Search This Blog

Friday, August 12, 2016

மகத்தான தலைவர் தோழர் ஸ்டாலின் குறித்து சே குவேரா"நான் பொதுவுடைமைத் தத்துவத்துக்கு வந்தடைந்ததே தந்தை ஸ்டாலின் அவர்களால்தான். என்னிடம் வந்து ஸ்டாலினைப் படிக்காதே என்று சொல்லுகிற உரிமை எவருக்குமில்லை."- என்றார் சே குவேரா.
பலதரப்பட்ட அரசியல் போக்குகளையும் கொண்ட பரந்துபட்ட மக்கள் திரளை கவர்ந்த இருபதாம் நூற்றாண்டின் வரலாற்று நாயகன் எர்னஸ்டோ சே குவேரா. இதில் எந்தவித ஐயத்திற்கும் இடமில்லை. பொலிவியாவில் அவர் கோழைத்தனமாகக் கொல்லப்பட்டபோது உலகின் பலதரப்பட்ட மார்க்சியக் குழுக்களுக்கும், இடதுசாரி மற்றும் முற்போக்குக் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் சே ஒரு புரட்சிகரமான அடையாளமாகிப்போனார். டிராட்ஸ்கியவாதிகள் முதல் லெனினியப் போராளிகள் வரையிலும், சமூக ஜனநாயகவாதிகள் முதல் அராஜக சுதந்திரவாதிகள் வரையிலும் சே தாக்கம் விளைவித்தார். அர்ஜென்டினாவின் புரட்சிகர நடவடிக்கைகளை போற்றிய குறிப்பிட்ட சிலர் தங்களைத் தாங்களே "ஸ்டாலினிசத்திற்கு எதிரானவர்கள்" என்று காட்டிக்கொண்டனர். ஸ்டாலின் காலத்தின் குற்றங்கள் என்று அவர்கள் குறிப்பிடுகிறபோதெல்லாம் ஸ்டாலின் மீது வெறுப்பைக் கக்கி, அவதூறு பொழிந்தனர். வரலாற்றின் முரண் மற்றும் எதிர் நடவடிக்கை என்பது என்னவென்றால் சே குவேரா தன்னளவில் ஜோசப் ஸ்டாலினைப் போற்றுபவராக இருந்ததுதான்.
சோவியத்தின் அந்த மகத்தான தலைவர் காலமாகி 63 ஆண்டுகள் ஆன நிலையில், ஜோசப் ஸ்டாலினைப் பற்றி சே என்ன கருதினார் என்பதை அவரது சொந்த எழுத்துக்கள் மற்றும் கடிதங்களின் வாயிலாக நாம் எண்ணிப்பார்ப்பது அவசியமாகிறது.
தனது 25 வது வயதில், 1953 ல் குவாதமாலாவில் இருந்தபோது தனது அத்தை பீட்ரிஸ்க்கு எழுதிய கடிதத்தில் சே இவ்வாறு குறிப்பிடுகிறார்: "அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் கடக்கிற ஒரு வாய்ப்பு எனக்கு போகிறபோக்கில் கிடைத்தது. இந்த முதலாளித்துவ ஆக்டோபஸ்களின் கொடுங்கரங்கள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை நான் அப்போது மீண்டும் உணரமுடிந்தது. அப்போது நான் மறைந்த ஸ்டாலினின் பழைய புகைப்படத்தின் முன்பு ஒரு உறுதியினைச் செய்துகொண்டேன். இந்த முதலாளித்துவ ஆக்டோபஸ்கள் அழித்தொழிக்கப்படுவதைக் காணுகிறவரையில் வாழ்க்கையில் இனி நான் ஓயப்போவதில்லை என்பதே அந்த சபதம் ஆகும்!" (ஜோன் லீ ஆன்டர்சன் - "சே குவேரா: ஒரு புரட்சிகர வாழ்க்கை", 1997.)
குவாதமாலாவிலிருந்து அவர் கடிதமெழுதி ஆண்டுகள் உருண்டோடி, கியூபப் புரட்சி நடவடிக்கையின் மத்திய காலத்தில் ஸ்டாலின் மீதான தனது நிலையை சே குவேரா மீண்டும் உறுதிப்படுத்தினார் இவ்வாறு: "ஸ்டாலின் காலத்துத் தவறுகள் என்கிற அவதூறுப் பேச்சானது புரட்சிகர சிந்தனைக்கும், திருத்தல்வாத சிந்தனைக்கும் இடையே வேறுபட்ட கண்ணோட்டம் கொண்டதாக இருக்கிறது. ஸ்டாலினை அவர் காலத்திய அரசியல் சூழலுடன் பொருத்திப்பார்க்க வேண்டுமே தவிர முரட்டுத்தனமாக அல்ல. மாறாக, அவரது காலத்தைய வரலாற்றுப் பின்னணியோடுதான் அவரைப் பார்க்கவேண்டும். நான் பொதுவுடைமைத் தத்துவத்தை வந்தடைந்ததற்குக் காரணமே தந்தை ஸ்டாலின் அவர்கள்தான். எனவே, என்னிடம் வந்து ஸ்டாலினைப் படிக்காதே என்று சொல்லுகிற உரிமை எவருக்குமில்லை. அவரைப் படிப்பது தவறென்றிருந்த காலத்தில் நான் அவரைப் படித்தேன். அது வேறொரு காலம். நான் அறிவில் சிறந்தவனல்ல என்பதால் நான் அவரை மீண்டும் மீண்டும் படித்தவண்ணமிருக்கிறேன். அதிலும் குறிப்பாக இந்தப் புதிய காலத்தில், அவரைப் படிப்பது மோசமான காரியம் என்றிருக்கிற காலத்தில். தற்போது அவற்றில் பல நல்ல அம்சங்களை நான் காண்கிறேன்".
ஸ்டாலினின் தலைமைப் பாத்திரத்தைப் புகழ்ந்துரைக்கிறபோதெல்லாம் ட்ராட்ஸ்கியின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையினைக் குறிப்பிடவே செய்கிறார் சே. ட்ராட்ஸ்கியின் மறைத்துவைக்கப்பட்ட உள்நோக்கங்களையும், அவரது அடிப்படைத் தவறுகளையும் கடுமையாகச் சாடுகிறார் சே குவேரா. அவரது கட்டுரைகளில் ஒன்றில் இவ்வாறு அழுத்தமாக சே குறிப்பிடுகிறார்: "ட்ராட்ஸ்கியின் நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக இருப்பது தவறானதாகவும், திட்டமிட்டு மறைக்கப்பட்டதாகவும் உள்ளது. அவரது கடைசி ஆண்டுகள் இன்னமும் இருள் சூழ்ந்தவையாக இருந்தன. ட்ராட்ஸ்கியவாதிகள் புரட்சி இயக்கத்திற்கு எந்த வகையிலும் பங்களிப்பைச் செய்திடவில்லை. அவர்களின் பங்களிப்பு எங்கே அதிகமிருந்திருக்கிறதென்றால் பெருவில்தான். ஆனால், அவர்களின் தவறான முறையால் அங்கேயும் அவர்கள் இறுதியில் தோற்றுத்தான் போனார்கள்."
('ரெவல்யுஷனரி டெமாக்ரஸி ஜர்னல், 2007' -ல் வெளியான 'சே குவேராவின் அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமரிசனக் குறிப்புகள் குறித்த கருத்துக்கள்' - எனும் கட்டுரையிலிருந்து...)
----------------------------------தமிழில்: சோழ. நாகராஜன்