Search This Blog

Sunday, July 31, 2016

‘கபாலி’ படம் விரிவான கட்டுரை


Kumaresan Asak
பொழுதுபோக்குத் தயாரிப்பு, வர்த்தக சினிமா, மசாலாப் படம்... எப்படிச் சொன்னாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அவையோர்களோடு சுருங்கிவிடாமல், கோடிக்கணக்கானவர்களைச் சென்றடைகிற திரையாக்கங்கள் ஒரு பக்கம் மக்களின் மன மலர்ச்சித் தேவையை நிறைவேற்றுகின்றன; இன்னொரு பக்கம் அவற்றின் ஊடாகச் செல்கிற சிந்தனைகள் மனதில் பதிந்து சமூக விளைவாகவும் மாறுகின்றன. பெண்களைப் பற்றிய வக்கிரப்பார்வை, தனிமனித வழிபாடு, சாதிப் பெருமை ஆகியவை உள்ளிட்ட எதிர்மறையான படிமங்கள் இறுகிப்போனதில் திரைப்படங்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இதற்கெல்லாம் எதிரான கருத்துகளைக் கொண்டு சேர்ப்பதிலும் இதே திரைப்படங்கள் வலுவாகப் பங்களிக்க முடியும். அப்படி வெகுமக்களின் எளிய மனக்கொண்டாட்டத்திற்கும் ஈடுகொடுத்து, வழக்கமான ரஜினி படங்களின் பரபரப்புகளோடு நுட்பமாக சில சமூகச் சிந்தனைகளைத் தூவுவதில் பா. இரஞ்சித் அனுப்பியிருக்கும் ‘கபாலி’ வெற்றி பெற்றிருப்பது உண்மை.
பெயர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறதோ என்னவோ, பழைய படங்களின் பெயர்களிலேயே வருகிற படங்களின் வரிசையில் இதுவும் சேர்கிறது. வேறுபாடு என்னவென்றால், இதே பெயரில் முன்பு ரஜினியே நடித்து வந்த படத்தின் பெயரைச் சூட்டிக்கொண்டு இது வந்திருக்கிறது.
மையமான சிலரைத் தவிர்த்து, தலைமை வில்லன் உள்பட மற்றவர்கள் மனதில் பதிவதற்குள் காட்சிகள் பாய்கின்றன. நிகழ்வுகளின் வேகத்தில் இனிய இசையோடு வரும் பாடல்களைப் பிடித்துக்கொள்ள செவிகள் சிரமப்படுகின்றன. தனிமனித கார்ப்பரேட் கலைஞனாகிவிட்ட ரஜினியின் இந்தப் படத்தின் சந்தையையும் முன்னெப்போதும் இல்லாத வசூலையும் உறுதிப்படுத்திக் கொள்ள நடந்த ஏற்பாடுகள், எளிய முதலீட்டில் புதிய கலைஞர்களோடு அரிய செய்திகளைச் சொல்ல வருகிற படங்கள் பின்னுக்குத்தள்ளப்படுவது பற்றிய விசனத்தை ஏற்படுத்துகின்றன.இத்தகு நெருடல்களைத் தாண்டி ஒன்றைச் சொல்லியாக வேண்டும்.
இது ரஜினி படமாகவும் இல்லை, இரஞ்சித் படமாகவும் இல்லை. அதாவது, படத்திற்குப் படம் பெண்கள் எப்படி இருந்தால் நல்லது என்று பண்பாட்டு அறிவுரை வசனம் ஒன்றைச் சொல்வார் ரஜினி. அது இந்தப் படத்தில் இல்லை. மாறாக, தகப்பனுக்கு ஈடாகச் சண்டைக்காட்சிகளில் பந்தாடுகிற மகள் வருகிறாள். படத்திற்குப் படம் ஒரு ஆன்மிக போதனையும் ரஜினியிடமிருந்து வரும். இந்தப் படத்தில் அப்படி வரவில்லை. அரசியலைத் தூய்மைப்படுத்த இவர் வந்தால்தான் முடியும், காலத்தின் கட்டளையை மீறாமல் எப்போது வேண்டுமானாலும் வருவார் என்ற எதிர்பார்ப்பு ஆங்காங்கே செருகப்படும். அந்தச் செருகலும் இதிலே இல்லை. லட்சக்கணக்கான குழந்தைகளின் அபிமானத்தைப் பெற்றுள்ளது தெரிந்தும், நகைச்சுவைப் பாத்திரத்தின் மனைவியோடு போர்வைக்குள் ஆவி பிடிப்பது போன்ற காட்சிகள் இல்லை. நகைச்சுவைக் காட்சிகளே கூட இல்லை. ஆக, இது வழக்கமான ரஜினி படமாக இல்லை.
முந்தைய இரண்டு இரஞ்சித் படங்களிலும் கதைதான் மையமானதாக இருக்கும். கதாபாத்திரங்கள் அதைச் சுற்றி நிறுத்தப்பட்டிருப்பார்கள். இதில், இயல்பாக ரஜினி மையமாக இருக்க அவரைச் சார்ந்து திரைக்கதை அமைக்கப்பட்டு கதாபாத்திரங்கள் இயக்கப்பட்டிருக்கிறார்கள். கேங்ஸ்டர் (அடியாள் கும்பல்) தொழிலில் உள்ளவர்கள், ஒரு காப்பு ஏற்பாடாக மக்களுக்கு மருத்துவமனை உள்ளிட்ட சில சேவை ஏற்பாடுகளைச் செய்வதுண்டு. இதிலோ, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்றுவதற்காகவே கபாலி என்கிற கபாலீஸ்வரன் ‘நாயகன்’ வேலுத்தனமாக ஒரு கேங்ஸ்டராகிறான். ஆக, இது வழக்கமான இரஞ்சித் படமாக இல்லை.
மலேசியாதான் கதைக் களம். தமிழகத்திலிருந்து அங்கே புலம்பெயர்ந்து பின்னர் அந்நாட்டுக் குடிமக்களாகவே மாறிவிட்ட தமிழர்களின் வாழ்க்கைச் சூழலில் ஒரு சிறு முனை படம்பிடித்துக் காட்டப்படுகிறது. அவர்களிலும் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் கூலிப்போராட்டம் சொல்லப்படுகிறது. அவர்களது பிள்ளைகள் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போகிற நிலையில் அவர்களை போதை மருந்தால் இழுப்பதோடு, அதை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசெல்கிற வேலையில் தள்ளியும் விடுகிறது ஒரு பெரிய கும்பல். தமிழ்த் தொழிலாளர்களுக்காகப் போராடிய தமிழ்நேசனின் தொண்டராக இணைந்து அந்த இயக்கத்தின் தலைவராகவே உயரும் கபாலியை, எதிரிகள் போலியான குற்றச்சாட்டுகளைப் புனைந்து சிறையில் தள்ளச் செய்கிறார்கள். 25 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, நல்லது செய்வதற்காக மறுபடியும் துப்பாக்கி தூக்குகிற கபாலி, போதை மருந்து விநியோகத்துக்காக அடியாள் படை வைத்திருக்கிற டோனி லீ இவர்களது சண்டைதான் கதையோட்டம்.
வழக்கமான கும்பல் மோதல் கதையை இரஞ்சித்தின் மந்திரக் கோல் மூன்று வகைகளில் மாறுபட்டதாக்கியிருக்கிறது: ஒன்று, எதிரிகளின் இடங்களுக்குக் கபாலி நேரில் சென்று தாக்குகிற காட்சிகளின் விறுவிறுப்பு.இரண்டு, எதிரிகளால் கொல்லப்பட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் மனைவியும் மகளும் உயிரோடு இருப்பது தெரியவர, அவர்களை எப்படியாவது மீட்டுக்கொண்டுவரத் துடிக்கிறவனின் பதைப்பு.மூன்று, தமிழகத்தில் பண்ணையடிமைகளாக இருந்தவர்கள் மலேசியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது, அந்த நாட்டை வளப்படுத்தியதில் அவர்களது பங்களிப்பு, பின்னர் அவர்கள் கைவிடப்பட்ட வஞ்சகம் போன்ற வரலாற்றுத் தகவல்கள் கதையோடு இழையோடச் செய்யப்பட்டுள்ளன.
அன்றைய சூழலில், இழிவாகக் கருதிய மேட்டிமை சமூகத்தினருக்கு நிகராக அடையாளப்படுத்துவதன் குறியீடாக கோட் சூட் அணிவது பற்றிய அம்பேத்கர் நிலைபாடு பொருத்தமான சூழலில் மேற்கோள் காட்டப்படுகிறது. “தமிழன் எங்கே போனாலும் தன்னோடு தன் தன்சாதியையும் கொண்டுபோயிடுறான்” -ஒரு முழுமையான வர்த்தக சினிமாவில் இப்படியான உரையாடல்கள் வருவது சாதாரணமானதல்ல.
கும்பல்களோடு மோதுகிறபோது ரஜினியின் வயது கடந்த நடிப்பு பாணி விசில் பாராட்டுகளை அள்ளுகிறது. சீர்திருத்தப்பள்ளி நடத்தும் ரஜினி அங்கே மாணவர்களிடையே உறவாடுகிற இடம், போதைப் பொருள் எந்த அளவுக்கு சீரழிக்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்து அதற்கு முடிவு கட்டத் தீர்மானிக்கிற இடம், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு மனைவியைச் சந்திக்கிற இடம் என, இடைக்காலத்தில் மறைக்கப்பட்டுவிட்ட ரஜினியின் நடிப்பு கபாலியால் மீட்கப்பட்டிருக்கிறது. பஞ்ச் டயலாக்குகள் இல்லை என்றாலும் “கபாலிடா,” “மகிழ்ச்சி” என பஞ்ச் வார்த்தைகள் அதிர்வூட்டுகின்றன.
ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரிய்த்விகா, வின்ஸ்டன் சாவ்வோ, ‘அட்டைக்கத்தி’ தினேஷ், கிஷோர், நாசர், ஜான் விஜய், ஜானி ஹரி உள்ளிட்டோர், குறைவான வாய்ப்பை நிறைவாகப் பயன்படுத்தியுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையும், சி. முரளி ஒளிப்பதிவும், பிரவீன் தொகுப்பும் இணக்கமாகப் பயணித்துள்ளன.
இப்படியான படங்கள் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிடாதுதான். ஆனால், விரிந்த ரசிகப்பரப்பில் சிறு மழைத்துளிகளாக சில மாற்றுச் சிந்தனைகள் தூறுவது, மாற்றத்திற்காகக் களம் இயங்குவோருக்குத் துணை செய்யும்.