Search This Blog

Wednesday, May 17, 2017

முதல் வகுப்பு குழந்தைகளைக் கையாள்வதில் தான் வெற்றி இருக்கிறது..

  1. பெரும்பாலான ஆசிரியர்களோட புலம்பலே எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு வந்தும் மாணவர்களுக்கு எழுத்தேத் தெரியலை என்பதுதான்.. பத்தாம் வகுப்பில் ஓர் ஆசிரியர் எழுத்துக...் கற்பிக்கும் நிலை எனில் எண்ணிப்பாருங்க.. எவ்வளவு கவலைதரும் விடயம்..
  2. குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்புதான் அடிப்படை. அங்கு எழுத்துகளையும் எண்களையும் சரியாக் கத்துக்கிட்டாங்கன்னா போதும் அவங்களால எந்த வகுப்பிலும் வெற்றிபெற முடியும். ஆனா முதல் வகுப்பு சரியா அமையலைன்னா அம்மாணவன் கடைசி வரை அடுத்தடுத்த வகுப்பாசிரியர் அவன் மீது அக்கறை எடுத்துக்கொள்வது வரை அப்படியேதான் இருப்பான்.
  3. முதல் வகுப்பு என்பது எப்பொழுதுமே சவால்தான்.. எதெற்கெடுத்தாலும் பெற்றோரைச் சார்ந்து வாழ்ந்தவர்கள் பள்ளி வந்தவுடன் வீட்டிலிருந்து தனித்தீவில் விடப்பட்ட மனநிலையில் இருப்பார்கள். சரியான உணவுப்பழக்கம், கழிப்பறைப்பழக்கம் இல்லாமல் இருப்பார்கள். ஓடியாடித் திரிந்து பழகிய அவர்களை ஒரு வகுப்பறைக்குள் அடைத்து வைத்து ஒரு மேய்ப்பரைப்போல ஆசிரியர் கண்காணிப்பதும் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இதனால் பள்ளி என்ற ஒன்றே அவர்களுக்கு மிகப்பெரிய பீதியைக் கிளப்பும்.. இவையெல்லாம் தாண்டி முதல் வகுப்பு ஆசிரியர் அக்குழந்தைகளைக் கையாள்வதில் தான் வெற்றி இருக்கிறது..
  4. விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் ஒன்றியம் பாதிரி பள்ளியில் முதல்வகுப்பு மாணவர்கள் படிப்பதை முகநூல் காணொளி ஒன்றில் கண்டதிலிருந்து எப்படி இவர்களால் மட்டும் சாத்தியம் என எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆடல், பாடல், கதைகள் என குழந்தைகள் கற்பித்தலுக்கேற்ற சூழலை உருவாக்கிவிடலாம் ஆனால் அனைத்து மாணவர்களையும் வாசிக்க, எழுதச்செய்வது எப்படி என மண்டையில் தொடர்வண்டி ஓடிக்கொண்டே இருந்தது..
  5. அப்பள்ளி ஆசிரியர் Ganapathy Harish அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபொழுதுதான். அவர்கள் கற்பிக்கும் முறையில் புதுமை படைப்பது தெரிய வந்துள்ளது.. வெறும் 42 நாட்களே முதல் வகுப்பு மாணவர்கள் எழுதப் படிக்க ஒரு புதிய முறையை ஆய்வு செய்து கண்டறிந்த சென்னை மாநகராட்சிப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் திருமதி. கனகலட்சுமி அவர்களைப் பற்றி அவர் சொல்லச் சொல்ல என் ஆர்வம் அதிகமானது..
  6. என் தலைமையாசிரியரிடம்.. "டீச்சர் அடுத்த கல்வியாண்டில் எனக்கு முதல் வகுப்பு கொடுங்க" என வலுக்கட்டாயமாகக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.. மே முதல் வாரத்தில் சென்னை சென்ற பொழுது இவரைச் சந்தித்து அவர் கற்பிக்கும் முறைகளை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். இரவு அவர் வீட்டிலேயே தங்கச் செய்து விருந்தோம்பல் செய்து , நள்ளிரவு வரை சொல்லிக்கொடுத்ததை என்றும் மறக்கவியலாது..
  7. தொல்காப்பியரின் சொற்பிறப்பு முறைகளின் படி அவர் உச்சரிப்பதாகட்டும் எழுத்துகளை எழுத நேர்க்கீற்று , படுக்கைக்கீற்று, மேல் விலங்கு பிறை, கொம்புக்கால், சுழி என சொல்லிக்கொண்டே எழுதுவதாகட்டும், மிகச் சிறந்த முறையாக இருந்தது.. எக்காலத்திலும் எழுதுவதிலோ மயங்கொலி எழுத்துகளை( ந, ன, ண, ல,ள,ழ, ர,ற ) வாசிப்பதிலோ பிழையே வராது.
  8. இதற்கென இவர் பல ஆண்டுகள் ஆய்வு செய்து வெற்றிகரமாக பல பள்ளிகளில் செயல்படுத்தியும் உள்ளனர்.. மேலும் கணிதம் கற்பிக்கவும் எளிய முறைகளைக் கண்டறிந்துள்ளார். இதற்கென " கற்க கசடறக்கற்பிக்க" என்ற கையேட்டினையும் தயாரித்துள்ளார்..
  9. தொடக்கக் கல்விக்குத் தேவையான மிகச்சரியான அரும்பணியைச் செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் இவரின் செயல் இருகைக் கூப்பி வணங்க வைக்கிறது. வாழ்த்துகளும் நன்றியும் அம்மா!....

No comments:

Post a Comment