Search This Blog

Wednesday, January 9, 2019

குபேரனுக்கு நிதி அருளிய , அன்னம்புத்தூர் ஸ்ரீ நிதீஸ்வர பெருமான்

குபேரனுக்கு நிதி அருளிய , அன்னம்புத்தூர் ஸ்ரீ நிதீஸ்வர பெருமானின் அழகிய தோற்றம் .

திண்டிவனம். (வரகுப்பட்டு அருகில்)
அருள்மிகு ஸ்ரீ கனகதிரிபுரசுந்திரி அம்பிகா ஸமேத ஸ்ரீ நிதீஸ்வரர் திருக்கோவில், திண்டிவனம், அன்னம்புத்தூர்.
ஸ்தல வரலாறு
மாமன்னன் இராஜராஜ சோழன் வியந்து, வணங்கி, திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் கொடுத்து இங்குள்ள ஸ்ரீநிதீஸ்வரரை வழிபட்டுள்ளான். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இவ்வாலயம் முற்றிலும் சிதிலமடைந்து மண்மேடாகிவிட்டது. பக்தர்களின் முழு அர்ப்பணிப்பால் இங்கு ஸ்ரீ நிதீஸ்வரப் பெருமானுக்கும், அம்பிகைக்கும், முழுவதும் கற்கோயிலாகப் பழைமை மாறாமல் புராதனப் பெருமையுடன் திருப்பணிகள் நடைபெற்று 09/04/2014 அன்று மகா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. இத்தலத்தில் உள்ள இறைவனை வணங்குவோர்க்கு பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கப்பெற்று அவர்களின் விதி புதியதாக மாற்றி எழுதப்படும் என்பதோடு அவர்களின் இல்லங்களில் வறுமை நீங்கி செல்வம் செழித்து மகிழ்ச்சி தங்கும் என்பது உண்மை.
பிரம்மன் வழிபட்ட தலம்
“அன்னமூர்த்தி”, “அன்னவாகனன்” என்று அழைக்கப்படும் படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும், காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு கயிலைநாதனிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க சிவபெருமான் அடியை அல்லது முடியை யார் கண்டு வருகிறார்களோ அவர்தான் பெரியவர் எனக்கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக் காண புறப்பட்டுத் தேடி தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார். பிரம்மன் அன்னமாய் பறந்து சென்று முடியைக் கண்டதாக பொய்யுரை கூறி நின்றார். பொய் உரைத்ததால் பிரம்மனை சிவபெருமான் அன்னமாகும்படி சபித்தார். தனக்கு ஏற்பட்ட இழுக்கு தீர பிரம்மதேவன் இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உருவாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி படைப்புத் தொழிலை மேற்கொண்டார். இதனால் இத்தலத்திற்கு “அன்னம்புத்தூர்” என்ற திருநாமம் ஏற்பட்டு உள்ளது. இத்தலத்தில் நான்முகன் வழிபட்டதற்கு ஆதாரமாக புராதனமான ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயிலில் பிரம்மாவுக்கு திருவுருவச்சிலை காணப்படுவது வேறு எங்கும் காண முடியாத அரிய தரிசனமாகும்.
குபேரன் வழிபட்ட தலம்
பதும நிதி,மகாபதும நிதி,மகா நிதி,கச்சப நிதி,முகுந்த நிதி,குந்த நிதி,நீல நிதி மற்றும் சங்க நிதி போன்ற எட்டு வகையான நிதிச்செல்வங்களுக்குத் தலைவன் குபேரன். இச்செல்வங்களுக்குத் தலைவனாக விளங்குவதால் “நிதிபதி” என்று போற்றி வணங்கப்படுபவன். தனக்கு எப்போதும் அள்ள அள்ளக் குறையாத செல்வங்களை வழங்கவேண்டும் என இத்தலத்தின் ஈசனை, குபேரன் வழிபட்டு நீங்காத செல்வம் நிலைக்கப்பெறும் பேறினைப் பெற்றதால் இறைவனுக்கு “ஸ்ரீநிதீஸ்வரர்“ எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றது.
ஸ்தல பெருமை
தலையெழுத்தை மங்களகரமாக மாற்றிட : (ஸ்ரீநிதீஸ்வரப் பெருமான்)
பிரம்மஹத்தி தோஷம், குரு சாபம் நீங்க, ஜாதகத்தில் குரு பலம் பெற நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் பெற பிரம்ம தேவன் வணங்கி பேறு பெற்ற ஸ்ரீநிதீஸ்வரப்பெருமானை ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் மஞ்சள் பூக்கள் (கொன்றை அல்லது மஞ்சள் அரளி) கொண்டு அர்ச்சனை செய்து ஸ்வாமிக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து 5 நெய் தீபம் ஏற்றி, 5 முறை ஆலயத்தை வலம் வர அவர்கள் தலை எழுத்தை பிரம்மதேவன் மங்களகரமாக மாற்றி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கிடும் என்பது ஐதீகம்.
அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக: (ஸ்ரீநிதீஸ்வரப் பெருமான்)
வெள்ளிக்கிழமை, பூச நட்சத்திரம். பௌர்ணமி, அட்சய திரிதியை, தீபாவளி ஆகிய நாட்களில் குபேரன் வணங்கி நிதி பெற்ற ஈசனுக்கு ஸ்வர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிப்பட்டால் கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். மன அமைதி, வீடு வாகன யோகம், திருமண பாக்கியம், சந்தான விருத்தி, தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு பெறலாம்.
குழந்தை வரம்: (ஸ்ரீகனகதிரிபுரசுந்திரி அம்பிகா)
குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதியர்கள் வெண்ணெய் கொண்டு வந்து அம்பாள் பாதத்தில் வைத்து தலத்தில் ஈசனையும், அம்பிகையையும் நினைத்து தியானம் செய்து கோவிலை 3 முறை வலம் வந்து வெண்ணெயை தம்பதியாக இருவரும் உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும். பொன், பொருள் விருத்தி அடைய கார்த்திகை திரிதியை (ரம்பா திரிதியை) அன்று அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது உகந்தது.
குரு பரிகாரத்தலம்
குரு பகவானுக்குரிய ப்ரத்யதி தேவதா பிரம்மா என்பதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள குருபகவானை குருபெயர்ச்சி அன்றும் மற்றும் குருபெயர்ச்சியை தொடர்ந்து வரும், ஆறு வியாழìகிழமைகளிலும் பரிகார பூஜை செய்து திருமணத்தடை நீங்கி புத்திரப்பேறு பெறலாம், வியாபார விருத்தி அடையலாம்.
லஷ்மி கணபதி
முழுமுதற்கடவுளான கணபதி இத்தலத்தில் லஷ்மிகணபதியாக அருள் பாலிக்கின்றார். சதுர்த்தி திருநாளில் இவரை வழிப்பட்டால் கல்வியில் உயர்வும், குடும்பத்தில் லஷ்மி கடாஷம் பெருகும்.
கல்யாண முருகர்
இத்திருதலத்தில் முருகன் கல்யாண சுப்பிரமணியராக அருள் பாலிக்கின்றார். இவருக்கு மாலை அணிவித்து வழிப்பட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும்.
காலபைரவர் வழிபாடு
மேற்கு நோக்கி ஈசனின் நேர்பார்வையில் வீற்றிருக்கும் காலபைரவரை 6 தேய்பிறை அஷ்டமி நாளிலும், ஞாயிறு அன்று இராகு காலத்திலும் 8 நெய் தீபம் ஏற்றி, சிகப்பு அரளியால் அர்ச்சனை செய்வதால் விரைவில் பிரிந்த குடும்பம் ஒன்று சேறும், தடைப்பட்ட அனைத்து காரியங்கள் நிறைவேறும். பில்லி, சூனியம், ஏவல் அகலும்.
தன ஆகர்ஷன பைரவர் வழிபாடு
வளர்பிறை அஷ்டமி அன்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை தன ஆகர்ஷன பைரவரை 8 நெய் தீபம் ஏற்றி சிகப்பு அரளியால் அர்ச்சனை செய்து வழிப்பட்டால் அனைத்து வகையான செல்லவங்களும் கிடைக்கப்பெறும்.

No comments:

Post a Comment