Search This Blog

Sunday, January 7, 2018

நாம் நல்ல வாக்காளர்களா?

வேட்பாளருக்கான தகுதிகளை எதிர்பார்ப்பதைப் போல், வாக்காளருக்கும் தகுதிகள் உள்ளன என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறோமா?
நல்ல வேட்பாளர்களே இல்லை, எல்லா வேட்பாளருமே ஊழல் பெருச்சாளிகளாக இருக்கிறார்கள், எனவே நான் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கவில்லை, 49ஒ க்கு வாக்களித்தேன், கட்சி வேறுபாடு இல்லாமல் நல்ல வேட்பாளர் இருந்தால் நாங்கள் வாக்களிக்கத் தயார் என்று எப்பொழுதுமே அரசியலை சாடும், கட்சிகளை சாடும் குரல்கள் தேர்தல் காலங்களில் ஒலிக்கும்.

நல்ல வேட்பாளர்கள் நள்ளிரவு தாமரை போல் திடீரென்று முளைத்து எழுவார்களா என்ன? வேட்பாளர் எங்கிருந்து வருகிறார்? நம்முடைய ஊரைச் சேர்ந்த, நம்முடைய சாதியை சார்ந்த, நம்முடைய வட்டாரத்தில், நம் கண்முன் தொழில்செய்து கொண்டு நடமாடும் யாரோ ஒருவர்தானே நம்முடைய வேட்பாளராகிறார். நீரளவே ஆகுமாம் நீராம்பல் என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது. நம் தகுதி அளவிற்குத்தான் நம்முடைய வேட்பாளர்களையும் கட்சிகள் தேர்வு செய்கின்றன.
ஒரு தேர்தலில் அடுத்து வர இருக்கும் ஐந்தாண்டுகளில் நமக்கான ஆட்சியாளர்களாக, நம் பகுதிக்கான நலத் திட்டங்கள், முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக நாம் நம் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும், அதற்காகவே இந்தத் தேர்தல் என்பதை நாமும் வேட்பாளர்களைப் போலவே வசதியாக மறந்துவிடுகிறோம். அதிகாரப் போட்டியில் ஒருவரை ஒருவர் முந்தும் சாகச விளையாட்டில் நாம் நம்மை அறியாமல், யார் கையையோ பிடித்து உயர்த்திக் கொண்டிருக்கிறோம்.
வாக்காளர்களாகிய நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்கிறோம், வேட்பாளர்களை நல்லவர்களா, கெட்டவர்களா? என்று பார்க்கிறோமா?
தகுதியுடைய வேட்பாளர்கள் நமக்கு வேண்டும் என்றால், நாம் முதலில் தகுதியுடைய வாக்காளர்களாக மாறுவோம்.
குடி உயர கோல் உயரும். மக்கள் எவ்விதமோ அரசு அவ்விதம். ஜனநாயகத்தில் மக்களே தங்களுக்கான அரசை தீர்மானிக்கிறார்கள்.
தேர்தலில் மாற்றத்தின் நாயகர்கள் நாம்தான்.
( - அ. வெண்ணிலாவின் கட்டுரையிலிருந்து)

கருணாகரன் சிவராசா

No comments:

Post a Comment