Search This Blog

Saturday, October 3, 2015

கட உபநிஷதத் தத்துவங்கள் 108 :


மரணமிலாப் பெருநிலை :
அவ்யக்தாத் து பர: புருஷோ வ்யாபகோஅலிங்க ஏவ ச I
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்து: அம்ருதத்வம் ச கச்சதி II (கட 2.3:8)

பொருள்: அவ்யக்த்தத்தை விட இறைவன் மேலானவர், அவர் எங்கும் நிறைந்தவர், (இவர்தான் என்று சுட்டிக் காட்டுவதற்கு) எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் (தளைகளிலிருந்து) விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்.
புலன்களின் செயல்பாடு தனியானவை, அவற்றுடன் ஆன்மாவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்து மனம் ஆன்மாவில் நிலைபெறும்போது புலன்கள் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன. இதனைப் படிப்படியாக 7&8 ஆம் மந்திரங்கள் தெரிவிக்கின்றன. 1.3:10-11 மந்திரங்களும் இதே கருத்தை வலியுறுத்துவதாக அமைந்தது ஒப்புநோக்கத் தக்கது.
இறைவனை அடைந்தால் மனிதன் மரணமிலாத நிலையை அடைகிறான். அந்த நிலையைப் பற்றிய சில விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.
இந்தக் கண்களால் காண முடியாது:
ந ஸந்ருசே திஷ்ட்டதி ரூபமஸ்ய
ந சக்ஷுஷா பச்யதி கச்சனைனம் I
ஹ்ருதா மனீஷா மனஸா அபிக்ல்ருப்தோ
ய எதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி II ( கட 2.3:9)
பொருள்: இறைவனுடைய உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக்குகையிலுள்ள ஆன்மாவால், விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்.
மிகவும் பொருள் பொதிந்த மந்திரம் இது. இறையனுபூதி என்பதன் ஒரு தெளிவான விளக்கத்தை இங்கு காண்கிறோம். இறையனுபூதிக்கு இங்கே ஐந்து விளக்கங்கள் தரப்படுகின்றன –
1 புறத்தில் காணக்கூடியதல்ல; 2 கண்களால் காண்பதில்லை; இந்தக் கருத்துக்களை ஏற்கெனவே (2.2:14-15) கண்டோம்.
3 ஆன்மாவால் காணப்படுகிறது ; உடம்பிலுள்ள சாதாரணக் கண்கள் இறைவனைக் காண்பதில்லை என்றால் அவரைக் காண்பது, உணர்வது யார்? இதயக் குகையிலுள்ள ஆன்மா. இதயக் குகை பற்றியும் ஆன்மா பற்றியும் ஏற்கெனவே விரிவாகக் கண்டுள்ளோம். இறைவன் ஒரு பேரொளி என்றால் ஆன்மா ஒரு சுடர், ஒரு பொறி. ஒவ்வொருவரிலும் அந்தப் பொறி உள்ளது. அந்தப் பொறிதான் இறைவனை அறிகிறது.
4 புத்தி தெளிய வேண்டும்: ஆன்மா இறைவனை எங்கே காண்கிறது? விழிப்புற்ற புத்தியில். இது பற்றியும் ஏற்கெனவே (1.3:6-9) விரிவாகக் கண்டுள்ளோம்.
5 மனத்தின் தொடர்ந்த முயற்சி வேண்டும்: ஆன்மா, இதயக் குகை, புத்தி என்றெல்லாம் கூறியதால் அவை ஏதோ நம்மை மீறிய விஷயங்கள் என்று எண்ணி விடாமல், நமது கருவியாகிய மனத்தைத் தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடுத்த வேண்டும். ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து முழுமூச்சுடன் அதில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு மனத்தின் தொடர்ந்த முயற்சியால் புத்தி தெளிகிறது. தெளிந்த புத்தியால் தன்னை ஆன்மாவுடன் ஒன்றுபடுத்திக் காண முடிகிறது. நம்மில் உள்ள இருவரில் (1.3.1) ‘நாம் ஜீவன்’ என்ற நிலை மாறி ‘நாம் ஆன்மா’ என்ற நிலை உருவாகிறது. இந்த ஆன்ம நிலையில் இறைக்காட்சி கிடைக்கிறது.

No comments:

Post a Comment