Search This Blog

Tuesday, June 5, 2018

'பல் கலைக் கழகம்'-University


Rajeswary Balasubramaniam

18.5.18,முள்ளிவாய்க்கால் நினைவு நாளன்று, நான் லண்டனிலிருக்கவில்லை. உலகத்தின் மிகப் புராதான தீவுகளில் ஒன்றான 'மால்ட்டா'வுக்குச் சென்றிருந்தேன்.
பத்தாயிரம் வருடங்களுக்கு மேலான சரித்திரத்தைக் கொண்ட அந்தத் தீவில் பிரயாணங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது,இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது படித்துக் கொண்டிருந்தேன்.

இன்று,'மனிதப் பேரவலம் ஒன்றை நினைவு கூரும் இடத்தில் இன்னொரு பேரலவத்தை அரங்கேற்றம் 'வல்லமை'தமிழர்களுக்கு மாத்திரம்தான் உண்டு' என்ற ப.தெய்வீகனின் வார்த்தைகள் நெஞ்சில் நெருப்பாய்ச் சுட்டன. (தேனியில் வந்த கட்டுரை).

அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சிகளில் திருகோணமலை, மட்டக்களப்புப் பிராந்தியத்தைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளக் கூடாது' என்ற கட்டளையும் அங்கு பிறப்பிக்கப் பட்டதான செய்திகளும் வந்து விழுந்தபோது எனக்கு வந்த அதிர்ச்சியையும் துயரையும் விளங்கப்படுத்த எந்த வார்த்தைகளும் கிடைக்கவில்லை.

முப்பதாண்டு போரில்,கிழக்குவாழ்; தமிழர்கள் உயிர், உடமைகளை இழக்கவில்லையா, ஆயிரக் கணக்கில் போராளிகளாக வீரமரணத்தைத் தழுவிக் கொள்ளவில்லையா?காணாமற்போன தங்கள் குழந்தைகளை, கணவன்மாரை, சகோதரங்களைத் தேடி அவர்கள் கதறுவது யாழ்ப்பாண மாணவர்களின் புலன்களை எட்டவில்லையா, கிழக்கிலுள்ள,(முக்கியமாக அம்பாரை மாவட்டத்திலுள்ள) 48;.000 விதவைகளின் அவல நிலை முள்ளியாவளை நினைவு நாளில் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த கறுப்புச் சட்டை வீரர்களின் கருத்துக்களில் பதிந்திருக்கவில்லையா?

எனக்குள் வந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்குப் பதில்களை யாரிடம் எதிர்பார்ப்பது?
'பல் கலைக் கழகம்' என்பது ஒரு மாணவன் குறிவைத்துச் செல்லும் பாடத்தில் மட்டுமல்லாது பல உயர்நிலைக் கல்விகளின் ஒன்றுகூடலின் சங்கமத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டு பல்லறிவு பெறும் கழகம் என்பதுதான் எனது அனுபவம்.

1985ம் ஆண்டு,நான் லண்டன் திரைப்படக்கல்லுரி மாணவியாக,பலதரப்பட்ட மாணவர்களுடன் எனது வாழ்க்கையின் 'இரண்டாம்' கட்ட மேற்படிப்புக்குச் சென்றேன். ஏற்கனவே எனது வாழ்க்கையிற் பெரும்பாலான காலம் முற்போக்கு சிந்தனைகளால் சீரமைக்கப் பட்டிருந்ததால்,திரைப்படக் கல்லூரிக்குச் சென்றதும் அங்கு காணப்பட்ட'சமுதாய,திரைப்பட புரட்சிகர' சூழ்நிலை' என்னை ஆச்சரியப் படுத்தவில்லை.

நானும் எனது சக மாணவர்களும்;,80ம் ஆண்டுகளில் லண்டன் தெருக்களில் தென்னாபிரிக்க வெள்ளையாதிக்கத்துக்கு எதிராக மோதியலைந்த பல்லாயிரம் பிரித்தானியப் பொது மக்களுடன் எங்களையும் பிணைத்துக் கொண்டோம்;. எங்களது முதலாவது' டாக்குயமென்டரி' தென்ஆபிரிக்க வெள்ளையாதிக்கக் கொடுமையை எதிர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது.

அதைத் தொடர்ந்து,இலங்கைத் தமிழர் படும் அவலத்தை முன்னெடுத்து, 'எஸ்கேப் புறம் ஜெனசைட்' என்ற 'டாக்குயுமென்டரியைத்' தயார் செய்தேன்.
இலங்கையிலிருந்து உயிர் தப்பியோடிவரும் தமிழர்களுக்காக,' தமிழர் அகதி ஸ்தாபனம், தமிழர் அகதிகள் வீடமைப்பு' போன்ற ஸ்தாபனங்களை பிரித்தானிய தொழிற் கட்சியின் உதவியுடன் நிறுவி அதன் தலைவியாகவிருந்து என்னால் முடிந்த உதவிகளை எங்கள் தமிழ் மக்களுக்குச் செய்தேன். இந்தியா சென்று,இலங்கையிலிருந்து தப்பிச் சென்று அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களைப் பற்றிய புகைப்படக் கண்காட்சியை லண்டனில் நடத்தினேன். இவையத்தனையும் நான் மாணவியாக இருந்த காலத்தில் எனது சமுதாயத்திற்காகச் செய்த கடமைகள்.

அப்போது லண்டனுக்கு அகதிகளாக வந்த தமிழர்களில் நான் ஒரு கிழக்கிலக்கிங்கைத் தமிழரையும் சந்திக்கவில்லை. எனக்கு.வடக்கு கிழக்கு, என்ற பிராந்திய உணர்வு ஒரு நாளும் இருந்ததில்லை. மனித நேயம்தான் எனது தாரக மந்திரம்.

இன,மத,நிற,வர்க்க பேதமற்ற மாணவர்களில் ஒருத்தியாக பன் முகத் திறமைகள்; கொண்ட மாணவர்களுடன் லண்டனில் என்னைப் பிணைத்துக் கொண்டபோது, 1960ம்-70ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் முன்னெடுத்த பல முற்போக்கு சிந்தனைகள் என் மனதில் நிழலாடின.

1960-ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து,அமெரிக்கரின் கொடிய போர்த் தந்திரங்களால் வியட்நாமிய மக்கள் கொடுரமாக் கொலை செய்யப்படுவதை எதிர்த்து கொழும்பு பல்கலைக் கழக மாணவர்கள மட்டுமல்லாது இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள்,பல்லாயிக் கணக்காகத் திரண்டு கொழும்புத் தெருவிலிறங்கிப் போராடியதால் போலிசாரின் தடியடிக்கு ஆளாகினார்கள்.

அதே கால கட்டத்தில் 1967ல் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகக் கோயில் திறக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த போராட்டத்தில், கொழும்பிலிருந்தும் கண்டி பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான முறபோக்கு,இடதுசாரி தமிழ்மமாணவர்கள், மாவிட்டபுரம் சென்று ஒடுக்கப் பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காகப் போரடினார்கள்.(எனது 'ஒருகோடை விடுமுறை'நாவல் வாசித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்)

அக்கால கட்டத்தில்,யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் மனித உரிமைப் போராட்டத்தில்,முற்போக்கு இலக்கியப் பாதையில்,சமூகவளர்ச்சி சிந்தனைகளில் தனது முத்திரையைப் பதித்துக் கொண்ட ஒரு பெரும் தகமையுடன் இலங்கையில் கௌரவம் பெற்றிருந்தது. அதற்குக் காரணம் அக்காலத்தில் அங்கு செயற் பட்ட வடபுலத்தின் தலைசிறந்த முற்போக்குவாதிகளில் ஒருத்தரான,திரு.மு. கார்த்திகேசு' மாஸ்டரின் மாணவன் கலாநிதி கைலாசபதி போன்றவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டிகளில் ஒருத்தராகவிருந்ததாகும்.

'பல் கலைக் கழகம்' என்ற 'பன்முறைத் தகமையின் ஆளுமையின்; தார்ப்பரியத்தைச் செயலிற் காட்டிய சிறந்த கல்விமான்களுடன் வளர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களா இன்று 'தமிழர்களுக்கான ஒரு பொது நினைவு நாளில்' இவ்வளவு கேவலமான பிராந்திய வெறியுடன் நடந்து கொண்டார்கள்?

இந்தச் செய்தியைச் சீரணிக்க முடியாமல் எனது நெஞ்சம் பதறுகிறது. இவர்களை இப்படி ஒரு குறுகிய வழியில் செயற் படுத்துபவர்கள்யார்?

இன்று இலங்கைத் தமிழ் மக்கள்,தமிழ் மக்களின் வாழ்வாதரத்தை மேன்படுத்தும், தமிழர் சமூகத்தை வளம் படுத்தும், இளம் தலைமுறையை நல்வழிக்கு இட்டுச் செல்லும் ஒரு நேர்மையான அரசியற் தலைமையின்றித் தவிக்கிறார்கள். தமிழ்த் தலைவர்கள் என்று தமிழ் மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்டு பதவிக்கு வருபவர்களுக்கு,' மக்களால் தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்றவாதியின் கடமைகள்' என்னவென்ற ஒரு கோட்பாட்டின் விளக்கம் தெரியாது.

1948ம் ஆண்டு தொடக்கம் 'தமிழ்ப் பிரச்சினை' என்ற ஒரு கருத்தை முன்வைத்து பதவிக்கு வரும் மேல்மட்டத் தலைவர்கள் சாதாரண தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், தமிழ் சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கும், அதன்பின் 'தமிழர் பிரச்சினை' சொல்லி பதவிக்கு வரமுடியாது என்ற தெரியும்.அதனால் தங்கள் வசதியான வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ள எப்படியும் ஏதோ ஒரு வழியில் தமிழர் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்

அந்தப் பிரச்சினைகளைத் தொடர அவர்களின் பாவிப்பு ஆயுதங்களாக, சாதி, சமயம்,பிராந்திய ,இனவெறிகளைத் தூண்டிக் கொண்டேயிருப்பார்கள்.அவற்றைப் பாவித்துத் தங்கள் சொகுசு வாழ்க்கையை, தமிழ் மக்களின் எதிரி என்று அவர்களால்ச் சுட்டிக் காட்டப் படும் இலங்கை அரசின் பாதுகாப்புப் படையின் உதவியுடன் தொடர்ந்த கொண்டிருப்பார்கள்.

அதற்காக அவர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் யாரையும் எதையும் பாவிக்கத் தயங்க மாட்டார்கள்.இன்று அவர்களின் பகடைக்காய்களாக மாறிவிட்டிருப்பவர்கள் அப்பாவிப் பொது மக்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் என்று பேசிக்கொள்கிறார்கள்..

யூதர்களில் உள்ள இனவாதத்தால், ஹிட்லர் தனது வெறிபிடித்த கொள்கையால் தனது மக்களைத் தவறாக வழிநடத்தியதால் அதன் நீட்சியாக,இரண்டாம் உலகப்போர் வந்து உலகம் பல மோசமான அழிவுகளை முகம் கொடுக்க நேரிட்டது. கடைசியாக ஹிட்லரும் அழிந்து அவனின் நாடும் சிதைந்தது. அவனது மிகப் பெரும் பலமாக இருந்தவர்கள் மாணவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று,பலநாடுகளில் பணபலத்தால் படடோபமாக வாழும் சில புலம் பெயர் தமிழர்கள், 'தமிழர்' பெயர் சொல்லி மேடையேறவும், பிரமுகர்களாக வலம் வரவும் அப்பாவி இலங்கைத் தமிழர்களைப் பணயம் வைத்து விளையாடுவதை இலங்கைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.
சில புலம் பெயர் தமிழர்கள்,தங்கள் பிள்ளைகளுக்கு உயர்படிப்பை வழங்கிக்கொண்டு, தாய்நாட்டில் வளரும் இளமனங்களில் விஷவிருட்சத்தை வளர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

புலம் பெயர் தமிழர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களில் உண்மையான அக்கறை வைத்தால், சிதைந்துபோன இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தவும், கல்வித்துறையில் மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஈடாகப் போட்டிபோட்டு உலகதரத்தில் பெருமைபெற முடியும். ஆனால் சுயநலம் பிடித்த இலங்கைத் தமிழ்த் தலைவர்களும், மற்றவர்கள் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் சில புலம் பெயர் ;சாடிஸ்ட்' தமிழர்களும் சட்டென்று உணர்ச்சி வயப்படும் இளவயதினரைத் தங்கள் தேவைகளுக்குப் பாவித்து விட்டுத் தூக்கியெறிவார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக,மாணவர்களே தயவு செய்து உங்கள் பல்கலைக்கழகத்தின் பாராட்டுக்குரிய பழைய சரித்திரத்தை ஒரு தரம் புரட்டிப் பாருங்கள். இலங்கையில் முற் போக்குத் தமிழ் சிங்கள மாணவர்கள், அமெரிக்க-வியட்நாம் போருக்கும் யாழ்ப்பாணத்தில் சாதிக் கொடுமைக்கும் குரல் எழுப்பிய அதே காலகட்டத்தில்,1968ம் ஆண்டு பாரிசில் நடந்த மாணவர்களின் புரட்சியால் நடந்த பல முன்போக்கான மாற்றங்களைப் படியுங்கள்.

உங்களின் கல்வி பலம் மகத்தானது. இளம் வயதுச் சிந்தனை சக்தி மிகப் பிரமாண்டமானது. வளரும் வயதின் அறிவு ஆழம் தெரியாத கடல்போல் மிக மிக ஆழமானது,மனதை நெருடும் தென்றலைப்போல் தௌ;ளிய கருத்துக்களை உங்கள் இளம் மனதில் தாலாட்டக்கூடியது.

தங்கள் சுயநலத்தை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளுக்காக உங்களின் அபரிமிதமான ஆளுமையை மாசுபடுத்தாதிர்கள்.அவர்களுக்காக ஒத்துப் பாடும் குறுகிய அறிவுள்ள ஊடகங்களின் பதிவுகளை 'பல் கலைக் கழக மாணவர்கள்' என்ற பார்வையில் பன்முகத்துடன் அலசிப்பாருங்கள்.

'பல் கலைக் கழக' மாணவர்கள் எதிர்காலத்தின் சமூகக் காவலர்கள், சிந்தனையாளர்கள், சீர்திருத்தவரிகள்.அரசியல் வாதிகள்,ஆளுமையைக் கையிலெடுக்கப் போகிறவர்கள். உங்களின் கையில் பாடப்புத்தங்களையம் கருத்தில் மனித தர்மத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் எதிர்காலக் கருவிகளாகப் பாவிக்கப் பழகுங்கள். இடறுவது தற்செயல்,ஏறுவது முயற்சி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எங்கள் சமுதாயத்தை முன்னேற்ற உங்கள் பணிகள் இன்றியமையாதது.இரண்டாம் உலக யுத்தத்தால் சிதிலமடைந்த ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் தலைநிமிர அந்நாட்டு அரசியல்வாதிகள் மக்களை எந்தவித பேதமுமின்றி ஒன்று சேர்த்து உழைத்தார்கள். ஓரு சொற்ப கால கட்டத்தில்; அவ்விருநாடுகளும்,தொழில் உற்பத்தி,விஞான விருத்திகளில் அபரிமிதமாக முன்னேறியதை நீங்கள் படித்திருப்பீர்கள்.

இலங்கைத் தமிழர்களை ஒன்று சேர்த்து எதிர்கால வளர்ச்சிக்கு அத்திவாரம்போடுவது இளம் தலைமுறையினர் கைகளிற்தானிருக்கிறது. அதை மறந்துவிட்டு,சாதி,மத.பிராந்திய,இன வெறியுடன் பொதுக்கடமைகளில் ஈடுபடுவது மாணவ வாழ்க்கையின் ஆக்க நோக்கைச் சீரழிக்கும். வெற்று வார்த்தைகள் எதையும் கட்டியமைக்கப் போவதில்லை.

பொருளாதாரத்தில்,கல்வியில், மனிதநேயக் கருத்துக்களில் வளர்ந்த மேற்கு நாடுகளில், தனி மனித திறமைக்கு மதிப்புண்டு. தேசியத்தின் வளர்ச்சிக்கு அது உதவுகிறது.வளர்ந்த நாடுகளின் சரித்திரத்தை ஒருதரம் புரட்டிப் பாருங்கள். மக்களின் ஒட்டுமொத்த ஓற்றுமை என்பது அவர்கள் வாழும் சமுதாயத்தின் வலிமையின் அடிப்படைத் தளமாகும். தமிழர்களின் பல்வேறுபட்ட திறமைகளை ஒன்றிணைத்து ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் இளம் மாணவர்களை குறுகிய வழிகாட்டித் தங்கள் தேவைகளுக்குப் பாவிக்கும் அரசியல் சூத்திரங்களுக்கு அடிபணிவது வலிமையற்ற மனவளர்ச்சியின் பிரதிபலிப்பாகும்.

No comments:

Post a Comment