Search This Blog

Sunday, November 19, 2017

நாகம் பூசித்த மணிபல்லவத்து அன்னை நாகபூசணி


அந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைத் தீவில் இயக்கர்களும் நாகர்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள்... அரசுகளும் இருந்தன. இந்த நிலையில், வட இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகிலே இருக்கிற கடல் நடுவில் உள்ள மணிபல்லவத் தீவில் அவர்கள் ஒரு அழகிய பீடத்தைக் கண்டார்கள்.
இந்த அரியணைக்காக.. சிம்மாசனத்திற்காக.. நாகர்கள் இரு பிரிவுகளாய் பிரிந்து போரிடத் தொடங்கினார்கள். காலம் ஓடிற்று… கௌதமபுத்தர் அஹிம்சையை போதித்து வந்த காலத்திலும் இந்த அரியணைக்கான மோதல் தொடர்ந்தது.
புத்தர் இந்தப் பிணக்கைத் தீர்க்க மணிபல்லவம் வந்தார். “இந்த சிம்மாசனம் இந்திரனாலே புவனேஸ்வரி அம்பாளுக்காகவே பிரதிஷ்டை செய்யப்பெற்றது. இது அன்னைக்கே உரியது.. இதனை வணங்குவதே நம் கடன்” என்று அந்த நாகர் கூட்டத்தை வழிப்படுத்தி வழிபடச் செய்தார்.
“பெரியவன் தோன்றா முன்னர் இப்பீடிகை கரியவன் இட்ட காரணத்தாலும்”
(மணிமேகலை- காதை- 25, 54,55)
இது நடந்து சில காலமாயிற்று.. கலியுகக் கண்களிலிருந்து அம்பிகையின் பீடம் மறைந்தொளிர்ந்தது.. ஆங்கே அன்னை சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருந்தாள்.
“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்பர். ஆனால் பாம்பு (நாகம்) ஒன்று அம்பிகையை அங்கு பூஜை செய்து வந்தது. இது தொடர்ந்திட, மணிபல்லவத்து நாயகி.. அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றான புவனேஸ்வரி பீட நாயகிக்கு நாகபூஷணி, நாகபூஜணி என்ற பெயர்கள் நிலைக்கலாயின..
நயினைத்த்வீப நிவாஸிநீம் நதிகிருதாம் ஆனந்த சந்தாயினீம்
பக்தாரீஷ்ட நிவாரிணீம் விநிசுதைர் நாகைப் புரா பூஜிதாம்
நாகானாம் ஜனநீதி லோகவசனைக்கியாதாம் சுபாம் சாஸ்வதாம்
நௌமித்வாம் பரதேவதாம் மம மனோபீஷ்டார்த்த சித்திப்பிரதாம்
எனப் போற்றும் வண்ணம் அன்னை அங்கே நிலைத்தாள். காலம் கனிந்தபோது வணிகன் ஒருவனுக்கு அன்னை காட்சிகொடுத்து தம்மிருப்பைப் புலப்படுத்தினாள்.
வணிகன் தன் வாழ்வை, வளத்தை எல்லாம் பயன்படுத்தி பெரிய கோயில் ஒன்றை அன்னைக்குச் சமைத்தான். நயினைப்பட்டர் என்கிற அந்தணர் இக்கோயிலின் ஆதி சிவாச்சார்யர் ஆனார். அவர் பெயரால் மணிபல்லவம்
“நயினாதீவு” ஆயிற்று.
இடையிடையே எத்தனையோ கால மாற்றங்கள்.. மதவெறியர்களான போர்த்துக்கேயர் முதலியவர்களின் இந்து ஆலய அழிப்புச் செயற்பாடுகள் இவைகளை எல்லாம் மீறி இன்றைக்கும் சிறப்புற்றிருக்கிறது இத்தலம்.
போர்த்துக்கேயர் இங்கு வந்து கோயிலை இடித்தபோது அம்பிகையின் உற்சவ வடிவத்தை இங்குள்ள ஆலமரப் பொந்தில் வைத்து அடியவர்கள் மறைவாக வழிபட்டனர். இன்றும் அந்த ஆலமரம் ‘அம்பாள் ஒளித்த ஆல்’ என்று அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
இந்த ஆலயத் திருத்தேரை போர்த்துக்கேயர் எடுத்துக்கொள்ள முயன்றபோது அது தானே நகர்ந்து கடலுள் பாய்ந்ததாம்.. ஆனிப்பூரணை நாளில் அந்த கடலுள்பாய்ந்த தேரின் திருமுடி மட்டும் தெரியும் என்பதும் ஐதீகமாக இருக்கிறது.
இன்று நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயம் என்று புகழ் பெற்று விளங்கும் இத்தலம் வட இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடல் நடுவிலுள்ள நயினாதீவு என்கிற தீவில் உள்ளது.
கருவறையில் சுயம்புவாக அம்பிகை விளங்குகிறாள். நாகம் குடை பிடிக்க.. சிவலிங்கத்தை இறுக்க அணைத்தபடி விளங்கும் அம்மை போல அந்த சுயம்பு உருவம் இருக்கிறது.
அடியவர்களின் பசிப்பிணி தீர்க்கும் ‘அமுதசுரபி அன்னதான மண்டபம்’ மற்றும் யாத்திரீகர்கள் தங்குவதற்கு ‘இறைப்பயணிகள் இல்லம்’ என்பனவும் இங்கு இன்று அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனி முழுமதி நாளை நிறைவாகக் கொண்டு 15 நாட்கள் மஹா உற்சவம் காணும்
கற்றவர்க்கினியாய் நயினையம்பதி வாழ் காரணி நாரணன் தங்காய்
மற்றவரறியா மரகதவரையின் வாமமே வளர் பசுங்கொடியே
நற்றவரோடும் சேயெனை இருத்தி நாதநாதாந்தமும் காட்டி
முற்றுமாய் நிறைந்த பூரணானந்த முத்திதா நாகபூஷணியே
என்று இந்த அன்னையைப் பாடுகிறார் இவ்வூரில் வாழ்ந்த நயினை நாகமணிப் புலவர்.
சிவனுக்கு உகந்த பஞ்சபூதஸ்தலங்களான சிதம்பரம், திருவண்ணாமலை போன்றன போல, அம்பிகைக்குரிய ஆறு ஆதார சக்தி பீடங்களில் இதனை ‘மணிபூரக ஸ்தலம்’ என்றும் கொண்டாடுகின்றனர்.
இவ்வாறான மகிமை பொருந்திய இந்த ஸ்தல மகிமை பலவாறு சொல்லப்படுகிறது. இங்கே அம்பிகையை வணங்குவார்க்கு பிள்ளைப்பேறு கிட்டும் என்பர். கோயிலில் அண்மைக் காலத்திலேயே பல்வேறு அற்புதங்கள் நடந்ததாக.. நடப்பதாகச் சொல்கிறார்கள்.
வேற்றுச் சமயத்தவர்கள், பிற இனத்தவர்கள் பலரும் கூட தாங்கள் இங்கே பெற்ற அற்புத நிகழ்வுகள் பலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment