Search This Blog

Sunday, December 4, 2016

ரஷ்ய இலக்கியங்கள் (மிகயீல் ஷோலகவ்வின் 'அவன் விதி')

ரஷ்ய இலக்கியங்களை (அன்றையகால சோவியத்) வாசிக்கும்போது, உள்நாட்டுப் போரில் செஞ்சேனைகளும், 2ம் உலகமகா யுத்தத்தில் ரஷ்யப்படைகளும் வென்றிருக்காவிட்டால் அவர்களின் படைப்புக்களை உலகம் இந்தளவு வரவேற்றிருக்குமா என அவ்வப்போது யோசிப்பதுண்டு. மேலும் இன்னொரு கேள்வியாக, இராணுவங்களின் வெற்றிகளைப் பெருமிதமாய்க் கொள்ளும் (முக்கியமாய் அமெரிக்க/பிரித்தானியா) படைப்புகளை வாசிக்கும்போதோ அல்லது திரைப்படமாகப் பார்க்கும்போதோ எரிச்சல் வருவதைப் போல, ஏன் ரஷ்யப் படைப்புக்களில் வருவதில்லை. இதற்கு நம் வாழ்வில் பலவிடயங்களில் போடும் இரட்டை வேடந்தான் காரணமாயிருக்குமோ அல்லது இடதுசாரிகள்/கம்யூனிஸ்ட்டுக்கள் மீதிருக்கும் இயல்பான பரிவுதானோ காரணமென எப்போதும் குழப்பமுண்டு.
மிகயீல் ஷோலகவ்வின் 'அவன் விதி' எனப்படும் குறுநாவலை வாசித்துக்கொண்டிருக்கும்போது இந்தக் கேள்விகளே தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. 2ம் உலகமகாயுத்தத்தின்போது ஜேர்மனியப் படைகளால் போர்க்கைதியாக்கப்பட்டு, பல வருடங்களில் அவர்களின் சித்திரவதைகளுக்கும், கடூழிய அடிமைவேலைக்கும் பயன்படுத்தப்பட்ட ஒருவன் தப்பிவந்து சொல்கின்ற கதைதான் இது. போர்க்கைதியாக்கப்படும்போது, 'எனது விருப்பின்றி படையில் சேர்ந்த மோசமான கம்யூனிஸ்ட்டுக்கள் நீங்கள் எனச் சண்டைபிடித்து, தனது கொமண்டோரைக் ஜேர்மனியருக்குக் காட்டிக்கொடுக்கப்போகின்றேன்' எனச் சொல்லும் தம் சக படையினனையும் இந்தக் கதைசொல்லி கொல்கின்றான். நாட்டின் கெளரவம் சார்ந்தும், பாஸிட்டுக்களுக்கு எதிரான போரில் இதுவும் இயல்புதானென -அதுவரை எந்தக் கொலையும் செய்யாத அவன் - இதை எடுத்துக்கொள்ளவும் செய்கின்றான்.
மிக மோசமாய் சித்திரவதைக்குள்ளான அவன் ஜேர்மனியர்களிடமிருந்து தப்பிவருவது ஒரு சாகசமென்றால், அவன் தப்பிவந்தபின்னும் அவனது மனைவியும் பிள்ளைகளும் ஜேர்மனியரின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டிருப்பதை அறிதலென்பது இன்னும் பெருஞ்சோகம். எஞ்சியிருந்த வளர்ந்த மகனையும், ஜேர்மனியரை அவர்களின் நாடுவரை துரத்திக்கொண்டு போகும் போரில் இழக்கின்றான் இந்தக் கதைசொல்லி. பல வருடங்களாய்க் காணாத மகனின் இறந்த உடலத்தைப் பார்க்கும்போது, துயரின் மிகுதியிலும் தன் மகன் இப்படி திரண்ட தோளும், விசாலமான நெஞ்சுமாய் வளர்ந்துவிட்டேனே எனக் கலங்கிநிற்கும் நிலையில், போரின் நிமித்தம் குலையும் குடும்ப உறவுகள் பற்றி அறிந்துகொள்கின்றோம். இறுதியில் இந்தக் கதைசொல்லி வாழ்வின் மீது நம்பிக்கை வைக்க ஒரு சம்பவம் நிகழ்கின்றது. அதற்காகவேனும் தான் உடனே சாகாதிருக்க வேண்டுமென ஒரு புதிய பயணத்தை அவன் தொடங்குகின்றான்.
இவர்கள் விரும்பியும் விரும்பாமலும் போரிட்ட இந்த யுத்தங்களின் வெற்றி அவர்களுக்கு எதைத் தந்தது? எதையும் தரவில்லை என்பதுதான் துயரமானது. அதைக் கொண்டாடக்கூடிய மனோநிலை கூட அவர்களுக்கு வாய்க்கவில்லை என்பதைத்தான் கதைசொல்லி இப்படித் தொடக்கத்திலேயே கூறிவிடுகின்றான்:
"சில நேரம் இரவில் என்னால் உறங்கமுடியது. இருட்டை உறுத்துப் பார்த்த வண்ணம், 'வாழ்வே ஏன் இப்படிச் செய்தாய்? என்னை ஏன் இப்படி வாட்டி வதைத்தாய்? என்னுடைய திராணியை ஏன் பறித்துக்கொண்டாய்?' என்று எண்ணமிடுவேன். என் கேள்விகளுக்கு விடையொன்றும் கிடைப்பதில்லை. இருட்டானாலும் சரி, இல்லை சூரியன் பளிச்சென்று ஒளி விடும் போதானாலும் சரி... எனக்கு விடை கிடைப்பதில்லை. இனி ஒருபோதும் எனக்கு விடை கிடைக்காது."
ஆம். அதுதான் உண்மை. போரில் வென்ற தரப்பாயினும் என்ன, தோற்ற தரப்பாயினும் என்ன... எவர்க்கும் அது நிம்மதியையோ சந்தோசத்தையோ தருவதில்லை. எல்லா சகாசங்களும், பெருமைகளும் ஒரு போரின்பின் பெறுமதியிழந்துபோய்விடுகின்றன. இன்னுமின்னும் எம்மை உளவியல் சிக்கல்களுக்கும், நிம்மதியற்ற நிலைக்கும் தள்ளியே விடச்செய்கின்றன.
ஆக இவ்வகை போர்க்காலப் படைப்புக்களை வாசிக்கும்போது, போரைப் பற்றியல்ல, போரைத் தவிர்த்து எப்படி போரின்றி வாழவேண்டுமென்ற படிப்பினைகளைத்தான் வரலாற்றிலிருந்து மானுடம் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கின்றது.

Elanko DSe

No comments:

Post a Comment