Search This Blog

Saturday, July 29, 2017

காலம் காலமாய் பெண்.

Vidya Subramaniam
பல நூறாண்டுக்கு முன்.
அவளுக்கு சிறு வயதுதான். பால்ய விவாகம். புருஷன் மரணித்து விட்டான். அவனை எரியூட்டத் தூக்கிச் செல்லும் போது அவளையும் சிங்காரித்து அழைத்துச் சென்றார்கள். அவளுக்கு அதில் விருப்பமில்லை. என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினாள். அவளை யாரும் விட்டு விடுவதாயில்லை. அவள் உடலில் நடுக்கம். கண்களில் பயம். அவள் வாழ விரும்பினாள். ஆனால் சமூகம் அவளை புருஷனின் சிதையில் தள்ளிக் கொன்று தெய்வமாக்கியது.
பின்னர் ராஜாராம் மோகன்ராய் முயற்சியால் பிரிட்டிஷ் அரசு சதி சடங்கிற்குத் தடை விதித்தது. சமூகம் கணவனை இழந்த பெண்ணை வேறு எப்படியெல்லாம் சித்ரவதை செய்யலாம் என யோசித்தது. கணவனை இழந்த சின்னஞ்சிறுமிக்குக் கூட மொட்டையடித்து, நார்மடி உடுத்தச் செய்து, ஜாக்கெட் அணியத் தடை விதித்து அவள் அழகைச் சிதைத்து, நான்கு சுவருக்குள் முடக்கியது. வட இந்தியாவில் கைம்பெண்களை வீட்டிலிருந்தே வெளியேற்றி அவர்களுக்கான தனியிடத்தில் விட்டுச் செல்லும் வழக்கமும் இருந்தது.
காலம் கொஞ்சம் மாறியது.
மொட்டையடிப்பதும் நார்மடியுடுத்தச் செய்வதும் குறைய, சமூகம் வெள்ளைப் புடவையளித்து மகிழ்ந்தது. பொட்டிடவும் பூச்சூடவும், வளையணியவும் தடை விதித்தது. பின்னர் அதிலிருந்தும் தப்பித்தாள்.
ஆயினும் இன்றும் சடங்குகள் என்ற பெயரில் சமூகம் புருஷனை இழந்த பெண்களைக் காயப் படுத்திக் கொண்டேதான் இருக்கிறது. மனைவியை இழந்த ஆண்களுக்கு ஏன் இவ்விதமான எந்தச் சடங்குகளும் இல்லை?
என் அத்தையின் அழகு இருபத்தோரு வயதில் சிதைக்கப் பட்டது. தலை முண்டனம் செய்யப்பட்டு நார்மடி உடுத்தச் செய்தது. ஜாக்கெட் மறுக்கப்பட்டது. என் அத்தை மனதால் எத்தகைய காயமும் உடலால் எத்தகைய கூச்சமும் அடைந்திருப்பாள் என்று, இப்போது கூட நான் அவளை நினைத்து அழுவதுண்டு.
ஒரு காலத்தில் பால்ய விவாகம் செய்யப்பட்ட. சிறுமி தன் துரதிருஷ்டத்தால் கணவனை இழந்து விட்டால், பிறந்த வீட்டுக்கு அனுப்பப் பட்டாள். அவளை இறுதி வரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவளது சகோதரர் ஏற்பர். இதன் அடையாளமாய் அவளது கணவன் இறந்த பத்தாம் நாளன்று பத்து பரத்தி குளித்து விட்டு வரும் அப்பெண்ணின் தோளில் சகோதரன் ஒரு புடவை போர்த்துவான். என் கணவர் இறந்த பத்தாம் நாளன்று என் அம்மாவிடம் நான் உறுதியாகச் சொன்னேன், நான் யாரையும் சார்ந்திருக்கப் போவதில்லை என்பதால் எனக்கு புடவை போர்த்தக் கூடாது என்று. ஆனாலும் புடவைக்கு பதில் என் கையில் நூற்றியோரு ரூபாயைக் கொடுக்கச் செய்தார்கள். அந்தக் காசை அங்கேயே தானம் பண்ணி விட்டுத்தான் வீடு வந்தேன்.
இன்னொரு கேவலமான சடங்கு....பத்து நாளுக்குள் ஒரு முறை அப்பெண்ணை பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். அவள் கால் வைக்கும் இடமெல்லாம் பாலும் நெல்லும் தெளிப்பார்கள். எதற்கு இவ்வழக்கம் என்று இதன் அர்த்தம் கூடத் தெரியாது எனக்கு. மிகக்கேவலமான சடங்கு இது. இப்படிச் செய்து விட்டால் அப்பெண் எப்போது வேண்டுமானாலும் பிறந்த வீடு செல்லலாமாம். ஏன் இதைச் செய்யாமல் அவள் சென்று வந்தால் என்னவாகி விடும்? எனக்குப் புரியவில்லை. என் அம்மா அழுது ஆகாத்தியம் பண்ணி என்னை அழைத்துச் சென்றாள். வெறுப்போடு சென்று வந்தேன். ஆனால் என் தம்பி மனைவி இச்சடங்கு வேண்டாம் என மறுத்த போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
ஆயினும் தம்பியின் உடல் கொண்டு செல்லப்பட்டதும் வாசலில் நமஸ்கரிக்கச் சென்றவளிடம் ஒரு உறவுப் பெண், "சுசிலா..தலைலேர்ந்து கிளிப்பை அவுத்துட்டு, தலையை விரிச்சுப் போட்டுக்கோ என்று உத்தரவிட்டபோது எனக்குள் ஆத்திரத்தோடு கனன்று எரிந்த அக்னி.......! அதோடு நமஸ்கரித்தால் என்னவாகி விடும்? அவள் அவிழ்த்து வைத்த அந்த தலை கிளிப் இன்னும் சீந்துவாரின்றி காம்பவுண்ட் சுவர் மீது கிடக்கிறது.
ஏன்? .....ஏன் ஏதோ ஒரு விதத்தில் பெண்ணைக் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறது இச்சமூகம்? ஒரு மரணத்தை இயல்பாய் ஏற்றுக் கொண்டு அவள் வாழ முற்பட்டால் கூட, சடங்கு சமபிரதாயம் என்ற போர்வையில் எதற்கு அவளைத் துன்புறுத்திக் கொண்டே இருக்கிறது? மனதால் என்றைக்கு மனிதர் மேன்மையடைவர்?

No comments:

Post a Comment