Search This Blog

Wednesday, May 4, 2016

சீன மொழியில் திருக்குறள்

சீன மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணி நிறைவடைந்து, நூல் வடிவமாக்கப்பட்டு தற்போது அச்சிடுவதற்குத் தயார்நிலையில் உள்ளது.
உலகப் பொதுமறையான திருக்குறள், ஏற்கெனவே ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருக்குறள், பாரதியார் பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள் ஆகியவை சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் எனத் தமிழக முதல்வர் 2011-ஆம் ஆண்டு அறிவித்தார். இதில், திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்ப்பதற்காக ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தப் பணி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதை சீனாவில் அதிக அளவிலான மக்கள் பேசக்கூடிய மாண்டரின் மொழியில் மொழிபெயர்க்க அந்நாட்டுக் கவிஞர் யூசீ ஒப்புக் கொண்டார். இந்தப் பணியை அவர் 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். இப்பணி அண்மையில் நிறைவடைந்து நூல் வடிவமாக்கப்பட்டுள்ளது.
இதில், திருக்குறளில் உள்ளதுபோல 1330 குறள்களும் 133 அதிகாரங்களாகப் பிரித்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ்- சீனம்- ஆங்கிலம் என்ற அடிப்படையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழில் உள்ளது போலவே ஒன்னே முக்கால் அடிக்கு சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார் அவர்.
ஒரு பக்கத்துக்கு 5 குறள்கள், இரு பக்கங்களில் ஒரு தலைப்புக்கு 10 குறள்கள் வீதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 280 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 1330 குறள்களும் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை கூறியது:
இந்த மொழிபெயர்ப்புப் பணி முடிவடைந்த பிறகு கவிஞர் யூசீயுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.
இதில், சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள குறள்கள் அனைத்தும் திருக்குறளில் உள்ள கருத்துக்கு நெருக்கமானதாகவும், உயிரோட்டமாகவும் இருக்கின்றன என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த நூலின் மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டு, அச்சில் ஏற்றுவதற்காகத் தமிழ் வளர்ச்சித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அச்சிட்டு வெளியாகும் வாய்ப்புள்ளது.
இதேபோல, பாரதியார் பாடல்களை சீன மொழியில் மொழிபெயர்க்கும் பணி முடிவடைந்துவிட்டது.
பாரதியார் பாடல்களில் சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ராமச்சந்திரனால் தெரிவு செய்யப்பட்ட 100 பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பணியையும் கவிஞர் யூசீயே மேற்கொண்டார்.
பாரதிதாசன் பாடல்களிலும் டி.என்.ராமச்சந்திரன், பேராசிரியர் தட்சிணாமூர்த்தியால் தெரிவு செய்யப்பட்ட பாடல்களைக் கவிஞர் யூசீ மொழிபெயர்த்து வருகிறார். இது விரைவில் முடிவடையும்.
கவிஞர் யூசீ சீன நாட்டில் பிரபலமானவர். கவிஞர், எழுத்தாளர், இசைக் கலைஞர் எனப் பன்முகத் திறன் கொண்ட அவருக்கு மொழிபெயர்ப்புக்காக ரூ.5.64 லட்சம் மதிப்பூதியம் வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர் மீண்டும் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கே அறக்கட்டளை நிறுவுவதற்காக நன்கொடையாகத் தந்துள்ளார் என்றார் திருமலை.
(Source: தினமணி, 31 August 2014)

No comments:

Post a Comment