Search This Blog

Monday, October 19, 2015

காவற்பெண்டு
ஒரு பெண் தன்னைக் கொண்டாடுகிறாள்:

பெண் உடல் இயற்கையுடன் மிக நெருங்கிய தொடர்புடையது . பூப்பதும் கனிவதும் பலுகிப் பெருகுவதும் இயற்கையின் செயல் என்றால் பெண்ணும் அப்படியே . மாதாந்திர பெருக்கும் பேறுகாலக் குருதியும் பெண்ணை அச்சப்படுத்துவதில்லை . தாய்வழிச் சமூகக் அமைப்பில் பெண்ணின் பலுகிப் பெருகுதலும் பாலூட்டுதலும் ஆணுக்கு மர்மமாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது . ஆண் மையச்சமூகம் வலுபெற்றுவிட்ட காலத்தில் பெண்ணைத் தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டவளாக மாற்றுகிறான் . சங்க காலம் அப்படியான ஒரு காலமே . ஆனால் தாய்வழிச் சமூக எச்சங்கள் மிச்சமிருப்பதை சங்கப் பெண்பாற்புலவர்களின் பாடல்களின் வழியே உணரமுடியும் . பேறுகாலக் குருதியைக் கண்ணில் பார்த்து குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்க்க நினைக்கிற பெண், தன்னிலிருந்து உயிர்பெருகிற அத்தனை உயிர்களையும் காக்க நினைக்கிற பெண், போர் விரும்பாதவளாகத் தான் இருந்தாள்.

காதலும் போரும் என்பதாக இருந்தது சங்க காலம் . அருகிலிருக்கும் இன்னொரு இனக்குழுவின் நிலங்களை அபகரிக்கவோ தங்களுடைய நிலங்களைப் பாதுக்காக்கவோ போரிடவேண்டிய அவசியம் ஒவ்வொரு இனக்குழுவின் தலைவனாக இருக்கும் ஆணுக்கு இருந்தது . நிலத்தின் மீது கவனம் கொண்டிருந்த ஆணின் மனம் பெண்ணின் குழந்தை பிறப்பின் மீதும் கவனம் கொள்ளத் தொடங்கியது . அதன் விளைவே பெண்ணின் உடல் மீது செலுத்தப்படுகிற அதிகாரச் சொல்லாக கற்பு என்கிற சொல் மாறியது .தன்னுடைய வாரிசாக பெண் வயிற்றில் வளர்ந்து பிறக்கும் குழந்தை அவன் சேர்த்து வைத்த நிலத்திற்கு உரிமையாளனாகிறான். மேலும் அந்த நிலத்தைக் காப்பதற்காக போரிட வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது . இதற்காக அந்த தாயும் அவனுடைய உடல் வலிவை வளர்ப்பவளாக இருக்க வேண்டியது ஆகிறது . அதனாலேயே பெண்ணும் போரினை விரும்புவளாக காட்சிவழி காட்டப்படுகிறாள் . அகமும் புறமும் எனப் பகுக்கபட்டிருக்கும் சங்கப்பாடல்களில் பெரும்பாலும் பெண்ணின் மனம் அகம் சார்ந்த பாடல்களில் தான் அறிய இயலும் . புறப்பாடல்களிலும் கூட அகம் சார்ந்த உணர்வோ அல்லது பெண் உடல் பற்றிய தன்உணர்வோ இழையோடி இருப்பதைக் காண இயலும் .
காவற்பெண்டு என்கிற பெண்பாற்புலவரின் பாடல் ஒன்று
“ சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே “
பாடல் சொல்லும் செய்தியாக இரண்டு விதங்களில் உரைகள் எழுதப்பட்டிருக்கிறது .ஒன்று, இந்தப் பாடல் ஆண்பிள்ளையின் வீரத்தைப் பாடுவதாகக் கருத்தில் கொண்டு ஏறான்முல்லை என்கிற துறையின் கீழ் புறப்பாடலாகக் கருதப்படுகிறது . ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கக் கூடிய நாட்டில் இன்னும் போருக்கு ஆட்கள் தேவைப்படுகிற நிலையில் அரசனிடமிருந்து இந்த வீட்டிலிருக்கும் இளைஞனுக்கும் அழைப்பு வந்ததாகக் கொண்ட ஒரு காட்சி, தாய் ஒருத்தி குடிசையில் வசித்து வந்தாள் . ஒருவன் அவள் வீட்டுக்கு வந்து அந்த வீட்டின் தூணைப் பற்றி நின்று ” உன் மகன் எங்கே?” என்று கேட்டான். அப்போது அவள் சொல்கிறாள்.”என் மகன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. அவனை பெற்ற வயிறு, புலி தங்கிச் சென்ற குகை போல இங்கே இருக்கிறது. அவன் கட்டாயம் போர்க்களத்துக்குத் தானே வந்து நிற்பான் நீ செல், என்று சொல்வதாக உரை அமைந்துள்ளது.
இன்னொன்று , காதலரைப் பிரிந்த காதலி, காதலனின் வீடேறித் துணிவாக அவன் தாயிடம், ‘என்னைப் பிரிந்த உன் மகன் எங்கே’ என்று கேட்கிறாள்.
எனது சிறிய வீட்டின் தூணைப் பிடித்தவாறு உன் மகன் எங்குளான்? என்று கேட்கின்றாய்: அவன் எங்குள்ளானோ எனக்குத் தெரியாது. ஆயினும், புலி இருந்து பின்னர்ப் போகிய மலைக்குகை போல, அவனைச் சுமந்து பெற்ற வயிறும் இதோ! அவன் போர்க்களத்தில் தான் இருப்பான் என்று அவன் தாய் பதில் சொல்கிறாள் என்று புறப்பாடலில் அக உணர்வுடன் உரை அமைக்கப்பட்டுள்ளது .
முதலாவதில் பெண் போரினை விரும்புகிறவள் ஆகிறாள் . ஒரு பெண்ணின் தந்தை போர்க்களத்தில் முன்னொருநாள் யானையை வென்று இறந்து விடுகிறான் . அவளின் கணவன் பின்னொரு நாள் பசுக்கூட்டத்தை வென்று இறந்து போனான் . இப்போது போர் முரசு கேட்கிறது . உடனே தன்னுடைய சின்னஞ்சிறு மகனை ,வெள்ளாடை உடுத்தி, வேலினைக் கையில் கொடுத்து போருக்கு அனுப்புகிறாள் என்கிறார் ஒக்கூர் மாசாத்தியார். . மேலும் முதியவள் ஒருத்தி தன்னுடைய மகன் போர்க்களத்தில் புறமுதுகிட்டான் எனக் கேட்டு , அவன் அவ்வாறு செய்திருப்பின் அவனுக்குப் பாலூட்டிய முலையை அறுப்பேன் “ என்று வாளுடன் போர்க்களம் செல்கிறாள். அங்கே மார்பில் காயம்பட்டு இறந்து கிடக்கும் மகனைப் பார்த்து அவனைப் பெற்ற நாளிலும் மகிழ்ந்ததாக காக்கைப் பாடினியார் பாடுகிறார். இவை போன்ற பாடல்களுக்கு வலுச்சேர்ப்பது போல காவற்பெண்டின் அமைகிறது.
பெண் என்பவள் போரினை விரும்புகிறவள் அல்ல என்றபோதிலும் அடிப்படையில் பெண் என்பவள் மிக வலிமையானவள். எனவே ஆண்களை வழி நடத்துகிறவளாக இருக்கிறாள் . நிலத்தையும் குடும்பத்தையும் காக்கத் தேவையான உடல்வலிவும் மனவலிவும் ஏற்படும் வகையில் ஆணின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறவளாக அவனுடனிருக்கிறாள் . அவ்விதமே அவனுக்கு வீரம் சார்ந்த செயல்பாடுகளை பயிற்றுவிக்கிறாள்.
இரண்டாவது உரை வழியே இந்தப் பாடலைத் தொடர்ந்தால், புறப்பாடலில் இழையோடுகிற அக உணர்வை உணரமுடியும் . இன்றைக்கும் கிராமப் புறங்களில் தன்னுடைய முறைமாமன் உறவில் இருக்கும் ஆணைப் பற்றி அவனுடைய முதிய தாயிடம் வம்பு செய்கிற பெண்களைக் காணமுடியும் . உம்மகன் எங்கே காணோம் , வெட்டியா ஊர் சுத்த போயிட்டாரா , எப்படி இப்படி பொறுப்பில்லாம ஆம்பளப் புள்ளைய பெத்து வச்சிருக்கீங்க என மனதுக்குள் இருக்கும் அன்பை தன்னுடைய மெல்லிய புன்னகையில் மறைத்துக் கொண்டு கேட்கும் இளம் பெண்களுண்டு . அவர்களுக்கு “அட போடி நான் ஆம்பள சிங்கத்தைப் பெத்துவச்சிருக்கேன் , அவன் எங்கேயும் போயி தன்னோட பேரை நிறுத்தி வருவான் “என பதிலுக்கு அந்த பெண்களின் மனம் புரிந்தும் புரியாதது போல பேசுகிற தாய்களும் உண்டு . பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகி துடுக்காக கதாநாயகனின் அம்மாவிடன் அவர் மகனைப் பற்றி விசாரிப்பது போல காட்சிகள் அமைப்பட்டிருப்பது எல்லாம் இந்த நிலத்தின் நீட்சியே .
தந்தைமைச் சமூகத்தில் ஒரு காலக்கட்டம் வரையில் ஆண்குழந்தை பெற்றுக் கொள்வது என்பது அந்தப் பெண்ணுக்கு மிகப் பெரிய சமூக அங்கீகாரமாக இருந்தது . இன்றும் கூட பலரும் ஆண்குழந்தை பெற்றுக் கொள்வதன் மீதான தங்களுடைய விருப்பத்தை ரகசியமாக வைத்துகொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். கொள்ளிபோடவும் , பெயர் சொல்லவும் ஒரு ஆண்பிள்ளை வேண்டாமா என வெளிப்படையாக சொல்கிறவர்களும் இருக்கிறார்கள் .
ஒரு பெண் கருவுற்றவுடன் , ஆண் பிள்ளையாக பெற்றுத் தரவேண்டும் என அவள் சுற்றம் விருப்பம் கொள்கிறது . இப்படியான சூழலில் எழுதப்பட்ட
சுகந்தி சுப்ரமணியன் கவிதை,
இன்னும் பிறக்காத
உனக்கு
என் முத்தங்கள் .
உன்னுடன் வீட்டுப்
புல்வெளியில் விளையாடி ,
கவிதைகள் வாசித்துக் காட்டி ,
கதைகள் சொல்லி ,
நட்சத்திரம் காட்டி
பூரித்துவிட்டேன் மனசில்,
நீயும் கையசைத்து ,
கால் நீட்டி ,
உடல் முறித்து ,
என் வயிற்றுள்
உன் பரபரப்பைக் காட்டுகிறாய் .
வெளி உலகம்
பூவும் ,புல்வெளியும் ,
ரத்தமும் முட்களுமாய் .
அதுவும் நீ பெண்ணாயிருந்தால் ?
என்றாலுமென்ன ;
எப்போதுமிருக்கும்
என் முத்தங்கள்”
இந்தக் கவிதையின் குரல் கேட்பதற்கு பெண் மிக நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறாள் . பெண் குழந்தைகளைக் கொண்டாடுகிற மனதை சுகந்தி சுப்ரமணியம் இவ்விதமாகத் தொடங்கி வைத்திருக்கிறார்.
காவற்பெண்டு எழுதியுள்ள பாடலை நான் வேறு விதமாக பார்க்கிறேன் , அவர் ஆண்பிள்ளை பெற்றுக் கொண்டிருப்பதற்காக பெருமிதம் அடைகிறவளாகப் பார்க்கவில்லை .வேறு இனக்குழுவோடு போருக்கு செல்லும்வீரமகனைப் பெற்ற தாயாகவும் நினைக்கவில்லை . அவள் தன்னுடைய உடலை கொண்டாடுகிறவளாகப் பார்க்கிறேன் . சங்கச் சமூகத்தில் நிலம் சார்ந்த தொழில் செய்வதும் நிலத்தைக் காப்பதும் இயல்பு என்பதால் ஒரு ஆண் உடல் வலிவுடன் இருப்பதும் போர் செய்வதும் ஆச்சர்யம் ஒன்றுமில்லை . பெண் தன்னுடைய உடல் பற்றிய தன்னுணர்வுடன் இருக்கிறாள் என்று தான் பார்க்கத் தோன்றுகிறது . பெரும்பாலும் மகன்கள் பற்றிய பாடல்களே காணப்படுகிற சங்கப் பாடல்களில் தன்னுடைய கருவறை புலி தங்கிச் சென்ற குகை போல இருப்பதாக ஒரு பெண் சொல்வதும் , அவனுக்கு ஊட்டிய முலையை அறுத்தெறிவேன் என இன்னொரு பெண் சொல்வதும் தன்னுடல் பற்றிய கவனம் அகப் பாடல்களில் மட்டுமல்ல புறம் பாடும் பொழுதும் சங்கப் பெண்பாற் புலவர்களுக்கு இருந்திருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது . அகத்தில் பசலை படர்ந்த அல்குலைப் பாடுவது போலவே புறத்தில் பெற்றுத் தருவதையும் பாலூட்டி வளர்ப்பதையும் தன்னால் மட்டுமே கூடுகிற ஒன்றாக பெண் கருதுகிறாள் .
தன்னுடைய உடல் பற்றிய புரிதல் பெண்ணுக்கு இருக்கிறது . பெண்ணே இந்த உலகைப் பெற்றுக் கொடுத்திருப்பதாகவும் அவளே இந்த உலகுக்கு ஊட்டுகிறவளாகவும் நம்புகிறாள் . உயிர்களைப் பலுகிப் பெருகச் செய்கிற அவளின் மனமே அவளுடையை கருவறையினைக் கொண்டாடுவதாக இருக்கிறது . அவள் முலைகளைத் தாங்கியிருப்பது என்பதே இந்த உலகுக்கே ஊட்டுவதற்குத் தான் என அவள் நம்புகிறாள் . அதனால் தன்னுடைய உடலை பெண் கொண்டடுகிறவளாக இருக்கிறாள் .
மாலதி மைத்ரியின் “பூமாதேவி” என்றொரு கவிதை ,
“மணல்வெளியில் காற்றில் தீற்றலென
அம்மாவின் அடிவயித்றுக் கோடுகள்
குஞ்சு நண்டின் தடங்களைத் தரித்த
மேல் வயிறு
பூஞ்சை ரோமங்களை
வருடியபடியே கேட்கிறாள்
அம்மா
எப்படி நீ
பெத்து உயிர் பிழைச்ச
இது என்ன அதிசயம்
இந்த உலகத்தையே
உன் பாட்டிக்கு பாட்டிதான் பெத்தாள்
கோழி முட்டை இடுவதைப் போல
பாட்டி உலகை இடுவதை
நினைத்தபடி உறங்கிவிடுகிறாள் சிறுமி
கனவில்
பனிப்புயலும் அலைச் சீற்றமும்
அருவியின் குதூகலமும் கானகக் கொண்டாட்டமும்
எரிமலையின் பெருவெடிப்புமாகிறாள் “