Search This Blog

Saturday, October 15, 2016

இன்றைய எமது தமிழ்

இளையோர் சுவாரிஸ்யத்திற்காக தமிழ் மொழிக்கே சம்பந்தமில்லாத சில சொற்களை பேசித்திரிகிறார்கள். (மொக்கை போடுதல் ,கா (g )ண்டகுதல், கடலைபோடுதல், செம கடுப்பு என சில நாகரிகமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் சாதாரணமாக இளைஞர்களால் பேசப்படுவது) அவை மெல்ல மெல்ல தமிழ் மொழியின் தாவாரத்தில் ஒதுங்கி இடம்பிடித்துக்கொண்டிருக்கின்ற. இன்று எமது தமிழ் மண் படிப்படியாக கபளீகரம் செய்யப்படுவது போல் தமிழ் மொழியும் அதன் தனித்துவத்தை இழக்கும் நிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
தென் இந்திய சினிமாவின் தாக்கம் எம் மொழியின் எதிர் காலத்திற்கு கத்தி வைப்பதாக அமையக்கூடாது. ஈழத்து தமிழர் களின் மொழிப்பற்றும் பாவனையும் தமிழ் நாட்டு அறிஞர்களால் வியந்து பாராட்டப்படுவதாய் விளங்கும் அதேநேரத்தில் எம்மவர்கள் எமது தாய் மொழிக்கு இழுக்கு ஏற்படும் வகையிலான நடத்தையை தவிர்க்க வேண்டும்.
எமது தமிழ் மொழிப்பாவனை பற்றி புதுச்சேரி அறிஞர் கி. இராயநாராயணன் குறிப்பிடும் போது ஈழத்து தமிழ் வழக்கு முடிந்தளவுக்கு காரண காரிய தொடர்புடன் அர்த்தமிக்கதாக விளங்கு வதாக பெருமைப்படுகிறார். " நாங்கள் கொசு என்கிறோம் அவர்கள் நுள்+ அம்பு = நுளம்பு என்கிறார்கள் .நாங்கள் புறப்படு என்கிறோம் அவர்கள் வெளிக்கு + உடு = வெளிக்கிடு என ஆழமாக வெளியில் செல்லும் போது சீராக உடுத்திக்கொள் என்று அழகாக பேசுகிறார்கள். நாங்கள் கண்ணாடி சில்லு (Glass piece ) என்கிறோம் அவர்கள் பிசுங்கான் என்று மிகவும் அர்த்த தத்தோடு பேசுகிறார்கள். ஈழத்திலே தமிழ் வளர்கிறது" என்று பெருமையாக பேசுவார்.
கிழக்கு மாகாணத்தில் பல தமிழ் சொற்கள் இலக்கிய நயம் பயப்பன. "ஆலாய் பறக்கிறான்!" என்கிறோம் அதன் அர்த்தம் என்ன என்பது பலருக்கு தெரியாது. மட் டக் களபில் பருந்தை ஆலா என்று கூறுவதை கேட்டிருக்கின்றேன். ஆலவாய் பறக்கிறான் என்பது மருவி ஆலாய் பறக்கிறான் என்றாகிவிட்டது. கிழக்கில் கிறுகி வா என்ற பதம் வழக்கில் உண்டு. பாட்டுக்கு ஒருபுலவன் பாரதியடா அதை கேட்டுகிறுகிறுத்து போனேனடா என்று வரும் வரி கிறுகி வருவதற்கு பொருள் தரும் .சுழலுதல் , திரும்புதல் என்ற பொருளில் அங்கு பயன்படுத்துகிறார்கள். கிழக்கில் இது போல் பல இலக்கிய தமிழ் வடிவங்கள் வழக்கில் உண்டு.
அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற கவியரங்கு ஒன்றின் பதிவுகள் முக நூலில் உலாவருகின்றன. உண்மையில் அவற்றை கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. பல்துறை இளைஞர்களும் தமிழில் பலவிதமாக கவிதை படைத்தமை மகிழ்ச்சிக்குரியது. அவர்களின் கருது பொருள் பற்றி எனக்கு வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. அதை தவிர்த்து, அவர்களின் தமிழ் ஆர்வமும் அர்ப்பணிப்பும் வாழ்த்துக்குரியவை. இத்தகைய போக்கு தொடரும் என எதிர்பார்த்து நிற்போம். நல்ல தமிழ் சொற்களை பிரயோகிப்போம். எமக்குரிய தனித்துவத்தை காப்போம் .
Sivabalasundran Ambalavanar

No comments:

Post a Comment