Search This Blog

Thursday, October 4, 2018

பரியேறும் பெருமாள் BA BL

முரண்பட்டு நிற்கும் இரண்டு தரப்புகளும் சுமுகமாக செல்ல வேண்டுமென்றால் negotiation ground எனப்படும் உரையாடல் தளம் வேண்டும். இரு தரப்பும் பேச ஆரம்பிக்க வேண்டும். உடனே தீர்வு கிடைத்துவிடாது. ஆனால், பேசத் துவங்குவது மிக முக்கியம் - எதிர்தரப்பு எவ்வளவு மோசமாக இருந்தாலும், பேசும் போதுதான் பிரச்சனையை தீர்ப்பதற்கான வெளிச்சம் தட்டுப்படும். இது நீண்ட பயணத்திற்கான தொடக்கப் புள்ளி.
இயக்குனர் தோழர் Mari Selvaraj நினைத்திருந்தால், பரியன் கொலை செய்வதாகக் காட்டி, உணர்ச்சிக் குவியலாகப் படத்தை முடித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. ஆதிக்க ஜாதியுடன் ஓர் உரையாடலைத் துவக்கியிருக்கிறார். `நா சொல்றது உனக்குப் புரியுதா ? உன்னோட வன்மத்தால் எம்மக்கள் அனுபவிக்கும் கொடுந்துயரங்களைப் பார்த்தாயா ? ' என்று ஒடுக்கப்பட்ட ஜாதி, தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, பெருந்தன்மையோடும், பேரன்போடும்,
பெரும்வேதனையோடும், ஆதிக்க ஜாதியுடன் உட்கார்ந்து பேசுகிறது. உரையாடத் துவங்குகிறது.
சமத்துவத்திற்கான சவாலான பயணத்தில் negotiation groundஐ உருவாக்கியிருக்கும் `பரியேறும் பெருமாள் BA BL' மிக முக்கியமான படம் 
 Geeta Ilangovan
இந்திய சமூகங்களின் சாதிய மனபோக்குகளை பலவீனப்படுத்துகின்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதி ஒழிப்பு என்கின்ற சமத்துவ சமூகத்திற்கான முயற்சி ஒடுக்கப்படுகின்ற சமூகத்திலிருந்து தொடங்குவதில்லை. மாறாக அது ஒடுக்குகின்ற சமூகத்திலிருந்து தொடங்க வேண்டியது என்பதை இப்படம் மிகத்தெளிவாக உணர்த்தியிருக்கிறது.
பாபாசாகேப் அம்பேத்கரின் சாதியொழிப்பு என்கிற நூல் தலித்துகளுக்கானதில்லை. தலித் அல்லாதவர்களின் சிக்கலான உளவியலை சீர்ப்படுத்தும் பாடநூல் என்பதை இத்திரைப்படச் சூழலிலாவது சாதி இந்துக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் "இந்தியாவில் கிராமங்கள் புற்றுநோயாக இருக்கிறது" என்கிறார். காந்தியோ "முதுகெலும்பு" என்கிறார். பரியேறும் பெருமாள் திரைப்படம் புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்றை நிரூபித்திருக்கிறது. சமூக விடுதலைக்கான இயக்கங்கள், கட்சிகளுக்குக்கூட சாதிய வன்கொடுமைகள் பழகிப்போய், அது குறித்த பிரங்ஞையே இல்லாமல் பறந்துக்கொண்டிருப்பதை பரியனின் தந்தை செல்வராஜை அவமானப்படுத்துகின்ற காட்சி அப்பட்டமாக்குகிறது.
"இந்திய கிராமங்கள் அதிகாரமற்றவர்களின் திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது" என்பதை, பேருந்திலிருந்து பரியனை இறக்கி அடிக்கின்ற காட்சி - திருமணத்திற்கு வந்தவனை அடித்து சிறுநீர் கழிக்கின்ற காட்சி - கறுப்பி நாய் கொல்லப்படுவது... போன்ற காட்சிகள் தத்ரூபமாக இருக்கின்றன. திரைமொழியாக்கப்படாமல் இருந்த பள்ளர்களின் வாழ்வியலை முதல்முதலாக இயக்குநர் மாரி செல்வராஜ் எடுத்துக்காட்டி இருக்கிறார். ஒடுக்கப்படுகின்ற அனைத்து சமூகத்தின் குறியீடாக இத்திரைப்படம் அமைந்திருந்தாலும், தென்மாவட்ட தலித்துகளின் தற்கால அரசியல் நிலைப்பாட்டை இது பேசியிருக்கிறதா? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்திருக்கிறது.
வணிக அடிப்படையிலான முழுமையான வெற்றியடையாமல்,
அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்படாமல் போகின்ற நிலை உண்டாகுமேயானால், படைப்பு ரீதியாக இத்திரைப்படம் முழுமையான வெற்றியை அடைந்ததாகத்தான் அர்த்தம். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவேண்டிய திரைப்படம் பரியேறும் பெருமாள்.

இனி சாதிய வன்கொடுமைகளைப்பற்றி உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க ஆவணப்படங்கள் அவசியமில்லை, பரியேறும் பெருமாளே அதை பறைசாற்றும். இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் கோபி நயினார் தமிழ் சினிமாவில் உருவாக்கிய சாதியொழிப்பு பாதையில் சுதந்திரமாகவும் உண்மையாகவும் பயணித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். மக்களோடு கலந்திருக்கும் இசை இத்திரைப்படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. தென்மாவட்ட சமூக அரசியலில் டாக்டர் அம்பேத்கரை மிக எதார்த்தமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் மாரி.
சாதியொழிப்பு அரசியலைப் பேசுகின்ற #பாரஞ்சித் #நீலம்புரடெக்‌ஷன் வழியாக இத்திரைப்படத்தை தயாரித்திருப்பது தமிழ்ச்சினிமாவில் ரஞ்சித்தின் கலை நேர்மையை மீண்டும் உணர்த்தியிருக்கிறது. ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கிய இந்திய அரசு நிச்சயம் பரியேறும் பெருமாளை தலைதாழ்ந்து வரவேற்கும்.
- டாக்டர். பாரதி பிரபு

பரியேறும் பெருமாள் - பரிவட்டம் கட்டுவாரா?
ஒரு கலைப்படைப்பை ஒரு தனி மனிதனின் உள்ளுணர்வோடு உரையாடச் செய்கிற போது அவனுடைய மனம் ஏதாவது ஒரு இயல்புணர்ச்சியால் பதட்டமடைகிறது என்றால், அந்தக் கலைப்படைப்பு வெற்றி பெற்றதாக நாம் அறிகிறோம், குறிப்பாக சாதி குறித்த உயர் நவிற்சியால் ஊற வைக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்படங்கள் ஒடுங்கிய குரலை, நடுங்கிக் கொண்டிருக்கிற மானுடத்தின் ஒரு பகுதியை கலை வெளிச்சம் போட்டுக் காட்ட முற்படுகிறது என்பதே பெரிய சாதனையாகப் பேசப்படுவதுதான் சமகாலத்தின் துயரம்.
நம்முடைய சமூகம், உயர் இலக்கியங்களைப் பேசக் கூடியதாக இருக்கிறது, உயர் பண்பாடுகளைக் குறித்த வரட்டுக் கூச்சலிடுவதாய், பொருளாதார மேம்பாடு, அரசியல், சமூக வளர்ச்சி என்று பெருமிதம் கொண்டதாய்க் காட்சி அளிக்கிறது, தமிழகத்தின் ஒரு கிராமத்தில், தோற்றத்தில் பெரிய மனிதர் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவருடைய குரலில் கலந்திருக்கும் அரசியல் மற்றும் சமூகப் பெருமிதம் உங்களை ஒரு பண்பட்ட சமூகத்தில் இருப்பதாக உணரச் செய்யும்.
பிறகு உரையாடலின் ஏதாவது ஒரு புள்ளியில் அவர் சாதி அடையாளம் குறித்துப் பேசும்போது அந்தப் பாதுகாப்பு மனநிலையில் இருந்து நழுவி ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும். அந்த உரையாடலின் இரண்டாம் மனிதன் ஒடுக்கப்பட்ட மனிதனாக அடையாளம் செய்யப்படுகிறவனாக இருந்தால் அவனுடைய மனநிலை குறித்து நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். விரைந்து உரையாடலை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறத் துடிக்கிற, ஒடுங்கிப் போகிற மானுடத்தின் குரலாக அது இருக்கும். சாதிப் பெருமிதத்தின் முன்னாள் சாலையில் அடிபட்டுக் கிடக்கிற ஒரு அழகான நாய்க்குட்டியின் படபடக்கிற வாலைப் போல காட்சிப் புலத்தில் நின்று துடிக்கும்.
தமிழ் திரைப்படங்களில் விலங்குகளுக்காக உலகத்தையே எதிர்த்து நின்று போராடுகிற மாவீரர்களை, போராளிகளை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால், கருப்பியைப் போல கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு நாய்க்காக கதை நாயகனின் சார்பில் பார்வையாளனைப் போர் தொடுக்க வைத்ததுதான் பரியேறும் பெருமாளின் வெற்றி. அது இந்த சமூகத்தில் ஒரு இயல்பான நிகழ்வு என்று நாயகனோடு கடக்கிறது மாரி செல்வராஜின் திரை மொழி. நாய் ஒரு படிமம், நாயை நீங்கள் இளவரசனாகக் கொள்ளலாம், சாதிப் பெருமிதத்தின் பெயரால் கொல்லப்பட்ட எவரையும் அந்த நாயைப் போல நீங்கள் காட்சிப் படுத்திக் கொள்ளலாம்.
பொது சமூகத்தின் மனநிலையில் இரண்டு வெவ்வேறு விதமான மனநிலை மாற்றத்தை இந்தத் திரைப்படங்கள் உருவாக்கலாம், ஒடுக்கப்பட்டவனாகத் தன்னை உணர்கிற ஒரு மானுடனின் மனநிலை, சாதிப் பெருமிதம் கொள்பவனாகத் தன்னை அடையாளம் காண்கிற ஒரு மானுடனின் மனநிலை, முதலாவதில் சினம் உருவாகலாம், அல்லது கையறு நிலை, பரிவுணர்ச்சி என்று கலவையான மனநிலை உருவாகலாம். இரண்டாமதில் இயக்குனர், தயாரிப்பாளர், ஒரு நல்ல கலைப் படைப்பை ரசிக்கிற பார்வையாளன் என்று எல்லோருமே எதிர் நோக்குவது மாற்றத்தை, நேரடியான சாதிக்கு எதிரான மனநிலை மாற்றத்தை.......
ஆனால், அந்த மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா என்கிற கேள்வி நூலறுந்த பட்டம் போலக் காற்றில் ஆடுகிறது. வழக்கமான கொண்டாட்ட மனநிலை என்பது முற்போக்கு முகமூடிகளில் மறைக்கப்படும், சாதி திரைப்படங்களின் மூலமாக எழுப்பப்படுகிற கேள்விகளால் அழிந்து விடக்கூடிய ஒரு நிறுவனம் அல்ல, மாறாக இந்திய சமூகத்தின் ஆதி அந்தம் வரைக்கும் பரவிக் கிடக்கிற ஒரு மத நிறுவனம். முறையான தன்னெழுச்சியான மானுடத் துண்டுகள் மட்டுமே இத்தகைய கலை வடிவத்தைப் போற்றக் கூடியதாக இருக்கிறது.
ஆக, இந்த உரையாடல்களில், வெறும் பரிவுணர்ச்சியால், கருப்பியைப் போல கொல்லப்படுகிற நாயாக, பரியனின் வேட்டி அவிழ்க்கப்பட்ட தந்தையின் நிர்வாணமாக, சிறுநீர் கழிக்கப்படுகிற ஒடுங்கிய காதலனின் குருதியாக சரணடைதலின் கலை நுட்பத்தை வேண்டுமானால் ரசித்துப் போற்றலாம், ரசித்தலில் இருந்து இந்த சமூகக் கோபத்தை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டிய ஆயுதங்கள் இந்தப் படத்தில் இன்னும் கூர்மையாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஏனோ தோன்றுகிறது.
சாதி நிறுவனத்தை நீர்த்துப் போகச் செய்ய தார்மீகமான முதல் வழி எதிர்த்து அடிப்பது, இரண்டாவது வழி அரவணைத்துப் போவது அல்லது பணிந்து போவது, மூன்றாவதாக கல்வியின் மூலமாகப், பொருளாதார சமூக மேம்பாடுகளை அடைந்து தன்னியல்பில் நிற்பது, சாதியப் பெருமிதம் ஒரு சந்தனப் பேழை என்று நினைக்கிற மனிதர்களை அது ஒரு பீக்குழி என்று உணர வைக்கிற வேலை இந்த வகையான திரைப்படங்களின் திட்டமாக இருக்க வேண்டும், அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் மாரி செல்வராஜ்.
முற்பாதியில் கல்லூரி வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் இணைக்கிற புள்ளிகளில் ஒரு கலைஞனாக இன்னும் பல படிகள் முன்னேற வேண்டிய தேவை மாரி செல்வராஜுக்கு இருக்கிறது, திரைக்கதையில் இன்னும் தீவிரமாக உழைத்திருக்கலாம், திரைப்படங்களுக்கும் ஆவணப்படங்களுக்கும் திரைக்கதையில் இழையோடும் உயிரோட்டம் தான் மிக முக்கியமான வேறுபாடு.
இந்த வகைத் திரைப்படங்கள் ஒடுங்கிய குரல் கொண்ட மானுடத்தின் வரவேற்பைப் பெற்று, போலி முற்போக்கு ஊடகங்களின் விசில் ஒலியில் ஜொலிக்கக்கூடும், ஆனால், பொது சமூகத்தின் மனநிலையில் அதாவது ஒடுங்கிய குரலைக் கண்டு மகிழ்வெய்துகிற ஆதிக்க சமூகத்தின் மனதில் என்ன வேலை செய்கிறது என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. இப்போதுதான் வேலையைத் துவக்கி இருக்கிற ஒரு இளைஞரிடம் நாம் அத்தகைய கடுமையான கேள்விகளை முன்வைக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
முதல் பத்தியில் சொன்னதைப் போல ஒடுக்கப்பட்ட மானுடனின் குரலை, அதாவது அவனுடைய இயல்பான குரலைப் பதிவு செய்வதே ஒரு மிகப்பெரிய புரட்சி என்று கொண்டாடப்படும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம், நம்முடைய இந்தப் பயணம் இன்னும் நூற்றாண்டுகள் பயணிக்க வேண்டும், நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த பயணத்தை பா.ரஞ்சித்தும் அவரது பரிவாரங்களும் வேகப்படுத்தி இருக்கிறார்கள்.
இன்னும், அழுத்தமான திரைக்கதையோடு, ஆழமான சிந்தனைகளோடு தொடருங்கள் மாரி செல்வராஜ். வாழ்த்து. 
Arivazhagan Kaivalyam

No comments:

Post a Comment