Search This Blog

Saturday, March 5, 2016

40 வருடங்களுக்கு முந்தய வட்டுக்கோட்டை தீர்மானம் 1976,


1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம்.
தவிசாளர் எஸ். ஐே. வி. செல்வநாயகம், கியுசி, பா.உ (காங்கேசன்துறை) 1976 மே 14ஆந் தேதியன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு,
இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின்
ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும்,
எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.
மேலும் 1972இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஒர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்திற்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது. மேலும் தமிழ் ஈழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமைபொருந்திய, சமயச்சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது. இம்மாநாடு மேலும் பிரகடனப்படுத்துவதாவது:
(அ) தமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ் ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித்தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக்கும் முழுமையான, சமமான பிரசாவுரிமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழ் ஈழத்தின் ஏதேனும் சமயத்தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்திற்குட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.
(ஆ) தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்படவேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றத்தாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.
(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச்சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.
(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும் எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
(உ) தமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும். பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும்.
இவ்வகையில் தமிழ் ஈழம் ஒரு சமதர்ம அரசாக இருக்க வேண்டும்.
தமிழ் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்கான செயல்திட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது.
மேலும் இம்மாநாடு, சுதந்திரத்திற்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.
(இது 1976 மே 15ஆந் தேதியன்று திரு. செல்வநாயகம், கியுசி. பா.உ அவர்கள் தலைமையில் (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் 1ஆவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம். 1977இல் இதனை முன்வைத்துத் தேர்தலுக்குச் சென்ற த.ஐ.வி.மு. தமிழ் வாக்காளர்களிடமிருந்து அமோகமான ஆணையைப் பெற்றது. இதுவே ஈழத்தமிழர் சனநாயக முறையில் நடத்தப்பட்ட ஒரு வாக்கெடுப்பில் சுதந்திரமாகத் தமது விருப்பை வெளிப்படுத்துக் கூடுமாயிருந்த இறுதித் தடவையாயிருந்தது.

No comments:

Post a Comment