Search This Blog

Friday, July 15, 2016

ஒரு பெண் நேசிக்கிறவளாக இருக்கிறாள்

பொதுக்கயத்துக் கீரந்தையார்

ஒரு பெண் தன்னுடைய உடலை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாக உணர்ந்து கொண்டே இருக்கிறாள் என்பதை விட அவளது உடலை மற்றவர்கள் உணர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பிறந்தகுழந்தை பெண் என்று அறிந்தவுடன் அதற்காக மகிழ்பவர்கள் சிலர் வருந்துபவர்கள் பலர் என்கிற நிலை இன்றும் இருக்கிறது . பெண் குழந்தையை மடியில் கட்டிக்கொண்டிருக்கும் நெருப்பாக பார்க்கிற தாய்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வெளியில் காட்டிக்கொள்வதில்லையே தவிர உள்ளூர பெண் குழந்தை சார்ந்த அச்சத்தோடு இருக்கும் தந்தைமார்கள் அனேகம்பேர் இருக்கிறார்கள். உண்மையில் பெண் குழந்தை வளர்ப்பில் அம்மாக்களை விடவும் அப்பாக்களுக்கு அச்சமும் பதற்றமும் இருந்துகொண்டே இருக்கிறது. பெண் குழந்தையை கவனிப்பதிலும் வளர்ப்பதிலும் மிகுந்த சிரத்தையை எடுத்துக்கொள்கிறார்கள்.
வெளியில் சொல்ல இயலாத தங்களுடைய இளமைக்கால நினைவுகளை சுமந்தபடியே ஆண்கள் இருக்கிறார்கள். அம்மா , சகோதரிகள் தவிர வேறு பெண்களால் தூண்டப்பட்ட தங்களுடைய இளமைக்கால உணர்வுகளை ஒருபோதும் யாரிடமும் பகிர்ந்துகொள்ள இயலாத துயரத்துடன் பல ஆண்கள் இருக்கிறார்கள். இங்கே பாலியல் உணர்வுகளைப் பேசுவதற்கான வழிகாட்டிகளோ இணைஉணர்வுடைய நண்பர்களோ சரிவர அமைவதில்லை என்று சொல்வதை விடவும் இல்லை என்றே சொல்லலாம். ஆண்கள் தங்களுடைய இளமைக்காலத்தில் உணர்ந்த பெண் பற்றிய புரிதல்களை மனைவியிடம் விட மகளிடமே பொருந்தி பார்த்து துயருறுகிறார்கள்.அயல் ஆண்கள் யாரேனும் மகளின் இளமையில் தூண்டப்பட்டு விடகூடாது என்கிற இரகசியத்துயரம் பெண்குழந்தைகளைப் பெற்ற பல அப்பாக்களுக்கு இருக்கிறது.
கத்தோலிக்கத் திருவிவிலியத்தில் சீராக்கின் ஞானநூல் என்றொரு பகுதி உள்ளது. இதில் 42 ம் பிரிவு 9,10 வசனங்களின் தலைப்பே "மகளைப் பற்றிய தந்தையின் கவலை" என்று இருக்கிறது. " 9. தந்தை தம் மகளுக்கும் தெரியாமல் அவளைப் பற்றி விழிப்பாய் இருக்கிறார்; அவளைப் பற்றிய கவலை அவரது உறக்கத்தை விரட்டியடிக்கிறது. இளமையிலே அவளுக்குத் திருமணம் ஆகாமல் போய்விடுமோ எனவும் திருமணமானபின் அவள் வெறுக்கப்படுவாளோ எனவும் கவலைப்படுகிறார். 10.கன்னிப்பருவத்திலேயே அவள் கெட்டுப்போகாத படியும் தம் வீட்டிலேயே கருவுற்றவள் ஆகாதபடியும் கணவருடன் இருக்கும்போது நெறி தவறாதபடியும் திருமணமானபின் மலடி ஆகாதபடியும் அவர் கவலையாய் இருக்கிறார் ."
மகளின் உடல் வளர்ச்சியில் அம்மாவுக்கு இருக்கிற கவனம் போலவே அல்லாமல் உளவியல் சார்ந்த கவலைகளுடன் அப்பா இருக்கிறார். இளைஞனாக இருக்கும் பொழுது பெண்ணுடலின் புறத்தோற்றங்களில் கிளர்ச்சியுற்ற ஆணின் மனம் தன்னுடைய மகளிடம் பதற்றப்படுகிறது. அவளுக்கு உகந்த ஆடைகளை கொடுப்பதில் அம்மாவுக்கு கவனம் இருக்கிறது என்றால் அவளின் செயல்களை தொடர்வதில் அப்பா மிகுந்த கவனம் கொள்கிறார். மகளின் புறத்தோற்றத்தில் மயக்கமுற்ற யாரேனும் அவளைத் தொடர்கிறார்களா என இளைஞர்களைக் கண்காணிப்பதில் அவரின் கூடுதல் கவனத்தைக் கொடுத்தபடியே இருக்கிறார்.
வளரிளம் பெண்ணின் புறத்தோற்றத்தில் ஏற்படுகிற மாற்றம் என்பது மார்பக வளர்ச்சிதான் என நேரிடையான சொல்லில் சொல்லிவிட இயலும். இந்த மார்பக வளர்ச்சி சமூகத்தின் உளவியலைத் தொடர்ந்து பாதித்துக்கொண்டே இருக்கிறது. தடாதகை பிராட்டிக்கு மூன்றாம் முலை இருந்து மறைந்த கதையும் "இடமுலைக் கையால் திருகி " என ஒரு முலையைத் திருகி எறிந்து மதுரையை எரித்த கண்ணகி கதையும் சீதாதேவியின் முலையைக் கொத்திக் காயப்படுத்திய காகாசுரன் வருகிற இராமாயணக்கதையும் என புராணங்களில் காப்பியங்களில் தொடங்கி இன்றைய இலக்கியம் வரையிலும் அனைத்துப் பிரிவிலும் பெண்களின் மார்பகம் என்பது இடையறாது கவனப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. "ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் " என திருவாசகத்தில் மாணிக்க வாசகர் ஈர்க்கங்குச்சியும் இடையில் நுழையமுடியாத இளமுலைகளை உடைய இளம்பெண்ணின் கூர்மையான பார்வையிலிருந்து தப்பிக்கவே சிவபெருமானைச் சரணடைகிறார். கோவில் பிரகாரங்களில் குழிந்த வயிறும் சிறுத்த இடையும் திமிர்ந்த முலைகளும் என சிற்பக்கலையில் பெண்ணின் முலைகளுக்குப் பிரத்யேக இடம் இருக்கிறது. ஓவியக்கலையில் பெரும்பாலும் பெருத்த முலைகளுக்கான விருப்பம் வெளிப்படையாகத் தெரிகிறது. முலைகளை மட்டுமே ஓவியமாக்குகிற கலை வளர்ந்துள்ள இந்த நாட்களில் தளர்ந்த முலைகளைக் காட்சிப்படுத்துகிற யதார்த்த நவீன ஓவியங்களையும் காணமுடிகிறது.
முதன் முதலில் குளோனிங் முறையில் உருவாக்கிய ஆட்டுக்குட்டிக்கு டாலி என்று பெயர் சூட்டப்பட்டது. பெயர் காரணத்தை கேட்டதற்கு, விஞ்ஞானி இயான் வில்மாட் அந்த பெயர் முலைபெருத்த, தன் அபிமான மேற்கத்திய நடிகை டாலி பார்டனின் நினைவில் வைத்ததாகப் பதிலளித்தார். மார்பகத்திசுக்களிலிருந்து புதிய உயிர் உருவாக்கப்பட்ட அறிவியல் முன்னெடுப்பில் ஒரு நடிகையின் மார்பகம் நினைவூட்டப்படுகிறது . ஆனால் இந்த டாலி பார்டன் என்பவர் நடிகை மட்டும் அல்ல. 1946 இல் பிறந்து நடிகையாக, பாடகராக , பாடலாசிரியராக, எழுத்தாளராக, தொழிலதிபராக, சமூக சேவகராக இருப்பவர். உலகிலேயே அதிகமாக கிட்டத்தட்ட 46 முறை கிராம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இவருக்கு 8 முறை கிராம்மி விருது வழங்கப்பட்டுள்ளது. 2 முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். பலராலும் மிகவும் விரும்பப்படுகிற பாடலான "I Will Always Love You" உட்பட 3000 பாடல்களை உருவாக்கியுள்ளார். இவரது இசைக்காக பல பிளாட்டினம் விருதுகளைப் பெற்றுள்ளார். அறிவியல் வரலாற்றில் இவர் பெயர் இணைக்கப்படுவது பெருமைக்குரியது என்றாலும் இவருடைய முலைகள் மட்டும் நினைவுக்கு வருவதன் உளவியல் காரணம் இவர் பெண் என்பதன் புறத்தோற்றம் மட்டுமே.
பெண்ணுடலில் ஏற்படுகிற வளர்ச்சிக்குத் தகுந்த உடைகளை அணியக் கொடுப்பதில் அம்மாக்களுக்கு இருக்கக்கூடிய உளவியல் சிக்கல் எல்லா அம்மாக்களுக்கும் பொதுவானது அல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக நான்கைந்து பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் முதல் இரண்டு பெண் குழந்தைகள் பூப்பெய்தபின்பு திருமணம் செய்து கொடுக்க இயலாமல் வீட்டிலிருக்கையில் அடுத்தடுத்த பெண் குழந்தைகளின் உடலில் ஏற்படுகிற மார்பக வளர்ச்சியை மறைக்கும் விதமாக பழைய துணியினால் இறுக்கிக்கட்டுகிற வழக்கம் இருந்தது. மூச்சுத்திணறுகிற அளவு இறுக்கிக் கட்டப்படுவதால் அதை மீறியும் வளர்ச்சியடைந்து மார்பகத்தில் நீங்காத வடு அல்லது குறுக்குப்பிளவு ஏற்படுவதும் உண்டு. பழங்குடியினரில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரிடம் மார்பக வளர்ச்சியை மறைக்க இறுக்கிக் கட்டுவது பண்பாடாகவே இருந்திருக்கிறது.
கச்சை, தனக்கச்சு ,முலைக்கச்சு, கச்சைபட்டை அல்லது இரவிக்கை எனப் பலபெயர்களில் வழங்கப்பட்ட ஜாக்கெட் என்கிற மேல்சட்டையின் பயன்பாடு சங்கபழமையுடையது. கவனத்தை ஈர்க்கும்படியான பலவேறுபட்ட வடிவமைப்புடன் புழக்கத்தில் இருக்கிற இரவிக்கை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் சமூகத்தின் அனைத்து நிலையில் உள்ள பெண்களும் அணிந்து கொள்ள இயலாத உடையாகத்தான் இருந்தது.
இவ்விதமாக ஆண்களால் கவனப்படுத்தப்பட்ட பெண்ணின் உடல் பல போராட்டக்களங்களில் பெண்களுக்கு ஆயுதமாகப் பயன்பட்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் பெண்கள் “Indian Army Rape us” என்ற அறிவிப்புப் பதாகைகளுடன் நடத்திய நிர்வாணப் போராட்டம் முக்கியமானது. போலவே காடுகளை அழிக்கக்கூடாது என வடமாநிலப் பழங்குடிப் பெண்களில் ஒரு பிரிவினர் வெற்று மார்புடன் மரங்களைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர் .
தாய்மையை மிகையாகக் கொண்டாடுகிற சமூகத்தில்தான் பெண்ணின் முலைகள் ஆணின் மனத்தைக் கிளர்த்துபவையாகவும் இருக்கின்றன. ஆண் மனதின் உளவியல் கூறுகளின் அடிப்படையிலேயே பெண்ணின் உடல் வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. சரியாத முலைகளுக்கு ஏங்குகிற மனமும் ஆணுடையதுதான், கனிந்து குழைந்த பாலூட்டிய மார்புகளைக் கொண்டாடுவதும் ஆணின் மனம்தான். இந்த இரண்டுக்கும் இடையே தான் பெண் தன்னுடைய உடல் சார்ந்த உளவியலை உருவாக்கிக்கொள்கிறாள்.

தலைவன் கூற்றாக அமைந்த பொதுக்கயத்துக் கீரந்தையாரின் குறுந்தொகைப்பாடலில் தன்னுடைய உடலில் ஏற்பட்டுள்ள பருவ மாற்றத்தின் அடிப்படையில் மனத்தைக் கட்டமைத்துக் கொள்ளாத தலைவி இருக்கிறாள். அவளது உடலின் வளர்ச்சியில் தூண்டப்பட்ட தலைவன் கூறுவதாக அமைந்த பாடல்,
“முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்குவீழ்ந் தனவே ,
செறிமுறை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்கும் சிலதோன் றினவே அணங்குதற்கு
யான் தன் அறிவள்; தான் அறியலளே
யாங்கு ஆகுவள்கொல் தானே
பெருமுது செல்வர் ஒருமட மகளே. “
தலைவியின் முலைகள் அரும்பின, தலையில் கிளைத்த மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன, செறிந்த வரிசையாகிய வெள்ளிய பல்லும் முதன்முறை விழுந்து முற்றும் முளைத்து நிரம்பின, தேமலும் சில வெளிப்பட்டன, என்னை வருத்துமளவுக்கு அவள் இருப்பதை நான் அறிவேன் , அவள் அதனை அறிந்திலள் , பெரிய முதிர்ந்த செல்வத்தை உடையாரது ஒப்பற்ற மடப்பத்தை உடைய தலைவியாகிய அவள் எத்தன்மை உடையவளாவாளோ.
தலைவி மிக இளையவள் என தோழி கூற, அவளிடம் தலைவன் கூறுவதாக அமைந்துள்ள இந்தப் பாடலில் தலைவியின் புறத்தோற்றமே அவனைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. முகிழ்த்திருக்கும் முலைகளும், பால்யத்தின் குரல் வீழ்ந்து குழைவதும், விழுந்த பால்பற்கள் மீண்டும் முளைத்து நிரம்புவதுமென அவனை வருத்துகிற அவளது உடலின் ஈர்ப்பு பற்றி அவன் அறிந்திருக்கும் அளவு அவள் அறிந்திருக்க இயலாது என அவன் சொல்கிறான்.அவளைத் தூண்டுகிற அவனுடைய தொடர் முயற்சியினால் பெண்ணும் பல சமயங்களில் அவனுக்கு இணங்குகிறாள். பெரும்பாலும் பெண் அவளுடைய உடல் தோற்றத்தின் அடிப்படையில் ஆணை ஈர்க்கிறவளாக இருக்கிறாள். ஆனால் ஆணின் அரவணைப்பிலும் அவனுடைய கரிசனையின் வெளிப்பாடிலுமே பெண் ஆணை நேசிக்கிறவளாக இருக்கிறாள்.
சுதந்திரவல்லியின் முதல் காதல் என்கிற கவிதை,
“எனக்குப் பிடிக்கும் மாங்காய்களை
சைக்கிளின் கைப்பிடியில்
கொத்தாகத் தொங்கவிட்டபடி
என் வீட்டு முன்பு
அங்கும் இங்கும் சுற்றுபவன்
யாருமற்ற நேரத்தில்
மாங்காய்களை காம்பவுண்டுக்குள் வீசுபவன்.
நானோ அவற்றை கவனமாய்
பொறுக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்வேன்
ஆசிரியர் பார்க்காத நேரத்திலும்
இடைவேளையின் போதும்
மாங்காய்களை உடைத்து உப்பு வைத்து
தோழிகளுடன் பகிர்ந்துண்பேன்.”
******************************************************************************************************************************
பொதுக்கயத்துக் கீரந்தையார்:
கீரந்தை என்பது இவரது இயற்பெயர். கயம் என்றால் குளம், பொதுக்கயம் என்பது ஊரின் பெயராக இருக்கலாம். பெரியகுளம், தாமரைக்குளம் போல பொதுக்குளம் என்பது ஊரின் பெயராக இருக்கும். சிலப்பதிகாரத்தில் கீரந்தை என்பது ஆண்பால் பெயராக வருகிறது என்பதால் இவர் ஆணா பெண்ணா என்கிற குழப்பம் உள்ளது. வெண்பூதி, வெண்மணிப்பூதி போன்றவை பெண்பாற்பெயராக சங்கஇலக்கியத்தில் இருக்க அப்பூதி என்கிற பெயர் பெரியபுராணத்தில் ஆண்பாற்பெயராக மாற்றம் பெற்றிருக்கிறது. எனவே பெயரின் அடிப்படியில் அல்லாமல் பாடல் வெளிப்படுத்துகிற பொருளின் அடிப்படையில் இவர் பெண்பாற் புலவர் என டாக்டர் தாயம்மாள் அறவாணன் குறிப்பிடுகிறார்.
இவர் எழுதியதாக குறுந்தொகையில் ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது. (குறுந்:337)
*******************************************************************************************************************************
இலக்கியக்குறிப்பு:
பெண்களுக்கும் ஆண்களுக்கும் உடல் வளர்ச்சி மனவளர்ச்சியின் அடிப்படையில் பருவங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
பெண்களின் ஏழு பருவங்கள்:-
"அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’
* பேதை (1 முதல் 8 வயது வரை)
* பெதும்பை( 9 முதல் 10 வயது வரை)
* மங்கை (11 முதல் 14 வயது வரை)
* மடந்தை (15 முதல் 18 வயது வரை)
* அரிவை (19 முதல் 24 வயது வரை)
* தெரிவை (25 முதல் 29 வயது வரை)
* பேரிளம் பெண்( 30 வயதுக்கு மேல்)
ஆதாரம்:
'அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’
- பன்னிரு பாட்டியல்: 220
‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’
-221
‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’
-222
‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’
’’ 223
‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’
-224
‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’
-225
‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’
-226
‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’
-227
ஆண்களின் ஏழு பருவங்கள்:-
‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
*பாலன்( 1 முதல் 7 வரை)
*மீளி (8 முதல் 10 வரை)
*மறவோன் (11 முதல் 14 வரை )
*திறவோன் (15 வயது )
*விடலை (16 வயது )
*காளை (17 முதல் 30 வரை)
*முதுமகன், (30 வயதுக்கு மேல்)
ஆதாரம்:
‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’
-பன்னிரு பாட்டியல்: 228
‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’
-229
‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’
-230
‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’
-231
‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’
-232
‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’
-233
‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’
-234
‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப.’
-235

 Sakthi Jothi