Search This Blog

Tuesday, August 15, 2017

தொடக்ககால தமிழ் சினிமா கதாசிரியை "எழுத்துலக நாயகி" : வை.மு.கோதைநாயகி அம்மாள்


  Vel Murugan
தமிழகத்தின் நாவல்,பத்திரிகை எழுத்தாளர்களில் மிகப்பெரும் ஆளுமை வை.மு.கோதைநாயகி அம்மாள். இவர் தான் தமிழின் முதல் பெண் நாவல் எழுத்தாளர். 1924 - ம் ஆண்டுதொடங்கிய அவரது எழுத்துப்பணி 1960 பிப்ரவரி 20 - ம் நாள் அவர் இம்மண்ணுலகை விட்டு அகல்வது வரை தொடர்ந்தது. இவர் எழுத்தாளராக மட்டுமின்றி, பத்திரிகை அதிபராகவும் தமிழ் இலக்கிய உலகுக்கு பணியாற்றியுள்ளார்.
"ஜெகன்மோகினி" என்கிற பத்திரிகையை 35 ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி அதன் ஆசிரியராகவும் செயல்பட்ட இவரை "எழுத்துலக நாயகி" என்று புகழ்வதற்கு சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலகட்டத்திலேயே பெண் சுதந்திரம்,பெண்ணியம் குறித்து எழுதியும், போராடியும் வந்த கலகக்காரர்.
இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான வை.மு.கோதைநாயகி அம்மாள் தனது 5 - வது வயதிலே பால்ய விவாகம் மணம் செய்து கொடுக்கப்பட்டவர். முறையாக கல்விகூடம் சென்று கல்வி கற்றவரல்லர். எழுதப்படிக்க தெரியாததால் தனது முதல் கதையினை இவர் சொல்லச் சொல்ல அவரது தோழி டி.சி.பட்டம்மாள் எழுதுகிறார். "இந்திரமோகனா" என்கிற அந்த நாடகம் நோபில் அச்சகம் மூலம் அச்சேறுகிறது. இந்த நாடகநூலினை மிகப்பெரும் நாடக அறிஞர் பம்மல் சம்பந்த முதலியார், பாரதியார் போன்றோர் பாராட்ட, அம்மையார் முழுமூச்சில் எழுத ஆரம்பிக்கிறார். தொடர்ச்சியாக 115 படைப்புகளை (நாவல்கள்,சிறுகதை தொகுப்பு,நாடகம் அடங்கும்) தமிழ் நல்லுலகிற்கு அர்ப்பணிக்கிறார்.
வை.மு.கோதைநாயகி அம்மாள் தமிழ் திரையுலகையும் விட்டு வைக்கவில்லை. 1937 - ம் ஆண்டு "ராஜமோகன்" என்கிற இவரது நாவல் அதே பெயரில் திரைப்படமாகிறது. அம்மையார் தனது நாவலான "அனாதைப்பெண்" - யினை திரைப்படமாக எடுத்து வெளியிட முயற்சிக்கிறார். அக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த "ஜூபிடர் பிக்சர்ஸ்" நிறுவனம் தாமே முன்வந்து அம்மையாரது நாவலை திரைப்படமாக தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தினை "ராஜாசாண்டோ" இயக்குகிறார். இப்படம் திரைக்கு வந்து திரையுலகில் அம்மையாருக்கு நற்பெயரினை வாங்கித்தருகிறது.
இது நிகழ்ந்ததது 1938 - ம் ஆண்டு.

அதன்பின் அம்மையாரின் 55 - வது நாவலான "தயாநிதி" யானது "சித்தி" என்கிற பெயரில் 1966 - ம் ஆண்டில் தரமான திரைப்படமாக வெளியாகி மிகுந்த பாராட்டையும், நற்பெயரையும் பெற்றுத் தந்தது. இந்த திரைப்படம் அம்மையாருக்கு "சிறந்த கதாசிரியர்" விருதினையும் பெற்றுத் தந்தது. பின்பு அம்மையார் திரைப்படதணிக்கை குழு உறுப்பினராக 10 ஆண்டுகள் பணிபுரிந்து சினிமா தொண்டாற்றுகிறார். அம்மையார் சினிமாவில் பணிபுரிந்தாலும் சினிமாவின் சீர்கேடுகளை தனது கதாபாத்திரங்கள் மூலம்தொடர்ந்து சாடிவந்துள்ளார்.
இது மட்டுமில்லாது அவர் பன்முக திறமைசாலி இசைத்துறை....., சுதந்திரப்போராட்ட வீராங்கனையாக சிறைப்பதிவு....., பெண்ணியவாதி, ..... என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு பல திறமைகளோடு சினிமாவிற்கும் தொண்டாற்றிய வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களை சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடும் இத்தருணத்தில் நினைவு கூர்வோம்.

நன்றி : ரோஜா முத்தையா ஆராச்சி நூலகம், தரமணி, சென்னை - 113.

No comments:

Post a Comment