Search This Blog

Thursday, March 12, 2015

தாலி

கூடலின் கணங்களில்
அது
போய்விழும் திசை தெரியாது
குளிக்கையிலெல்லாம் குழாய்களில்தான்
ஆடிக் கொண்டிருக்கும்
தூங்குகையில் அக்குளில் சிக்கி உயிரெடுக்கும்
குனிந்து நிமிரும் பொழுதுகளில்
சலசலப்பென்று ஒலியெழுப்பியபடி
முன்வந்து தொங்குவதுமாய் கிடக்கும்
எக்காலத்தில் எம் அன்னைகள்
அம்மந்திரத்திற்குள் புதைந்து போனார்களோ தெரியாது...
தெளிந்தெழுந்து
அவ்வதிகாரத்தை கழட்டியெறிகையில்
ஏன் இத்துணை பதற்றம்?
காலத்தின் மாற்றமாகக் கொள்வதில்
ஏன் இத்துணை பதற்றம்?
ஆயிரம் கைகள் அள்ளியெறிந்த ஆசிகளாயிற்றேயென
எங்களுக்குள்ளும் உண்டு அதன் மீது சிறுமதிப்பு
அவ்வளவே...!
வெயில்
மழை
பகல்
இரவென
எப்போதும் அதற்கு விடுப்பு கிடையாது
என்றெண்ணி
இனியும் கயிற்றிலும்
உலோகத்திலும் அன்பையேற்ற
நாங்கள் தயாரில்லை
எங்களுக்குத் தெரியும்
சங்கிலிகளற்ற அன்பை பரிமாறிக்கொள்ள
கற்களை உங்களின் மந்திரங்களின் மீது வீசுங்கள்
கொண்டிருக்கும் பதாகைகளை
உங்களின் முகத்திற்கு நேரே பிடியுங்கள்
நீங்கள் புனைந்த எண்ணிலடங்கா
பொய்யுரைகளில் இம்மந்திரத் தாலியும்
ஒன்றென உணரும் வரைக்கும்
பிடித்துக்கொண்டேயிருங்கள்......
அப்படியும் போட்டுத்தான் ஆக வேண்டுமா தாலி?
போட்டுக்கொள்கிறோம்
சவம்
அது பாட்டுக்கு கிடக்கட்டும் கழுத்தில்
- மா.இளமதி
பெண்கவிஞர்கள், 'கவிஞராவது', என்ற எந்த இலட்சியத்திட்டத்தையும் தமக்கென வைத்துக்கொள்வதில்லை என்று நம்புகிறேன். ஆனால், ஊடகமும் பொதுச்சமூகமும் தமக்கேற்றாற்போல் அதை அணுகுகின்றன என்பதை எப்பொழுதுமே உணர்ந்திருக்கிறேன். அரசியலில் தொடர்ந்தும் துல்லியமாகவும் இயங்கிக் கொண்டிருக்கும்போது, கவின்மலர் அப்படியான தாக்கம் நிறைந்த கவிதையை முன்வைப்பது என்பதும் தற்செயலானது, தவிர்க்கமுடியாதது. அங்கீகாரம் கோராதது, 'இப்படித்தான் அது நிகழ்ந்திருக்கவேண்டியது' என்பதானது. பெண்கள், தம் உடலின், மனதின் மீதான தாக்கத்தை, எந்தத் தயக்கமும் இன்றி முன்வைத்துவிட்டு நகர்ந்து சென்றுகொண்டே இருக்கின்றனர்.
சமீபத்தில், இளமதியின் 'தாலி' குறித்த கவிதையைப் படித்தபொழுதும் எனக்கு இத்தகைய உணர்வே மேலோங்குகிறது. பெண்களுக்கு அதிலும், பெண் அரசியலின் மையவெளியில் இயங்குபவர்களுக்கு கவிதை தற்செயலானது. கவிஞர் என்ற எந்த முகாந்திரமுமின்றி, அவர்களால் எழுத்தை நிகழ்த்த இயலும். அதேசமயம், துல்லியமான ஒரு சமூகவினை அது. சமூக அழுத்தம், வெடித்துக்கிளம்பும், பெரிதாகும் ஒவ்வொரு வாய்ப்பையும் பெண்கவிஞர்கள் வழியாக எடுத்துக்கொள்கிறது. பின் அந்தக் கவிதை, தன் கூர்மையான கத்தியால் நல்லதொரு சிகிச்சையை, சமூகத்திற்கு அளிக்கத் தயாராகிறது. உடலை நெறிக்கும் இந்து அதிகாரச் சிந்தனைகளிலிருந்து பெண் உடல்கள், இக்கவிதைகள் வழியாகத் தாமாகவே விடுதலை பெற்றுக்கொள்கின்றன.
இளமதியின் இவ்வரிகள், யதார்த்தத்தையும், வேகத்தையும், கொஞ்சம் உளைச்சலையும் ஒரேசமயத்தில் பதிவுசெய்துள்ளது.
Kutti Revathi

No comments:

Post a Comment