Search This Blog

Friday, February 26, 2016

"வெந்து தணியும் காடுகள்”

அப்பாவின் நண்பர் விஸ்வநாதனின் வீட்டுக்குப் போய் அவர் மனைவி காமாட்சியிடம் பேசிக்கொண்டிருந்தாள் ரம்யா. “இங்கே கற்பகாம்பாளைத் தரிசனம் செய்யணும்னு வந்தேன். அப்பிடியே உங்களையும் பாத்துட்டுப் போலாமேன்னு வந்தேன். சரி நான் கிளம்பறேன்” என்றாள் ரம்யா. “இதோ வரேன், இரு. குங்குமம் தரேன். இட்டுண்டு போயிட்டு வா” என்றபடி குங்குமச் சிமிழை நீட்டினாள், காமாட்சி மாமி. குங்குமத்தை இட்டுக்கொண்டு கிளம்பினாள் ரம்யா.

“உங்க அப்பாவைப் போன வாரம் ரிஜிஸ்ட்டர் ஆபீஸ்லே பாத்தேம்மா. மனையைப் பதிவு செய்ய வந்திருந்தார். எங்க வீட்டு முகவரிதான் குடுத்திருக்கார். அதற்கான பத்திரம், இங்கேதான் வரும். வந்தவுடனே நான் கொண்டு வந்து தரேன். அப்பாகிட்ட சொல்லும்மா” என்றார் விஸ்வநாதன்.
‘சுருக்’ என்றது ரம்யாவுக்கு. நம்மகிட்ட சொல்லாம எதையுமே செய்யமாட்டாரே அப்பா. ஒரு நிமிஷம் தலை சுற்றிற்று. சமாளித்துக்கொண்டு “தெரியும் சொன்னார்” என்று சமாளித்துவிட்டு கிளம்பினாள்.


“யாரோ சொல்லி நாங்க தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. எதுக்கு எங்ககிட்ட மறைக்கணும். நீங்க மனை வாங்கினா நாங்க சந்தோஷப்படுவோம், பொறாமைப்படமாட்டோம். ஏம்பா இப்பிடி செஞ்சீங்க? அவமானமா இருக்கு. அந்த விஸ்வநாதன் சார் சொல்லித்தான் நான் தெரிஞ்சிக்கணுமா? நான் உங்க மூத்த பொண்ணுப்பா. ஏன் என்கிட்ட சொல்லலை?”
ரம்யா ஆவேசத்துடன் கேட்ட கேள்வியில் அதிர்ந்தார் ராமாமிர்தம். முதல் முதலா அவர் வாழ்க்கையில் அவருக்கென்று பிறந்த முதல் குழந்தை, அப்பா என்கிற ஸ்தானத்தை அளித்த பெண். தோளிலும் மார்பிலும் வைத்துக் கொஞ்சி, பாசத்தையும் முதற்குழந்தை என்கிற ஆசையையும் கொட்டி வளர்த்த அவருடைய மூத்த குழந்தை. அந்தப் பெண்குழந்தை இப்போது வளர்ந்து ஒரு ஆணுக்கும் வாழ்க்கைப்பட்டு, இரு குழந்தைகளையும் பெற்று முதிர்ந்து நிற்கிறாள்.

‘குழந்தைகளுக்குத் தெரியாமல் நிலம் வாங்கி இருக்கேன்’ என்று விஸ்வநாதனிடம் சொன்னது தவறு என்று உறைத்தது அவருக்கு. அந்தப் பத்திரம் வந்துவிட்டதா என்று பார்த்து, அதை அவர் வீட்டுக்கே சென்று வாங்கி வந்திருக்க வேண்டும். ‘சரி என்னதான் அனுபவம் இருந்தாலும் சில நேரங்களில் இப்படித்தான் முட்டாள்தனம் செய்வோம்’ என்று யோசித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்தார்.
“அப்பா உங்களைக் கேள்வி கேட்க, எனக்குத் தகுதியில்லாம இருக்கலாம். ஆனா, மனசு பொறுக்கலைப்பா. எனக்கு உள்ள ஒண்ணு வெச்சிண்டு, வெளிலே வேற பேசத் தெரியாது. அதுனாலே கேக்கறேன். இது மாதிரி நிலம் வாங்கி இருக்கேன்னு சொல்லியிருந்தா, நானும் சந்தோஷப்பட்டிருப்பேனே, எதுக்குப்பா என்கிட்டே மறைக்கணும்?”

“நாங்க இப்போ சொந்தமா வீடுகூட இல்லாம இருக்கலாம். நாங்களும் நிமிர்வோம். வீடு வாங்குவோம். ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சிக்கோங்க. எந்தக் காலத்திலேயும் நான் என் சொந்தக் கால்லே நிப்பேனே தவிர, உன்கிட்ட கையேந்த மாட்டேன். எனக்கு இதைக் குடு அதைக் குடுன்னு கேக்கமாட்டேன்” என்றாள் ரம்யா.

‘இன்னும் இவள் குழந்தையாகவே இருக்கிறாளே! இவ்வளவு வளர்ந்து கூட இன்னும் புரிந்துகொள்ளாத குழந்தையாகவே இருக்கிறாளே!’ என்கிற அதிர்ச்சியும், நம்மைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டு, தர்ம சங்கடத்தில் ஆழ்த்திவிட்டாளே என்னும் அதிர்ச்சியும் சேர்ந்து அவரை நிலைகுலைய வைத்தது. அவர் வாழ்க்கை அவருக்குப் பல அனுபவங்களைக் கொடுத்திருந்தது. ஆனாலும் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அவர் சிக்கியதில்லை. ஆடிப் போனார் ராமாமிர்தம்.
இன்று வரை எது செய்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து விவாதித்து, கூடியவரை ரகசியம் ஏதும் இல்லாமல் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்னும் நோக்கோடு செயல்பட்டிருக்கிறார் ராமாமிர்தம்.

ஏதோ ஆண்டவன் புண்ணியத்திலே அவர் உழைப்பிலே அவருக்கு வந்த பணமே அவரையும் அவர் மனைவி லலிதாவையும் கடைசீ வரை யாரிடமும் கையேந்தி நிற்காத ஒரு நிலையைத் தந்திருக்கிறது. பேராசை இல்லாத ராமாமிர்தத்துக்கும் அவர் மனவிக்கும் இருப்பதற்கு ஒரு வீடு, கையில் ஏதோ கொஞ்சம் பணம் என்று இருந்தாலும் தினமும் இந்த நிலையில் அவர்களை வைத்திருப்பதற்கு நன்றி சொல்லிக்கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர் வாழ்க்கையில் அவர் சந்தித்த மேடு பள்ளம், சரிவு, உயர்வு, அவமானங்கள், சுனாமிகள், இடி மின்னல் மழை, பூகம்பம்…. அத்தனையையும் கூடவே நின்று தோள் கொடுத்துத் தாங்கி அவரையும் கீழே விழாமல் தாங்கி, தானும் நிமிர்ந்த அவர் மனைவி லலிதா அவளுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.

இரவு வீட்டுக்கு வருவதற்கு எத்தனை நேரமானாலும் தூங்கிப் போனாலும் அவர் வந்தவுடன் எப்படியோ அறிந்துகொண்டு அத்தனை தூக்கத்திலும் இருட்டில் அவரைத் தேடிக்கொண்டு வந்து, அவர் மார்பில் தூங்கிய குழந்தை. யாராவது அவரைப் பற்றி ஏதேனும் சொன்னால் ஒற்றை விரலை நீட்டி, ‘எங்க அப்பாவை இப்பிடிச் சொன்னீங்க, அடிச்சிருவேன்’ என்பாள். அந்தக் குழந்தை அவரை இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாள்.

அவளுக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத நிலையில், வாடகை வீட்டிலே இவள் இருப்பதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, ரகசியமாக அவர் செய்த காரியம், இன்று அவரைக் குற்றவாளியாக்கி இருக்கிறது. யாருக்காக அதைச் செய்தாரோ அந்த மூத்த பெண்ணே அவரைக் குற்றவாளியாக்கி, ஏதோ நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்து, தகாத குற்றம் செய்தவரை விசாரிப்பது போல் கேட்கிறாள்.
மனம் ஒடிந்து போனது அவருக்கு. பெற்ற குழந்தைகளில் அனைவரையும் சமமாகப் பாவித்தாலும் யார் சற்றே பலவீனமாக இருக்கிறார்களோ அந்தக் குழந்தையின் மேல் ஒரு தனிக் கவனமும் ஆதரவும் காட்டுவது இயல்பு. இதைப் புரிந்துகொள்ளாமல், யாருக்கும் எந்த துரோகமும் செய்யாத அவரை நன்கு புரிந்துகொண்டவர்கள், குழந்தைகள் என்னும் அவரது அசாத்திய நம்பிக்கை தகர்ந்து போனதில் ஏற்பட்ட அதிர்ச்சி.
மற்ற இரு குழந்தைகள் ஏதோ ஓரளவுக்கு அவர்கள் சுய தேவையை ஈடு செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். சமாளித்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை. ஆனால் பெரிய பெண் வாழ்க்கைச் சூழலைச் சமாளித்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறாளே, சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாமல். இன்னும் குழந்தைகளை வேறு படிக்க வைக்கணும் என்று யோசித்து, யாருக்கும் இப்போ சொல்லவேண்டாம் என்று நினைத்தது தப்பா?

வங்கியில் தங்களின் பாதுகாப்பு கருதி வைத்திருந்த பணத்தை எடுத்து, யாருக்கும் தெரியாமல் ஒரு நிலம் வாங்கினார். அதுவும் ஒரு வேளை பெரிய பெண்ணும் மாப்பிள்ளையும் இன்னும் நன்றாக உழைத்து அவர்களாகவே வாழ்க்கையில் உயர்ந்துவிட்டால், மகிழ்ச்சியோடு இப்போது வாங்கிய நிலத்தை மூன்று பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம்.
அப்படி ஒரு வேளை பெரிய பெண் இதே நிலையில் இருந்தால் மற்ற இரு பிள்ளைகளின் சம்மதத்தோடு பெரிய பெண்ணின் முன்னேற்றத்துக்காக கொடுக்கலாம் என்று எண்ணித்தானே வாங்கினார்?
சரி, இவளுக்கு எப்படிப் புரியவைப்பது? எல்லாவற்றையும் இவளிடம் சொன்னாலும் ‘நான் உழைச்சு முன்னுக்கு வருவேன்னு உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பாள். அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தார். “சரி விடுங்கப்பா, உங்க இஷ்டம். நான் யாரு உங்களைக் கேள்வி கேட்க? நீங்க செய்யிற எல்லாத்தையும் என்கிட்டே சொல்லணும்னு நான் எப்படி எதிர்பாக்கலாம்?” என்று சுய இரக்கம் ஆட்டிவைக்க, அவள் அலுத்துக்கொண்டிருந்தாள்.

அவருக்குத் தோன்றியது இவள் வளரவே இல்லை. அப்படியே இன்னமும் குழந்தையாய்த்தான் இருக்கிறாள். அவருக்கு ஒன்று புரிந்தது. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்னும் அறிவு உறைத்தது. அனுபவம் தரும் பாடம் அதற்கு ஈடே இல்லை. இவளுக்கும் அனுபவம் பாடம் சொல்லித் தரும் என்னும் நம்பிக்கை பிறந்தது.
அவளுக்குப் பதில் சொல்லவில்லை! வெந்து தணிந்த காடு புகைந்துகொண்டிருந்தது. அங்கே நிசப்தம் குடிகொண்டிருந்தது!

ஆனால் அனுபவமில்லாத இன்னொரு காடு, சுடும் என்று தெரியாமலே தனக்குள் அக்கினிக் குஞ்சை வைத்துக்கொண்டு வெந்துகொண்டிருக்கிறது.




அன்புடன்
தமிழ்த்தேனீ

No comments:

Post a Comment