Search This Blog

Thursday, May 12, 2016

பஞ்சமி நாளில் ஸ்ரீவாராஹி வழிபாடு!


வாழ்வளிக்கும் இந்த தேவி, சப்த மாதர்களில் ஒருத்தி. சப்த மாதர்களின் மகிமையை தேவி மஹாத்மியம் முதலான ஞான நூல்கள் விரிவாக விளக்குகின்றன. மார்க்கண்டேய புராணத்தில் அமைந்திருக்கிறது தேவிமஹாத்மியம். 700 மந்திரங்களைக் கொண்டதால் ‘சப்த ஸதீ’ என்று போற்றப்படுகிறது.
இந்த நூல், அசுரர்களாகிய சும்ப- நிசும்பர்களை அழிக்க ஆதி சக்திக்கு உதவியாக அவதரித்தவர்கள் சப்தமாதர்கள் என்று விவரிக்கிறது. இவர்களில் வாராஹி தேவியை வழிபட, சத்ரு பயம் நீங்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். விவசாயம் செழிக்கவும் இவளை வழிபடுவார்கள்.
வழிபட உகந்த நாட்கள்: பஞ்சமி திதி நாட்கள்.
அர்ச்சனைப் பொருள்கள்: குங்குமம், செந்நிறப் பூக்கள்.
நிவேதனம்: பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன்.
புண்ணிய நூல்கள்: வாராஹிமாலை
சிறப்பு வழிபாடு: பஞ்சமி திதி நாட்கள் ஸ்ரீவாராஹிதேவிக்கு மிக உகந்தவை. இந்த நாட்களில், நிவேதனமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் பதார்த்தங்களை நிவேதனம் செய்து, வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம்.
மேலும் அனுதினமும் பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமயசங்கேதா, வாராஹி, போத்ரிணி, சிவா, வார்த்தாளி, மகாசேனா, ஆக்ஞா சக்ரேச்வரி, அரிக்னீ ஆகிய 12 திருநாமங்களுடன் போற்றி கூறி, தியானித்து வழிபட்டால், சகல வரங்களையும் அருள்வாள்.
வழிபாட்டு மந்திரங்கள்
வராஹி மாலையில் ஒரு பாடல்...
இருகுழை கோமளம் தாள்புட்ப ராகம்
இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக்கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே!
- பஞ்சமி தினங்களில் தூப-தீப ஆராதனையுடன் இந்தப் பாடலையும் பாடி மனமுருகி வாராஹிதேவியை வழிபட, அனவரதமும் நமக்குத் துணை நிற்பாள். அஸ்வினி, பரணி, மூலம் மற்றும் ரேவதி நட்சத்திரக்காரர்கள் வாராஹியை வழிபட்டு அருள் பெறலாம்.

No comments:

Post a Comment