Search This Blog

Tuesday, May 24, 2016

ஔவையார்



ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை நோக்குங்கல், அவர் 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. இவர் தந்தையார் பகவன் எனவும் தாய் ஆதி எனவும், அவர்களுக்கு ஏழாவது குழந்தையாக ஒளவை பாணரகத்தில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு கானப்படுகிறது.
ஆயினும் இவரின் படைப்புகளின் காலக்கட்டங்களை இன்ன பிற புலவர்களின் காலக்கட்டங்களோடு ஒப்பிட்டு நோக்குங்கால், ஒள‌வை பிராட்டியார் காலத்தை வென்று வாழ்ந்தவர் என்று கணிக்க முடிகிறது. இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசன் அதியமான் நெடுமான் அஞ்சி ஒள‌வைக்கு ஈந்த மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக்கனி கதையும் கூறப்படுகின்றது.
இத்தமிழ் மூதாட்டியின் பெயர் சிறப்பினை நோக்குங்கால், அகர வரிசையில் பதினோராம் எழுத்தாகிய "ஔ" எனும் எழுத்தில துவங்கும் ஒளவை என்ற பெயர் அவ்வா என்ற சொல்லின் திரிபாக கருதப்படுகிறது. அதன் பொருள் மூதாட்டி அல்லது தவப்பெண் என்பதாகும் என்று பழந்தமிழ் அகராதி பகர்கிறது. அத்துடன் பிந்தையகாலத்தில் ஒளவை எனும் சொல், வயது அல்லது அறிவாற்றல் ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்றவர்க்கு வழங்கப்படும் குறியீடாகவும் அமைந்துள்ளது. இதிலிருந்தே பெரும் சிறப்பு வாய்ந்த தமிழ்ப்புலவி இவர் என்பது வெள்ளிடைமலை.
சிரஞ்சீவியாக வாழ்ந்தவர் ஒளவை என்று எண்ணப்பட்டாலும், வரலாற்று ஆசிரியர்களின் கூற்றின்படி மூன்று பெண்புலவர்கள் 12ம் நூற்றாண்டுக்கு முன் ஒள‌வை எனும் பெயருடனும் ஒருமித்த குணாதிசயங்களோடும், புலமையோடும் வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்தனர், கவி பாடிச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி முதலாம் ஒள‌வை கடைச்சங்க காலத்தில் வள்ளுவர், நக்கீரர் போன்றோரின் காலக்கட்டத்தில் வாழந்ததாகவும், இரண்டாம் ஒள‌வை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும் மூன்றாமவர் கம்பர், புகழேந்தி, செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்தார் என்றும் சான்று பகர்கின்றனர்.இவையன்றி 14ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்கு மத்தியிலான காலக்கட்டத்தில் மேலும் இரண்டு ஔவைகள் வாழ்ந்தனர் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். ஓர் ஒளவை 14ஆம் அல்லது 15ஆம் நூற்றாண்டிலும் அடுத்தவர் 18ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த இரு ஒளவைகளின் வாழ்க்கைக் குறிப்புக்கள் முழுமையாகக் பெறப்படவில்லை.
ஔவையின் தோற்றப்பொலிவுப் பற்றி விவரிக்கையில் அறியப்படும் தகவல்கள் யாதெனில் ஔவை என்பவர் ஒரு விறலி (அதாவது ஒரு பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டுபவள் விறலி என்று அழைக்கப்படுபவராவார்). இவர் மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். இவர் மைதீட்டிய கண்களும் வாட்டமான நெற்றியும் அமைந்தவராக அறியப்படுகிறார். மேலும் எடுப்பான இலுப்பில் அழகிய அணிகலன்களையும் அணிந்திருந்தார் என அறியப்படுகிறார்.
மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை வாரி வழங்கிய அவ்வையின் பொதுச் சிறப்பியல்புகள் என சில விசயங்கள் கூறப்படுவதுண்டு. அவையாவன ஒளவையானவர் பிறவியிலேயே தமிழறிவுடன் பிறந்தவர், பெற்றோரிடத்தில் வளராதவர், பாணரகத்தில் வளர்ந்தவர்,சிவபரத்துவம் தெளிந்தவர், வரகவித்துவம் வாய்க்கப்பெற்றவர்.இலௌகிகம்,வைதிகம் இரண்டும் தெரிந்தவர். உள்ளம்,உண்மை,மொழி ஆகியவற்றில் உயர்ந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் புரிந்தவர். தமிழ் நாடு முழுதும் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் வெகுநாட்கள் வாழ்ந்தவர். பலரை பற்றி கவிபாடிப் பரிசு பெற்றவர். சிறியோராயினும், வறியோராயினும் தமக்கு பரிசு ஈந்தவரை பெரியோராய் மதித்துப் பாடியவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பாராமுகம் காட்டியவரையும், பாடலருமை அறியா மூடரையும் வெறுத்துப் பாடிய‌வர். மேற்கூறிய சிறப்பியல்புகள் அனைத்து ஔவைகளிலும் ஒருமித்து இருந்ததாகக் கூறப்படுகிறது


தமிழ் பாட்டி ஔவையார் - குறிப்புகள்

தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான "ஆத்திசூடி"க்கு உண்டு.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

தமிழ்ப்பாட்டி
"தமிழ்த்தாத்தா" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள்.

வரலாறு
ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.

அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்; அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.

காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் "தமிழறியும் பெருமாள்" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.

சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச் செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை.

வரலாற்று ஆய்வு
ஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்:

சங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான். அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான். இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார் காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். "ஒளவை குறள்" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம். சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் "விநாயகர் அகவலை"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும்.

கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

அதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார்.

இவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார்.

நூல்களின் சிறப்பு
மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.

சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.

"பதஞ்சலி யோகசூத்திர"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

"ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது.

"கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.

ஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன.

"மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.

"நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.

இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச்
சங்கத்தின் தலைவர் "இறையனார்" என்னும் "திரிபுரம் எரித்த
விரிசடைக்கடவுளின்" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை
ஒளவையார் பெற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment