Search This Blog

Friday, November 9, 2018

இலவசங்கள் - என் பார்வை.


Sivarajah Ramanathan
தமிழக அரசுகளின் இலவசங்கள் பற்றி சர்கார் சினிமா நெகட்டிவ் ஆக பேசுவது ஒரு புறம் இருக்கட்டும். நானும் சில மாதங்கள் முன்பு வரை இந்த இலவசங்கள் பற்றி மிகக் கடுமையான எதிர் நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அது பற்றி தெளிவாக அறிய முற்பட்டேன். ஏராளமான தரவுகள், வாசிப்புகள், வாதங்கள், நேர்-எதிர் உரையாடல்கள்....பகுத்தறிந்த சீராய்வுக்கு பின் எனது புரிதல் எப்படி இருந்தது என்பதை இங்கே தந்துள்ளேன். இதை ஒரு myths & truths analysis என்றும் கூட சொல்லலாம். சற்றே நீளமான பதிவு.
Myth 1: இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்குகின்றன.
Truth: மேலோட்டமாக பார்த்தால் உண்மை போலத்தான் தோன்றும். ஆனால் நான் பேசிய அளவில் எந்த ஏழையும் அல்லது அடித்தட்டு பயனாளியும் அரசின் இலவசங்களை தங்கள் வாழ்வாதார தேவைகளுக்கான அடிப்படையாக நினைக்கவே இல்லை. அது ஒரு பரிசு. ஒரு தேவையை பூர்த்தி செய்யும் நல்ல பரிசு. அதன் மூலம் தன்னிடம் இல்லாத -வசதியானவர்களிடம் இருக்கும் ஒன்றை - பயன்படுத்தும், பயன் பெரும் திருப்தி. அவ்வளவே. இலவசங்களை வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை அடித்தட்டு மக்கள் இழக்கும் நிலையை தரவுகளும் காட்டவில்லை.அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இது ஒரு எதிர் சித்தாந்த கற்பிதம்.
Myth 2: இந்த இலவச திட்டங்கள் ஊழல் செய்வதற்கும் ஓட்டு வாங்குவதற்கும் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன.
Truth: நீதிக்கட்சியும், காமராசாரும் கூட இத்தகைய சமூக நலத்திட்டங்களின் முன்னோடிகள் தான். அவர்கள் ஊழல் விமர்சனத்துக்கு முற்றிலும் அப்பால் பட்டவர்கள். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய பிற்கால முதல்வர்களின் திட்டங்கள் பலவும் (பட்டியல் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன்) மிகவும் புதுமையான முன்னோடித் திட்டங்கள் என்றால் அது மிகையாகாது. அவற்றில் பல பல்வேறு மாநிலங்களுக்கும் ஏன் நாடுகளுக்கும் கூட முன்னுதாரணமாக அமைந்தன. இவற்றை வாக்கு அரசியலுக்கும் அவர்கள் பயன் படுத்திக் கொண்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதில் தவறு இருப்பதாக நான் மட்டுமல்ல உச்ச நீதி மன்றம் கூட நினைக்கவில்லை. தி.மு.க /அ .தி.மு.க காலங்களில் ஊழல் நடந்தது என்ற கோணத்தில் பார்த்தால் கூட மொத்த சமூகநல திட்டத்தில் ஊழல் என்ற ஒரு பகுதி தான் பிரச்சினையே தவிர இந்த சமூக நல திட்டங்கள் அல்ல. தலையில் பேன் இருக்கிறது என்பதற்காக தலையை வெட்டித்தள்ள முடியாது.
Myth 3: இலவசங்களால் பொதுமக்கள் யாருக்கும் பயன் இல்லை.
Truth: இது எதிர் சித்தாந்த பிரச்சாரகர்களால் கையில் காசுள்ளவர்களிடம் திணிக்கப்பட்ட எண்ணம். இவர்கள் வசதி இல்லாதவர்களின் அன்றாட வாழ்க்கையை அருகிலிருந்து ஒரு நாளும் பார்த்திருக்க மாட்டார்கள். மதிய உணவு, முட்டை, சைக்கிள், பஸ் பாஸ், நோட்டு, புத்தகம், லேப்டாப், மிக்சி, கிரைண்டர், டிவி, ஸ்கூட்டி, நிலம், கால்நடைகள், மின்சாரம், ரேசன் என ஒவ்வொன்றும் பெரும்பான்மையான பயனாளிகளின் வாழ்க்கை முறைகளில் பல மாற்றங்களை, நல்ல உணர்வுகளை கொண்டு வந்திருப்பதை அவர்களோடு பேசிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது எல்லா தரப்பு மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டையும் பொறுத்துள்ளது. தமிழ்நாடு பல ஆண்டுகளாக அணைத்து தட்டு மக்களையும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல முயன்றிருக்கிறது. இது ஒரு unique socio -economical innovation by Tamilnadu. இதுவே காலப்போக்கில் மகிழ்வான ஒரு சமூகத்தை கட்டமைக்க உதவும் அணுகுமுறையாகும். சமூகம் என்பது மனித உடல்களின் தொகுப்பல்ல அது மனங்களின் தொகுப்பு. வசதி வாய்ப்பு இல்லாத மனங்கள் இருக்கும் மனிதர்களை பார்த்து விரக்தியடையக் கூடாது. மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கும் முன் அவன் பசி தணிந்து கற்கும் மனநிலைக்கு வரவேண்டுமல்லவா? அதுதான் சமூகநலத்திட்டங்களின் (இலவசங்களின்) அடிப்படை.
Myth 4: பெரும்பாலாலானவர்கள் இலவசங்களை வாங்கி விலைக்கு விற்கவே செயதனர். அல்லது பரணில் போட்டனர்.
Truth: இது ஒரு சிறு சதவிகிதம் உண்மை. எல்லா சமுகநலத் திட்டங்களும் 100% நோக்கங்களை அடைவதில்லை. Critical Mass இலக்கு அடையப்பட்டிருக்கிறதா என்பது தான் முக்கியம். அந்த வகையில் விற்ற அல்லது வீணாக்கிய விகிதம் புறம் தள்ளத்தக்கதே. ஆயினும் பயனாளிகள் தகுதியை ஆராய்ந்து வழங்க நிர்வாக மேம்பாடு தேவை என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.
Myth 5: மக்களை பிச்சைக்காரர்கள் போல் கையேந்த வைத்தார்கள். பிற மாநில மக்களும் வெளிநாட்டவரும் பார்த்து சிரிக்கிறார்கள்.
Truth: இதுவும் ஒரு எதிர் சித்தாந்த அமைப்புகளால் ஊதிப் பெருக்கப்பட்ட பிரச்சாரம் தான். ஆங்காங்கே சில நலத்திட்ட வினியோகங்களின் போது மக்கள் முண்டியடித்து நெரிசலில் சண்டை போட்ட வீடியோக்களையும் செய்திகளையும் பார்த்திருப்போம். இது நிர்வாக குறைபாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை தானே தவிர குறிப்பிட்ட சமூக நலத் திட்ட அடிப்படைகள் பற்றிய பிரச்சினை அல்லவே. பிற மாநிலத்தவர் சிரிக்கும் முன் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் என்று பல தரவுகளையும் தங்கள் மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்து விட்டு சிரிக்கலாம். அதே வேளை இது போன்ற தரக்குறைவான விநியோக முறைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை. கொடுக்கும் முறைகள் கொச்சையாக இருக்கக் கூடாது. இவை பிச்சை இல்லை. காலங்காலமாக ஏமாற்றப்பட்ட மக்களுக்கான சிறு ஆறுதலும் இழப்பீடும் தான்.
Myth 6: இலவசங்கள் மட்டுமே கொடுத்து மாநிலத்தை முன்னேற விடாமல் செய்து விட்டார்கள்.
Truth: இதற்கான பதிலை மத்திய அரசும் மற்றும் பல மதிப்பு வாய்ந்த நடுநிலை நிறுவனங்களும் நடத்தும் ஆராய்ச்சி மற்றும் தரவுகளுக்கான இணைய தளங்கள் தெளிவாகத் தருகின்றன. சுருக்கமாக கூற வேண்டுமானால் பெரும்பாலான ஒப்பிடுகளில் தமிழகம் முதல் மூன்று இடங்களுக்குள் தான் இருக்கிறது. எனவே இலவசங்கள் என்று சொல்லப்படும் சமூக நலத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கின்றனவே தவிர மாநில வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
Myth 7: கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே இவற்றை கொடுத்து அடித்தட்டு மக்களுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டி விடுவார்கள்.
Truth: கட்சிக் காரர்களின் தலையீடு மற்றும் ஊழல் என்பது இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதுவும் குறிப்பிட்ட சிறு விகிதமாகவே இருக்ககைகூடும் என்பது நான் உரையாடிய சில கீழ்மட்ட கட்சிக்காரர்களின் கருதத்து. ஒவ்வொரு பகுதி கட்சி காரருக்கும் இந்த திட்டங்களின் சமூக நோக்கங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் பகுதி சார்ந்த அடித்தட்டு மக்களை திருப்தி செய்ய வேண்டும் என்பதுவும் இல்லா விட்டால் அது தேர்தலில் பாதிப்பை உருவாக்கும் என்பதுவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் அடித்தட்டு மக்கள் நடுத்தர மனிதர்களைப்போல் இது போன்ற விடயங்களில் ஒதுங்கிப் போகக்கூடியவர்கள் அல்ல. இந்த இடத்தில் நான் கட்சி காரர்களின் ஊழலை நியாயப்படுத்த முயற்சி செய்யவில்லை. அவர்களில் பெரும்பான்மை ஊழல் வாதிகள் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் நான் நிறுவ முயற்சிப்பது இந்த சமூக நலத் திட்டங்கள் கட்சிக் காரர்கள் கொள்ளை அடிப்பதற்கு மட்டுமே அல்ல என்பதை தான்.
ஆனால் இந்த "கட்சிக்காரர்களின் ஊழல்" என்ற பொதுவான உண்மை தான் பல்வேறு ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களையும் கேலி செய்வதற்கும் தூற்றுவதற்கும் முழு முதல் காரணமாக அமைகிறது. திராவிட கட்சிகள் ஜெயலலிதா காலம் வரை பல சமூகநலத் திட்ட சாதனைகளை செய்திருக்கின்றன. ஆனால் அண்மைக்காலங்களில் தமிழகத்தின் பல அளவீடுகள் இறங்குமுகத்தில் இருப்பதையும் ஊழல் பூதாகரமாக தெரிவதையும் மறுப்பதற்கில்லை. இந்திய அளவிலான ஒப்பீட்டு தரவுகளின் கூட எல்லா குறியீடுகளிலும் முன்னணி வரிசையில் நிற்கும் தமிழகம் ஊழல் மற்றும் வெளிப்படைத் தன்மையில் மட்டும் கடைசியில் நிற்கிறது.என்னைப்பொருத்த வரை இந்த ஊழல் பிரச்சனை ஒட்டு மொத்த சமூகமும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையில் செல்லும் போதும் தொழில்நுட்ப தீர்வுகள் அரசாட்சி நிர்வாகத்தில் (governance) அதிகளவில் ஈடுபடுத்தப் படும் போதும் இயல்பாகவே குறையக் கூடிய ஒன்று. அதற்கான உறுதியான செயல்பாடுகளும் கலாச்சார மாற்றங்களும் வர வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருதும் இல்லை. ஆனால் ஊழல் என்ற ஒரு பிரச்சினையை மட்டும் பிடித்துக்கொண்டு சமூக நலத்தையும் சமூக நீதியையும் வலுவிழக்க செய்யும் முயற்சிகளை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

Myth 8: கஞ்சிக்கே வழி இல்லாதவர்களுக்கு மிக்சியும் டிவி யும் ம் எதற்கு?
Truth: இந்த மனப்பான்மை அதீத வலது சாரி அல்லது உயர்சாதி ஆணவச் சிந்தனையே தவிர வேறென்றும் இல்லை. எனக்கு தெரிந்த சில பெரும் பணக்காரர்கள் சில தனிப்பட்ட விவாதங்களில் என்னிடமே இப்படி விவாதம் செய்ததை கவனிதிருக்கிறேன். கீழ் மட்டத்தில் உள்ளவர்களும் உயர்ந்து மேலே வரவேண்டும் என்பதுவும் அவர்களது அன்றாட வாழ்க்கையும் குறைந்த பட்ச செழுமையுடன் அமைய வேண்டும் என்பதுவும் தான் சமூக நீதியின் முதல் படி. அவர்களை நீண்ட கால அடிப்படையில் உயர்த்தி தற்சார்பு அடைய வைப்பது கல்வி மற்றும் வேலையில் இட ஒதுக்கீடு. அதை பயன்படுத்த ஏதுவாய் இலவச நோட்டு, புத்தகங்கள், மதிய உணவு, பள்ளி செல்ல சைக்கிள், தொழில்நுட்பம் பயில லேப்டாப்.
இது போக வசதி மறுக்கப்பட்டவர்கள் வளமாய் உணர வீட்டுக்கு தேவையான இன்ன பிற இலவச பொருட்களும் சேவைகளும் தரப்படுகின்றன. முதலில் பசிக்கு சோறு. பின்னர் சோற்றுக்கு வழி. இதெல்லாம் என்ன சித்தாந்தம் என்று கேட்டால் தமிழ் நாட்டு சமத்துவ சித்தாநத்தம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.. இடதா வலதா என்று ஆராய்ந்தால் இரண்டும் உண்டு எது எங்கு தேவையோ அது அங்கே.

myth 9: நல்ல அரசாங்கம் என்பது இந்த பொருட்களை எல்லாம் எல்லாம் வாங்க அந்த ஏழைகளுக்கு வேலை தான் தரவேண்டும். நேரடியாக இலவச பொருட்களை அல்ல.
Truth: இது பற்றி ஏற்கனவே மேலே பேசியாகி விட்டது. சில தீர்வுகள் நீண்ட கால அடிப்படையிலானவை. சில குறுகிய கால தீர்வுகள். தமிழகத்தின் சமூக பொருளாதார வழிமுறையானது தண்டவாளம் போன்றது. ஒரு கம்பி சமூக நீதி மற்றொன்று சமூக நலத் திட்டங்கள். இது மிகவும் தனித்தன்மையானது. இந்திய தேசம் பின்பற்றினால் வல்லரசாகலாம்.
Myth 10: இலவசங்கள் தான் திராவிட அரசியலின் கண்டுபிடிப்பு.
Truth: முதலில் நீதிக் கட்சி, பின்பு காங்கிரஸ் ஆட்சியில் காமராசர், அதன் பின்பு வரிசையாக வந்த திராவிட கட்சிகள் என எல்லோரும் வேறு வேறு கோணத்தில் தொட்டது தான் இந்த சமூக நலத் திட்டங்கள். அவற்றில் பெரும்பான்மையான வெற்றித் திட்டங்கள் திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் வந்ததாலும் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்த திட்டங்களும் ஒரு காரணமாக இருந்ததாலும் திராவிடத்துக்கு எதிரானவர்கள் திராவிடம் என்றால் "கடவுள் மறுப்பு" என்று எப்படி திரித்தார்களோ அதேபோல் திராவிட ஆட்சி என்றால் "கேவலப்படுத்தும் இலவசம்" என்றும் திரித்தார்கள். இந்த இரண்டு திரிப்புகளையும் சமன் படுத்தினால் அவற்றில் ஊடுருவி நிற்கும் ஆழமான உண்மை என்பது "சமத்துவதை நோக்கிய பயணம்" என்பதாகத் தான் இருக்கும்.எனவே எனது முடிவானது திராவிடதின் கண்டுபிடிப்பு சமத்துவ சமூகம் என்பது தானே தவிர மற்றவை எல்லாம் திரிபு மயக்கங்களே.
முடிவுரை:
நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போல முன்னர் மேம்போக்கான பார்வைகளின் காரணமாக திரிபுகளை நம்பி,ஊடுருவி நிற்கும் விழுமியங்களை பார்க்க தவறி விட்டேன். பகுத்து அறிய சற்றே நேரத்தை செலவிட்ட போது ஒரு சரியான புரிதல் எனக்குள் உருவானது. அதைத்தான் இங்கே தொகுதிருக்கிறேன்.

நான் திராவிடக் கட்சிகளுக்கோ சார்பாகவோ அல்லது தேசிய கட்சிகளுக்கு எதிராகவோ இதை எழுதவில்லை. எனது நோக்கம் தமிழ்நாட்டிற்க்கென ஒரு தனித்தன்மையான சமூக-பொருளியல் பாதை ஏறத்தாழ நூறு ஆண்டுகளாக உருவாக்கப் பட்டிருக்கிறது. அதில் ஊழல் என்பது சில இடங்களில் இருக்கும் மேடு பள்ளம். அதை சீர் செய்வது ஒரு வேலை தான் என்றாலும் சாத்தியமே. ஆனால் தமிழகத்தில் வளர்ச்சிப்பாதையே இல்லை, இனிமேல் தான் உருவாக்க வேண்டும் என்று தத்தமது சித்தாந்த மண்வெட்டிகளுடனும் பெரும் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்களுடனும் வருபவர்களை பார்த்தால் சிரிப்பாகவும் அவர்களை நம்பும் நம் சொந்த மக்களைப் பார்த்தால் வேதனையாகவும் இருக்கிறது.
அதே வேளை மாற்றம் எதுவும் தேவை இல்லை என்ற வாதத்தையும் நான் வைக்க விரும்பவில்லை. தற்கால மனிதர்களின் வாழ்வில் வரும் midlife crisis போல் தமிழக அரசியலிலும் ஒரு ageing crisis தற்போது உருவாகியுள்ளதை மறுக்க முடியாது. திராவிடம் என்ற கருத்தியல் சார்ந்த அரசியல் சற்றே ஒரு flatness நிலையை அடைந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அது மாபெரும் ஆளுமைகளின் மறைவினால் இருக்கலாம், மாற்று சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அது ஊழலாக இருக்கலாம், தலைமைக்கான வெற்றிடமாக இருக்கலாம், முற்றிலும் புதுமையான ஆளுமைக்கான எதிர்பார்ப்பாக இருக்கலாம். இவை அனைத்தும் சேர்ந்ததாகவும் இருக்கலாம். அல்லது வெறும் மாயையாகக் கூட இருக்கலாம். இதுபற்றிய பொதுமக்களின் மனநிலையை வரும் தேர்தல்கள் தான் சொல்லமுடியும். ஆனால் நண்பர் ஆழி செந்தில்நாதன் சொல்வது போல் ஒரு post dravidianism தளம் தேவைப்படுகிறது என்பது காலத்தின் கட்டாயம் என்றே தோன்றுகிறது. மிக வலுவான அடித்தளம் தந்த திராவிட சமூக-அரசியல்-பொருளாதார தளத்தில் காலூன்றி காலத்தை வெல்லும் கட்டிடங்களை உருவாக்கும் சிற்பிகள் ஒருங்கிணைய வேண்டிய காலம் இது - தேர்தல் அரசியலைத் தாண்டி.
-----------------------------------------------------------------------
Suresh Sambandam, Aazhi Senthil Nathan, Ravishankar Ayyakkannu, Narain Rajagopalan, Balasubramanian AJ ஆகியோர்களின் ஆழமான தொடர்ந்த பகிர்வுகளுக்கு நன்றிகள். இந்த பதிவில் தண்டவாளம் பற்றிய உதாரண விளக்கத்துக்கு Govi Lenin அவர்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment