Search This Blog

Sunday, July 23, 2017

காலம் கடந்தபின் !


ஹேமா


வெந்து வெடித்துக்கொண்டிருந்தான் அகிலன்.
ச்ச....எவ்வளவு பெரிய அவமானம்.அசிங்கம்.நினைக்க நினைக்க அழுகை ஆத்திரம் .... தன்னில் ஒரு அருவருப்பும் கூட அவனுக்கு.

அப்படி...என்னதான் கேட்டுவிட்டேன்.மனதில் உள்ளதை அப்படியே கேட்டேன்.உலகத்தில் யாரும் கேட்கக்கூடாத ஏதாவதா கேட்டேன்.



இதுக்கெல்லாம் காரணம் ஜெயந்தி.அழகின் கர்வத்தோடு அறிவும் கூடியவள்.இத்தனையும் ஒருமித்த உருவத்துள் கண்டது பிடித்துப்போனது அகிலனுக்கு.கலைக்கல்லூரியில் படிக்கும்போதே தன் மனதை அறிவிக்க விரும்பாத அகிலன்,அவளோடு கற்பனைக் காதலில் தவித்துக்கொண்டிருந்தாலும் தனக்கான ஒரு தொழில் கிடைக்கும்வரை காத்திருந்தான்.

எப்போதாவது இருவரும் சந்திக்கும் நேரங்களில்மட்டும் நட்போடு பேசிக்கொள்வார்கள்.அது சினிமா தொடங்கி சின்னத்திரை தொட்டு புதுதாய் வந்த தொலைபேசிவரை வந்து போகும்.

மேற்படிப்பைத் தொடர்ந்தபடியே ஒரு அரசாங்க உத்தியோகமும் தேடிக்கொண்டிருந்தான்.அதன் பிறகுதான் தன் எண்ணத்தைச் சொல்லும் துணிவும் வந்தது அவனுக்கு.இன்னும் தாமதிக்க விரும்பாதவன் ஜெயந்தியைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பொன்றை எதிர்பார்த்திருந்தவன்.....அன்று ஜெயந்தி தனிமையாக கோவிலுக்குப் போவதை அறிந்திருந்தான்.

கோவிலில் சந்தித்த அகிலன் தயங்கித் தயங்கி "ஜெயந்தி...கனநாளா உங்களிட்ட ஒன்று சொல்ல ஆசை."...என்று சொல்லத் தொடங்க..

"சொல்லுங்கோ அகிலன்..."என்றபடி நட்போடு மெல்லிய சிரிப்போடு கண்கள் விரித்து ஆவலைத் தெரிவித்தபடி காத்திருந்தாள் ஜெயந்தி.

மெல்லியதாய் மௌனித்து குரலை இழுத்தவன்..."ஜெயந்தி எனக்குப் படிக்கிற காலத்திலயிருந்தே உங்களை எனக்கு நிறையப் பிடிக்கும்.காலம் வரட்டும்.என்ர காலிலேயே நிக்கிற தகுதிவரைக்கும் காத்திருந்தன்.இப்ப எல்லாம் சரி.அதுதான் இண்டைக்கு உங்களிட்ட நேரவே கேக்கிற ஆசை வந்திருக்கு.நான் உங்களைக் கல்யாணம் செய்ய விரும்புறன் ஜெயந்தி.உங்களுக்கு விருப்பம் என்றால் நான் வீட்டில அம்மாவோட கதைப்பன் இதுபற்றி"...என்றான் தயக்கம் நிறைந்த குரலுடன்.

ஒரே ஒரு கணம்தான்.முகத்தில் அத்தனை கோபம்.அந்த அழகான முகமே மாறிப்போனது ஜெயந்திக்கு.

"என்ன...உமக்கு எவ்வளவு தைரியம் வேணும் இந்தமாதிரி என்னோட கதைக்க.உன்ர மனசில என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறாய் அகிலன்.பேரைப்போலவே உலகத்தை ஆள்கிற எண்ணமோ உனக்கு?"

"என்ர சாதியென்ன....உன்ர சாதியென்ன யோசிச்சுப் பாத்தியோ.எங்கட பணம் என்ன பெருமை என்ன.நீ..எனக்கு மாப்பிள்ளையோ.நீயும் நானும் பிள்ளை பெறுகிறதோ.நல்லவேளை என்ர வீட்டாக்களோட நீ இதைக் கதைக்கேல்ல.செருப்புப் பிய்ஞ்சிருக்கும்.இருட்டடி வாங்கியிருப்பாய்.பிச்சையெடுக்கிற உனக்கு பணக்கார நல்ல சாதிக்காரப் பொம்பிளை தேவைப்படுதோ..."என்றாள் நக்கலாக.நெருப்பாய் வார்த்தைகளைக் கக்கியவள் விறுவிறுவென நடந்து மறைந்துவிட்டாள்.

அவளின் சத்தம் கேட்ட கோவிலுக்குள் இருந்தவர்கள் எட்டிப் பார்க்க அவமானத்தால் குறுகிப்போனான் அகிலன்.

வீடு வந்து எப்படித்தான் மறக்க முயற்சித்தும் அந்தச் சம்பவம் திரும்பத் திரும்ப மனக்கண்ணில் வந்து அகிலனை கஸ்டப்படுத்திக்கொண்டே இருந்தது.

நாளடைவில் யோசித்த அவனுக்குள் ஒரு தெளிவு."ம்ம்....ஜெயந்தி சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.என்னிடம் என்னதான் தகுதியிருக்கிறது.அவள் கேட்ட எதுவுமே என்னிடமில்லை.எனக்கேற்றபடிதானே என் வாழ்வுக்கு நான் ஆசைப்படவேண்டும்" என்று தன்னைத் தானே சமாதனப்படுத்திக்கொண்டான்.

என்றாலும் ஊர் உறவு எல்லாருக்குமே இந்தச் செய்தி பரவ அகிலன் இன்னும் உடைந்துபோனான்.எனவே ஊரிலிருக்கப் பிடிக்காதவனாய் அரபு நாடொன்றுக்குப் பயணமானான் அகிலன்.

`````

வருடங்கள் கடந்தோடி 15 ஆகிவிட்டிருந்தது.ஜெயந்தி இப்போதும் அதே அழகின் கர்வத்தோடு ஆனால் கல்யாணம் ஆகாமல்.....

பெரிய பெரிய பதவிகள்,பணம்,புகழ் என்று மாப்பிள்ளை தேடித் தேடியே ஏதாவது ஒன்று பொருந்தி ஒன்று பொருந்தாமல் எல்லாமே தள்ளிப்போய் காலமும் முதிர்கன்னியாய் ஜெயந்தியைத் தள்ளி வந்துவிட்டது.

இன்னும் தோஷமும் சாதகமும் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள் அம்மா.அம்மாவின் ஆறுதலுக்காக கோவில் வந்திருந்தாள் ஜெயந்தி.

கண்மூடிக் கும்பிட்டு நிமிர்ந்தவள் முன்னால் அகிலன்.

"ஜெயந்தி...."என்று நட்பின் அதே புன்னகையோடு அழைத்தவன் "எப்பிடியிருக்கிறீங்கள்" என்றான்.

"நான் நல்ல சுகமாயிருக்கிறன் அகிலன்.நீங்கள் எப்பிடி..."என்றாள் பதிலுக்கு.

அகிலன் இன்னும் புன்னகைத்தவாறே...."இவர்கள்தான் என்ர மனைவியும் மகளும்..." என்றான்.தோள் உயரத்தில் உரஞ்சியபடி நின்ற மகளை அணைத்தபடி அறிமுகப்படுத்தினான் அகிலன்.

ஆச்சரியப்பட்டபடியே "ஓஓ...இவ்வளவு பெரிய மகளா உங்களுக்கு..."என்றாள் ஜெய்ந்தி கணகளை அகலமாக்கியபடி.

"இவள் என்ர அப்பாபோல ஆள்தான் உயரம்.ஆனால் 13 வயசுதான்.நான் வெளிநாடுபோய் 15 வருஷமாகுதெல்லோ.நான் போய் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப்பிறகு என்ர சொந்தத்திலேயே அம்மா பார்த்துத் தந்த பெண்ணைத்தான் அங்க கூப்பிட்டுக் கல்யாணம் செய்துகொண்டன்...."என்று சொல்லி முடித்தான் ஒரே மூச்சில்.

"ஜெயந்தி ...நாங்கள் இன்னும் ஒரு மாதம் இங்கதான் இருப்பம்.நேரம் கிடைக்கேக்க வீட்டுப்பக்கம் வாங்கோவன்..."என்று அழைப்பொன்றை விட்டபடி மனைவியையும் மகளையும் தோளில் கைபோட்டு அணைத்தபடி நடந்துகொண்டிருந்தான் அகிலன்.விழியசைக்காமல் சிலையாய் நின்றிருந்தாள் ஜெயந்தி.

15 வருடங்களாகத் தனக்காக தன் தகுதிக்கேற்ற துணையைத் தேடிக் காத்திருந்த அவளுக்குத் தன் இழப்பு என்னவென்பது இப்போது புரிந்தது.தன் தந்தையின் கைபிடித்து நடந்துகொண்டிருந்த அகிலனின் மகள் மீண்டும் திரும்பிப் பார்த்துக் கையசைத்துவிட்டு நடந்துகொண்டிருந்தாள்.ஜெயந்தி அந்த இடத்திலேயே உறைந்து நின்றிருந்தாள்

இப்போதும் கோவிலுக்குள் இருந்தவர்கள் எட்டிப்பார்த்து எதையோ சொல்லிக்கொண்டுதானிருந்தார்கள்......!
thanks 
http://santhyilnaam.blogspot.com/

No comments:

Post a Comment