Search This Blog

Sunday, May 7, 2017

வடமாகாண சபையின் வீழ்ச்சி ,வடக்குக் கல்வி அமைச்சின் சீர்கேடு

வடமாகாண சபையின் வீழ்ச்சியைப் பற்றியும் வடக்குக் கல்வி அமைச்சின் சீர்கேட்டைப்பற்றியும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பொதுவெளியில் கவனப்படுத்தி வருகிறேன். இதையெல்லாம் கண்டு கொள்ளவே கூடாது என்ற மாதிரி தமிழ்ப்பெருங்குடி கள்ள மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது.
இதன் விளைவுகள் வினையாகத் தமிழ்ச்சமூகத்தைச் சூழத் தொடங்கி விட்டன. இப்போது வடக்கு மாகாணம் உற்பத்தியிலும் பிற பொருளாதார நடவடிக்கைகளிலும் சமூக வளர்ச்சியிலும் பின்தங்கியிருக்கிறது. வன்முறையிலும் குற்றச்செயல்களிலும் வீண் விரயங்களிலும் முன்னேறியுள்ளது.
ஆனாலும் அது தன்னுடைய வீழ்ச்சியை மறைத்துக் கொண்டேயிருக்கிறது. தன்னுடைய தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்கிறது. என்னதானிருந்தாலும் கிழிந்த கோமணத்தினால் இழுத்துப் போர்த்த முடியாது என்பது தெளிவான உண்மையல்லவா!
வட மாகாணம் இலங்கையில் கடைசி இடத்தில் உள்ளது. கிளிநொச்சி மாவட்டம் 125 ஆவது இடத்தில், கடைசியில் உள்ளது.
இதற்கெல்லாம் காரணம் முறைகேடான நிர்வாக முறைமையும் அரசியல் தலையீடுகளுமே.
கீழே பாருங்கள்.
கிளிநொச்சி - பூநகரிக் கல்விக் கோட்டத்தில் உள்ள 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இல்லை. சுமார் அறுநூறு மாணவர்களை கொண்ட இந்தப் பாடசாலையை ஆண்டு ஒன்றுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்விப் பிரிவு ஆசிரியரே நடத்திவருகின்றார். ஆனால் நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு ஐந்து அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி ம.விக்கு ஐந்து அதிபர்கள் உள்ளனர். அதிபர் தரம் ஒன்றில் ஒருவர். அதிபர் தரம் இரண்டில் இரண்டு அதிபர்கள். அதிபர் தரம் மூன்றில் இரண்டு அதிபர்கள் இருக்கிறார்கள்.
மத்திய கல்லூரியின் ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் இரண்டில் இரண்டு அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்,
பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் தரம் இரண்டு அதிபர் அதிபராக கடமையாற்றுகிறார். தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபர் ஒருவர் எவ்வித பொறுப்பும் இன்றி இருந்தார். தற்போது இவர் எந்தப் பொறுப்புகளும் வழங்கப்படாமல், பாடசாலை எதுவும் வழங்கப்படாமல் கண்டாவளைக் கோட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்.
இராமநாதபுரம் பாடசாலையில் தரம் இரண்டு அதிபர்கள் இருவர் உள்ளனர், இராமநாதபுரம் மேற்கு பாடசாலையில் தரம் இரண்டு அதிபர் ஒருவரும் தரம் மூன்று அதிபரும் ஒருவரும் உள்ளனர்
இவ்வாறு மாவட்டத்தின் நகரை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரிய வளமும் அதிபர்களும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமப்புறப் பாடசாலைகள் போதுமான வளங்கள் இல்லாமல் தொடர்ச்சியாக காணப்படுகின்றன.
க.பொ.த உயர்தரத்தில் கலை வர்த்தக பிரிவுகளைக் கொண்ட முட்கொம்பன் பாடசாலையில் அறுநூறு மாணவர்கள் படிக்கின்றனர். மீள் குடியேற்றத்தின் பின்னர் படிப்படியாக கல்வியில் வளர்ச்சியடைந்து வந்த இந்தப் பாடசாலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அதிபர் வெற்றிடமும் அங்கு நிலவும் ஆசியர் வெற்றிடமும் மிகமோசமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இந்தப் பாடசாலையில் கற்பிப்பதற்கு கணித பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் தேவையாக உள்ள போதும் ஒருவரும் இல்லாத நிலை. அவ்வாறே விஞ்ஞானப் பாடத்திற்கும் இரண்டு ஆசிரியர்கள் தேவையாக உள்ள போதும் எவரும் இல்லை. இந்த நிலைமை கடந்த பல மாதங்கள் காணப்படுகிறது.
அத்தோடு உயர்தரத்தில் இந்து நாகரீகத்திற்கும் ஆசிரியர் இல்லை என தெரிவிக்கும் பெற்றோர், இந்த நிலைமை நீடித்தால், தங்களுடைய பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும். இது குறித்து எல்லா இடமும் முறைப்பட்டிருக்கிறோம். நடவடிக்கையை எடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியில் கற்பிப்பதற்கான ஆசிரிய வளப்பகிர்வைச் சரியாகச் செய்ய முடியாத, பிரதேச வேறுபாட்டை மேவிச் சிந்திக்கப் பண்ணாத மாகாண நிர்வாகமும் தமிழ் அரசியல் தலைமையும்தான் வடக்குக் கிழக்கு இணைப்பைப்பற்றியும் தேசியத்தைப் பற்றியும் பெருங்கதையாடல் செய்கிறது.
இதற்குள்தான் இத்தனை பெருமைகளும் கனவுகளும்.
இந்த லட்சணத்தில்தான் இவர்களுக்குக் குடைபிடிப்போர் உள்ளனர்.
Sivarasa Karunagaran

தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகின்றார் என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக அமையத்தில் இன்று(06) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர்,

இலங்கையில் உள்ள முதலமைச்சர்களில் தகுதி கூடிய முதலமைச்சர் என்றால் அது வடக்கு முதலமைச்சர்தான். அது அனைவருக்கும் தெரியும்.
அண்மையில் கல்வி அமைச்சருடன் வட மேல் மாகாணத்தில் வயம்ப எனும் இடத்தில் கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு குறிப்பிட்டுள்ளார்கள் வட மேல் மாகாண முதலமைச்சர் எட்டாம் ஆண்டுதான் படித்தவர் என்று.
ஆனால் அவர் அந்த மாகாணத்தை சிறப்பாக கொண்டு நடத்துகின்றார். இதற்கு தகுதி அல்ல முக்கியம், ஆளுமைதான் காரணம் அவரிடம் ஆளுமை இருக்கிறது. இதனை பல இடங்களில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
அது போலதான் வடக்கு கல்வி அமைச்சரும் அவர் ஆசிரியராக, அதிபராக, வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்து கல்வி அமைச்சராக வந்தவர் என்பது முக்கியமல்ல அவரது ஆளுமைதான் முக்கியமானது.
வடக்கின் கல்வித்துறையில் வளங்கள் சரியாக பகிரப்படாமை, சரியாக பயன்படுத்தப்படாமை, மற்றும் நெறிப்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் கல்வித்துறை என்றுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை ஆசிரியர் வளங்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் வளங்கள் சரியாக முறையாக பங்கிடப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வலயங்களில் கல்வித்துறையின் ஆளணி வளம் குவிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ தடவைகள் எடுத்துக் கூறியும் அது சீர்செய்யப்படவில்லை.
அதற்கு மேலதிகமாக இந்தக் குறைபாடுகளை நீக்குவதற்காகதான் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள் குறிப்பாக வன்னி பிரதேசங்களில் நியமிக்கவே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
குறிப்பாக 400 பேரளவில் யாழ்ப்பாணத்திற்கு வெளியே நியமிக்கப்பட்டார்கள் அதில் ஐம்பது பேர் இடமாறுதல் மூலம் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்றார்கள்.
ஆனால் 75 பேர் அரசியல்வாதிகளின் சிபாரிசு மற்றும் உயர்மட்ட செல்வாகின் அடிப்படையிலும் யாழ்ப்பாணத்திற்கு வந்துவிட்டார்கள் இதில் எந்தெந்த அரசியல்வாதிகள் ஈடுப்பட்டுள்ளனர் என்ற ஆதாரமும் என்னிடம் உண்டு.
வடக்கிலும் முதலமைச்சர் அமைச்சர்கள் அவர்களுக்குச் சம்பளங்கள் சலுகைகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களுக்கு சம்பளம் என வழங்கி வருவது ஏன் மக்களுக்கு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆனால் அது எதுவும் நடந்ததாக தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா
http://www.tamilwin.com/politics


No comments:

Post a Comment