Search This Blog

Monday, November 16, 2015

"குதிரை இல்லாத ராஜகுமாரன்" ராஜாஜி சிறப்பான ஆய்வுரை

ஈழத் தமிழன் தன் இருப்புகளைத் தொலைத்துவிட்டு இருப்பவற்றைக் கட்டிக்காப்பாற்றிக் கொள்ளத் தனக்கென்று ஓர் முகமூடியை அதுவும் அரை விலைக்கு வாங்கி அணிந்துகொண்டு உலகம் முழுக்க அங்கலாய்த்துக் கொண்டு திரியும் காலமிது. நாட்டை இழந்து, மொழியை மறந்து, உறவுகளைப் பிரிந்து இழக்க ஒன்றுமே இல்லாத நிலையில் வெளிநாட்டுத் தமிழர் தாம் வாழ்வை நினைக்காமல் வேரறுந்த விழுதுளாய் வாழத் தொடங்கிய புலம்பெயர் வாழ்வில் குன்றின் விளக்காய்ச் சில மனிதர்கள் .ராஜாஜி அவர்களைப்போல் வாழத்தான் செய்கின்றார்கள்.
.
தன்னைப் பலவீனப் படுத்தியாவது மற்றவர்களின் பலத்தை முன்னுக்குக் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர் நண்பர் ராஜாஜி அவர்கள் என்பதனை அவரது எழுத்துகளில் மட்டும் அல்ல நேரடி வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதனைப் பலவடிவங்களில் பலரிடம் வெளிப்படுத்தி இருப்பதைப் பார்த்துள்ளேன். 40 வருட அவரது இலக்கிய வாழ்வில் 4 வருடங்களுக்குக்குறைவாகவே என்னுடன் அறிமுகமாகியவர் இந்த நூலாசிரியர். 
.
தனக்கே உரிய பாணியில் கதைகள் சொல்லுவது ஒரு வகை.. பிறருக்கு உகந்த பாணியில் சொலலுவது இன்னொரு வகை. ஆனால் இரண்டையும் குழைத்து இன்றைய உலகிற்கு ஏற்ற பாணியில் சொல்லி இருப்பது அனைத்தும் அவரது 7ம் அறிவியல் சார்ந்த அனுபவ உண்மைகள் ஆகும். . 
.
.மனம் திறத்தல், மனம் திருப்புதல் என்ற உளவியல் கோட்பாட்டின் அடிப்படையில் அவரது ஆழ்மனது அவரிடமே தமிழ்ப் பிச்சைகேட்டுக் கேட்டு இந்த இராஜ குமாரனை வெளிக் கொண்டு வந்திருதுக்கின்றது. இவர் கடன்பட்டது தமிழிடம் என்றால் அந்தமொழி இவரிடம் தன்னை அழகு படுத்தியது இந்தச் சிறுகதைத் தொகுப்பில்தான். 
.
.மானுட மனத்தின் மற்றடற்ற விருப்புக்களைக் கட்டற்ற தேவைக்குள் ஈர்த்துககொண்ட நடைமுறைச் சமுதாயத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நுணுக்கமுறக் கண்டறிந்து ஆக்கமுற்று ஆர்ப்பரிக்கின்றது இந்த முத்து. காலத்தை இவர் எழுதி வரலாற்றை வாழவைபதைப்போலவே வரலாறும் தன் காலத்தில் இவரது எழுத்துக்களை நிட்சயமாக வாழவைக்கும். 
.
கடல் கடந்தான் தமிழன், கற்பூர தீபம் கண்டான் .இறைவன் என்பதுபோல விட்டகுறையையும், தொட்ட குறையையும் தொடர்ந்து தாம் வாழும் நாட்டில் கட்டிக்காப்பவர்கள் தமிழர்கள். அந்த வகையில் ஈழத்தில் விட்ட எழுத்தின் குறையைத் தான் வாழும் கனடிய நாட்டில் தொடரந்து செய்பவர். அப்பால் விடுபட்டுப்போன எழுத்து வடிவங்களையும், பேச்சு வடிவங்களையும் நடைமுறையில் அமைத்துக் காட்டி வாசிப்பவர்களை ஈழத்தின் அந்தந்த இடங்களில் உட்காரவைத்து விருந்து படைத்திருக்கும் இந்த எழுத்தாளன் பழமை பேணுவதற்குள் சென்று புதுமைகளை மெதுமையாகக் காதலி காதிற்குள் சொல்லும் இரகசியம்போல் இனிப்பாக்கியுள்ளார். அதனால் நூலைத் திறந்ததும் மூடமனமின்றி விரித்தபடி வைத்துவிட்டு, வந்துவந்து பார்த்தபடி வாசித்தும் பழக்கப்பட்டவன் நான். 
.
எதிரிகள் விடும் அம்புகளுக்காய் இவரும் எதிர்த்து அம்புகள் செய்வதில்லை. மாறாகக் கேடையங்களைச் செய்து தன்னையும் பாதுகாத்து எதிரிகள் இருந்தால் அவர்களையும் இன்முகம் காட்டி நண்ராக்குவதே இவரது பெருங்குணம். உள்ளங்களைக் கவர்ந்து நண்பர்களையும் , கலை, இலக்கிய அன்பர்களையும் தன்சிறையில் எப்பவும் பத்திமாக வைத்திருப்பவர். 
.
.இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறுகதைகளும் உலகியல் வாழவின் வழுமியங்களோடு தங்களை இணைத்துக்கொண்டு தடங்கலற்றுச் செல்கின்றன. கிராமம், சமூகம், உறவுகள் தத்துவங்கள் எனச் சமூக அங்கங்களைக் கிளைபிரித்துக் காடட்டி ஒவ்வொரு கிளைக்கும் மகுடம்சூட்டி மக்களை இனம்காண வைத்துள்ளார் இந்த எழுத்தாளர். 
.
.காதல் இரசனையை வள்ளுவர் அனிச்சத்திற்கு ஒப்பிட்டார். ஆனால் இந்த எழுத்தாளர் அதைவிட மென்மையாகப பல இடங்களி;ல பல பக்கங்களை எம்மைத் தன்னுடன் நகர்த்தியுள்ளார். தையல்போட நூல் கிடைக்காத வறுமையின் அடிமட்டத்தில் தன் கிழிந்த பாவாடைக்கு முடிச்சுப் போட்டுக் கிலுட்டு மூக்குத்தியைக் கடற்கரையில் தொலைத்துக் காதல் கொண்டவர்கள் இன்றும் அந்த மணணில் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றார்கள். 
.
.அடுப்படி ருசியும், அரிசிப்பல் சிரிப்பும் காட்டிக் காப்புக்கைச் சாப்பாடும், சங்கத் தமிழ் சொன்ன களவியற் பண்பிற்குச் சற்றும் மாறாது அகத்திணை ஒழுக்கங்களை அள்ளி வீசும் ஆற்றலை எழுதுவதில் இவரிடம் தோற்றவர்கள் ஏராளம். தன் முகவுரையில் காதலையும், செக்சையும் அள்ளி மெழுகிகிருப்பதாகப் பலர் பேசக்கூடும் என்று எழுதியிருக்கின்றார். என்னைப் பொறுத்த வரையில் அது சலனம் இன்றியே கதைகளில் பயணிக்கின்றன என்பதுவே உண்மையாகிறது. 
.
தன் அனுபவங்களைப் பெரிசுபடுத்திக் கொள்ளாமல் "குதிரை இல்லாத ராஜகுமாரன்" என்ற சிறுகதையில் ஒரு தலைமைப் பாத்திரத்தை அவன் என்று அழைக்கின்றார். இந்த அவன் யாராகஇருக்கும் என்று யோசித்துப் பாரத்தேன். அது இவராகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு......அதில் வரும் அவன் புகையிரதம் வெளிக்கிட்டதும் ஓடி வந்து ஏறுகிறான் என்று குறிப்பிட்டிருப்பார். அந்தக்காலத்தில் கொழும்பில் அப்படிப் பிசியாக இருந்தவர் இவராகத்தான் இருக்க முடியும். இதன் காரணங்கள் இவர்தான் அந்த ராஜகுமாரனோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. இன்னொரு கதையில் வரும் இவன் என்பதுவும் அவர்தானோ? 
.
.இந் நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கதைகளில் இருந்தும் சிலவற்றை உதாரணமாகக் கூறிக் காட்டுவது மற்றைய கதைகளின் தரத்தைக் குறைத்துவிடும் என்று வாசகர்கள் எண்ணிவிடலாம் என்பதற்காக முழு நூலின் பண்பையும் எனதுபோக்கில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். 
.
கங்கைமகன் என்பது ஒரு பல்கலைக் கழகமாக இருந்தால் ஒவ்வொரு கதைக்கும ஒவ்வொரு முனைவர் பட்டத்தைப் பெறும் தகுதியைத் திரு ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் பெற்றிருப்பார் என்பது வெள்ளிடை மலையாய் நிமிர்ந்து நிற்கின்றது. ஒரு மனிதனின் ஆக்கம் ஒருவனை மனிதன் ஆக்கும் என்ற எனது கருத்துப்படி இவரது கதைகள் பலரை மனிதர்கள் ஆக்கும் என்பதுவே எனது எண்ணமாகும். 
.
.இது எனது முடிந்த அளவிலான ஆய்வே தவிர முழுமையான ஆய்வு அல்ல என்பதனை எனது கருத்தாகவைத்து இவர் மேலும் பல நூல்களை வெளியிட்டுத் தரணியில் தனியிடம் பெறவேண்டும் என்பதுவே என் பேரவாவாகும். 
.
அன்புடன்
கங்கைமகன்