Search This Blog

Sunday, May 29, 2016

கொலஸ்ரோலைக் கொல்லும் வழி


ஆகாரம் தன்னை அளவாக அருந்தியதால்
சாகாவரம் பெற்ற சால்புடையோம் – நோகாமல்
நீட்டி நிமிர்ந்திருந்து நித்தம் விழுங்கியதால்
ஆட்டிப் படைக்குதின்று நோய்.
நிலங்கொத்தி வயலுழுது நீரிறைத்து நிதமுழைத்து
நலஞ்சிறக்க வாழ்ந்தகதை தான் மறந்தோம் – சுலபத்தில்
எஞ்சின் பிடித்து அதில் ஏறிநின்று ஏப்பம் விடப்
பஞ்சாய்ப் பறக்கும் உயிர்.
நெல்லுக்குத்தி மாவெடுத்து மருந்தாக்கி நோய்நொடியை
மல்லுக்கட்டி நின்ற எங்கள் மாதரெல்லாம் – பொல்லாத
சீரியலில் குந்தியவர் சிந்தை தொலைத்ததனால்
காரியமே கெட்டதென்று காண்.
கள்ளத்தீன் தின்றுகள்ளோடு களியுண்டு
வெள்ளத்தில் அடியுண்டவிலங்கானோம் – உள்ளத்தால்
உணர்ந்து உடல்நிலையைில் ஊக்கம் எடுத்துநலம்
கொணர்ந்தால் நமக்கு நலன்.
வெளிநாட்டான் சாப்பாடு விதவிதமாய்ச் சாப்பிட்டு
களியாட்டம் போடுவதைக் கைவிட்டு – துளியேனும்
உடலை வருத்தியதில் ஊளைச்சதை குறைந்துவிட்டால்
சுடலை வெகு தூரம் சுகம்.
பந்திக்கு முந்தியதில் தொந்தி பெருத்து இன்று
சந்தி சிரிக்கும்படியாச்சுதம்மா – சிந்தித்தால்
சீக்கிரமே சித்தம் தெளிந்து தினமுழைத்தால்
ஆக்கினைகள் தீரும் அறி.
உடல் பெருக்கும் மூச்சுமுட்டும் சோம்பல் தலைசுற்றும்
திடம்குலைந்து போகும் நிலை தோன்றும் – குடம்போன்ற
தண்ணீரீல் துளிவிஷம்போல் கொலஸ்ரோல் உயிர்குடிக்கும்
எண்ணீர்எடுத்தெறிதல் ஏன்.
காய்த்தமரத்தைக் கனியமுன்னே கருக்கிவிடும்.
நோய்க்கான காரணங்களை கேட்டீர் – ஆய்ந்து அவை
விலக்கி விருந்துண்டு வியர்வைசிந்தி உழைத்தலொன்றே
கொலஸ்ரோலைக் கொல்லும் வழி.
மருத்துவர் – கதிரேசப்பிள்ளை தர்ஸனன்

No comments:

Post a Comment