Search This Blog

Thursday, January 26, 2017

நயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி


நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு, பாய்மரக்கப்பல் போன்றவற்றின் மூலம் ஊர்காவற்றுறை, காரைதீவு சென்று நடந்தோ வண்டியிலோ செல்வர். நடப்பவர் தலைச்சுமைகளை இறக்கி இளைப்பாறுவதற்கு வசதியாக சுமை தாங்கிக் கற்களும் தங்கு மண்டபங்களும் இடையில் இருக்கும் கல்லுண்டாய் வழுக்கி ஆற்றுப் பாலத்தருகில் அத்தகைய சுமைதாங்கிக் கற்கள் சமீப காலம் வரை இருந்தன.
இன்னொரு வழியில் செல்வதாயின் புங்குடுதீவு கரைக்கு சென்று லைடன் தீவுக்கு கடல் கடந்து அராலிப் பக்கமாகவோ பண்ணைப் பக்கமாகவோ யாழ் நகர் செல்வர். இவ்வழிகளால் யாழ்ப்பாணம் போய்த்திரும்ப பல நாட்கள் எடுத்தன. சுமைகளை பல இடங்களில் ஏற்றி இறக்குவதில் சிரமங்களும் இருந்தன.
மூன்றாவதாக யாழ்ப்பாணத்து பரங்கித்தெரு அருகில் அலுப்பாந்தித் துறைக்கு நேரடியாக கடல் மூலம் செல்லலாம். அவ்விடம் ஒரு சிறு நகரம் போல் எப்போதும் பரபரப்பாக இரவு பகலாக சன நடமாட்டத்துடன் காணப்படும். இலங்கைப் புகையிரத சேவையின் சரக்கு இரயிலும் நேரடியாக அவ்விடம் வந்து தரித்து நிற்பதற்கு வசதியாக ஒரு சிறு புகையிரத நிலையம் கொட்டகை வடிவில் இருந்தது. செட்டிமார்களின் ஸ்தாபனங்கள் பல இருந்தன. பிரிட்டிஷ் தனியார் வங்கிக் கிளைகளும்கூட இருந்தன. நயினாதீவு வணிகர்களான சபாபதிப்பிள்ளை போன்றோரின் கிட்டங்கிகளும் அங்கு இருந்தன.
இப்படி பல வசதிகளுடனும் இருந்த அலுப்பாந்திக்கு நயினாதீவிலிருந்து நேரடியாக செல்வதற்கு தோதாக ஒரு பெரிய படகை விடுவதற்கு தொலை நோக்குள்ள நயினைப் பெருமக்கள் சிலர் முனைந்தனர். 1931 வாக்கில் நயினாதீவு மற்றும் தீவக மக்களால் இதற்கென சங்கமொன்று அமைக்கப்பட்டது. காலக்கிரமத்தில் 'தீவுப் பகுதி மோட்டார் வள்ள ஐக்கிய சங்கம்' (The Islands Motor Boat Co-op. Society Ltd.) என்ற பெயரில் ஒரு சட்டபூர்வமான, வரையறுக்கப்பட்டகம்பெனி (Limitedd Liability Company) பதிவு செய்யப்பட்டு அதன் பங்குகள் விற்பனைக்கு விடப்பட்டன. ஊர்ப்பற்று கொண்ட பல பெருமக்கள் அந்த பங்குகளை வாங்கி உறுப்பினராக சேர்ந்தனர். திரு அமிர்தலிங்கம், திரு கந்தையா, திரு கனகரத்தினம், திரு செல்லப்பர் ஆகியோர் அதன் இயக்குநர்களாகவோ முதலீட்டாளராகவோ இருந்தோரில் சிலர். நயினை கிராம சபையும் அப்போதைய தலைவர்களாக இருந்த திருவாளர்கள் செல்லையா, நாகமணி, விசுவலிங்கம், அமிர்தலிங்கம்,ஆகியோரும் நிர்வாக ஒத்துழைப்பைக் கொடுத்து உதவினார். திரு கந்தையா அவர்கள் காலத்தில் நயினாதீவு புங்குடுதீவுக்கிடையில் ஐந்து சதம் ஆயச் சேவையும் நடாத்தப் பட்டது. கூட்டுறவுப் பரிசோதகராக(co-operative inspector) இருந்த மானிப்பாயைச் சேர்ந்த செல்வரட்ணம் குக்(Cook) என்பவர் இதற்கு பெரும் உதவி நல்கினார். இறுப்பிட்டி பசுபதிப்பிள்ளை விதானையாரும் பலத்த ஒத்துழைப்புக் கொடுத்தார்.
அன்றைய நாளிலேயே அதிக பெறுமதியுடைய (100,000ரூபாய் என்று கூறுவர்) கப்பலொன்று இங்கிலாந்து, கிளாஸ்கோ(Glasgow) நகரத்திலிருந்து வாங்கி கப்பலில் தருவிக்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்திலிருந்து புகையிரத்தின் மூலம் அலுப்பாந்திக்கு கொண்டு வரப்பட்டு ஒரு சுபயோக சுபதினத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அதன் தண்டேலாக ஊர்காவற்றுறையைச் சேர்ந்த மனுவேற்பிள்ளை என்பவர் பணியாற்றினார். கப்பல், புயல் காற்று போன்றவற்றின் தாக்கத்திலிருந்து ஒதுக்காகவும் அதேநேரம் ஆழமாகவும் உள்ள புங்குடுதீவு புளியடித் துறையில் இரவு கட்டப்படும். காலையில் புறப்பட்டு நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு முதலிய இடங்களில் தரித்து ஊர்காவற்றுறையை சென்றடையும். அங்கு அரை மணி தங்கி யாழ்ப்பாணம் புறப்படும். ஊர்காவற்றுறையில் எம்மவர்களின் தேநீர்கடைகள் இருந்தன. நண்பகல் 12 மணிபோல் அலுப்பாந்தியை வந்தடையும். பின் அங்கிருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு துறைமுகங்களில் தரித்து புளியடித் துறைமுகத்தில் கட்டப்படும். இவ்வகையில் தீவுகளுக்கிடையில் ஒரு பரஸ்பர புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் உருவாக்கிக் கொண்ட அதே நேரம் நயினாதீவு ஒரு தலைமைத்துவத்தை அங்கு இனம் காட்டிக்கொண்டது.
செல்வரத்தினம் குக் அவர்களின் சேவையை கௌரவிக்குமுகமாக அக்கப்பலுக்கு அவரின் பாரியாரின் பெயராகிய கார்மெல்(Carmel) என்பதைச் சேர்த்து கார்மெல் நாகபூஷணி இலக்கம்1 (Carmel Naagapooshani No.1) என்று பெயரிடப்பட்டது. நயினாதீவு - அலுப்பாந்தி - நயினாதீவு என மிகவும் சிறப்பான சேவையை அது எம் மக்களுக்கு நல்கியது. யாழ்ப்பாணப் பிரயாணம் இலகுவாக, வசதியாக, வேகமாக அமையவே பிரயாணிகள் தொகையும் பெருகலாயிற்று. ஒரு மோட்டார் வள்ளத்தை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாத நிலையில் இன்னுமோர் மோட்டார் வள்ளம் பெறப்பட்டது. இத்தகைய வெற்றியின் பயனாக Carmel Naagapooshani No.2, Carmel Naagapooshani No.3, Carmel Naagapooshani No.4, Carmel Naagapooshani No.5 என்று புதிய கப்பல்கள் கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. கார்மெல் நாகபூஷணி இலக்கம் 5 காலத்தில் பூபாலசிங்கம் என்பவர் தலைமையிலான குழுவினர் இயக்குனர் சபைக்கு தெரிவாகினர். அக்காலத்தில் பெரும் பணமோசடி ஏற்பட்டு கம்பனி திவாலாகியதாகத் தெரிகின்றது. கம்பனியில் பங்குகளை வாங்கி பணமுதலீடு செய்த நயினை நன்மக்கள் குறிப்பாக அரச சேவையாளர்கள் நட்டமடைந்தனர். இல்லாவிடின் சம காலத்திலெழுந்த கரம்பனைச் சேர்ந்த அல்பிரெட் தம்பையாவின் கார்கோ போட்(Cargo Boat Despatch Company) போல் வளர்ச்சியடைந்து, வேறு பல துறைகளிலும் கிளை பரப்பி, எம் மக்களின் பதிவு செய்யப்பட்ட கம்பனி வணிக திறமையை இலங்கை முழுவதும் வெளிக்காட்டியிருக்கும் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment