Search This Blog

Sunday, January 17, 2016

புரியாத புதிர் கல் வட்டங்கள்

இந்த உலகத்தில் புதைந்து கிடக்கும் பல புதிர்களுக்கு இன்று வரை பதில்களே எட்டப்படவில்லை! நாம் வாழும் பூமியில், நம் முன்னோர் ஆக்கிய ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்துக்காக உருவாக்கப்பட்டவை, இன்று நமக்கு எதற்காக அவை ஆக்கப்பட்டது என்ற குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. கால காலமாய் ஆராய்சி செய்தி ஆராய்சியாளர்கள் சிலவற்றிற்கு பதில் தேடி தந்திருக்கிறார்கள். அப்படி புரியாத புதிர்களில் ஒன்று கல் வட்டங்கள். சில ஊர்களில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் திட்டுகளில் வட்ட வட்டமாக கற்களைக் கொண்டு வட்டம் அமைத்திருக்கிறார்கள். இதற்கு கல் வட்டம் என்று பெயர்.
இது போன்ற கல் வட்டங்கள் உலகத்தில் பல இடங்களில் உள்ளன. இந்த கல்வட்டம் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னம் என்று ஆய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள். இறந்தவர்களின் உடல் பகுதிகளை வைத்து அல்லது அவர்களின் நினைவாக எடுக்கப்படும் ஈமச்சின்னங்களின் மேற்பரப்பில், கற்பாறைகளைக் கொண்டு ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது. இது தரையின் மேற்பரப்பில் காணப்படும். இப்படி அமைக்கப்படும் கல்வட்டங்கள் ஈமச்சின்னங்களைப் பாதுகாக்கவும், அடையாளப்படுத்தும் அமைப்பாகவும் இது இருப்பதாக கருதப்படுகிறது. இத்தகைய கல்வட்டங்கள் அமைப்பதினால் பிற்காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பவர்கள், இதைத் தோண்டுவதில்லை என்று கருதப்படுகிறது. பெருங்கற்காலக் கல்வட்டங்களின் புதைந்த பகுதியில் தாழிகள், குழிகள், கற்பதுக்கைகள் போன்றவை காணப்படுகின்றன.
இது போது கல் வட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில இடங்களிலும் மேலும், தமிழகத்தில், கற்கள் கிடைக்காத ஆற்றுப் படுகைகள் தவிர, பிற பகுதிகளில் ஆயிரக்கணக்காண எண்ணிக்கையில் இவை காணப்படுகின்றன. குறிப்பாக சானூர், சித்தன்னவாசல் கொடுமணல், குப்பால் நத்தம்,ஆனைக்கரை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
இது போல கல்வட்டங்கள் உலக அளவில் மிக பிரமாண்டமான கல்வட்டங்களும் காணப்படுகின்றன. அவற்றில் சில சில்பரி மலை மற்றும்ஆவ்பரி கல் வட்டங்கள். சில்பரி மலை இங்கிலாந்தின் ‘சில்பரி’ என்னுமிடத்தில் ஒரு பிரமாண்டமான மலை இருக்கிறது. இதுவும் ஒரு கல்வட்டம் மாதிரிதான். அளவு தான் பிரமாண்டம்! சில்பரி மலை 40 மீட்டர் உயரமும், 167 மீட்டர் விட்டமும் கொண்டது. அதன் உச்சி தட்டையாக இருகிறது. அந்த தட்டையின்விட்டத்தின் பரப்பளவு 30 மீட்டர். இது 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த மலை இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் பலர் நினைத்தார்கள். ஆனால், இந்த சில்பரி மலையை தொடர்ந்து ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது. சுமார் 4750 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மலை கட்டப்பட்டிருக்கலாம். கி.மு. 2400 முதல் கி.மு. 2300 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மலை உருவாக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மலை ஏன்கட்டப்பட்டது? என்ன உபயோகத்திற்காக என்பதற்கான காரணம் மட்டும் தெரியவில்லை. முழுவதும் வெண்கட்டிக் கற்களால் கட்டப்பட்டது சில்பரி மலை. இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள இதைக் கட்டி முடிக்க 18 மில்லியன் மனித மணி நேரங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். தட்டையாக உள்ள அதன் மேல் பகுதி உருண்டை வடிவில் இருந்திருக்கலாம் என்றும் இடைப்பட்ட காலத்தில் அது ஏதேனும் கட்டடம் கட்டுவதற்காக தட்டையாக்கப் பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆவ்பரி கல் வட்டங்கள் சில்பரி மலைக்கு அருகில், வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் 100 டன்களுக்கும் அதிக எடையுள்ள நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வட்ட வடிவ அமைப்பில் 331 மீட்டர் விட்டமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. வட்டத்தை சுற்றியுள்ள கால்வாய் 21 மீட்டர் அகலமும், 11 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது. மொத்தம் 98 கற்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில 40 டன்னுக்கு மேல் எடையுடையதாக உள்ளன. வடக்கு பக்கமுள்ள உள் வட்டமானது 98 மீட்டர் விட்டம் உடையாதாக உள்ளது. இதில் உள்ள 4 கற்களில் 2 மட்டுமே நின்ற நிலையில் உள்ளது. தெற்கு பக்கமாக உள்ள வட்டமானது 108 மீட்டர் விட்டமுடையதாக உள்ளது. 5.5 மீட்டர் உயரமுள்ள ஒரு கல் நடுநாயகமாக நிறுவப்பட்டுள்ளது. இதுவும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த கல் வட்டமும் யார் அமைத்தார்கள்? ஏதற்காக அமைத்தார்கள் என்ற விவரங்கள் மட்டும் தெரியாத புதிராகவே இருக்கிறது.
-முற்றும்-

No comments:

Post a Comment