Search This Blog

Sunday, April 16, 2017

அந்தப் பெண்ணின் முகம், அதில் வெளிப்படும் எண்ணற்ற உணர்ச்சிகள், புகைப்படம்

இந்த இதழ் ஆனந்த விகடனில் பச்சோந்தி என்பவர் ஒரு கவிதை எழுதியுள்ளார். அதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படம் பார்த்த கணத்தில் மனதை கலங்க வைக்கிறது. அந்தப் பெண்ணின் முகம், அதில் வெளிப்படும் எண்ணற்ற உணர்ச்சிகள், கன்னக் கதுப்புகளில் வழிந்தோட தயாராக முட்டி நிற்கும் கண்ணீர்த் துளிகள், அந்த சின்னஞ்சிறு ஒற்றை மூக்குத்தி, தோடு இல்லாத காது, நெற்றியில் மையிட்ட சிறுமியின் உதட்டு மடிப்பில் சுழித்து நிற்கும் அழுகை, கண்களை மறைத்து ஒளிரும் கண்ணீர்த் திரை... அந்த புகைப்படத்தில் இருந்து கண்களை விலக்கவே முடியவில்லை. அது ஏதேதோ நினைவுகளுக்கு இட்டுச் செல்கிறது. யார், யாரையோ நினைவூட்டுகிறது.

பிறகு கவிதையைப் படித்தால் அது புகைப்படத்தின் கணத்தை மேலும் ஒரு படி கூட்டுகிறது. பச்சை வேர்க்கடலையால் பிய்த்து எரியப்பட்ட இதயமும், இரைப்பையும் கொண்ட அப்பாக்கள் நம் ஊர்கள் தோறும் இருக்கிறார்கள். திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் இருந்து ஒருவாரம் விடுமுறையில் ஊர் திரும்பிய ஒரு தகப்பன் கடைசிப் பேருந்து பிடிக்க கிளம்புகையில் கை குழந்தையுடன் வழியனுப்பும் மனைவியின் புறத் தோற்றத்தையும், அகத் தோற்றத்தையும் பேசுகின்றன கவிதையும், புகைப்படமும். கவிதையை எழுதிய பச்சோந்திக்கும், புகைப்படம் எடுத்த விஜயகுமாருக்கும் வாழ்த்தும், அன்பும்!
 Barathi Thambi

No comments:

Post a Comment