Search This Blog

Sunday, February 10, 2019

சிவபெருமானால் முடிசூடிக் கொள்ளும் ராஜேந்திர சோழன்

இடம்:கங்கை கொண்ட சோழபுரம்.

மாவீரன் முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சையை ஆண்ட புகழ்பெற்ற ராஜராஜ சோழனின் குமாரன். தமிழக வரலாற்றில் வேறு எவரோடும் ஒப்பிடமுடியாத அளவுக்குப் புகழ்பெற்ற அரசன். தந்தை ராஜராஜன் 1014இல் காலமான பிறகு சோழ அரசனாக முடிசூட்டிக் கொண்டவன் ராஜேந்திரன். ஆனால் வரலாற்று ஏடுகளில் ராஜராஜனுக்குக் கிடைத்த அளவுக்கு இந்த ராஜேந்திரனுடைய புகழ் வெளிவரவில்லையே ஏன்?

ராஜேந்திரசோழனுடைய காலத்தில் சோழ நாட்டின் எல்லை வடக்கே கங்கைக் கரை வரை பரந்து விரிந்து கிடந்தது. கடல் கடந்தும் இந்த மாமன்னனுடைய ஆட்சியின் அதிகாரம் பரவியிருந்தது. இப்படிச் சொன்னால் மட்டும் போதுமா? எதுவரையில் இவனுடைய ஆட்சியின் எல்லை விரிந்து கிடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஆம்! தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். சோழ சாம்ராஜ்யம் பர்மா அதாவது இப்போதைய மியன்மார் கடற்கரை வரையிலும் பரவியிருந்தது. அந்தமான் நிக்கோபார் தீவுகளும் அவன் ஆட்சியின் கீழ் இருந்தன. லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் இவைகளும் இவனது ஆட்சியின் கீழ் இருந்தன. அது மட்டுமா? ஸ்ரீவிஜய ராஜ்யங்களான சுமத்ரா, ஜாவா, மலேயா தீபகர்ப்பம் தவிர தூரக்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் இவனது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. இவை தவிர சோழ கடற்படை வென்றெடுத்த நாடுகளும் பலப்பல. வங்கதேசம், இப்போதைய பிகார் மன்னன் மகிபாலனை வென்று அங்கும் தனது ஆட்சியை நிலைநாட்டினான் ராஜேந்திரன்.

ராஜராஜனின் மைந்தன் ராஜேந்திர சோழன். இவன் கி.பி.1012 முதல் 1044 வரை அரசாட்சியை நிர்வகித்து வந்தான். இவன் காலத்தில் சோழ் சாம்ராஜ்யம் பாரத வர்ஷம் முழுவதும், கடல் கடந்தும் பரவி நின்றது. இவனுக்குப் பரகேசரி எனும் பட்டப்பெயர் உண்டு. இவன் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம். இவனது ராணிமார்கள் திருபுவன மாதேவியார், முக்கோகிலம், பங்கவன் மாதேவியார், வீரமாதேவி ஆகியோர். பிள்ளைகள் முதலாம் ராஜாதிராஜன், 2ஆம் ராஜேந்திரன், வீரராஜேந்திரன், பெண்கள் அருண்மொழிநங்கையார், அம்மங்காதேவியார்.

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒரு புதிய தலைநகரை உருவாக்கினான். அந்த தலைநகரம்தான் கங்கைகொண்ட சோழபுரம். அவன் வாழ்ந்த காலத்தில் கீழை ஆசிய கண்டத்தில் புகழ்வாய்ந்த சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது சோழ சாம்ராஜ்யமே. மாமன்னன் ராஜேந்திரனின் தமிழ்ப் படை பல நாடுகளிடமிருந்தும் கப்பம் வசூலித்தது. அவை இப்போதைய தாய்லாந்து, கம்போடியா ஆகியவைகளும் அடங்கும்.

ராஜேந்திர சோழனின் மகிமை - பாலகுமாரன்

தஞ்சை இனியும் தலைநகராக இருப்பதற்குண்டான தகுதியுடையதாக இல்லை. தெற்கே பாண்டியர்கள், சேரர்கள் அமைதியாக உட்கார்ந்து விட்டார்கள். அந்த இடத்தை ராஜேந்திர சோழனின் மகன்கள் மன்னராக பதவியேற்று ஆட்சி செய்கிறார்கள். வடக்கே கீழை சாளுக்கியம் என்று அழைக்கப்படுகின்ற ஆந்திர மாநிலம் மிக இணக்கமாக இருக்கிறது. ஆனால் வடமேற்கே இருக்கின்ற இப்பொழுது கர்நாடகம் என்று அழைக்கப்படுகின்ற மேலை சாளுக்கியம் இடையறாது தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காவிரிக்கு நடுவே தடுப்பணை ஏற்படுத்த அவர்கள் முற்படுகிறார்கள். அல்லது படையெடுத்து வந்து திருவொற்றியூர் வழியாக மயிலை திருவல்லிக்கேணியை தாக்குகிறார்கள். தொண்டை நாடு அவதிப்படுகிறது. தொண்டை நாட்டிற்கு கீழே உள்ள நடுநாடு விரைவில் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எனவே ராஜேந்திர சோழன் தன்னுடைய தலைநகரை மாற்ற விரும்புகின்றான். இடையே இருக்கின்ற காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி, ஆறு போன்றவைகளை தாண்டி படைகள் வரவேண்டியிருப்பதால் அவைகளையெல்லாம் கடந்து ஒரு மிகப்பெரிய புல்வெளியை தேர்ந்தெடுத்து அதிலே தன் தலைநகரை நிறுத்த விரும்புகின்றான்.

அந்த இடம் மேடாக இருக்கிறது. அதற்கு அருகே ஜெயங்கொண்டம் என்ற ஊர் இருக்கிறது. கிழக்கே உடையார்குடி என்கிற சோழர்களின் பரம்பரை ஊர் இருக்கிறது. கொள்ளிடம் அருகே இருக்கிறது. எனவே அந்த இடமே சிறந்த இடம் என்று தேர்ந்தெடுத்து தந்தையைப் போலவே மிகச் சிறப்பாக தன் வழிபாட்டுக்கென்று ஒரு கோவில் எழுப்பி பெருவுடையார் என்று தஞ்சையிலுள்ள பிரகதீஸ்வரரை அழைக்கிறோமே, உண்மையிலேயே தஞ்சையில் இருப்பதைவிட மிகப்பெரிய ஒரு சிவலிங்கம் அமைத்து, அப்பாவின் கோவிலைவிட மிக அழகான சிற்பங்கள் வைத்து, தன்தந்தையான ராஜராஜனைவிட சிறப்பாக தான் இருப்பதை பறைசாற்றிக்கொள்ள விரும்பி அற்புதமான ஒரு நகரை அமைக்கிறான். அதற்கு கங்கை கொண்ட சோழபுரம் என்று பிற்பாடு பெயரிடுகிறான்.

பெரிய மதில்கள், அதற்குள்ளே ஊர். ஆறேழு மாளிகைகள். காவலர்களுக்கான குடியிருப்புகள். பணியாளர்களுக்குண்டான இடங்கள். பல தெருக்கள் கொண்ட நகரையே அங்கு ஸ்தாபிக்கிறான். நித்த வினோத பெருந்தச்சனான ரவி என்பவனுடைய தலைமையில் அந்த கோவில் உருவாகிறது. சதுரம், எண்கோணம், வட்டம் என்கிற விதத்தில் கோவில் விமானம் அமைகிறது. அது நெளிந்து நெளிந்து இருப்பதாக காட்சியளிக்கிறது. தஞ்சை விமானம் ஒரு குத்தாக நெடிய உருவமாக காட்சியளிக்கிறபோது இந்த விமானம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

உள்ளே சண்டேஸ்வர நாயனாருக்கு உண்டான சிற்பம். யார் சண்டேஸ்வர நாயனார். தான் சிவலிங்கம் வைத்து பூஜை செய்தபோது, மாடுகள் மேய்வதை கண்டுகொள்ளாதபோது தன் தந்தை வந்து தன்னை அடிக்க, அதைப்பற்றி கவலைப்படாது பூஜை செய்ய, தான் பூஜை செய்த சிவலிங்கத்தை உதைக்க முற்பட கையில் இருந்த கோலால் தந்தையின் காலை உடைத்தவர் சண்டேஸ்வர நாயனார். அவர் பக்தியை மெச்சி சிவபெருமான் அவருக்கு பட்டம் சூட்டினார். அந்தச் சிலை கோவிலில் மிகச்சிறப்பாக இருக்கிறது. பெரிய வண்ணப் பூமாலையை கொண்டு சண்டேஸ்வர நாயனார் தலையில் சிவபெருமானே சூட்டுகிறார். அருகே உமைதேவி அதை கனிவுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். மிக பய பக்தியுடன் சண்டேஸ்வர நாயனார் அதை வாங்கிக் கொள்கிறார். பரதகண்டத்திலேயே மிக அழகிய சிற்பம் இது. இந்த சண்டேஸ்வர நாயனார் ராஜேந்திர சோழரின் சாயலில் இருப்பதாக பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ராஜேந்திர சோழனை அழகன் என்றும், காமவேள் என்றும் குறிக்கிறார்கள். எப்படிப்பட்ட காமவேள் சிவனின் முக்கண் தொடாத காமவேள் மிக அழகன் என்று வர்ணிக்கிறார்கள். அவன் அழகன் மட்டுமல்ல. மிகுந்த திறமை மிக்கவன்.

மேலை சாளுக்கியம் என்கிற கர்நாடகத்திலிருந்து தாக்குதல் வராமல் இருக்க கீழை சாளுக்கியத்தில் மணவினை முடித்துக்கொள்கிறான். தன் மகள் அம்மங்காவை அந்த ஊர் மன்னன் ராஜராஜ நரேந்திரனுக்கு மண
முடிக்கிறான். ராஜராஜ நரேந்திரனின் தந்தை விமலாதித்தன். அவன் ராஜேந்திர சோழனின் தங்கையை மணமுடித்திருக்கிறான். தங்கை மகனுக்கு தன் மகளை மணமுடித்து அரசியல் உறுதி செய்து கொள்கிறான். அங்கு தன் படையை நிறுவுகிறான். மேலை சாளுக்கியத்திலிருந்து அதாவது மேற்கே இருந்து மட்டும் தொந்தரவு வரவில்லை. வடக்கே இருந்தும் கலிங்கத்திலிருந்தும் தொந்தரவு வருகிறது. அப்படியா, படைகளை கலிங்கத்திற்கு அனுப்பு. கலிங்க மன்னன் விழுகிறான். அதற்கு மேல் உள்ள ஒட்ட தேசமும் விழுகிறது. அதற்கு மேல் உள்ள தட்சிணலாடமும் நாசமடைகிறது. வங்கத்தில் உள்ள பால அரசர்கள் அடிபடுகிறார்கள். அவ்வளவு தொலைவு தன் படைகளை அரசியலுக்காக அனுப்பி, அதே சமயம் தந்தை செய்யாத ஒரு பெரிய செயலையும் செய்யவேண்டும் என்று தீர்மானித்து பெரும் தவலைகளில் கங்கை நீரை எடுத்து வருகிறான்.

கங்கை நீரை மட்டுமல்ல, தெய்வத்திரு உருவங்களும் பிடுங்கிக் கொண்டு வரப்படுகின்றன. பெண்டிர் பண்டாரமும் அள்ளிக் கொண்டு வருகிறான். சோழ தேசம் செழிப்பாகியது. எப்பொழுது ஊர் என்று வந்து விட்டதோ நீர் வரவேண்டும். தன்னுடைய வீரர்களாலும், தான் பிடித்து வந்த சேர தேசத்து, பாண்டிய தேசத்து வீரர்களாலும் மிகப்பெரிய ஏரி வெட்டுகிறான். அந்த ஏரிக்கு நடுவே சாரம் அமைத்து பெரும் தவலைகளை அங்கு கொண்டு போய் உயரே வைத்து அந்த நீரை தூண்போல விழச் செய்கிறான். கங்கை நீர் அந்த ஏரியில் கலக்கிறது. அதற்கு கங்கை கொண்ட சோழப் பேரேரி என்று பெயர் வருகிறது. இப்பொழுது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

யானைகளாலும், பசுமாடுகளாலும், அடிமை வீரர்களாலும் கங்கை கொண்ட சோழபுரம் நிரம்பி வருகிறது. அதற்கு அந்த பேரேரி வசதியாக வாழ மிகவும் உதவுகிறது.

இரட்டைச்சுவர் கொண்ட அரண்மனைகள் எழுப்பப்படுகின்றன. இரண்டு விதமான மதில் சுவர்கள் இருக்கின்றன. எந்த எதிரியும் ஒருபொழுதும் தாக்காதவாறு மிக உறுதியாக பத்திரமாக அந்த ஊர் இருக்கிறது. அந்த ஊரிலிருந்து எடுக்கப்பட்ட பரவையின் சிலை இப்பொழுது சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது. மிக அற்புதமான சிலை அது. சுந்தரமூர்த்தி நாயனாரின் துணைவியார் பரவை நாச்சியாரின் சிற்பமாக இருக்கலாம். அதற்கு பரவை என்கிற ராஜேந்திர சோழரின் அனுக்கி மாதிரியாக நின்றிருக்கலாம். மிக அழகான பெண் உருவம். அலங்காரமான நகைகள். மிக ஒயிலாக முடிக்கப்பட்ட தலை அலங்காரம். சிறிய சிரிப்பு. குறுகிய இடை. வளமான உடல் என்று கண்ணை கவருகிறது.

யார் அந்த பரவை. ராஜேந்திர சோழருக்கு என்ன முக்கியம். திருவாரூரில் அவள் தேவரடியார் கூட்டத்தைச் சேர்ந்தவள். அவளை கோவில் வாசலில் சந்திக்கிறான். வியக்கிறான். பேசுகிறான். காதல் வயப்படுகிறான்.

‘‘மன்னா, நான் தேவரடியாள். தாசி. நீங்கள் சொடுக்கினால் வரவேண்டியவள். என்னைப்போய் மனைவி என்கிறீர்களே.’’

‘‘ஆமாம். நீ தேவரடியார் அல்ல. நீ என் மனைவி. பலர் பார்க்க திருமணம் செய்வேன். நீ ராஜேந்திர சோழனை கணவன் என்று கூறலாம்.’’ அவளை தேர் ஏற்றி ஊர் முழுவதும் வலம் வந்து, உனக்கு என்ன வேண்டும் சொல் என்று கேட்க, எனக்கு எதுவும் வேண்டாம். இது செங்கல் கோவிலாக இருக்கிறது. இதை கற்றளியாக மாற்ற முடியுமா என்று திருவாரூர் கோவிலை கேட்கிறார்கள். இரண்டே வருடங்களில் அந்த கோவில் கற்றளியாக மாறுகிறது. அவள் பத்தாயிரம் கழஞ்சுக்கு மேல் செலவழித்து கருவறை சுவற்றையும், முன் மாடத்தையும் தங்கத்தால் இழைக்கிறாள். வேறு சில இடங்களை செப்புத்தகடால் அலங்கரிக்கிறாள். திருவாரூர் புகழ் பெறுகிறது. அவள் உயரத்திற்கு ஒரு விளக்கு செய்வித்து, அந்த விளக்கை கருவறையில் வைத்து ஏற்றி தியாகேஸ்வரரை ராஜேந்திரன் வணங்குகிறான். அது மட்டுமா பரவையின் பெருமை? இல்லை. ராஜேந்திர சோழனின் மகன் அவர்கள் இருவரின் சிலைகளைச் செய்து திருவாரூர் கோவிலில் ஒரு தனி சன்னதி ஏற்படுத்தி வழிபாட்டிற்குரிய இடமாகச் செய்கிறான். தந்தையின் பட்டமகிஷி அல்ல. மனைவி அல்ல. கூத்தி அல்ல. அனுக்கி. கேர்ள் பிரெண்ட் என்று அழைக்கப்படுகின்ற அந்த பெண்மணிக்கு அத்தனை மரியாதை கிடைத்திருக்கிறது. அத்தனை மரியாதைக்குரிய பெண்ணாக அவள் திகழ்ந்திருக்கிறாள்.

பராந்தகன் காலத்தில் சோழர்கள், பாண்டியர்களை ஜெயிக்கிறார்கள். ஆனால் பாண்டிய மன்னனின் மணி முடியையும், செங்கோலையும் பறிக்க முடியவில்லை. அவை ஈழம் என்கிற ஸ்ரீலங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. அங்கு அடைக்கலமாக வைக்கப்பட்டன. அடுத்து அடுத்து வந்த மன்னர்களும் அதைப் பெற போராடுகிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. ராஜராஜர் முழு முயற்சி செய்கிறார். முடியவில்லை. ஆனால் ராஜராஜரின் மகன் ராஜேந்திர சோழன் ஸ்ரீலங்காவின் மீது படையெடுத்து நாற்புறமும் வளைத்துக்கொண்டு, காடுகளை அழித்து உள்ளே புகுந்து அந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுகிறார். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. கொடுத்துவிடு என்று கேட்டு வாங்குகிறார். அதை கொடுத்த பிறகு ஸ்ரீலங்கா மன்னனின் மணிமுடியையும், அவன் மனைவியின் அழகிய முடியையும் பறித்துக் கொள்கிறார். அவனை கொண்டு வந்து சோழ தேசத்தில் சிறை வைக்கிறார். அவன் உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லை. அவன் சோழ தேசத்திலேயே செத்துப்போகிறான். தமிழருக்கும், சிங்களவருக்கும் உண்டான பகைமை இன்று நேற்றல்ல. அது ஆயிரம் வருஷத்து பகைமை.

கங்கை கொண்ட அந்த ராஜேந்திரன் பட்டமேற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. அதை மிகப்பெரிய விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கின்ற ராஜாராம் கோமகன் என்ற ஒரு பொறியியல் வல்லுனர் பெரிதாகக் கொண்டாடுகிறார். விளக்குகளால் கங்கை கொண்ட சோழபுரத்தை அலங்கரிக்கிறார். இந்த ஜூலை இருபத்திநாலு, இருபத்தைந்து தேதிகளில் கற்றறிந்த பல அறிஞர்கள் கூடுகின்ற விழாவாக பெரும் ஊர்வலமாக ராஜேந்திர சோழனை போற்றும் வண்ணம் நடைபெற இருக்கிறது. பரதகண்டத்திலேயே ராஜேந்திர சோழன் ஒருவன்தான் தடுத்து போர் செய்யாது, மற்றவரை அடித்து அடித்து போர் செய்தவன். கிழக்கே வணிகர்களுக்கு தொந்தரவு இருப்பதால் அங்குள்ள ஸ்ரீவிஜயம், இலங்காசோகம், கடாரம், காம்போஜம் எல்லாவற்றையும் அடித்து பிடுங்கியவன். பெரும் பொருள் கொண்டு வந்து சோழ தேசத்தை நிரப்பியவன். இன்றைய ஜாவா, சுமித்ரா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா எல்லாம் அவனால் தாக்கப்பட்டவை. அங்கிருந்து தோரணங்களும், யானைகளும், பெரும் நிதிக்குவியல்களும் சோழ தேசம் வந்து சேர்ந்தன. அப்படிப்பட்ட ஒரு தமிழ் மன்னனை, தமிழரின் சிற்பத்திறனை உயர்த்தியவனை நாம் கொண்டாட வேண்டும். அவனை வணங்க வேண்டும். தமிழின் சிறப்பை உலகறியச் செய்த அவனை வாழ்த்த வேண்டும். எனவே, ஜூலை இருபத்தி நாலு, இருபத்தைந்து கங்கை கொண்ட சோழபுரம் வாருங்கள். அந்த கோவிலை பாருங்கள். உங்கள் குழந்தைகளை கூட்டிவந்து காட்டுங்கள். தமிழ் மக்களின் பெருமையைச் சொல்லுங்கள். அவசியம் வாருங்கள்.------dinathanthi


No comments:

Post a Comment