Search This Blog

Monday, December 4, 2017

கல்யாணசுந்தரம் - கண்ணதாசன்! இருவருக்கும் இடையில் இருந்த ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்


ஒற்றுமைகள்:- இருவருடைய தாயாரின் பெயர்களும் விசாலாட்சி அம்மையார்! இருவரது பெயர்களின் முதல் எழுத்து 'க!' இருவரும் சிற்றூர் மண்ணில் பூத்த செந்தமிழ்ப்பூக்கள்! இருவரும் நல்ல உயரமான தோற்றம் கொண்டவர்கள்! இருவரும் உயர்கல்வி கற்காதவர்கள்! (கண்ணதாசன் எட்டாம் வகுப்பு - கல்யாணசுந்தரம் மூன்றாம் வகுப்பு)
இருவரும் திராவிட உணர்வு உடைய தமிழ் அறிஞர்களை ஆசான்களாகக் கொண்டவர்கள்! (கல்யாணசுந்தரத்திற்கு 'பாவேந்தர்' பாரதிதாசனும், கண்ணதாசனுக்கு 'பன்மொழிப்புலவர்' கா.அப்பாதுரையாரும் ஆசான்களாக அமைந்தனர்!)
இருவரும் தொடக்கக் காலத்தில் பழுத்த நாத்திகர்களாக இருந்தவர்கள்! (கல்யாணசுந்தரம் கம்யூனிஸ்டு கட்சியையும், கண்ணதாசன் தி.க., தி.மு.கழகங்களையும் சார்ந்திருந்தனர்)
இருவரும் தம் வாழ்க்கைக்குத் திரைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள்!
இருவருக்கும் முதன் முதலில் புகலிடமாகவும், புகழிடமாகவும் இருந்தது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்.
இருவருக்கும் பாட்டு சொல்லத்தான் வரும். பாட்டுப்பாட வராது. தப்பித்தவறிக்கூட பாடமாட்டார்கள். தனிமையில் அவர்கள் முணுமுணுத்துக்கூட நான் கேட்டதே இல்லை.
இருவருக்குமே கர்நாடக சங்கீதம், ராகங்கள், ஆலாபனைகள், ஆரோகணம், அவரோகணம் இந்தச் சங்கதிகள் எல்லாம் எதுவுமே தெரியாது. சுத்தம்!
இருவரும் ஏறிய அகலமான நெற்றியைக் கொண்டவர்கள்! இருவருமே கள்ளம் கபடம் அற்ற புறாவைப்போன்றவர்கள்! இருவருடைய அமைதியான முகங்களிலும் ஒருவிதமான 'வெகுளித்தனம்' விளையாடிக்கொண்டிருக்கும்!
இருவரும் அசைவ உணவுப் பிரியர்கள்! அதிலும் கல்யாணசுந்தரம் ஒரு முழுக்கோழி முட்டையை அப்படியே வாய்க்குள் வைத்து அதவித்தின்று விடுவார்! பொரித்த சிறுசிறு வடிவிலான காடை, கவுதாரி வகையறாக்களையும் அவ்வண்ணமே வாயில் வைத்து மென்று தின்று உள்ளே தள்ளுவார்.
இருவருமே பிறருக்கு உதவவேண்டும் என்ற இரக்க குணம் கொண்டவர்கள். இருவருக்கும் கோபம் வந்து நான் கண்டதே இல்லை. இருவருமே நல்ல நகைச்சுவை ரசனை உடையவர்கள்!
வேற்றுமைகள்:- கண்ணதாசன் கலர் கலராக அரைக்கைச்சட்டை அணிவார். தோளில் துண்டு போடமாட்டார்.
கல்யாணசுந்தரம் எப்பொழுதும் வெள்ளை நிற சட்டை அணிந்து அதன் மீது 'லினன்' துணியினாலான நீளமான கலர்த்துண்டை கழுத்தில் மாலைபோலப் போட்டு மார்புப் புறத்தில் இழுத்துத் தொங்க விட்டுக்கொள்வார்! (தமிழறிஞர் - கவிஞர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைபோல)
கல்யாணசுந்தரம் அகலமான கருப்புக்கறை வேட்டியையும் கண்ணதாசன் சற்று மெல்லிய அல்லது கறை இல்லாத வேட்டியையும் விரும்பிக்கட்டுவார்கள்! கண்ணதாசனின் சட்டைப்பையில் பேனா, மணிபர்சு, ஒரே ஒரு ரூபாய் நோட்டுகூட எதுவுமே இருந்து நான் ஒருநாளும் பார்த்தது இல்லை.
கண்ணதாசன் காசைத் தண்ணீராக வாரி இறைப்பார். கல்யாணசுந்தரம் அதைத் தங்கமாக மதித்துப் பத்திரப்படுத்துவார். அவர் பாட்டெழுதத்தொடங்கிய அந்த ஆரம்ப நாட்களிலேயே சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு சொந்த சங்கம் படைத்தான் கிராமத்தில் நிலபுலன் மற்றும் தோப்புகளை வாங்கினார். அவை இன்றைக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
கண்ணதாசனுக்கு நிறைய ஆண், பெண் குழந்தைகள் உண்டு. கல்யாணசுந்தரத்திற்கு ஒரே ஒரு மகன் குமரவேல்! பிறந்த ஐந்தாவது மாதத்தில் தந்தையை இழந்த தனயன்! கண்ணதாசன் புகை பிடிப்பார்! கல்யாணசுந்தரம் வெறும் வெற்றிலை சீவல் புகையிலை போடுவதோடு சரி.
கண்ணதாசன் சற்றும் ஓசை இல்லாமல் தனக்குத் தானே மெதுவாகச் சிரித்துக் கொள்வார். கல்யாணசுந்தரம் சத்தம் போட்டுச் சிரிப்பார்!
ஈடு இணையற்ற இவ்விரு 'கவிஞர் பிரான்களும்' நான் கதை வசனம் எழுதிய பல வெற்றிப்படங்களில் பாட்டெழுதி, என்னோடு அவர்களும், அவர்களோடு நானும் இமைகளும், விழிகளும்போல இணைந்து இருந்து பணிபுரிந்தது என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறு ஆகும்!
இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்து, அன்னை தமிழைத் தங்களின் இனிய பாடல்களால் அலங்கரித்திருக்க வேண்டியவர்கள்! அதற்கு இசையும், இலக்கியமும் கொடுத்து வைத்திருக்கவில்லை. அதனால்தான் 'கூற்றுவன்' அவசரப்பட்டு அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டான்! இருவருமே குறுவைப் பயிர்போல குறைந்த வாழ்நாளில் நிறைந்த சாதனை படைத்து சரித்திரம் கண்டவர்கள்! இருவரும் என் இரு விழிகள்!
- ஆரூர்தாஸ் .
Chandran Veerasamy

No comments:

Post a Comment