Search This Blog

Thursday, April 4, 2019

சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு

 Thiru Vasagam
அவருடைய திரைப்படங்களை விடவும் அவருடைய இந்த புத்தகத்தை அவ்வளவு நெருக்கமாக உணர்கிறேன்.
எப்போதெல்லாம் மனம் தளர்ந்து போகிறேனோ அப்போதெல்லாம் இந்த புத்தகம் ஆதூரத்துடன் அணைத்து ஆறுதல் சொல்கிறது.
கண்ணீர் துளிகளை துடைத்து விடுகிறது.
குறிப்பாக ' சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு' என்கிற முதல் அத்தியாயம் எப்போதும் என் விருப்பத்திற்குரிய ஒன்று. வாழ்வின் கண்திறப்பென்றே அதை சொல்வேன்.
ஒரு தகப்பனாக, அண்ணனாக, நண்பனாக, நம் வாழ்வின் மீது அளவற்ற நேயம் கொண்ட காதலியாக அவர் பேசிச் செல்லும் பாங்கு யாவும் , அவருடைய பல படங்களின் காட்சிகள் சொல்லாத ஈரத்தன்மையுடையவை. பல்வேறு உளைச்சலிலிருந்து என்னை மீட்டெடுத்தவை.

சினிமாவில் ஏதோவொரு வாய்ப்புத் தேடி அலைபவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்தை வாசிக்க பரிந்துரைக்கிறேன். குறிப்பாக, முதல் அத்தியாயம். உங்களை இன்னும் பல வருடங்களுக்கு உத்வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ளும் வல்லமை மிகுந்தது அது. நான் உத்திரவாதம்.
இனி வருபவை முதல் அத்தியாயத்திலிருந்து...
"ஒரு மனிதனுக்குக் காதல் அவசியம். தன் மீதான காதல். நீங்கள் முதலில் உங்களை நேசியுங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். ஆரோக்கியமான உடலும் கூர்மையான மனமுமே சிறந்த படைப்புகளைத் தர உதவும்.
ஒரு சின்ன வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். அது எதுவாகவும் இருக்கட்டும். அடிமனதில் சினிமா ஒரு பொறியாக உங்களுக்குள் கனலட்டும். அதை அணைய விடாது அந்தக் கனலுடன் இருங்கள். அப்போது அதன் வீரியம் கூடிக் கொண்டே இருக்கும்.

உடல், மன ஆரோக்கியத்துடன் வாய்ப்பு தேடுவது ஆரோக்கியமானது. அப்போது உங்களிடம் தேவையற்ற தயக்கமோ கூச்சமோ இருக்காது. மன உறுதி இருக்கும். தன்னம்பிக்கை இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக வாய்ப்பு மறுக்கப்பட்டால் நிச்சயம் கூசிப் போகமாட்டீர்கள். உங்களுக்குப் பொறுந்தி வரக்கூடிய மற்றொருவரைத் தேடி, அதே கம்பீரத்துடனும் தெளிவுடனும் நீங்கள் செல்வீர்கள்"
" சினிமாவில் பிரபலமடைவதும் பெரிய ஆளாவதும் சந்தோஷமே. ஆனால், ஒருவேளை உன்னால் ஆகமுடியாது போனால் ... அது ஒன்றும் பெரிய நஷ்டமோ.. குறைபாடோ இல்லை.
சினிமா தவிர்த்தும் இந்த வாழ்க்கை மிக உன்னதமானது. பெருமை உடையது. பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது என்பது அப்படியொன்றும் குறைச்சலான காரியமில்லை..."
இவ்வளவு அற்புதமான கலைஞனை நேரில் சந்திக்கவே இல்லையே உரையாடவே இல்லையே என்கிற குற்ற உணர்வு எப்போதும் இருந்ததில்லை.
இந்த புத்தகத்தின் மூலம் இப்போதும் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment