Search This Blog

Saturday, April 22, 2017

சித்தர்கள் ஆத்திகரா? நாத்திகரா?

Govindarajan Vijaya Padma
‘கடவுள் நம்பிக்கை‘ என்றொரு பொதுவான அளவு கோலைக் கொண்டு மக்களை ஆத்திகர், நாத்திகர் எனப் பிரிப்பர். சித்தர்களை எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கொள்வது? கடவுள் உண்டு என்று நம்புவதால் சித்தர்களை ஆத்திகர் எனலாம். வேதம், வேதச் சடங்குகள் அனைத்தையும் சாடுவதால் அவர்களை நாத்திகர் எனலாம். ‘கடவுள் உண்டு‘ என்ற கொள்கையில் சித்தர்கள் வேறுபடவில்லை. வேதங்களின் நம்பிக்கையில் சிறிது வேறுபடுகின்றனர். காலத்தால் முற்பட்ட சிவ வாக்கியர், அகப் பேயார், பாம்பாட்டியார் போன்றோர் வேதத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து வேதத்தின் சிறப்பை மறுத்து நிற்கின்றனர். காலத்தால் பிற்பட்ட கடுவெளிச்சித்தர் ‘வேத விதிப்படி நில்லு‘ என வலியுறுத்தி வேத நெறிக்கும் சித்தர் நெறிக்கும் இடையே சமரசம் காண முயல்கின்றார்.103
ஆத்திகம், நாத்திகம் என்னும் இரு வேறு நிலைகளும் வேதத்தை ஏற்பதையும் வேதத்தை மறுப்பதையும் அடிப்படையாகக் கொண்டது என்பதால் வைதீகச் சடங்குகள், மூடப்பழக்க வழக்கங்கள் என்பதெல்லாம் ஆத்திக நாத்திகப் பாகுபாட்டிற்குள் வரவில்லை போலும்.
“அள்ளியிடவே குணமா மென்று சித்தர் வேதம் உரைப்பதுவே”
“மாணாய்ப் பிறப்பை யறுத்திடுவோன் வகுத்த சித்தர் நன்மொழியே”
“சித்தர் மாமறை கூறு மறிந்து”
என்றும், சித்தர்கள் வகுத்த நெறியை வேதம் என்னும் சொல்லால் சித்தர்கள் கூறியிருப்பது, சித்தர் வேதத்தைக் குறிப்பிடுவதாகும். அதை விடுத்து, வடமொழி நூலை வேதம் என்னும் சொல்லால் சித்தர்கள் கூறியதாகக் கொள்வதும், சித்தர்களைப் பற்றிய ஆய்வுக்குள் புகுத்துவதும் முறையன்று.
வேதம் என்னும் சொல், வடமொழி நூல்களில் மிகவும் பழமையான இருக்கு வேதத்திலும், எசுர் வேதத்திலும் புற்கட்டு என்னும் பொருளைத் தருவதாகவே அமைந் திருக்கிறது. பாரதப்போர் நிகழ்வதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிக்கிழார் பாடிய புறநானூற்றுப் பாடலில் ‘நான்மறை’ என்னும் சொற்றொடர் காணப் படுகிறது. வடமொழியில் வேதங்கள் தோன்றுவதற்கு முன்னரே நான்கு வேதம் என்பது தமிழில் காணக் கூடியதாக இருக்கிறது. அவை ‘மறை’ என்னும் பெயரால் வழங்கியும் வந்திருக்கிறது என்று மறைமலையடிகள்ஏ தெரிவிக்கின்றார்.
எனவே, வேதம் என்பதும் நான்மறை என்பதும் வேற்று மொழிக்கே உரியதாகக் கருதிக் கொண்டு, சித்தர்களுக்கும் அவற்றுக்கும் தொடர்புபடுத்திக் கூறப்படுவதும் முறையன்று.

No comments:

Post a Comment