Search This Blog

Monday, October 8, 2018

வினாயகரை வழிபட

ஒருவனுக்கு ஜாதகத்தில் ஏற்படும் எந்தவித சாபங்களையும் வினாயகர் வழிபாட்டால் நிவர்த்தி யாகும். குலதெய்வ சாபம், குலதெய்வத்தை வழிபாடு செய்யாததால் வரும் கஷ்டம், குலதெய்வம் வீட்டிற்கு வராத நிலை, குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், குலதெய்வத்தை நினைத்து வினாயகரை வழிபட வினாயகர் குலதெய்வ அருளை பெற்றுத் தந்துவிடுவார்.

 விநாயகர் என்றால் தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது.

‘ஓம்’ எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார். சிவபெருமானின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு.

‘கணபதி பூஜை கைமேற்பலன்’ என்பது பழமொழி. விநாயகர் ஏழை, எளியவர்களுக்கு கண்கண்ட தெய்வம் மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணத்திலும் விநாயகரை பிடித்து வழிபடலாம். அந்த வடிவில் அவர் எழுந்தருளி அருள்புரிவார். அவரை வழிபட சாஸ்திரங்கள் தேவையில்லை. கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற வில்லங்கங்கள், இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் எந்த சுபகாரிய தொடக்கத்திலும் அன்று தொட்டு இன்று வரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறோம்.



1. விநாயகர் சகஸ்ரநாமம்:
 
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
 
2. விநாயகர் ஸ்லோகம்:
 
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
 
3. விநாயகர் ஸ்லோகம்:
 
ஓம் தத்புருஷாய வித்மஹே 
வக்ரதுண்டாய தீமஹி 
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
 
4. விநாயகர் ஸ்லோகம்:
 
ஐந்து கரத்தனை யானை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
 
5. விநாயகர் ஸ்லோகம்:
 
மூஷிக வாகன மோதக ஹஸ்த 
சாமர கர்ண விளம்பித சூத்ர 
வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
விக்ன விநாயக பாத நமஸ்தே.
 
6. விநாயகர் காயத்ரி மந்திரம்:
 
வக்ரதுண்டாய ஹீம் 
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித 
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
 
7. விநாயகர் ஸ்லோகம்:
 
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த 
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல 
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் 
கணபதியைக் கைதொழுதக் கால்.
 
ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.


பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய் இவ்வாறு எல்லாமாக விளங்குபவர் விநாயகர். அவர் ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், யானை முகத்தினை உடையவர்.

கும்பம் ஏந்திய திருக்கரம் ஆக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய திருக்கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே, விநாயகர் ஐம்பெரும் தொழில்களை ஐந்து திருக்கரங்களில் புரிந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

விநாயகர் வழிபாட்டுக்கு சதுர்த்தி உகந்தது. சதுர்த்தி என்பது ஒரு திதி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நாலாவது நாள் சதுர்த்தி ஆகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இது விநாயகர் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கயமுகனை சம்காரம் செய்து தேவர்களை காப்பாற்றுவதற்காக விநாயக பெருமான் சதுர்த்தி அன்று அவதரித்தார். விநாயகர், கயமுகனுடன் போர் புரிந்தார். அவன் ஆயுதங்களால் அழியாத வரம் பெற்றவன். விநாயகர் தனது வலக்கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ அது கயமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில் எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான். விநாயகர் அவனை தன் வாகனம் ஆக்கி அருள் புரிந்தார்.


பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும் எருக்கம் பூவும் விசேஷமானதாகும். விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், விநாயகரின் அருள் பெற்று அனைத்து நலன்களையும் சுகங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.

இலை வழிபாடு பலன்

விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும். அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர். அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள், வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும். வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும். மாதுளை இலையால் வழிபட நற்புகழ் அடைவர். கண்டங்கத்தரி இலையால் வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். 

No comments:

Post a Comment