Search This Blog

Tuesday, December 15, 2015

போஸ்ட் மார்ட்டத்தின் சரித்திரம்


போஸ்ட்மார்ட்டம் என்பது இறந்தவர் உடலை அறுவை செய்து ஆராய்ந்து, மரணத்துக்கான காரணத்தைத் தீர்மானிப்பது. ஆட்டோப்ஸி, நெக்ரோப்ஸி, அப்டக்ஷன் என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இதைச் செய்யும் மருத்துவர் Pathologist. Forensic Autopsy என்பது சந்தேகத்துக்குரிய முறையில் மரணமுற்றவரை ஆராய்ந்து, அது நிகழ்ந்திருக்கும் விதத்தைச்சொல்வது. Clinical Autopsy என்பது நோய்வாய்ப்பட்டு இறந்தவரை ஆராய்ந்து மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது. போஸ்ட்மார்ட்டம் செய்ய இறந்தவரின் நெருங்கிய உறவினரிடம் எழுத்துபூர்வ ஒப்புதல் பெறுவர். முடிந்த பின் உடலைத் தைத்து திருப்பித் தருவார்கள்.
முதலில் போஸ்ட்மார்ட்டம் செய்தவர்கள் கற்கால வேட்டைக்காரர்கள், இறைச்சி வெட்டுபவர்கள், சமையல்காரர்கள்தாம். இவர்கள் மிருக உடல்களில் எந்த உறுப்புகள் உண்பதற்கு ஏற்றவை எனக் கண்டறிய போஸ்ட்மார்ட்டம் செய்தனர்.
பண்டைய பாபிலோனில் (கி.மு. 3,500) விலங்குகளின் உடல்கள் அறுக்கப்பட்டன, ஒரு விசித்திரக் காரணத்துக்காக. அவற்றின் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் புனித ஆவிகளின் செய்திகள் எழுதப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் எதிர்காலத்தை அறிய முடியும் எனவும் அவர்கள் நம்பினர்.
கி.மு 4ம் நூற்றாண்டில் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் நரம்புகளையும், தசைநார்களையும், ரத்தக்குழாய்களையும் படங்களாக வரைந்தார். கி.மு 300ல் கிரேக்க மருத்துவர்களான ஹெரோஃபிலஸ், எராசிஸ்ட்ரடஸ் இருவரும், இறந்த உடல்களை அறுத்துப் பார்த்து உறுப்புகளையும் நரம்புகளையும் படம் போட்டனர்.
2ம் நூற்றாண்டில் ஹிப்போக்ரேடஸின் சீடரான கிரேக்க மருத்துவர் காலென், உடல்களை அறுத்து நோய்க்கூறுகளை ஆராய்ந்தார். அப்போது மனித உடலை அறுப்பது தடை செய்யப்பட்டிருந்ததால், அவர் பெரும்பாலும் மிருகங்களையே ஆராயப் பயன்படுத்தினார். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மரணித்த க்ளேடியேட்டர்களின் உடல்களைப் பெற்றும் ஆராய்ச்சி செய்தார். பிரமாண்ட ஜனத்திரள் முன் இதை ஒரு கலை நிகழ்ச்சி போல் செய்தார் காலென். ஒரு பன்றியின் தண்டுவட இயக்கத்தை விளக்க, அதைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெட்டுவார். முதலில் அதன் கால்கள் செயலிழக்கும், பின்னர் மேல்பகுதியின் முன்பக்கம், கடைசியாய் உயிர் மொத்தமும் துடித்தடங்கும்.
காலென் மனித உடல் குறித்து 434 பாகங்கள் கொண்ட ஒரு பிரமாண்ட நூலை எழுதினார். அடுத்த 1300 ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் அதுவே உடற்கூறியலின் பைபிளாக இருந்தது.
என்னதான் முன்னோடியாக இருந்தாலும், அவரது கண்டுபிடிப்புகளில் நிறைய குறைகளும் பிழைகளும் இருந்தன. உதாரணமாக, உடலில் ஆன்மா எங்கே இருக்கிறதெனக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தார்!
பண்டைய எகிப்தியர்கள் சடலங்களிலிருந்து சில உறுப்புகளை மட்டும் எடுத்துப் பாதுகாத்தனர். பண்டைய கிரேக்கர்களும் இந்தியர்களும் பிணங்களை ஏதும் செய்யாமல் அப்படியே எரியூட்டினர். பண்டைய ரோமானியர்கள், சீனர்களுக்கு பிணத்தை அறுக்க மதத் தடை இருந்தது.
13ம் நூற்றாண்டில் இரண்டாம் ஃப்ரெட்ரிக், ‘மரண தண்டனை பெற்ற இரு கிரிமினல்களின் உடல்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டும்’ என சட்டம் பிறப்பித்தார். அதில் நடக்கும் பிரேதப் பரிசோதனையை அனைத்து மருத்துவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 1302ல் பொளங்கா பல்கலைக்கழகத்தில் மாஜிஸ்ட்ரேட் உத்தரவுப்படி முதல்முறை ஃபாரன்ஸிக் போஸ்ட்மார்ட்டம் நடத்தப்பட்டது. 1315ல் மான்டினோ டி லியூஸ்ஸி முதல்முறையாக மக்கள் முன்னிலையில் போஸ்ட்மார்ட்டம் நிகழ்த்தினார். 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல இடங்களில் பிணமறுப்பது குற்றமெனக் கருதப்பட்டதால் மருத்துவ மாணவர்கள் பிணங்களைத் திருடினர். சிலர் மாட்டிக் கொண்டனர்! 15ம் நூற்றாண்டின் இறுதியில் போப் ஏழாம் சிக்ஸ்டஸ், மருத்துவ மாணவர்கள் உடல்களை அறுப்பதை அங்கீகரித்து உத்தரவிட்டார்.
16ம் நூற்றாண்டில் பெல்ஜிய மருத்துவர் ஆன்ட்ரியாஸ் வெசாலியஸ் பிரேதத்தை அடுக்கடுக்காக உரித்து மனித உடலமைப்பை ஆவணப்படுத்தினார். காலெனின் கண்டுபிடிப்புகளுக்கு எதிராக புறப்பட்ட முதல் குரல் இது. இதனால் இவர் பலத்த எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருந்தது. இவர் தனது பிரேத பரிசோதனைக்கண்டுபிடிப்புகளை வரைந்து தொகுத்து De Fabrica Corpora Humani என்ற நூலாக்கினார். காலெனைப் போல் இவரும் பொதுமக்களுக்கு போஸ்ட்மார்ட்டம்களை ஒரு கண்காட்சியாக நிகழ்த்தினார். இறந்த உடலுக்குள் கைகளைச் செலுத்தி, இதயத்தை வெளியே எடுத்துக் காட்டி ஆச்சரியப்படுத்தினார்.
1533ல் ஹிஸ்பேனொலா கத்தோலிக்க தேவாலயம், ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் (மாற்றான்!) ஜோவனா, மெல்ஷியோரா இருவருக்கும் ஒரே பொது ஆன்மா இருந்ததா என போஸ்ட்மார்ட்டம் செய்து கண்டுபிடிக்க ஆணையிட்டது. அறுத்துப் பார்த்ததில் இரண்டு தனித்தனி இதயங்கள் இருக்கவே, இரு ஆன்மாக்கள் இருந்ததாக முடிவு கட்டினர். (கிரேக்க தத்துவஞானி எம்பெடாக்கிள்ஸ் கருத்துப்படி, ஆன்மா இதயத்தில்தான் குடி கொண்டுள்ளது).
லியனார்டோ டாவின்சி 30 உடல்களை அறுத்துப் பரிசோதித்து அதனடிப்படையில் அசாதாரண உடற்கூறியல் குறித்து எழுதினார். ஓவியர் மைக்கேலேஞ்சலோவும் பல பிரேதப் பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
16ம் நூற்றாண்டு வரை இங்கிலாந்தில் ஆட்டோப்ஸி தடை செய்யப்பட்டிருந்தது. பின், சில குறிப்பிட்ட மருத்துவக் குழுக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களும் ஆண்டுக்கு 10 பிணங்கள் என்ற ரேஷன் முறையில்தான் அறுக்க வேண்டும். பின்பு, தொடர் கோரிக்கைகளால் 1752ம் ஆண்டில், ‘மரண தண்டனை பெற்றவர் உடல்களை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தலாம்’ என அனுமதி தரப்பட்டது.
19ம் நூற்றாண்டில் மருத்துவக் கல்லூரிகளின் அதீதப் பெருக்கத்தின் காரணமாக, ஆராய்ச்சிப் பிணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கள்ள மார்க்கெட்டில் பிணங்கள், உடல் உறுப்புகளை வாங்கி மாணவர்கள் படித்தனர். பிணத்திருட்டுகள் பெருகின. இதன் உச்சமாக 1827, 1828ல் பிரசித்தி பெற்ற புர்க் மற்றும் ஹார் கொலைகள் நிகழ்ந்தன. அதாவது, 17 பேரைக் கொன்று உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு விற்றது அம்பலமானது. 1832ல் உடற்கூறியல் சட்டம் பிறப்பிக்கப்பட்டு மருத்துவக்கல்வி பிரேதசப்ளையை முறைப்படுத்தியது.
19ம் நூற்றாண்டில் வியன்னாவின் அல்ஜெமெயின் க்ரான்கென்ஹாஸ் மேற்கத்திய உலகின் சிறந்த மருத்துவக்கூடமாகக் கருதப்பட்டது. கார்ல் ரோகிட்டன்ஸ்கியின் தலைமையில் இயங்கிய அதன் பேத்தாலஜி மையம் அதற்கு முக்கியக் காரணம். கிட்டத்தட்ட வியன்னாவில் இறந்த அத்தனை பேரின் உடலும் அங்கு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ரோகிட்டன்ஸ்கி தன் 45 வருட கால அனுபவத்தில் 30,000 ஆட்டோப்ஸிகள் செய்தார். பரிசோதனைகளில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தவில்லை என்பதால் அவரது சில முடிவுகள் பிழைபட்டதாய் இருந்தன.
அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் ருடால்ப் விர்ச்சௌ என்ற ஜெர்மானிய பேத்தாலஜிஸ்ட் தன் பிரேதப்பரிசோதனையில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தினார். நோய்த்தொற்று செல்களை ஆராயும் செல்லுலர் பேத்தாலஜியே இவர் ஆய்வின் அடிப்படை. இதனால் மருத்துவத் துறையில் மெல்ல மெல்ல வியன்னாவைப் பின்னுக்குத் தள்ளி பெர்லின் முன்னுக்கு வந்தது.
அக்காலத்தில் பெர்லினில் படித்த மாணவர்கள், பிற்பாடு வட அமெரிக்கா முழுக்க கைதேர்ந்த மருத்துவர்களாகப் பரவினர். அவர்களில் அமெரிக்கா, கனடாவில் பணியாற்றிய சர் வில்லியம் ஓஸ்லர் குறிப்பிடத் தகுந்தவர். ரோகிட்டன்ஸ்கி, விர்ச்சௌ இருவரிடமும் பயின்ற இவர் பிரேதப் பரிசோதனை அடிப்படையில் மருத்துவம் செய்தார். அந்திமக் காலத்தில், தனக்கு போஸ்ட்மார்ட்டம் செய்ய தனிக்குறிப்புகளும், அதன் முடிவு குறித்த அனுமானங்களையும் எழுதி வைத்தார். இறந்த பின் அவர் பிரேதத்தைப் பரிசோதித்தபோது அது சரியாக இருந்தது!
20ம் நூற்றாண்டு பிரேதப்பரிசோதனைகளில் பல முக்கிய முன்னேற்றங்களைக் கொண்டுவந்தது. 1987ல் விஷத்தை ஆராயும் டாக்ஸிக்காலஜி முறை மூலம் ஓஹியோவில் நடத்தப்பட்ட ஒரு பிரேதப்பரிசோதனையில் முதல்முறையாக சயனைடு மூலம் மரணம் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2005 முதல் 2007 வரை இத்தாலியில் 5300 வருடத்திற்கு முந்தைய டூட் அரசன், ஓயெட்ஸி இருவரது சடலங்களையும் சிடி ஸ்கேன் செய்து பிரேதப்பரிசோதனை செய்ததில், ‘அவர்கள் கொலை செய்யப்படவில்லை, நோய் வந்த கால்களின் காரணமாகவே மரணம் நிகழ்ந்திருக்கிறது’ என்று தெரியவந்தது. சரித்திரம் திருத்தி எழுதப்பட்டது.
21ம் நூற்றாண்டில் கணிப்பொறி மூலம் கிராஃபிக் பிம்பங்களாக மனித உடல் உறுப்புகள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. 2000ல் துவங்கப்பட்ட இங்கிலாந்தின் பெனின்சுலா மருத்துவக் கல்லூரி முதல்முறையாக பிரேதங்கள் பயன்படுத்தாமல் இம்முறையில் மாணவர்களுக்கு உடற்கூறியலைக் கற்பித்தது.
2010ல் ஜெய்ப்பூரில் மானஸ் தியோ என்பவர் கார் விபத்துக்குள்ளாகி, சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாக மருத்துவசான்றளிக்கப்பட்டு, பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட அங்கு ஆட்டோப்ஸி டேபிளில் எழுந்து உட்கார்ந்து விட்டார். 2007ல் வெனிசுலாவில் இதே போல் ஆட்டோப்ஸியில் உடம்பில் கத்தி வைத்துக் கீறிய வலியில், பிணமாகக் கருதப்பட்டவர் எழுந்து அதிர்ச்சியூட்டினார். கொலையில், தற்கொலையில், விபத்தில், நோயில், சடலச்சோதனை சாஸ்வதமாகும்.
.
Stats சவீதா
# கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்காவில் போஸ்ட்மார்ட்டம் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது
# அமெரிக்காவில் 60% தற்கொலைகள் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படுகின்றன.
# 15 முதல் 24 வயதுக்காரர்களின் மரணங்களே அதிகம் ஆட்டோப்ஸி செய்யப்படுகின்றன.
# 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரணங்களில் 0.8% மட்டுமே ஆட்டோப்ஸி நடக்கிறது.
.
நன்றி - குங்குமம்
.
குறிப்பு:
.
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.
சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.
உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.
.
ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?
இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
.
கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
.
சரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் பொழுது கண்டிப்பாக அனைத்து வியாதிகளியிலிருந்தும் நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொண்டு ஆரோக்யமாக வாழ முடியும்.
.
(http://reghahealthcare.blogspot.in/…/08/to-live-healthy.html)
.

No comments:

Post a Comment