்துக் களைத்த நேரங்களில் புத்தகங்களைக் கையில் தொட வேண்டாம்.
நன்றாக உறங்கி எழுந்த பின்னர் வயிறு நிறைய சாப்பிட்டு, குளித்து வீட்டில் வேலைகள் எல்லாம் முடித்து,நிம்மதியான மன நிலையுடன், தூய்மையான ,காற்றோட்டமான, வெளிச்சமான இடத்தில் இருந்து விருப்பத்துடனும் தூய்மையான எண்ணத்துடனும் கற்றல் வேண்டும்.
ஒரு நாளைக்கு இவ்வளவு என இலக்கு வைத்துப் படியுங்கள்.
ஊரில் உள்ள எல்லோரும் எழுதிய புத்தகங்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். மற்றவர் படிப்பதை எட்டிப் பார்க்கவும் வேண்டாம். இவை வேண்டாத தலை வலிகள். அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் மனப்பாரம் கூடும்.
நான் கடைப்பிடித்த முறைகள் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன்.
இதற்கு மேலும் விளக்கங்கள் யாருக்கேனும் தேவைப்பட்டால் என்னை அணுகலாம். மெஸஞ்சரில் அல்ல.
என் மின்னஞ்சல் முகவரி
malialfred1978@gmail.com

No comments:

Post a Comment