Search This Blog

Saturday, August 25, 2018

பொன்னுச்சாமி சேர் ,அவரின் நளவெண்பா பற்றிய இலக்கிய பாடம்

"குலேந்தி! இஞ்ச வா!!! போனமுறை உனக்குத் தமிழுக்கு எத்தினை?"
"52 சேர்"
"பொன்னுச்சாமி சேர் என்னவொரு அழகா தமிழ் படிப்பிக்கிறார்.
போய்த் தமிழ் படி!!
சனியன்! சனியன்!!!"
என்ற காது கிழியும் சத்தத்தில் வேலாயுதம் சேர் சொல்லிக்கொண்டே இருப்பார்.
செல்வவடிவேல் ஆசிரியரின் விஞ்ஞான வகுப்புக்கு அடுத்தது பொன்னுச்சாமி சேரின் தமிழ் வகுப்பு.
அநேக மாணவர்கள் தமிழ் பாட வகுப்புக்கு நிற்காமல், செல்வவடிவேல் ஆசிரியர் வகுப்பு முடிந்து திரும்பும்போது, அவரின் முதுகுக்குப் பின்னால் பதுங்கியபடி சென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறி விடுவார்கள். இந்தச் செயல்களை நன்கு அறிந்திருந்த வேலாயுதம் வாத்தியார், வாசலில் மதிலுக்கு வெளியில் நின்று இவர்களை பல சமயங்களில் “அப்பி” விடுவார்.
இவையெல்லாம் நடப்பது கொக்குவில் மணி டியூஷன் சென்டரில் தான்.
மெல்லிய உயர்ந்த தோற்றம்.
தலையில் ஆங்காங்கே சில முடிகள்.
அரைக்கையில் வெளிர் நிறத்தில் ஷேர்ட்.
நெற்றியில் திருநீற்றுக் குறியும் அதன் மேல் சந்தனப்பொட்டுமிட்டு பொன்னுச்சாமி சேர் தோற்றமளிப்பார். சிலவேளைகளில், காதில் பூவிதழ் ஒன்றும் சொருகி இருப்பார். தோற்றத்தில் கோவில் குருக்கள் போல தெய்வீகமாய் தோற்றமளிப்பார். "தொப்" என சைக்கிளை நிறுத்தி, சைக்கிளைத் தரை வரை சரித்துப் பக்குவமாக இறங்குவார். டபிள் ஸ்டான்ட் சைக்கிள் அது. கண்களில் கொஞ்சம் நீர்ப்பது போலும். சிறு கைக்குட்டை ஒன்றால் அடிக்கடி கண்களை ஒற்றிய படியே இருப்பார். ஏதோவொரு விபத்தின் பின்னர், அதன் தாக்கத்தால் இப்படி ஆகிவிட்டதென அறிந்த நினைவு.
இள மண்ணிறத்தில் ஒரு வட்டத் தொப்பியும் அணிந்து அவர் வருகையில், சாடையாக "Cowboy" மாதிரியே தெரிவதாக, வகுப்பில் சில இளவட்டுக்கள் கிசுகிசுப்பதும் கேட்கும்.
பொன்னுச்சாமி சேர் கொஞ்சம் மென்மையான அணுகுமுறை கொண்டவர்.
"காலைக் கொஞ்சம் ஒதுக்கி வெச்சு வாங்கோ சேர். சூரிய வெளிச்சம் வேட்டிக்கால வருது"
என்று கிண்டல் பண்ணிய சில வம்புப் பயல்களின் எந்தப் பேச்சையும் செவிமடுக்க மாட்டார்.
ஒரேயொரு தடவை அவரின் அதியுச்ச கோபத்தையும் கண்டிருக்கிறேன்.
இலக்கிய பாடங்களில் வரும் பாடல்களை அழகாக ரசித்து அனுபவித்துப் போதிப்பார். அவரது மெல்லிய குரலும் அதற்கு இசைவாகவே அமைந்திருக்கும். அந்த வயதிலும் மூக்குக் கண்ணாடி அணியாமல் அவரால் புத்தகங்களை வாசித்துக் கற்பிக்க முடிந்தமை தனிச்சிறப்பு.
தமிழ் இலக்கணம், சமய பாடங்களை விட, அவரின் தமிழ் இலக்கிய வகுப்பு ஒரு தனிக் களை கொள்வது இயல்பு. காரணம், இலக்கிய கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரங்களாக தன்னை மாற்றிக் கொண்டு, அந்தப் பாடத்தில் வரும் கதாபாத்திரங்களுடன் ஐக்கியமாகி விடுவார். அதிலும் இன்றுவரை மறக்க முடியாதது அவரின் நளவெண்பா பற்றிய இலக்கிய பாடம்.
அதுவும் நளவெண்பாவில் நளனைப் பற்றிச் சொன்னதைவிட தமயந்தியைப் பற்றிச் சொன்னதுதான் அதிகம். அதிலும் தமயந்தியின் மார்பினை வர்ணிப்பதுதான் பாடல்களின் பெரும்பகுதி. ஏற்கனவே அந்தந்த வேஷத்தைப் போடும் பொன்னுச்சாமி சேர் இதை சவாலாகவே எடுத்துக்கொண்டாரோ என்னவோ? உதாரணத்துக்கு அதில் ஒரு சில பாடல்களைப் பார்ப்போம். (பல உண்டு-ஆனால், இவை மட்டும்தான் எனக்கு நினைவு உண்டு)
1)
மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு – நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.
தமயந்தியினுடைய இடையானது உயர்ந்த இள முலைகளை அவளது வாழ்நாள் முழுவதும் சுமந்து நிற்கும் வன்மையுடையதாகாதெனக் காலில் அணிந்துள்ள சிலம்புகள் , புதிய தேன் மேலெழும் மலர் சூடிய கூந்தலாளின் இரண்டு அடிகளிலும் வீழ்ந்து அவ்வடிகளுக்கு அணியாக அமைந்து வாய் விட்டுப் புலம்பும்!’
அதாவது,
முலைகள் பாரமுடையன; ஆதலின் , தமயந்தியின் இடை அவற்றைத் தாங்க முடியாமல் ஒடிந்துவிடுமாம்! இதை நினைத்து சிலம்புகள் புலம்புகின்றன.
என்பது கொஞ்சம் விளக்கமான உரை.
2)
வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் – சேம
நெடுங்குடையாய என்றுரைத்த நீங்கியதே அன்னம்
ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து.
நாட்டு மக்கட்கு நன்மை செய்கின்ற விரிந்த குடையை உடையவனே, வீமராசனுடைய செல்வ மகளான தமயந்தியின் இளமை தவழும் மார்பினை, உன்னுடைய அழகிய உயர்ந்த தோள்களைப் பொருந்தச் செய்விப்பேன்!’ என்று அன்னம் கூறிவிட்டு நுண்மையான இடையை உடையவளாகிய தமயந்தியிடம் பறந்து சென்றது.
என்பது உரை.
தமயந்தியைக் கட்டியணைத்தால் என்னாகும் என்பதை கொஞ்சம் "ஓவர்"ராகவே விளக்கம் கொடுத்த அவரது நளினம் அப்படியே கண்முன் இன்றும் நிழலாடுகிறது. அத்தனை அற்புதமாய் விளக்கம் கொடுக்கும் பொன்னுச்சாமி ஆசிரியரின் வகுப்பில் அன்றைய தினம் அத்தனை கரவொலி. அனைத்துப் பையன்கள் முகத்திலும் அத்தனை பொலிவு. கீழே குனிந்து மேசையின் கால்களைப் பார்த்தபடி, இருக்கும் பெண்களின் குதிரை வால் கொண்டைகள் சொல்லும்-அவர்களின் அடக்கமுடியாத சிரிப்பினை.
ஒரு நகைச்சுவைக்காக இந்நிகழ்வைச் சொல்லவில்லை. பொன்னுச்சாமி சேரின் அற்புதமான நடிப்பு அப்படி. அப்படியே தன்னை ஒரு "தமயந்தி" ஆகவே நினைத்து, அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.
இன்னுமொரு முஸ்லீம் இனப்பாடப்பகுதி ஒன்று இலக்கியத்தில் வரும்.
"செய்னம்பு நாச்சியார் மான்மியம்"
என்பது பாடம்.
"கட்டிலிலிருந்த காசிம்பாவா உற்றுப்பார்த்தாள் - ஒடுங்கிப்போனார்"
என்ற வரிகளில் மீண்டும் சர்ச்சை கிளப்பிய நினைவுகள் உண்டு.
செய்னம்பு நாச்சியார் செங்காட்டுப் புலி
வாயில்லாமலே வங்காளம் போவாள்
நோயில்லாமலே நூறுநாட் படுப்பாள்
சீட்டுப் பிடித்துச் சேர்த்த பணத்தைக்
கூட்டுப் பெட்டிக்குள் குவித்து வைப்பாள்.
என்று நகைச்சுவை மிக்கதொரு பாடல்களை பொன்னுச்சாமி சேரின் வாயிலிருந்து கேட்பதில் அத்தனை ஆனந்தம்.
நம்ம குடும்பம் நாடே யறியும், கிள்ளிக் கொடுத்தாலும் கிடாரம் வேண்டும், பேச்சுச் செப்பா? பிச்சைச் செப்பா?
என்று அந்த வரிகள் நீண்டு செல்லும்.
இவரது தமிழ் இலக்கண, இலக்கிய மற்றும் சமய பாட குறிப்புகளுக்கு ஒரு அப்பியாசக் கொப்பி வைத்திருப்பார். அதில், எல்லாமே வினா-விடை அமைப்பாகவே இருக்கும். பரீட்சையில் எந்த வினா வந்தாலும், இந்தக் குறிப்புக் கொப்பியிலுள்ள மாதிரி வினாக்களுக்கு வெளியே, ஒருபோதும் வராது. அவ்வளவு துல்லியமாக எழுதப்பட்டது. இந்தக் குறிப்புக் கொப்பியை யாராவது ஒரு மாணாக்கரிடம் கொடுத்து வாசிக்கச் சொல்ல, மற்றைய மாணவர்கள் அதைத் தமது அப்பியாசப் புத்தகத்தில் எழுதிக் கொள்ளச் செய்வார். இறுதியில், அந்தக் குறிப்புப் புத்தகத்தை அந்த மாணவரிடம் கொடுத்து, வீட்டில் எழுதிவரும்படி சொல்லுவார். இப்படி என் கையில் இப்புத்தகம் வந்துவிட்டால், வீட்டில் வைத்து அந்த வருடத்துக்குரிய அனைத்துக் குறிப்புக்களையும் எழுதிவிடுவேன். ஏனென்றால், அடுத்தடுத்த வகுப்புக்களில் எழுதாமல் இருந்து கொஞ்சம் நையாண்டி பண்ணிக்கொண்டிருக்கலாம் என்ற குறுகிய புத்திதான்.
தன் குடும்ப உறவினர்களைப் பற்றி அவ்வப்போது பெருமையாகப் பேசவும் தயங்கமாட்டார்.
"என்ர மகன் ஒருத்தன் இருக்கிறான். அவன் நடந்து போனா, நாலு பெட்டையள் திரும்பிப் பாக்காம போமாட்டாளவை"
என்று தன் மகனைப் பற்றியெல்லாம் பேசி, வகுப்பைக் கலகலப்பாக்குவார்.
அற்புதமான ஒரு தமிழ் விற்பன்னரிடம் தமிழ் படித்த மகிழ்வும் பெருமையும் என்றென்றும் எல்லோர் உள்ளத்திலும் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. வகுப்புக்கு வெளியே தனிப்பட்ட முறையிலும் அவருடன் நெருக்கம் உண்டு. ஒருசில சந்தர்ப்பங்களில் எனக்கு தமிழ்ப் பாடங்களுக்கு உதவியும் செய்திருக்கிறார்.
ஐயனார் கோவிலடியில் சிவப்பிரகாசம் வீதியில் இவரின் வீடு. யாரைக்கண்டாலும், "தம்பி, இஞ்ச உள்ள வந்து இதில கொஞ்சம் புடுங்கிக் கொண்டு போ" என்று தன் ஜம்மு நாவல் மரத்தைக் காட்டுவார். படித்த பிள்ளைகள் மட்டுமல்ல, வீதியால் செல்வோரும் இவர் வீட்டு ஜம்முப் பழத்தைச் சுவைத்திருக்க தவறியிருக்கவில்லை. அளவெட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட இவரின் தமிழ்ப் புலமையை மற்றையவர்களும் அனுபவிக்க இறைவன் இவருக்கு, இன்னும் கொஞ்சம் நீண்ட ஆயுளைக் கொடுத்திருக்கலாம்.
அவரின் நினைவுகளைச் சுமந்த வண்ணம்...
அன்புடன்,
அந்நாள் மாணவன்.
ரஞ்சித் தவராஜா