Search This Blog

Sunday, August 7, 2016

புற்றுநோயை குணமாக்கும் இயற்கை காய்கறிகள், பழங்கள்!


'நோய்களின் கற்பனைகளும், உடல் நலத்துக்கான வழிகளும்' என்ற தலைப்பில் சென்னை, ரஷ்யன் கலாச்சார மையத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்கம் மற்றும் சர்வதேச தாவர உணவாளர்கள் சங்கம் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிறப்பு விருந்தினராக அமெரிக்காவைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் டாக்டர். தாமஸ் லோடி கலந்து கொண்டார். இவர் தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகருக்கு அருகில் இயற்கை முறை புற்றுநோய் மருத்துவமனையை நடத்தி வருகிறார். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை இயற்கையான காய்கறிகளை சாப்பிட சொல்லியும், இயற்கை முறை பயிற்சிகளாலேயும் நோயை தடுத்தும், குணப்படுத்தியும் உள்ளார். இந்தமுறையில் 2 ஆயிரம் புற்று நோயாளிகளை காப்பாற்றியுள்ளார்.
இயற்கையோடு இணைந்து வாழ்தல், அளவறிந்து உண்ணுதல் மூலம் உடலுக்கான ஆற்றலை பெற முடியும் என்கிறார் தாமஸ் லோடி. கூட்டத்தில் அவர் பேசும்போது, "இயற்கையின் இயல்பே நல்ல உடல்நலத்தோடு இருப்பதுதான். உடலிலிருந்து கழிவுகளை நீக்கி கொண்டே வந்தால், உடலுக்கான ஆற்றல் தானாகவே வளரும். நீங்கள் நினைப்பது போன்று புற்றுநோய் என்பது பரம்பரையாகவோ, கிருமிகளாலோ வருவதில்லை. தவறான உணவுப் பழக்கத்தினாலும், மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளாலேயே வருகிறது. உடலிலுள்ள விஷத்தையும், மனத்திலுள்ள விஷத்தையும் அகற்றினால் புற்றுநோயிலிருந்து எளிதில் குணமாகலாம். இதற்கு இயற்கையான சிகிச்சை முறைகளைத்தான் பரிந்துரைக்கிறேன். பழங்கள், காய்கறிகள், கீரைகளை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ள பயிற்சி அளிக்கிறேன்.
அதேபோன்று மனத்துக்கும் தியானம் போன்ற இயற்கை முறை சிகிச்சைகளை கொடுக்கிறேன். இதன்மூலமே புற்றுநோயிலிருந்து நிறைய பேரை மீட்டு எடுத்திருக்கிறேன். காலின் கேம்பல் என்பவர் 40 வருஷமாக புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். ஆராய்ச்சியின் முடிவில் தவறான உணவு பழக்கமே புற்றுநோய்க்கு காரணம் என்று தெரிவித்தார். புற்றுநோய் வருவதற்கு பாலை அதிகளவில் எடுத்துக் கொள்வதும் ஒரு காரணம். பாலில் ‘கேசின்’ என்ற பொருள் புற்றுநோயை உண்டாக்க கூடியதாக இருக்கிறது. வளர்ந்த பிராணிகள் எதுவும் பாலை அருந்துவதில்லை. மனிதன் மட்டுமே பாலை அருந்துகிறான்" என்றவரிடம், "பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட, மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்களை சாப்பிடலாமா?" என்ற கேள்விக்கு, "முடிந்தளவு ஆர்கானிக் உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. வேறு வழியில்லையென்றால் மட்டுமே இவற்றை எடுத்துக் கொள்ளலாம்" என்று பதிலளித்தார்.
சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்க நிறுவனர் அசோக்குமார் பேசும்போது, "பார்சிகள் இனத்தில் இறந்த உடலை கழுகுக்காக மலையின் மீது சாப்பிட வைப்பார்கள். சமீப காலங்களில் இறந்த மனிதனின் உடலை சாப்பிட்ட கழுகுகள் இறந்து போய்விடுகிறதாம். அந்தளவுக்கு மனிதனின் உடல் நஞ்சாக மாறியுள்ளது. ஃபாஸ்ட் புட், ஜங்க் புட், அதிகமான அசைவ உணவுகள் என்று நாளுக்கு நாள் நமது உணவு பழக்கம் மாறிக் கொண்டே வருகிறது.
நோய்கள் அதிகரிப்பதோடு, வன்முறையும் நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் சமைக்கப்பட்ட அரிசி உணவுகளை எடுத்துக் கொள்வது, அளவுக்கதிகமாக உண்பது போன்ற காரணங்களால், உடல் பருமன் நோய் வாட்டி வதைக்கிறது. உடல் பருமன் அனைத்துவிதமான நோய்களுக்கும் காரணமாக இருந்து வருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு, 30 வயசுக்கு மேல் அரிசி உணவை குறைத்துக்கொள்வது நல்லது. சமைக்கப்படும் உணவு மசாலா, எண்ணெய் ஆகியவை சேர்த்து சமைக்கப்படுகிறது. அரை வயிறு சாப்பிட்டாலே ஆரோக்கியமா வாழலாம்.
அதனால்தான் வன்முறையற்ற உணவு என்ற பெயரை இயற்கையான தாவர உணவுகளுக்கு பெயர் வைத்து அழைக்கிறோம். எங்கள் தாவர உணவாளர்கள் சங்கத்தின் மூலமாக காய்கறிகள், பழங்கள், கீரைகளை சமைக்கப்படாமல் இயற்கையாகவே உண்ணவே பரிந்துரைத்து வருகிறோம். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொதுமக்களுக்கான கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். மனிதநேயமிக்க சமூகத்தை உருவாக்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறோம். உங்கள் உணவே, உங்களை வெளிப்படுத்தும் மதிப்பீடு. 2012 ஆம் ஆண்டில் 7 லட்சம் பேர் இந்தியாவில் புற்றுநோயால் இறந்துள்ளனர். வளர்ந்து வரும் மோசமான உணவு பழக்கங்களே இதற்கு காரணம்" என்றார்.
இயற்கை உணவுகளை எப்படி எடுத்து கொள்வது பற்றி பேசினார் உடல்நல ஆலோசகர் டாக்டர் சரவணன், "தாவர உணவுகளே மனிதர்களுக்கான அடிப்படையான உணவு. இதில் பழங்கள், காய்கறிகள், கீரைகள், பயறு, பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். காலையில் பழங்களை மட்டுமே உண்பது நல்லது. மதிய வேளையில் முளைகட்டிய பயறு வகைகள், காய்கறிகள், கீரைகளை சாப்பிடலாம். இரவு வேளையில் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். பழங்களோடு காய்கறிகள் சேர்த்து உண்ண விரும்புபவர்கள் முதலில் பழங்களையும், பிறகு காய்கறிகளையும் சாப்பிடலாம். நல்ல உடல்நிலையில் இருப்பவர்கள் இந்த உணவு பழக்கத்துக்கு மாறிய பிறகு, அடிக்கடி ஊட்டச்சத்து நிபுணரிடம் வைட்டமின்கள், சத்துக்களின் சரிவிகிதம் குறித்து அடிக்கடி சோதனை செய்து கொள்வது நல்லது. நோய் உள்ளவர்கள், அதற்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் உரிய மருத்துவரின் ஆலோசனைபடி சாப்பிடுவது நல்லது" என்றார்.
டாக்டர் தாமஸ் லோடி சொன்ன சில டிப்ஸ்:
1. உடலானது அதுக்கு என்ன தேவையோ அதற்கு தகுந்தபடி தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடையது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, அந்தந்த சீஷன்களில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். பிரிட்ஜில் வைத்த பழங்களை பயன்படுத்தாதீர்கள்.
2. அமெரிக்க உணவு முறையான ஜங் புட்டை பின்பற்றாதீர்கள். உங்கள் நாட்டின் உணவை சாப்பிடுவதே உடலுக்கு நல்லது.
3. முடிந்தளவு இயற்கையான சூழலில் இருக்க பழகுங்கள்.
4. தனியாக தியானம் பண்ணுங்கள்.
5. சூரிய ஒளி உடல் மீது படும்படி உலாவுங்கள். ஷூ போடாமல் நடந்து செல்லுங்கள்.
உணவு ஆர்வலர் குமரேசன் கூறும்போது, "இயற்கை விவசாய முறையில் கொடைக்கானலில் உள்ள பண்ணையில் காய்கறிகளை உற்பத்தி செஞ்சு சாப்பிடுறேன். கடந்த ஒரு வருடமாக இயற்கை காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறேன். எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. இயற்கை காய்கறிகளை சாப்பிட ஆரம்பிச்ச பிறகு, சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திட்டேன். சர்க்கரையின் அளவு சரியாக இருக்கிறது. முதலில் பால், தயிர், மோர் சாப்பிடுவதை நிறுத்தினேன். பிறகு அரிசி உணவுகளை தவிர்த்தேன். இப்போது காய்கறிகள், பழங்களை சாப்பிட்டு வருகிறேன். உண்மையான ஆர்வத்தோடு, இயற்கை உணவுகளை உண்டால் நோயிலிருந்து உடலை காப்பாற்றி கொள்ளலாம்".
47 ஆண்டுகளாக தேங்காய், வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வரும் இயற்கை உணவாளர் மு.அப்பன் பேசும்போது, "என்னுடைய 20 வயதில் குஷ்டம் நோயால் அவதிப்பட்டேன். எங்கெங்கோ வைத்தியம் பார்த்தும் சரியாகலை. அப்போ ஆசிரியரான என் அண்ணன், கொடுத்த யோசனைப்படி இயற்கை உணவுகளை எடுத்துக்கிட்டேன். அந்த நோய் ஒரு வருஷத்திலேயே குணமாகிருச்சு. இப்பவும் அப்படியேதான் இயற்கை உணவை சாப்பிட்டு வர்றேன். முதல்ல சாப்பாட்டை வேகவைச்சு சாப்பிடுறத நிறுத்தினேன். அப்புறம் தேங்காய், வாழைப்பழம், இதோடு சீசன்ல பேரிச்சம்பழம், மாம்பழம் சாப்பிடுவேன். மனிதன் பசிச்சாதான் சாப்பிட வேண்டும். அதையும் நன்றாக மென்னு சாப்பிடணும். மனிதன் ஒருவன்தான் உலகிலேயே சமைத்து சாப்பிடக் கூடியவன். ஆனால் அவனுக்குத்தான் எத்தனைவிதமான நோய்கள்.
இதற்கு காரணம் மறைந்த நமது பாரம்பர்ய உணவுப்பழக்கம்தான். அன்றைய மருத்துவர்கள் எல்லாம் ஆன்மீகத்தின் பெயரால் மருந்து கொடுத்தாங்க. இன்னைக்கு அதன் நிலையே வேறு. பறவைகளும், விலங்குகளும் எந்த உணவு பழக்கத்தையும் மாத்தல. ஆனால் மனிதன் மட்டும்தான் வெளிநாட்டுக் கலாச்சாரம்ங்கற பேர்ல வரைமுறையே இல்லாமல் சாப்பிடுறான். நம் மூதாதைங்க தேங்காயையும், வாழைப்பழத்தையும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஆன்மீகத்துல சேத்துட்டாங்க. இதனால எந்த நோயும் உருவாகிறதில்ல. சமைச்சு சாப்பிடுறதுதான் உடலுக்கு கெடுதியான விஷயம். தேங்காயும் வாழைப்பழமும் உடம்புக்கு நல்லது அதே போல இயற்கை தானிய பயிர்களும் உடம்புக்கு நல்லதுதான். முடிஞ்சவரை இயற்கைக்கு மாறுங்கள்" என்றார்.
- இணையம்
பாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உணவு, சத்தற்ற சக்கை உணவு உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு நோய்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்தன. இன்று எந்த வித்தியாசமும் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மாறிவிட்ட உணவுப் பழக்கம்தான்.
உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவரும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி முகமையும் (ஐ.ஏ.ஆர்.சி.) இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலை அந்த அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த உணவு வகைகள் என்னென்ன?
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 18 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இறைச்சியைப் பதப்படுத்தச் சோடியம் நைட்ரேட், சோடியம் நைட்ரைட் என இரண்டு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இறைச்சியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் இருப்பதாக ஐ.ஏ.ஆர்.சி. வகைப்படுத்தியுள்ளது.
மைக்ரோவேவ் பாப்கார்ன்
பாப்கார்ன் சாப்பிடுவது தவறான விஷயமல்ல. ஆனால், மைக்ரோவேவ் பாப்கார்ன் என்றால் எச்சரிக்கைத் தேவை. இந்த வகையான பாப்கார்ன் ‘பெர்ஃப்ளூரெக்டனிக்’ என்ற அமிலத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. இதில் சுவை மற்றும் மணத்துக்காகச் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் சூடாக்கப்படும்போது ரசாயன மாற்றம் அடைகின்றன. இதைச் சாப்பிடும்போது நுரையீரல் கோளாறு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை மாவு: மாவு இல்லாத உணவு வகைகள் மிகக் குறைவு. கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட மாவு வகைகள் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு வெள்ளையாகத் தெரியும் இந்தச் சுத்திகரிக்கப்பட்ட மாவில் ஊட்டச்சத்து ஒரு சதவீதம்கூடக் கிடையாது. மாவை வெண்மையாக்க ‘குளோரின் காஸ்’ பயன்படுத்தப்படுகிறது. இப்படிச் செயற்கையாக வெண்மையாக்கப்படும் மாவுகளில் கிளைசெமிக் அளவு அதிகம், இது ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யக்கூடியது. இன்சுலின் உருவாவதைத் தடுக்கவும் செய்யலாம். இதுபோன்ற மாவு வகைகள் உடலில் புற்றுநோய் செல்களை வளரச் செய்யக்கூடிய சாத்தியம் அதிகம்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
புற்றுநோயை உருவாக்கும் மிகப் பெரிய காரணிகளில் ஒன்று சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை. அதிக அமிலம் உள்ள உணவும் சர்க்கரைதான். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதன் மூலம் உடல்பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடலில் தொடர்ந்து சேரும் அதிகக் கொழுப்பு, பல வகைப் புற்றுநோய்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.
உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு
உணவில் உப்பு மிகவும் முக்கியமான ஒரு பொருள். தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பு காரணமாக வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உப்பில் உள்ள ‘ஹெலிகோபேக்டர்பைலோரி’ என்ற பாக்டீரியா, உடல் செயல்திறனை அதிகப்படுத்தக்கூடியது. இதன்காரணமாக வயிற்று எரிச்சல், அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, பின்னர் அதுவே வயிற்றுப் புற்றுநோயாக உருவெடுக்கலாம்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
உணவு பொருட்களில் மிக ஆபத்தான ஒன்றாக மாறி வருகின்றன சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள். எண்ணெயைக் கெட்டியாக மாற்ற ஹைட்ரஜன் சேர்க்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படும் வனஸ்பதி நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது விலை குறைவாக இருப்பதும் அதிகப் பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம். இந்த வகையான எண்ணெய் பயன்பாட்டிலிருந்து உடலில் சேரும் கொழுப்பு, மார்பகப் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கலாம்.
பண்ணை மீன்கள்
பண்ணை மீன் வளர்ப்பு முறை இன்று பெரிய அளவில் வளர்ந்துவருகிறது. இங்கே வளர்க்கப்படும் மீன்களில் ‘பாலிகுளோரி னேனட் பிப்ஹெனைல்ஸ்’ இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள், புற்று நோய்க்கான காரணிகளில் ஒன்று. பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களின் வளர்ச்சிக்காகப் பூச்சிக் கொல்லிகள், ஆன்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினொஜென் பொருள் உள்ளது.
சோடா குளிர்பானம்
ஊட்டச்சத்து எதுவுமில்லாத சர்க்கரை, கலோரிகள் நிரம்பிய மென்பானங்களை பலரும் விரும்பி பருகுகின்றனர். ஆனால், இது உடலுக்கு மிகவும் தீங்கானது. தொடர்ந்து இந்தக் குளிர்பானங்களைப் பருகிவந்தால் இன்சுலின் அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கணையப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம். குளிர்பானத்துக்கு வண்ணமூட்டும் சர்க்கரையும் புற்றுநோய் வளர்ச்சிக்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது.
மரபணு மாற்றப்பட்ட உணவு
மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படுமா என்ற கேள்விகள் எப்போதும் முன்வைக்கப்படுகின்றன. மரபணு மாற்றப்பட்ட சோளம் பிரான்ஸில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் புற்றுநோய் கட்டிகள், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஃபிரெஞ்ச் ஃபிரைஸ்
எண்ணெயில் பொரிக்கப்படும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றில் அக்ரிலமைட் என்ற ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் உடன் தொடர்புடையது. இதே வேதிப்பொருள்தான் புகைபிடித்தலிலும் உள்ளது. உணவில் அக்ரிலமைட் ஏற்படுவதற்கு அதிக வெப்பநிலையில், அது பொரிக்கப்படுவதே காரணம். பொரிக்கப்படும்போது ரசாயன மாற்றம் அடைந்து உணவில் தேவையற்ற அமினோஅமிலம் உண்டாகிவிடுகிறது.
சூடான பானங்கள் ஆபத்தா?
சூடான காபியைப் பருகினால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இதை ஆய்வு செய்த புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை (ஐ.ஏ.ஆர்.சி.), சூடான காபியைப் பருகுவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று கூறியுள்ளது. ஆனால், எந்த ஒரு திரவ உணவையும் 65 டிகிரி செல்சியஸுக்கு மேலான சூட்டில் பருகினால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளது. சூடான திரவ உணவைச் சாப்பிடும்போது தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டு உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
அளவோடு இருந்தால் நலம்
இங்கே பட்டியலிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பது குறித்து அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் வலிநிவாரணச் சிறப்பு மருத்துவர் அசார் உசைனிடம் கேட்டோம்:
“வெள்ளை மைதா, சிவப்பு இறைச்சி ஆகியவற்றை அதிகம் உண்ணும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிக அதிகம். இதேபோல எண்ணெயைத் திரும்பத் திரும்பச் சூடாக்கும்போது கார்பன் பொருள் அதிகரித்துவிடும். ரெடிமேட் உணவைப் பாதுகாக்கவும், துரித உணவு வகைகளில் சுவையைக் கூட்டவும் நிறைய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வேதிப்பொருட்கள் அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தால், பரவாயில்லை. கூடுதலாகச் சேர்க்கப்படும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை. அதேநேரம் மருத்துவப் புள்ளிவிவரங்களின்படி, இந்த உணவைச் சாப்பிடுவோருக்குப் புற்றுநோய் வராமலும் இருந்திருக்கிறது. இவற்றைச் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் புற்றுநோய் வந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எதுவுமே அளவாக இருப்பது தான் மிகவும் நல்லது” என்கிறார் அசார் உசைன்.