Search This Blog

Tuesday, June 5, 2018

ஹிந்தித் திரைப்படம் பிங்க்.(PINK)உமா வரதராஜன்
முக்கியமான ஹிந்தித் திரைப்படம் பிங்க்.(PINK).
பணக்காரப் பையன்கள் போல் தோன்றும் மூவர் அருகிலிருக்கும் ஒரு மருத்துவமனைக்கு தங்கள் வாகனத்தில் அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கிறார்கள் . அவர்களில் ஒருவனது தலையிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது .
அதே நகரத்தின் இன்னொரு புறத்தில் ,அதே இரவில் நவநாகரீகத் தோற்றம் கொண்ட மூன்று இளம் பெண்கள் வாடகைக் காரில் தங்கள் அபார்ட்மென்டுக்கு பதட்டத்துடன் விரைகிறார்கள் . தங்கள் மனைக்குள் நுழையும் அவர்கள் தங்கள் நடுக்கத்தைக் கை விட்டு இயல்பு நிலைக்கு மீள முயல்கிறார்கள். இயல்பிலேயே சுதந்திர மனநிலையையும் , தன்னம்பிக்கையையும் கொண்ட அந்தப் பெண்களுக்கு அன்றைய இரவு சோதனை மிக்கதாக அமைந்து விட்டது.
சற்று முன் ஹோட்டேலொன்றில் நிகழ்ந்த ரொக் இசை நிகழ்ச்சியின் போது அறிமுகமான அந்த மூன்று இளைஞர்களும் தோழிகள் மூவரையும் ‘டின்னருக்கு’ அழைக்கின்றனர். இரவுணவுக்கு முன்னர் அனைவரும் மதுவருந்துகின்றனர். இந்த சூழ்நிலையைப் பயன் படுத்திக் கொள்ள நினைக்கும் ரஜ்வீர் –அந்த மூன்று இளைஞர்களில் ஒருவன் – மூன்று தோழியர்களில் ஒருத்தியான மினாலிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயல்கின்றான் . அவள் தன் சம்மதமின்மையைத் தெரிவித்த போதும் அவன் அவளை வன்முறை மூலம் அடையலாம் என எண்ணுகிறான். நிலைமையின் விபரீதத்தை உணரும் மினால் தன் கையில் கிடைத்த போத்தலொன்றால் அவனுடைய தலையில் ஓங்கி அடித்து விட்டு தன் தோழிகளுடன் அங்கிருந்து தப்பித்து தன் அபார்ட்மென்ட்டை அடைந்திருக்கிறாள்.
காயமடைந்த ரஜ்வீர் அந்தப் பகுதி எம்.எல்.ஏ. யின் மருமகன்; அவருடைய மகளைத் திருமணம் செய்தவன். காவல்நிலையத்துக்கு சென்று முறைப்பாடு கொடுத்து இந்த செய்தி வெளியுலகுக்குப் பரவுவதை அவன் விரும்பவில்லை. தலைக் காயத்தை விட ,தான் ஆண் என்ற இறுமாப்பு மனதுக்குக் கிடைத்த அடி அவனை வாட்டியெடுக்கிறது. மினாலையும்,தோழிகளையும் பழி தீர்க்க வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருக்கிறான். இதனால் தோழிகள் மூவரும் வெவ் வேறு அச்சுறுத்தல்களை சந்திக்கின்றனர்.
இவர்களின் அயல்வாசியான தீபக் என்ற முதியவர் இவர்கள் மூவரின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து அவதானித்து வருபவர். ‘இவர்களுக்கு ஏதோ பிரச்சினை ‘ என்ற உள்ளுணர்வின் உந்தலால் தீபக் அவர்களிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளுகிறார் . அவர் ஓய்வு நிலையில் இருக்கும் மதிப்பு மிக்க வழக்கறிஞர் என்பதைத் தோழிகள் அறிந்து கொள்ளுகின்றனர் .தங்கள் பிரச்சினையைத் தீர்க்க அவருடைய உதவியை நாடுகின்றார்கள் . அவருடைய ஆலோசனையின் பிரகாரம் முறைப்பாடு செய்ய காவல் நிலையம் செல்கின்றனர் . உள்ளூர் காவல்நிலையம் இவர்கள் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. அவர்கள் முறைப்பாட்டைத் தட்டிக் கழிக்க வேண்டும் என்ற முன்தீர்மானத்துடன் காவல் நிலையம் இருப்பது போல் தோன்றுகின்றது. காரணம் , ரஜ்வீரின் மாமனார் அப் பிரதேசத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கும் ஓர் அரசியல்வாதி .
மூவரில் ஒருத்தியான மினால் வழமை போல் அதிகாலையில் தன் ஓட்டப் பயிற்சியை மேற் கொண்டிருக்கும் போது வாகனமொன்றில் வரும் அந்த மூன்று இளைஞர்களாலும் கடத்தப் படுகிறாள் . ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்தில் வைத்து மிரட்டப் படுகிறாள். தங்கள் பலப் பிரயோகத்தின் மூலம் பல்வேறு முறைகளிலும் மினாலை அவர்கள் இம்சை செய்து இழிவு படுத்துகிறார்கள். காவல் நிலையத்தில் தங்களுக்கெதிராகப் புகார் அளிக்கும் முயற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் அவள் சற்று நேரத்தில் வாகனத்திலிருந்து இறக்கி விடப் படுகிறாள் .
இது நடந்து சில நாட்களுக்குள் காவல்துறையினர் மினாலின் அபார்ட்மென்டுக்குள் நுழைகின்றனர். மினால் ஒரு பாலியல் தொழிலாளி எனவும் பணம் கறக்கும் நோக்கத்துடன் தன்னை அணுகியதாகவும் ,தான் அதற்கு இணங்காததால் தன்னை அடித்துக் கொலை செய்ய முயற்சித்ததாகவும் ரஜ்வீர் அளித்த பொய்முறைப்பாட்டின் பேரில் இப்போது மினால் கைது செய்யப் படுகிறாள். வழமை போல் அரசியல் பலம் உண்மையின் குரல்வளையை நெரிக்க முயல்கிறது.
‘ இது வரை பொறுத்தது போதும் ‘ என்று சொல்லிய வாறு இப்போது தீபக் களத்தில் நேரடியாக இறங்குகிறார் . அவளைப் பிணையில் வெளியே எடுப்பதோடல்லாமல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் உண்மைத் தன்மையை அம்பலப் படுத்துகிறார் .
**********************************************
இந்தப் படத்தின் நீதிமன்றக் காட்சிகளில் தீபக் முன் வைக்கும் வாதங்கள் மறக்க முடியாதவை .
நீண்ட இடைவெளிக்குப் பின் தளர்வான நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகும் தீபக்கின் குரல் நீதிபதிக்குப் புரியவில்லை . ‘‘சற்று சத்தமாக பேச முடியுமா ? ‘’ என நீதிபதி கேட்டுக் கொள்கிறார் . தொண்டையைச் செருமிக் கொண்டு தீபக் பேசத் தொடங்குகிறார் . அதன் பின் வரும் காட்சிகளும் , வாதங்களும் நம்மை இந்தத் திரைப்படத்துடன் ஒன்றிக்கச் செய்பவை. ‘தீபக்’காக நடிக்கும் அமிதாப் பச்சனின் திரையுலக வரலாறில் இந்தப் படத்துக்கும் முக்கியமான இடமிருக்கும். அவருடைய உடல் மொழி, குரலின் ஏற்ற இறக்கங்கள் உணர்வு ரீதியான அதிர்வுகளை ஒரு ரசிகனுக்குள் ஏற்படுத்தக் கூடியவை. தீபக் தன் வாதத்தில் முன் வைக்கும் விஷயங்கள் நம் முகத்தில் அறைபவை.
‘ இல்லை .. முடியாது ...வேண்டாம் ‘ என்று சொல்லுகின்ற பெண்களின் உரிமைக்குத் தீபக் தன் வாதத்தில் முக்கியத்துவம் அளிக்கிறார்.
‘ஒரு பெண் இரவில் வீட்டுக்குத் தாமதமாக வந்தால் அல்லது வீட்டிலிருந்து வெளியேறி வாழ்ந்தால் அல்லது சுதந்திரமாக இருக்க முயற்சித்தால் அல்லது மதுவருந்தினால் விமர்சிக்கப் படுகிறாள் .உரையாடல்களின் போது பெண்ணொருத்தி புன்னகைக்கக் கூடாது.கைத் தொலைபேசிகள் பெண்களுக்கு ஆகாதவை. அவர்களைப் படிப்பிக்கத் தேவையில்லை .முடிந்தளவுக்கு விரைவாக அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டும். ஆனால் ஆண்களோ இந்த அளவுகோல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள் ’ என தீபக் சாடுகின்றார் .
தீபக் இறுதியாகக் கூறுகின்றார் . ‘’ மினால் வேண்டாம் என்றாள். வேண்டாம் என்பது சும்மா ஒரு வார்த்தை அல்ல. அது முழுமையான ஒரு வாக்கியம். இதற்கு மேலதிக விளக்கம் எதுவும் தேவைப் படாது. வேண்டாம் என்றால் வேண்டாம்தான் ...’’


No comments:

Post a Comment