Search This Blog

Monday, November 23, 2015

புத்திர தோஷம் பற்றியும், அதற்கான பரிகாரம் !!!


நாகதோஷத்தை நீக்கும்
ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும், குழந்தை பாக்கியம் இருக்காது. மேலும் சகல செல்வங்களும் படிப்படியாக குறையும் என்கிறார்கள். ஒருவர், நாக சதுர்த்தி தினத்தன்று வயலில் ஏர் இறங்கி உழுதார். அப்போது சில பாம்பு குட்டிகள் ஏரில் சிக்கி இறந்துவிட்டன. கோபம் கொண்ட தாய் நாகம், அந்த குடும்பத்தையே கொன்றது.
ஆனால் அவரது ஒரு மகள் மட்டும் தப்பினாள். பக்கத்து கிராமத்தில் வசித்த அவள், தனது வீட்டு சுவரில் நாகத்தின் படம் ஒன்றை வரைந்து அதை பயபக்தியுடன் வணங்கி வந்தாள். இதை கண்ட தாய் நாகம், அவளை தீண்டாமல் மனம் மாறி திரும்பியது. திரும்பும்போது, அந்த பெண்ணிடம், `என்ன வரம் வேண்டும்' என்று கேட்டது.
`நீ தீண்டியதால் இறந்த என் குடும்பத்தினர் மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டும் என்று கேட்டாள் அந்த பெண். தாய் நாகம் மனம் இரங்கி, அந்த குடும்பத்தினரை உயிர்பிழைக்கச்செய்தது. மேலும், நாக சதுர்த்தி தினத்தில் உன்னை யாரெல்லாம் பூஜிக்கிறார்களோ அவர்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்கள் என்றும் நல்வழி காட்டியது.
நாகதோஷம் உள்ளவர்கள் நாக சதுர்த்தி நாளில், ஏதாவது ஒரு கோவிலில் நாகம் வெள்ளி அல்லது கல்லால் ஆன நாகத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது. அவ்வாறு செய்து வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். தடைப்பட்ட திருமணம் நடைபெறும். இது வரை இல்லாமல் இருந்த குழந்தை பாக்கியமும் கிட்டும். வாழ்க்கையில் அனைத்துவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும்
புத்திர தோஷம் பற்றியும், அதற்கான பரிகாரம்
பலன்களையும் பார்ப்போம். ஒருவருக்கு ஜாதகம் கணித்து பலன்களைச் சொல்லும் பொழுது, ஜோதிடர்கள் பதவி பூர்வ புண்ணியனாம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நம்முடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அல்லது கர்ம வினைப்படியே, இந்த ஜென்மத்திற்கான பாக்கியம், யோகம் முதலியன கிட்டும். மனிதனாகப் பிறந்தவன், பிறப்பின் அர்த்தமான சந்ததியைப் பெருக்க வேண்டும். அதனால் தான், திருமணத்தின்போது மணமக்களை வாழ்த்த, `பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க'' என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
பதினாறு பேறுகள் என்பது, பதினாறு வகையான பாக்கியத்தைக் குறிக்கும். இந்த பேறுகள் வாழ்க்கையில், எல்லோருக்கும் கிட்டி விடுவதில்லை. சில கிடைக்கும், சில கிடைக்காது, பதினாறு பேறுகளில் தலையாய பேறாகச் சொல்லப்படுவது புத்திரப்பேறு.
மற்ற பேறுகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, புத்திரப்பேறு கண்டிப்பாக அவசியமானது என்று கருதப்படுகிறது. காரணம், அதுவே மனித வாழ்வின் அர்த்தமாகச் சொல்லப்படுகிறது. அதனால் தான் அபிராமி பட்டர் கூட `தவறாத சந்தானம் வேண்டும்'' என்று அபிராமியிடம் வேண்டுகிறார்.
திருமணமான 10 மாதத்தில் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து விடுகிறது. சிலருக்கு 2,3 வருடங்கள் கழித்து குழந்தை பிறக்கிறது. இன்னும் சிலருக்கு 8,10, 12 ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. சிலருக்கு கர்ப்பம் தரித்தாலும் குழந்தை நிலைப்பதில்லை. இடையிலேயே கருச்சிதைவு ஏற்படுகிறது.
சிலருக்கு குழந்தைப் பேறே கிடைப்பதில்லை. இதற்கு என்ன காரணம் என்று அலசி, ஆராயும் போது, ஜோதிட சாஸ்திரம் கர்ம வினையைச் சுட்டிக் காட்டுகிறது. அந்த வினைப்படி தான் புத்திர பாக்கியம் கிட்டுகிறது. புத்திர பாக்கியம் கிட்டாதவர். புத்திரதோஷம் உடையவராகக் கருதப்படுகிறார்.
சென்ற பிறவியில் பெற்றோரைக் கொடுமைப்படுத்தியதால் பித்ரு சாபம் ஏற்படுகிறது. இதனால் இப்பிறவியில் பெற்றோரோடும், பிள்ளைகளோடும், அமைதியான வாழ்க்கை வாழ முடியாமல், தனித்து, தவித்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.
இல்லையென்றால் உறவுகளோடு வாழ்ந்தாலும், உதாசீனமும், அவமானமும் அனுதினமும் நடக்கும். உடன் பிறந்தவர்களுக்கு சேர வேண்டிய சொத்து, சுகங்களைத் தராமல், தானே அபகரித்த வாழ்ந்தாலும், அதனால் புத்திர தோஷம் ஏற்படும்.
பூர்வீக சொத்துப் பிரச்சனையில், அதற்கு உரிய உறவுகளுக்கு உரிய பங்கைத் தராமல் போனாலும், உறவுப்பகை, புத்திரர்களால் பகை, அவமரியாதை உருவாகும். இதன் விளைவாக, இப்பிறவியில் தான் பெற்ற பெண், கண்முன்னே வாழாவெட்டியாக வந்த நிற்பதையும், விவாகரத்து பெற்று வாழ்க்கையில் இருந்து விலகி நிற்பதையும் வேதனையுடன் பார்க்க வேண்டிவரும்.
முற்பிறவியில் ஆன்மீக அடியவர்களை, மகான்களை அவமானப்படுத்தியிருந்தால், புத்திர தோஷம் ஏற்பட்டு, பிறக்கும் குழந்தை வளர்ச்சியற்ற குழந்தையாக, ஊனமுற்ற குழந்தையாகப் பிறக்கும். கூன், குருடு, செவிடு போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறக்கும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மந்திர சாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷமும் உண்டு. இந்த தோஷத்திற்கு ஆட்பட்டவர்கள். வாழ்வில் எதிர்மறையான காரியங்களையே செய்வார்கள். வேண்டாதவர்களைப் பழி தீர்க்க பில்லி, சூனியம் வைப்பார்கள். மறந்தும் குலதெய்வத்தை வணங்கி விட மாட்டார்கள்.
இதன் பலனாக அமானுஷய நோய்கள் அதாவது புகழ் பெற்ற மருத்துவர்களுக்கும் புலப்படாத நோய்கள் ஏற்படும். பிள்ளைகள் மூலமாக தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். செய்தொழில் சிறக்காது. செர்ந்த பணம் நிலைக்காது.
அமைதி என்பது மருந்துக்கும் இருக்காது. எனவே புத்திரதோஷம் உள்ளவர்கள், சென்ற பிறவியிலோ, இந்தப் பிறவியிலோ அறிந்தும், அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி, திருந்தி உரிய பரிகாரம் செய்தால், கெடு பலன்களின் கடுமையைக் குறைத்துக் கொள்ளலாம்.
இனி ஜோதிட ரீதியாக புத்திர தோஷத்தை ஆராயலாம். ஜெனன கால ஜாதகத்தின்படி பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது 5-ஆம் இடமாகும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால், ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது.
5-ஆம் இடத்தில் உள்ள பாவக்கிரகங்களை, சுபகிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபக் கிரகங்கள் வேறுபடும்) குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5-ஆம் இடத்திற்கு உரிய கிரகம், பாவக் கிரகங் களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். 5-க்கு உரியகிரகம், 8-இல் மறைந்திருந்தாலும் தோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 5-க்கு உரிய கிரகம், லக்னத்திற்கு 3-இல் இருந்தால் சந்தான தோ`ம் உண்டாகும். 5-க்கு உரிய கிரகம் 6,7,8-இல் 4 இருந்தாலும் புத்திர தோஷம் உண்டு. 12-இல் இருந்தால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், 5-க்கு உரியவன் 3,6,7,8,12- இல் இருந்தால், புத்திரதோஷம் ஏற்படும்.
லக்கினத்திற்கு 10-க்கு உடையவன். 8-இல் இருந்தாலும் சந்தான தோஷம் உருவாகும். லக்னாதிபதி புதனாக இருந்து சந்திரன் 10-இல் இருந்து, சுக்கிரன் 7-லிலும், 4-ஆம் இடத்தில் ஏதாவது ஒரு பாவக்கிரகம் இருந்தால், வம்சம் விருத்தியாகாது.
பிரம்மஹத்தி தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள்
பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீயபலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச்சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம்.
பிரம்மஹத்தி தோஷம் பற்றியும், அதற்கான பரிகார பலன்களையும் பார்ப்போம். ஐந்து மகாபாதகங்களைச் செய்பவர்கள் கொடூர நரகத்தில் சிக்கி அல்லல்படுவர். அவர்களோ இப்பூமியில் திரும்ப திரும்ப பிறப்பெடுப்பர் என்று சொல்லப்படுகிறது.
ஐந்து மகாபாதகங்களில், மிகப்பெரிய பாதகமாகச் சொல்லப்படுவது ஒரு தர்ம ஆத்மாவைக் (உயர்நிலை ஆத்மா) கொல்வது. சாதாரணமாக பிரம்மஹத்தி என்ற சொல்லிற்கு பிரம்ம என்றால் பிரம்மன், பிராமணன் என்றும் ஹத்தி என்றால் கொல்லுதல் என்றும் பொருள். பிரம்மனை நோக்கி, தேடிச் செல்பவனை பிராமணன் என்றும் சொல்கிறார்கள்.
பிராமணன் என்றழைக்கப்படுபவன் - பிறப்பினால் அல்ல, தன்னுடைய ஆன்மீக அர்ப்பணிப்பால் உயர்ந்தவன் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மீக ஒளிபொருந்திய தெய்வீக உடலைச் சிதைத்தால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. பிராமணனை (ஆன்மீகவாதியை, தர்ம ஆத்மாவை) கொல்வது பிரம்மஹத்தி தோஷம் என்று சுருக்கமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
பிராமணனைக் கொன்றால் மட்டுமல்ல, குருவைக் கொன்றவன், குரு பத்தினியை அடைந்தவன். பெற்ற தாயைக் கொன்றவன், பெண்களைக் கொடூரமாகச் சிதைப்பவன், தங்கம் திருடியவன் ஆகியோருக்கெல்லாம் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இந்த தோஷம் ஏற்பட்டால், வாழ்க்கை என்பது நரகமாக, சித்ரவதைக் கூடமாகவே அமையும், துன்பம் என்றால் அப்படியொரு துன்பத்தை அனுபவிப்பார்கள். அதுவும் தனது கடைசிகால வாழ்க்கையில் அவர்கள் படும் அவலத்தைக் காண சகிக்க முடியாது.
பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும். லக்னத்திற்கு 4-ஆம் இடத்தில் பாவிகள் இருந்து, 6,8. 12- இல் சுபக்கிரகங்கள் இருந்தாலும். பிரம்மஹத்தி தோஷம் உண்டு. அதாவது ஜாதகர் முன்ஜென்மத்தில் மிகப்பெரிய பாதகத்தைச் செய்திருப்பார் என்று சாஸ்திரம் சொல்கிறது.
ஒருவரின் ஜனன கால ஜாதகப்படி, லக்னத்திற்கு 5,8,9-ஆம் வீடுகளுக்கு அதிபதி பாவியாக இருந்தாலோ அல்லது பாவியர்களுடன் இருந்தாலோ பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். தோஷத்தின் வெளிப்பாடாக ஜாதகருக்கு ஏதாவது ஒரு கொடிய நோய் வரலாம்.
சந்ததி இருக்காது. மணவாழ்க்கை இனிக்காது. ராகு தங்கிய வீட்டிலிருந்து 5,9-ஆம் இடங்களில் சனியும், வியாழனும் சேர்ந்து இருந்தாலும் சண்டாளன் ஆவான். சனியும், வியாழனும் சேர்ந்திருப்பது நல்லதல்ல. சனி, வியாழன் சேர்க்கையும் ஒரு பாதத்தில் அல்லது 10 டிகிரிக்குள் இருக்க வேண்டும்.
பிரம்மஹத்தி தோஷ சம்பவங்கள்
சிவன்:- பிரம்ம தேவனின், ஐந்து தலைகளில் ஒன்றை, சிவபெருமான் கிள்ளி எறிந்தார். கொய்த தலையை, கையில் எடுத்துக் கொண்டு அலைந்தார். இறுதியில் கண்டிïர் திவ்விய தேசத்தை வந்தடைந்தார். ஸ்ரீமன் நாராயணனை வணங்கி, புஷ்கரணையில் மூழ்கி எழுந்தார்.
கையில் ஓட்டியிருந்த கபாலம் நீங்கியது. சிவபெருமானப் பீடித்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த இடம் சாப விமோசன பூமியாகக் கருதப்படுகிறது. அங்குள்ள புஷ்கரணியும், கபால தீர்த்தமாகப் போற்றப்படுகிறது.
இந்திரன் : ஒரு முறை, இந்திரன் விருத்ரசூரனை அழித்து விட்டான். இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. விருத்ரன், ஒரு பிராமணன் என்பதினால் தான். இந்திரனையும் பிரம்மஹத்தி தோஷம் சுற்றி வளைத்தது. தோஷத்தைப் போக்க இந்திரன் திருப்புளியங்குடி திவ்ய தேச தீர்த்தத்தில் நீராடினான். பூமிபாலரையும் வழிபட்டான். பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.
ராமாயணம் : -ராமாயண காவியத்தில், தசரதருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் எப்படி ஏற்பட்டது என்பது விளக்கப்பட்டுள்ளது. தசரதர், தனது இளம் வயதில் காட்டில் வேட்டையாடும்போது, கண் தெரியாத பெற்றோரைக் காப்பாற்றி வந்த ஓர் அந்தணனை அவன், தனது குடத்தில் தண்ணீர் எடுக்கும் ஓசையை வைத்து, யானை என நினைத்து, அம்பெய்திக் கொன்றுவிட்டார்.
அவருக்கு இடையில் ஏற்பட்ட இன்னல்களை வைத்து, அந்தணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. ராமரும், வேதம் அறிந்த, கலைகள் கற்ற இராவணனைக் கொன்றதற்காக, சேதுசமுத்திரக்கரையில், தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க `மணல் லிங்கம்'' வைத்து பரிகாரம் செய்ததாக இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரத்தலங்கள்
பிரம்மஹத்தி தோஷ ஜாதகர்கள், தங்களது பாவத்தைக் கழுவ, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூம்மூர்த்தி தலங்களுக்குச் சென்று வழிபடலாம். மூம்மூர்த்திகளும் சேர்ந்து காட்சிதந்து அருள்புரியும் திருச்சிக்கு அருகே உள்ள உத்தமர் கோயில். கொடுமுடி, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய ஆலயங்களிலும் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் ஆலயத்தில், ஸ்ரீ சக்ரத்தாழ்வார் சன்னிதிக்குச் சென்று சக்கரத் தாழ்வாரை வழிபட்டால் பாவங்கள், பாதகங்கள் நீங்கும். திருநள்ளாறு சென்று நீராடி, சனீஸ்வர பகவானை வழிபட்டும் தோஷத்தை நீக்கிக் கொள்ளலாம்.
திருப்புல்லாணி அருகே தேவிபட்டணத்தில் நவபாஷாணம் என்றழைக்கப்படும் சமூத்திரக் கரையில் ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவக்கிரகத்தை வழிபட்டு, பாவ நீக்கம் செய்து கொள்ளலாம். கலியுகத்தில், பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட ராமேஸ்வரம், மிக முக்கிய தலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ராமேஸ்வரம் சென்று, அக்னி தீர்த்தம் உட்பட, அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி, சங்கல்ப பூஜை செய்ய வேண்டும். ராமேஸ்வரத்திற்கு வீட்டிலிருந்து, நடைபயணம் செய்தால் மிக நல்லது.
பரிகார நடைமுறைகள் : - பரிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடி, சேர்ந்து செய்ய வேண்டும். குழந்தைகளையும் சேர்த்துத்தான் பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்யும் போது திருநீறு, திருமண், சந்தனம் அணிய வேண்டும். முழு நம்பிக்கையோடு ஈடுபாட்டோடு, ஒற்றுமையோடு பரிகாரம் செய்ய வேண்டும்.
வேதம் கற்றறிந்தவர்களுக்கு, ஆன்மீக அன்பர்களுக்கு தானம் செய்ய வேண்டும். சூரியன், உச்சிப் பொழுதிற்கு வருவதற்கு முன்பாகவே, பரிகாரங்களைச் செய்ய வேண்டும். மாலை, இரவு நேரங்களில் தெய்வ வழிபாடு செய்யலாமே தவிர, பரிகாரங்களைச் செய்யக் கூடாது.
விதிவிலக்காக அந்திக்குப் பிறகு செய்யக் கூடிய சில வழிபாடுகள், படையல்கள், பரிகாரங்களைப் பற்றியும் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. பரிகார பூஜையின் போது குடம், சொம்பில் தீர்த்தம் வைப்பர், பூஜை முடிந்த பின் அந்தத் தீர்த்தத்தைக் குடிப்பர்.
மீதமுள்ள தீர்த்தத்தை வீட்டில் உள்ள கிணற்றில் கொட்டலாம். வீட்டில் கிணறு இல்லாவிட்டால், அடுத்தநாள் காலையில் பாதுகாப்பாக வைத்திருந்து, தலையில் ஊற்றிக் குளிக்கலாம், எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டின் குளியல் அறையிலோ, சாக்கடையிலோ கொட்டி விடக் கூடாது. சுக்கில பட்சம் மற்றும் வளர்பிறை நாட்களில் செய்யும் பரிகாரம் சிறப்பானது.
கிரகத்தின் ஜனன மாதம், கிரகத்தின் கிழமை, கிரகத்தின் நட்சத்திரம் ஆகியன ஒன்று சேர்ந்த நாளாக இருந்தால், அது மிக மிக பரிகாரம் செய்ய உகந்த நாளாகும். புதனுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால், புதன், சிம்மத்தில் இருந்தால், சூரியனுக்குரிய ஞாயிறு அன்று செய்வது நல்லது.
ஜென்ம நட்சத்திரம் வரும் காலத்தில், சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் ஜென்ம நட்சத்திரமே சிறப்பானது. சுபமான காரியங்களுக்கு வளர்பிறையும் அதிகத் துன்பம் கொடுக்கும் விஷயங்களுக்கு கிருஷ்ணபட்சத்திலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்வதற்கு உகந்த இடங்களாக - குளக்கரை, ஆற்றங்கரை, கடற்கரை, சிவன், விஷ்ணு ஆலயங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
இருக்கும் வீட்டில் செய்யக் கூடியவைகள்- கணபதி ஹோமம், சுதர்சனஹோமம், நவக்கிர ஹோமம் மற்றும் லட்சுமி நாராயணபூஜை ஆகியனவாகும். பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள், உரிய பரிகார பூஜை செய்து, தோஷம் நீங்கி, அனைத்து வளங்களும் பெற தேவி ஸ்ரீ கருமாரியம்மன் அருள் புரிவாள்.