Search This Blog

Monday, September 24, 2018

புத்தகங்கள் என்றென்றைக்கும் புதியனவாகும்.


Basheer Segu Dawood
கிடைத்தற்கரிய பழைய புத்தகங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் சில்லறைக்கு அறிவு வாங்கலாம் வாருங்கள் தோழர்களே!

நேற்றைய அந்திப் பொழுதில் கல்கிஸ்ஸையில் இருக்கும் Chinthaka Book Shop என்ற பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்றிருந்தேன்.
அக்கடையில் கண்ணாடி அலுமாரிகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டும், கீழே தரையில் பரப்பப்பட்டும் கிடந்த புத்தகங்களை கண்களால் துளாவி, பரபரப்புடன் கைகளால் அளைந்து 16 புத்தகங்களைத் தெரிந்து வாங்கிக்கொண்டேன். பின்னர் கடையின் முதலாளியாகவும்- தொழிலாளியாகவும் இரட்டைப் பாத்திரம் வகிக்கும் வீரரத்னவிடம் பேச்சுக் கொடுத்தேன்.
இந்தப் பெரிய எண்ணிக்கையிலான பழைய புத்தகங்களை எப்படிக் கொள்வனவு செய்கிறீர்கள்? என்று வினவினேன்.
இப்போதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு இங்கு பழைய புத்தகங்களை வாங்கி விற்கும் கடை திறந்திருப்பது தெரியும். கணவர் இறந்துவிட்டாலோ அல்லது நடமாட முடியாதவாறு முதுமையடைந்துவிட்டாலோ அவர் வாங்கிப் பாதுகாத்து வைத்திருந்த புத்தகங்கள் மனைவியருக்குப் பெரும் சுமைகி விடுகிறது. எங்களை அழைத்து மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.சிலர் பணமே தரத் தேவையில்லை, இடத்தைக் காலி பண்ணினால் போதும் என்கிறார்கள். இவ்வாறே சில இடங்களில் மனைவியரின் புத்தகங்களைக் கணவர் காலி செய்து வீட்டைத் துப்புரவாக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்கிறார் என்று வீரரத்ன பதிலிறுத்தார்.
பதிலைச் செவியேற்று இருண்டுகொண்டு வந்த என் கண்களுக்குள் எவரோ ஒரு பெண் தும்புத் தடியோடு நடமாடுவது தெரிந்தது.
அந்தக் கடையில் புத்தகங்களை வாங்குவதற்கும் கிழவர், கிழவியரே நின்றிருந்தனர். இது என்ன முரணோ? இவர்கள் வாங்கிய புத்தகங்கள் குறுகிய காலத்தில் இதே கடைக்கு மீளுமோ?
இளவயதுடைய எந்தப் பாலினத்தையும் அங்கு காணவில்லை என்பது கவலையளித்தது.
அங்கு பழைய ஸ்மார்ட் போன் மற்றும் லெப்டொப் ஆகியன விற்பனைக்கு விடப்பட்டிருந்தால் இளையோர் நிரம்பியும் முதியோர் இன்றியும் இருந்திருக்குமோ அவ்விடம்?

நண்பர்களே கல்கிஸ்ஸை கார்கில்ஸ் புட் சிற்றிக்கு முன்னால் அமைந்துள்ள சிந்தக்க புத்தகசாலைக்கு போய் சில புத்தகங்களை வாங்கலாமே!

No comments:

Post a Comment