Search This Blog

Wednesday, August 10, 2016

மூடுபனியின் நீர்ச்சால்கள்



காற்றின் வரையறைகளை
கண்டுணரும் மலைவாசிக்கு
யானைகளின் லத்திகள் ...
காட்டு வழிகளின் இரகசியங்கள்

யாருமற்ற போது
அடிவயிறிலிருந்து எழும் நாதமிக்க வேதனைகளை எதிரொலிக்கச் செய்ய
பள்ளத்தாக்கு தான் பூமியின் காதுகள்
வல்லூற்றின் கண்களறியா பாதை
வாலிபனின் காமம்
பனிக்காலம் அவன் பசிய கைகளுக்கு பரண்
மூடுபனியின் நீர்ச்சால்கள்
அவன் பிள்ளைகளுக்கான
நற்செய்திகளின் உறைபீடம்
வானம் மழை விளைநிலம்
துளிகள் மூதாதையரின் முத்தங்கள்
காட்டு வெற்றிலை ஆதி மனிதனின்
சுவைமொட்டுகளைத் திறந்த
மந்திரத் தாவரம்
அடர்ந்த கானகத்தில்
வழிதனை தெளிக்கையில்
உரிமைகளைப் பற்றிய
மலைவாசியின் புலம்பல்கள்
ஆகாச கருடனுன் பின்னிப் பறக்கும்
போர் பாடல்களின் ஆதிதாளம்
உழைப்பாளியின் மிச்சம்
வாரத்தின் கடைசியில் சோற்றுப்பானையில் கிடக்கும் கல்
அதன் சத்தம் அவன் குழந்தைகளுக்கு
போதுமான அறிவுரை
காட்டுத்திரவியங்கள்
மலை மனதின் வாசனை
பொன்னும் ஸ்படிகமும் விலையேரப்பெற்ற கோமேதகமும்
மலைவாசிக்கு வீண் பாறை
மான்கறியும் காட்டுக்கோழிக் குழம்பும்
வாழ்வாதாரத்தின் போதாமை
வேட்டையின் புகழ்
அவனது தேவை காய்ந்த விறகும்
காட்டுப்புறாவின் சிறகும்
27.7.2016
-தேன்மொழி தாஸ்

No comments:

Post a Comment