Search This Blog

Monday, November 7, 2016

இருள் , மாரிக்கால கானகம்


வெகுநாட்களாக
உறக்கமின்றி தவிக்கும் ஒருத்தி
நாளடைவில்
இரவுகளை வெறுக்கத்தொடங்கினாள்

அவளைக் கண்வருடி
கதைசொல்லி
உறக்கத்திலாழ்த்த தெரிந்தவன்
வெகுதொலைவிலிருக்கிறான்

அவனுடன்
இணைத்துக் காணுகிற
இரவின் சித்திரங்களை
மனச்சுவற்றில் தீட்டிகொண்டிருந்தாள்

தீராத பக்கங்களைக் கொண்டதாக
அச்சுவர்
பெருகிக் கொண்டே இருந்தது

அவ்விரவு வேளைகளில்
நிலைகொள்ளாமல் தவிக்குமவள்
பகல்களை
தன்னிடமிருந்து விலக்க
விரும்புவதேயில்லை

அவனுடைய
வருகை நிகழ்த்தும் பகல்களில்
கிடைக்கிற கதகதகதப்பை
இருள் அவளுக்குத் தருவதேயில்லை.


மாரிக்கால கானகம்
மனதை ஈர்க்கக் கூடிய
மர்மமான பாதைகள் கொண்டதாக
எப்போதுமிருக்கிறது

முன்பு உதிர்ந்த சருகுகள்
நைந்து ஈரவாசனையைப் பரப்ப
மரங்களின் தூர்களில்
பூத்திருக்கும் காளான்களின் மிளிர்வு
அழைப்பை ஒளிர்வுடையதாக்கும்

புழுக்களும் பூச்சிகளும்
பறவைகளும் விலங்குகளும்
உள்நுழைய விழையும் கால்களைத்
தடுக்கும்

மரக்கிளைகளில் வழிந்து
இலைகளின் வழியே
விட்டு விட்டுச் சொட்டுகிற துளி
மறுபடியும் மறுபடியும் அழைக்கும்

ஒருபக்கம் அச்சம்
மறுபக்கம் அழைப்பு என
மழைக்காடு
மறுதலிக்கவியலாத
வசீகரமுடையது

காட்டிற்குள்ளாக
கால்களோடித் திரிய
வாய்ப்பற்ற பருவங்களில்
மனமே காடென விரிய
அவ்வனத்தின்
முடிவுறா புதிர்வெளிக்குள்
முகையரும்பிப் பூக்கின்றன
எண்ணிலியாய் கற்பனைகள்.


Sakthi Jothi

No comments:

Post a Comment