Search This Blog

Saturday, August 12, 2017

90களில் எஸ்.பி.பியின் குரல் எப்படியாக இருந்தது

எண்பதுகளில் ராஜாவின் இசையில் பெரிய போட்டியின்றி பல பாடல்களைப் பாடும் வாய்ப்புகளைப் பெற்றவர் எஸ்.பி.பி. சம வயது ஆட்கள் என்பதால் தொடர்ந்து பயணித்த அவர்களுக்குள் இயல்பாய் வாடா போடா தோழமை உருவானதில் ராஜாவின் இசையில் எஸ்.பி.பி தன் குரலில் பல வித்தைகளை பயின்று பார்க்க எதுவாக அமைந்த காலகட்டம் அது. எனினும் ராஜாவின் பிடியில் மூக்கணாங்கயிறு இருந்ததையும் கவனிக்கலாம்."எனக்கு இதெல்லாம் வேணும் , அவற்றைக் கெடுக்காமல் நீ எப்படி வேணா பாடிக்கோ" என்று ஒரு வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை ராஜா எஸ்.பி.பிக்கு வழங்கியிருக்கிறார் என்பது போன்ற உணர்வைக் கொடுப்பவை எண்பதுகளில் ராஜாவிடம் எஸ்.பி.பி. பாடிய பாடல்கள்.
90-களில் எஸ்.பி.பி இந்திய சினிமாவில் பல மொழிகளில் டிமாண்ட் இருந்த உச்ச நிலையை எட்டிய வளர்ந்துவிட்ட பாடகர். சினிமா பாடல்கள் பாடுவதில் இசையமைப்பாளர்கள் சொல்வதைத் தாண்டியும் தனது கற்பனைகளால் சிம்பிள் மெட்டுகளையும் சிலாகிக்க வைக்கும் வகையில் மெட்டுக்களை தனதாக்கும் வல்லமையை அவர் தனது அனுபவத்தால் பெற்ற காலகட்டமாய் என்னளவில் பார்க்கிறேன்.
எண்பதுகளிலேயே அவருக்கு அப்படியான திறமை கைகூடிய ஒன்றுதான் என்பது 'ஆடி மாச காத்தடிக்க' ,' சிங்காரி சரக்கு ','ஏஞ்சோடி மஞ்சக் குருவி' போன்ற சில பாடல்கள் காட்டிக் கொடுக்கும் எனினும் அவர் அத்தனை சுதந்திரமாய் இயங்கவில்லை என்பது தொண்ணூறுகளின் பாடல்களை ஒப்பு நோக்க உணரலாம். கவனிக்க, இங்கே தொண்ணூறுகளின் பாடல்களுக்கும் எண்பதுகளின் பாடல்களுக்கும் ஒப்புமைப்படுத்தவில்லை, எஸ்.பி.பியின் குரலின் மாற்றங்கள் இவ்விரு காலகட்டங்களில் எப்படி இருந்தது என்பது மட்டுமே பேசு பொருள். போக மற்றொரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் , தமிழை தனது தாய் மொழிக்கு நிகராக உள்வாங்கி பிரதிபலிக்கும் இயல்பும் தொண்ணூறுகளில் கூடி வந்திருப்பதையும் கவனிக்கலாம்.
பல மொழிகளில் பாடும் வாய்ப்புகளால் எண்பதுகளைவிட தொண்ணூறுகளில் எஸ்.பி.பி தமிழில் பாடிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவு. இந்த இடைவெளியில்தான் எஸ்.பி.பிக்கென இருந்த பல வாய்ப்புகளை ராஜா மனோவிற்கு வாரி வழங்கத்தொடங்கினார் என்றால் மிகையில்லை. எனினும் அவ்வப்போது குறிப்பிடும்படியான பாடல்களை எஸ்.பி.பி பாடிக்கொண்டு ராஜாவிடமிருந்து பெரிய இடைவெளி விழுந்துவிடமால் பார்த்துக்கொண்டார். அப்படி பாடிய பாடல்கள்தான் சுந்தரி கண்ணால் ஒரு சேதி, ஓ பட்டர் ஃப்ளை, போவோமா ஊர்கோலம் போன்றவை.
மேற்சொன்ன பாடல்களிலும்கூட ராஜாவின் மெட்டுக்களை மிகக் கவனமாக கையாண்டிருப்பார் எஸ்.பி.பி. ஆனால் இதே காலகட்டத்தில் ராஜாவின் பல சிம்பிள் மெட்டுகளில் எஸ்.பி.பியின் அதகளங்களை ரசிக்கலாம். மூக்கணாங்கயிறு தன்னிடமிருந்து நழுவதைக்கூட மறந்து ராஜாவே எஸ்.பி.பியின் ரசிகனாய் மாறி 'அவன் போக்கிலேயே போகட்டும்' என்று விட்டுவிட்டாரோ என்று தோன்ற வைக்கிற அளவிற்கான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு பாடிய பாடல்களாக என் ரசனையில் சில பாடல்கள் உண்டு. இவை எல்லோருக்குமான ரசனையில் இருக்கும் மெட்டுக்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் எஸ்.பி.பியின் குரல் ஜாலம் என்ற அடிப்படையில் அணுகினால் இனி உங்களுக்கும் அவை பிடித்துப் போகும் பாடல்களாகிவிடும் என்பது உறுதி.
'வைகாசி வெள்ளிக்கிழம தானே ஒரு ஜோரான திருநாளு' ராசா மகன் படத்தின் இந்த பாடலில் ஆரம்பம் முதல் இறுதிவரை என்ன என்னவோ வித்தைகளை காட்டிக்கொண்டே இருப்பார் குரலில். சங்கீத ஜாதி முல்லைப் போன்ற கடினமான பாடல்களைக் கூட கல்லூரி கல்ச்சுரல்ஸ் தொடங்கி சூப்பர் சிங்கர் போன்ற தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் எளிதாய் யாரேனும் அச்சு அசலாய் பாடிவிடுவதை கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கிறோம்.சிம்பிளான மெட்டு என்று எளிதாய் கடந்துவிடும் வைகாசி வெள்ளிக்கிழமை போன்ற பாடல்களை இம்மாதிரி பாடல் நிகழ்ச்சியில் தேர்வு செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த பாடலின் ஆரம்பத்தில் தந்தன தந்தான தந்தனன என ஒரு வித துள்ளலுடம் எஸ்.பி.பி ஆரம்பிக்கும் அந்த ஆலாபனைப் போன்ற பகுதியை எஸ்.பி.பி பாடியதில் பத்து சதவிகிதம்கூட வேறு யாராலும் கொண்டுவந்துவிட முடியாது. மெட்டு சிம்பிள்தான் ஆனால் இந்த பாடலில் எஸ்.பி.பியின் விஸ்வரூபம் ஆச்சர்யமூட்டும் வகையிலானது.
'கோழி கூவும் நேரத்தில கோலம் போட்டு பாக்கலாமா' வண்ண வண்ண பூக்களின் இந்த பாடலில் குரலிலேயே சரசத்தை நூறு சதம் கொண்டு வந்திருப்பார். காட்சி வடிவம் பாலு மகேந்திராவா என கேட்க வைக்கும் அளவிற்கு கேவலமாக இருக்கும். பிரசாந்ந்தின் செத்தவன் கையில் வெற்றிலைப் பாக்கு முகபாவத்தையும் மீறி பாடலின் சூழலை நிலை நிறுத்தும் எஸ்.பி.பியின் குரல். இந்த பாடலில் 'கேக்கலாமா','பாக்கலாமா' என்கிற வார்த்தைகளை எஸ்.பி.பி உச்சரிக்கும் தொனியைக் கவனித்தால் நிஜமாகவே அவர் காமத்தில் முயங்கி முணகுகிறாரோன்னு தோண்றும் வகையில் அத்துனை தத்ரூபமாக இருக்கும்.
'தளுக்கி தளுக்கி வந்து ' கிழக்கு வாசலின் இந்த பாடலில் கடகடவென ஓடும் தாளக்கட்டில் மண் மணக்க தமிழனாகவே மாறிவிட்ட எஸ்.பி.பியை ரசிக்கலாம். தமிழின் ல,ள,ழ, ர,ற,ன,ணஅத்தனை நெளிவு சுளிவு உச்சரிப்புகளையும் தடதடக்கும் மெட்டில் அசால்ட்டாய் பாடியிருப்பார். 'மஞ்ச வாத்து நடைய பாத்து' ,'கொஞ்ச வார புளியங்காத்து' என்று இப்பாடலில் வரும் இடங்களில் எஸ்.பி.பியின் உச்சரிப்பிற்காக ரிவைண்ட் செய்து கேட்க வைக்கும். 'கேளடி கண்மணி பாடகன் சங்கதி' பாடலை இசைக் கல்லூரிகளில் பாடமாய் வைக்க வேண்டும் என்பது போல எஸ்.பி.பி ஒரு முறை சொல்லியிருந்தார். ஆர்கஸ்ட்ரேசன் மற்றும் மெட்டிற்காக அவர் ராஜாவைப் புகழ்ந்து அப்படி சொல்லியிருந்தார். அதே போல மிகச் சாதாரண மெட்டுகளை எப்படியெல்லாம் மெருகூட்ட இயலும் என்பதற்கு பாடமாய் இந்த தளுக்கி தளுக்கி பாடலையும் பாடமாய் வைக்கலாம் . அந்த அளவிற்கு இப்பாடலில் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் சுவரஸ்யங்களைக் கொட்டிக் குவித்திருப்பார்.
பொன்னுமணி படத்தின் 'ஆத்து மேட்டுல முத்தம் ஒண்ணு கொடுத்தா' ,கும்பக்கரை தங்கைய்யாவின் 'பாட்டு படிக்கும் குயிலே' மற்றும் கோயில் காளையின் 'அட மானா மதுரையில' பாடல்களில் எக்ஸ்பிரஷன்களில் ஜானகிக்கு எஸ்.பி.பி கொடுக்கும் சவால் அத்தனை சுவாரஸ்யமானது.
தெம்மாங்கு மெட்டு என்ற போதும் நகர மக்களையும் வசீகரித்த மெட்டான 'என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி ' பாடலில் இரண்டாவது சரணத்தில்தான் எஸ்.பி.பியின் எண்ட்ரி இருக்கும்.இவரின் போர்ஷனில் வரும் ஆலாபனையும் அதைத் தொடர்ந்து மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே என்று ஆரம்பிக்கும் போது அந்தக் குரலில் இருக்கும் காதலும் அவ்வளவு ரசனையானது. 'மங்கை பேரும் என்னடி ' என்கிற போது 'என்னடி' ஐ அழுத்தமாய் உச்சரித்து 'உன் பேரைச் சொல்லியே ஆக வேண்டும்' என்று கட்டளையிடுவது போல பாடிவிட்டு பிறகு பாடல் முடியும் நேரத்தில் அதே 'என்னடி'யை ப்ளிஸ் பேரைச் சொல்லேண்டி என்று கெஞ்சுவது போலவும் , கொஞ்சுவது போலவும் மாற்றிப் பாடும் லாவகம் எஸ்.பி.பிக்கு சிந்தனை மொழியும் தமிழாய் மாறிவிட்டிருக்குமோ என்று தோண்ற வைக்கும். இதே பாடலில் 'கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை கட்டிவிட்டு கண் சிரிக்கும் சுந்தரியே' என்கிற இடத்தில் சுந்தரியே என்கிறபோது சின்னதாய் போகிற போக்கில் அடிச்சு விடும் அந்த சங்கதிக்கு பாடல் பதிவின் போது உடன் இருந்தவர்களின் ரியாக்‌ஷன் என்னவாக இருந்திருக்கும் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.
எத்தனையோ பாடல்கள் இருக்க இந்தப் பாடல்களை மேற்கோள் காட்டியதற்குக் காரணம் சின்சியராக பாட வேண்டிய அவசியமில்லாமல் ஜாலியாய் பாடுகிற இம்மாதிரியான மெட்டுக்களில்தான் சினிமா பாடல்கள் பாடுவதில் எஸ்.பி.பிக்கு என்று இருந்த தனித்துவங்களை நிறைய கவனிக்க முடியும் என்பதே.
Pari Ayyasami

No comments:

Post a Comment